
சில வாரங்களாக அந்தத் தடுப்பு முகாமில் இருந்தேன். எனக்கு வேறு விசாரணை எதுவும் நடக்கவில்லை. மேலிடத்தில் இருந்து வரும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள்;. இருவருக்கு ஒன்றாகவோ காலுக்கு அல்லது கைக்கு தனியாகவோ விலங்கிடப்பட்டே எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் விலங்கற்ற நிலையில் உள்ள அதிர்ஸ்டசாலிகளில் ஒருவனாக இருந்தேன். நானும் தாடி வளர்த்த பெரியவரும் எந்த நேரத்திலும் மலசலம் கழிக்கவும், விரும்பிய நேரத்தில் குளிக்கவும் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஐந்துவேளை தொழுவதற்கும் மத சுதந்திரம் அங்கீகரித்திருந்தார்கள்.
இரண்டு வாரங்கள் கைவிலங்குடனும் ஒரே உடையுடனும் இருந்த எனக்கு இது மிகப்பெரிய சுதந்திரமாக இருந்தது. பலதடவை கூண்டில் இருந்து வெளியேறிய பறவை போல் சிறகடித்து குதூகலித்துக் கொண்டாட மனம் துடித்தது. அங்கு சித்திரவதைப்படுகிறவர்களுடன் எனதுணர்வைப் பகிர முடியாது. எனது வாப்பாவாக நானே தத்தெடுத்துக்கொண்ட பெரியவருடன் மட்டுமே எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். துன்பமான காலத்தில் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணையைத் தந்ததற்கு அல்லாவிற்கு நன்றி சொன்னேன்.
முதல் இரு வாரமும் விடுதலையாகி வெளியே வர வேண்டும் என நான் ஏங்கவில்லை. உடலில் அரிப்பெடுத்தால் சொறிவதே முக்கியமான தேவையாக இருந்தது. அதற்காகவே நான் ஏங்கினேன். மனிதத் தேவைகள் எல்லாம் மனதில் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கப்படுகிறன. தாகத்தில் இருப்பவனுக்கு மற்றைய சுகங்கள் தேவைப்படாது. ஆரம்பத்தில் வாயில் வைக்க முடியாமல் இருந்த உணவுகூட பழகிவிட்டது. பாண், பருப்பு, பயறு மற்றும் கவுப்பி போன்றவை நாளாந்த உணவு. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களே அவற்றை சமைத்தார்கள். என்னைப் போல் சிறையிருப்பவர்கள் என்பதால் அவர்கள் சமைத்த மரக்கறி உணவைச் சுவைக்க முடிந்தது.
சிறிய தென்னந்தோட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் ஒரு ஆரம்ப விசாரணை கூடமாகத் தெரிந்தது. யாழ்ப்பாணத்தில் பிடித்தவர்களை இங்குகொண்டு வந்து வாக்குமூலங்களைச் சேகரித்து உளவுத்துறைக்கு அனுப்புவார்கள்.பின்பு முடிவுகளுக்கு காத்திருப்பார்கள்.
எனக்கு நடந்ததுபோல் தொடர்ச்சியாக பலருக்கு விசாரணைகள் நடந்தன.
அவை விசாரணைகள் அல்ல , சித்திரவதைகள் என்பதால் பல தடவை நெஞ்சில் தண்ணீர் அற்று உயிரை விலக்கிய சடலமாக இருந்தேன். இருபது வயதையொட்டிய பால்வடியும் இளைஞர்கள் சித்திரவதைகளை பல விதமாக செய்கிறார்கள். அவை எக்காலத்திலும் நான் காணாதவை; கேள்விப்படாதவை. செய்பவர்களுக்கு முகத்தில் மீசை மயிர்கூட ஒழுங்காக வளரவில்லை. விசாரணையின் போது சாத்தானாக உருமாறுகிறார்கள். மற்ற இயக்கத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் எந்தக் கேள்வியும் இல்லாமல் அவர்களுக்கு தென்னைமட்டையால் அடித்து அவர்கள் உடலை பண்படுத்துகிறார்கள். அவர்களை நிர்வாணமாக்கியே விசாரணைகள் நடக்கின்றன. அவர்கள் முதுகுகள் வடிந்த குருதியுறைந்து சிவப்பாகி பின்பு கண்டிய பகுதிகள் பழுப்பாகி இறுதியில் கறுப்பாகும். சிலரது முதுகுகளில் நீண்ட நாட்களுக்கு புண் மாறாது, ஈ மொய்த்தபடி துர்மணத்துடன் இருக்கும். அவர்களை மணமே அவர்கள் அருகில் வருவதை எமக்கு தந்தியடிக்கும். அத்துடன் அவர்களது உயிர் உடலில் இருப்பதை உலகறியச் செய்யும் ஈனமான அவலக் குரலைக் கேட்டுத் திரும்பினால் காட்சி என் உயிரை உசலாட வைக்கும். கண்ணால் முதுகைப் பார்த்தால் அன்றிரவு நித்திரை வராது.. அப்படி வந்தாலும் அங்கே வரும் கெட்டகனவுகளுக்கு பயந்து முழித்திருந்த நாட்கள் அதிகம் .
மாலை நேரத்தில் விசாரணையை ஆரம்பிக்கும். அந்த நிகழ்வு மனம் வெறுக்கும் நிகழ்வாக பயணிக்கும். முதல் ஓவரிலே சிக்சர் அடிக்கத் தொடங்கும் ஒரு நாள் கிரிக்கட் ஆட்டம் மாதிரி ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து பார்ப்பதற்கு மனம் வராது அறைக்குள் சென்றுவிடுவேன்;.
கிடுகிற்காக வெட்டிக் கழித்த மூன்றடி நீளமான காயாத தென்னம்மட்டையால் ஓங்கி அடி விழும்போது அடிவாங்கியவர்கள் முதுகுகள் தோல் உரிந்து இரத்தப் படலமாக மாறும். இரு கைகளால் முதுகை மறைக்க முயல்வார்கள். அடிகள் கைகளிலும் விழும்; கையை எடுத்து முகத்தை பாதுகாப்பார்கள். நிலத்தில் படுத்தவர்களை எழும்பும்படி கட்டளையிட்டால் எழும்பத் தயாராகாதவர்களுக்கு கால்களில் அடிகள் விழும்.அடிப்பதில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். அது மேலிடம் சொல்லியதாக இருக்கலாம்!
மேசையில் கையை வைத்து குனிந்தபடி நிற்க விட்டு வயரால் இடுப்புக்கு கீழ் குண்டியிலும் துடையிலும் அடி விழும். இப்படி அடி வாங்கியவர்கள் நிலத்தில் விழுந்து புழுவாக மாறுவார்கள். விழுந்து நிலத்தில் உருளுபவர்களை மீண்டும் எழும்பச் சொல்லி அடிப்பார்கள். அவர்கள் விரும்பியபடி செய்யாதபோது பக்கத்தில் இருந்த விறகுத்தடியால் அடிப்பார்கள். அப்படியான அடிகள் நிரந்தர காயங்களை உருவாக்கும். இந்திய அமைதிப்படைகாலத்தில் உதவியவர்கள் என பல நடுத்தர வயதானவர்களும் விசாரணைக்கு உட்படுவார்கள். அவர்களில் பலரது கால்கள் உடைக்கப்பட்டன. சிலருக்கு தவணைமுறையில் விசாரணை நடந்தது. மயங்கி விழுந்தால் அடுத்த நாளும் விசாரணை செய்வார்கள்;.
ஒரு சம்பவம் இன்னமும் கருங்கல்லில் செதுக்கி எனது நெஞ்சாங்கூட்டில் உள்ளது.
மதிய உணவின் பின் நானும் பெரியவரும் மேல்மாடியில் நின்றபோது அவர்களது விசாரணை தொடங்கியது. பிரகாசமான மாலை நேரம். சூரியக்கதிர்கள், தென்னோலையால் வேய்ந்த விசாரணைக் கொட்டிலின் திறந்த மேற்கு பக்கத்தால் ஒளி பாச்சியதால் அந்த இடம் மேலும பிரகாசமாகத் தெரிந்தது. மேசையின் முன் கரிய உடலில் வெள்ளை பெனியன் அணிந்து கதிரையில் பஷீர் அமர்ந்திருந்தான். மேசையின் முன்பு மாற்று இயக்கத்தவன் ஆறடி உயரமாக விரிந்ததோள்களுடன் மீசையற்று கண்ணாடி அணிந்து நெஞ்சை நிமிர்த்தியபடி வடநாட்டு சினிமா நடிகர்களைப்போல் இருந்தான். அவனது காக்கி அரைகாற்சட்டையும் நீலச் சேர்ட்டும் பலாத்காரமாக கழற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டான்.
அவனது முதுகில் பல தென்னைமட்டையடிகள் விழுந்தன. பசீரின் காவலாளியிடம் ஐந்து நிமிடமாக வாங்கிய அடிகளுக்கு அவன் எதுவும் பேசவில்லை. நின்ற இடத்தைவிட்டு அசையவுமில்லை.; வெள்ளை முதுகு சிவந்த கோளமாகியது. அவனது உறுதியான உடலில் பட்டு இறுதியில் தென்னைமட்டை சிதைந்து தும்பாகத்தொங்கியது. அவன் நிமிர்ந்து தோளை முன்தள்ளியபடி அம்மணத்தை உதாசீனம் செய்தபடி இரண்டு கால்களையும் அகட்டி வைத்து வலது கையை பஷீரை நோக்கி நீட்டினான்.
“ஒரே அப்பனுக்குப் பிறந்தவன் நான். அம்மாவின் பால் குடித்தவன். தமிழிலும் இந்த மண்ணில் மேலும் உள்ள பாசத்தால் கிடைத்த பல்கலைக்கழகத்தையும் ஒரு வருடத்தில் விட்டுவிட்டு நானும் உங்களைப்போல் போராடத்தானே வந்தனான். ஈழ விடுதலை என்ன உங்களுக்கு மட்டும் தரப்பட்ட கொந்தராத்தா? நாங்கள் குறைந்தவர்கள், நீங்கள் உசத்தியா? அல்லது நீங்கள் மட்டும்தான் போராட வேண்டும் என ஏதாவது சட்டமுள்ளதா? நீ எல்லாம் என்னைப் போலிருந்தால் இந்தப்பக்கம் வந்திருக்கமாட்டாய். ஏன்டா எங்களை சித்திரவதை செய்து கொலை செய்கிறியள்? அப்படியானால் உடனே கொன்று விடுங்கள். மரணதேவதைகளே” எனச்சொல்லியவாறு அடித்தொண்டையில் காறியபோது வந்த இரத்தத்தையும் கோழையையும் கலந்து மேசையில் உமிழ்ந்தான்;.
அதைக் கேட்டு சீறும் பாம்பாக மேசையில் கையைக் குத்திவிட்டு பசீர் எழுந்தான்.
“நீ கடைசியாகக் கேட்டதை மட்டும் நான் செய்ய முடியும். அம்மாவை வடக்கத்தையான்களுக்கு கூட்டிக்கொடுத்த நீங்களா போராட வந்தீர்கள்? உனது சாதித்திமிரையா காட்டுகிறாய்? ” என மேசையில் வலது பக்கத்தில் இருந்த இரண்டு அடி நீளமான கொட்டானை வலது கையால் எடுத்து இரண்டு அடி முன்னோக்கி வந்து அவனது நெத்தியை கிரிக்கட்டில் பவுன்சர் போட்ட பந்தை அடிப்பதுபோல் மேல் நோக்கியடித்தான். அவன் திருப்பியதால் அந்த அடி பிடரியில் விழுந்தது. தென்னையில் இருந்து தேங்காய் நிலத்தில் விழுந்தது மாதியான ஓசை கேட்டது. கொட்டான் பஷீரது கையை விட்டு விலகி நிலத்தில் சிறிது தூரத்தில் விழுந்தது. அதிர்வில் அடிவாங்கியவனது மூக்குக் கண்ணாடி நிலத்தில் விழுந்தது. சில விநாடிகள் அசையாது நின்றவன் பாரிய கிளைகள் கொண்ட மரத்தைத் தறித்தால் கடைசிக் கொத்தில் காட்டில் விழும்போது எழுப்பும் ஒலியுடன் விழுந்தான். கீழே கிடந்த அவனது கண்ணாடி அவனது கைபட்டு மீண்டும் தெறித்து விறகுக் கும்பலருகே பறந்தது. மாடியின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை அந்தக்காட்சி தலை சுற்றி விழவைத்தது. மாடியில் அமைந்த கைபிடிச் சுவரைப் பிடித்தபடி நான் பெரியவரைப் பார்க்க பெரியவரும் என்னைப் பார்த்தார்.
பஷீர் குனிந்து கொட்டானைக் கையில் எடுத்து இரத்தம் படிந்திருக்கிறதா என தடவிப்பார்த்தான். இரண்டு நிமிடம் தனது இருக்கையில் அமர்ந்தவன் எழுந்து கொட்டானைத் தூர எறிந்தான்.
“என்னவும் சொல்லுங்கடா ஆனால், நீங்கள் போராட வந்தீர்கள் எனச் சொன்னால் எனக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்துவிடுகிறது. அடிவாங்கி சாகிறதுக்கோ இப்படி சொல்கிறீர்கள் பு…..டை மக்களே?” என உரத்துச் சொல்லி அவனை நோக்கி காறித் துப்பிவிட்டு சமைக்கும் கொட்டில் இருந்த இடத்தை நோக்கி ஆண் சிங்க நடந்தான். சில அடிகள் சென்றதும் திரும்பி மீண்டும் எச்சிலைத் துப்பிவிட்டு “நாயை எழுப்பி மண்டைக்கு பண்டேஜ் கட்டுங்கள்” என ஆயுதத்துடன் அதுவரையும் அசையாது அருகே நின்றவர்களிடம் சொன்னான்.
துப்பாக்கியை வைத்திருந்த ஒருவன் அதை மேசையில் வைத்துவிட்டு தண்ணீரைக் கொண்டுவரச் சென்றான். மற்றவன் அவனை எழுப்பினான். அவன் எழவில்லை.தோளில் கை வைத்து தூக்கி நிமிர்த்தியபோது வெட்டிய வாழைபோல் மீண்டும் நிலத்தில் விழுந்தான். அவனது தலையில் இருந்து வழிந்த இரத்தம் முதுகெல்லாம் பரவி அந்த கொட்டிலின் தரையில் சிறிய ஓடையாக மாலை வெயிலில் பளபளத்தது , கிழக்கே அடுக்கி வைத்திருந்த விறகு அடுக்குக்குள் சென்றது.
இதுவரையும் மேல் மாடியில் இருந்து என்னுடன் விசாரணையை பார்த்துக்கொண்டிருந்த வயதானவர் “தம்பிமாரே, அவனது மூக்கில் சுவாசம் வருகிறதா எனப்பாருங்கள்” என்றதும் அவன் பார்த்தான்.
“இல்லைப் போல இருக்கு”
“அப்ப அவன் செத்திற்றான் போல” என்றார்.
மற்றவன் சிறிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து தலையில் ஊற்றினான். அது தலையில் இருந்த இரத்தக்கறையைக் கழுவி இரத்தம் ஓடிய பகுதியில் ஓடியது.
சில நிமிடங்களில் பஷீர் வந்தபோது “செத்திட்டான்” என ஒருவன் கூறினான். அதிக பரபரப்பில்லாமல் “உண்மையா?” என்றபடி அவனது மூக்கருகே கையை வைத்துப் பார்த்துவிட்டு தனது வோக்கி டோக்கியை எடுத்துப் பேசினான். “நாங்கள் அடித்தபோது அவனது தலையில் பட்டுவிட்டது” என்று சொன்னான். அதன் பின்னர் அவன் பேசிய பேச்சுக்கள் புரியவில்லை.
இரண்டு மணிநேரத்தில் ஒரு வெள்ளைவான் வந்தது. அதன் பின்கதவைத் திறந்தவர்கள் ஒரு தார்ப்பாயில் நிர்வாண உடலைத் வைத்து நாலுபேர் தூக்கி ஏற்றினார்கள். இருவர் உள்ளே ஏறி இருக்கையில் வளத்தினார்கள். கால்களின் பெரும்பகுதி வெளியே நீண்டு கொண்டிருந்தது. முயற்சி செய்தும் உள்ளே வைக்க முடியவில்லை. கீழே நின்ற இருவரும் நீளமான அவனது காலை வேலிக்கு அளவாக தென்ஓலைக்கிடுகை மடிப்பது போல் மடக்கி உள்ளே வைத்தனர். இருவரும் பின்பகுதியில் ஏறவும், சாரதியுடன் பஷீர் முன்புறம் ஏறினான். வேலை செய்த நான்கு பேரதும் நடவடிக்கைகள் அரிசிக்கடையில் மூடையொன்றை ஏற்றுவது போலிருந்தது. ஆனால் என்ன…. வார்த்தைகள் எதுவும் அங்கு பேசப்படவில்லை. மவுனமான நாடகமாக அரங்கேறியது.
அதன்பின் இரண்டு நாட்கள் விசாரணைகள் நடக்கவில்லை. விசாரணைக் கொட்டகை பகலில் காலியாக இருந்தது. இரவில் அங்கு ஒருவன் காவலுக்கு நிற்பான்.
எனது கனவுகளில் தினமும் அடிபட்டு இறந்தவன் நிர்வாணமாக வருவான். சிங்களவன் போராடத் தந்த சுதந்திரத்தைப் பறித்த மரண தேவதைகளே எனக் கூக்குரலெழுப்புவான். உங்களுக்கும் இதுதான் நாளை நடக்குமெனக் கைகொட்டிச் சிரிப்பான். நடனமாடுவான். அவனில் ஏதோ சாத்தான் ஏறியதுபோல் அந்த நடனம் பயங்கரமாக இருக்கும். இறுதியில் கண்ணீர் விட்டு அழுவான். அவன் அழும்போது நான் விழித்து எழுந்துவிடுவேன். ஒருவாரமாக அவன் கனவில் வருவதும் இறுதியில கனவு முறிந்த நான் எழுந்து முழித்தபடியன்னல் வழியே இரவை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தது.
ஒரு ஒரு நாள் நள்ளிரவில் நிர்வாணமாக அவனைக்கண்டு விழித்தபோது தொட்டால் ஒட்டும் கையில் கரியாக இரவு இருந்தது. யன்னலால் வெளியே நோக்கினேன். வழக்கமாகத் தெரியும் தென்னைமரங்கள் கூடத் தென்படவில்லை. எந்த வெளிச்சமும் இல்லாமல் வானமிருந்தது. வெளியே மழை பெய்வது போன்று தோன்றியது.
திடுதிப்பென மாடிப்படியில் பலர் வருவது கேட்டது. வந்தவர்கள் லைட்டுகளைப் போட்டு என்னுடன் அங்கிருந்த பலரின் கண்களைக்கட்டி, கைவிலங்குகள் மாட்டினார்கள். பெய்யும் மழையில் நனைந்தபடி இழுத்து லொறியில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இருபது பேருக்கும் குறைவானதால் லொறியில் குந்தியிருந்து போக முடிந்தது.
லொறி அரைமணியோட்டத்தின் பின்பாக ஓரிடத்தில் நின்றது. மழையுடன் காற்று பலமான சத்தத்துடன் வீசியது. பெய்த மழையை மீறி வாயில் உப்புக் கசந்தது.
கடற்கரைக்குக் கொண்டு வந்து விட்டார்களா? சுட்டுக் கொன்று கல்லைக்கட்டி கடலில் மற்றய இயக்கத்தினரை போடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். உடல் மிதக்காது .காணாமல்போனவர் பட்டியல்தான் நீளும். அதுதான் இறுதியில் எங்களுக்கு காத்திருக்கிறதர்?
ஒருவன் எங்களை வரிசையில் நிற்குமாறு கட்டளை இட்டான். கண் கட்டப்பட்ட நாங்கள் எப்படி கட்டளையை நிறைவேற்ற முடியும்? என்ற சிந்தனையில் ஒதுங்கியபோது கையில் பிடித்து சிறிது நேரத்தில் அவர்களே வரிசைப்படுத்தினார்கள்.எம்மைத் தண்ணீரில் நடத்திச் சென்று வள்ளத்தில் ஏற்றினார்கள்.
“டேய் எல்லாரையும் ஏற்றமுடியாது போல் இருக்கு. சோனகத்தெருவில் எடுத்த நகைகளை ஏற்றி விட்டுத்தான் ஆட்கள். மிகுதியானவர்களுக்கு இன்னுமொரு முறை வருகிறோம்” என ஒரு குரல் கேட்டது .
என்னைப் பிடித்து படகில் ஏற்றியபோது தடுமாறினேன்.
“கீழே நகை மூட்டைதான் அதன்மேல் இருங்கள்” என்றான் ஒருவன் . மெதுவாக இருந்தபோது மூட்டை பின்பக்கத்தில் அண்டியது. பர்வீன் கல்யாண நகையும் இந்த மூடையில் இருக்குமா? உண்மையில் எங்களைத் துரோகிகளாக துரத்துகிறார்களா? அல்லது பணத்தையும் நகைகளையும் கைப்பற்றி கொள்ளையடிப்பதுதானா இவர்களது நோக்கம்? நோக்கம் என்னவாக இருந்தாலும் விளைவு ஒன்றுதானே?
என்னை எதற்காகப் பிடித்தார்கள்?
எனது பக்கத்தில் இருந்த ஒருவர் “கிளாலிப் பக்கம் போலிருக்கு. எங்களை வன்னிப்பக்கம் கொண்டு செல்கிறார்கள். புதைப்பதற்கோ எரிப்பதற்கோ வசதியான இடம்.’ என்றார். அவரது வார்த்தைகள் வயிற்றை மத்தாகக் கடைந்தது.
ஒரு மணி நேரமாக அந்த மோட்டார் படகு பயணம் செய்தது. சிலநேரத்தில் மோட்டார் யந்திரத்தை நிறுத்திவிடுவார்கள் சில நிமிடத்தில் மீண்டும் மோட்டாரை ஸ்ராட் பண்ணினார்கள். மழை விட்டு விட்டது . நனைந்த உடைகள் உடலின் சூட்டில் காய்ந்தது.
மீண்டும் கரையில் இறக்கி லொறியில் ஏற்றி புதிய இடத்திற்கு கொண்டு வந்தனர்.
குளிர்காற்று வீசியது. அதில் உப்பில்லை. அதிகாலைப் பொழுது என்பதற்கு அடையாளமாக பறவைகளின் ஒலிகள் கேட்டன. குருவிகள், கிளிகளின் சத்தத்துடன் அருகில் மயில் அகவியது. தூரத்தே சேவல் கூவியது மரங்களிடையே வீசும் காற்றால் இலைகள் அசையும் ஒலி கேட்டது.
கண்களை அவிழ்த்த போது காட்டுப்பகுதியில் அமைந்த முகாமாக அது இருந்தது. பலநூறு பேர் இருக்கும் உயர்ந்த சேமிப்புக் கிடங்கு போன்ற இரண்டு கட்டிடங்கள் தெரிந்தன. அதைச்சுற்றி உள்ள நிலம் விளையாட்டு மைதானம் போல் சுத்தமாக இருந்தது. முள்ளுக்கம்பி வேலிகள் சுற்றி அடைக்கப்பட்டிருந்தன. உயர்ந்த காவற்கோபுரங்கள் சில தெரிந்தன. ஒவ்வொரு திசையிலும் மணல் மூடைகள், மரம் என்பவற்றால் உருவாக்கிய பங்கர்களை இலைகள், குழைகளை வைத்து மூடியிருந்தார்கள். ஒவ்வொரு பங்கர்களிலும் இருவர் இராணுவ உடையுடன் காவல் இருந்தார்கள். அது ஒரு இராணுவ முகாமாகத் தெரிந்தது. சென்றியில் உள்ளவர்களது துப்பாக்கிகளின் முனைகள் வித்தியாசமாக உள்நோக்கியிருந்தன. மிகவும் பாதுகாப்பான சிறை என்பதை உணர்த்தியது. அந்த கட்டிடங்களில் பலரை பலகாலமாக அடைத்து வைத்திருந்தனர் என்பதான தோற்றத்தை அளித்தது.
காலையில் வரிசையாக மலம் கழிக்க அனுமதிக்கப்பட்டோம். பத்துமணிக்கு அரை இறாத்தல் பாண் தேநீருடன் கிடைத்தது. எனக்குப் புரியவில்லை. என்னை விடுதலை செய்வதாக சொல்லிவிட்டு ஏன் மீண்டும் இந்தப் பெரிய முகாமிற்கு அனுப்பினார்கள்? யாரிடம் கேட்பது? ஏற்கனவே இருந்தவர்கள் சிலர் மனோவியாதியுற்றவர்களாக – நோக்கமற்று திரிவதும், தமக்குள் பேசுவதுமாக இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் பேசுவதைத் தவிர்த்தார்கள். அதிக பட்சமாக சிரிப்புடன் விலகினார்கள். உடல் நலமற்றவர்கள், தோல் வியாதிக்காரர்கள் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தார்கள். அந்தப்பக்கத்தில் இருந்து முடை வாசனை வந்தது. சாக்குகள், பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் சீமெந்து பைகள் அங்கு விரிக்கப்பட்டு கிடந்தன. அவர்களிடம் கேட்டு என்ன அறிய முடியும்? அவர்களுக்கு அனுதாபப்பட வேண்டிய நிலையில் நான் இருந்தேன். நரகம் என்பது இப்படி இருக்குமா?
பழைய முகாமில் பெரியவரது நட்பு வாப்பாவின் அணைப்பாக என்னை சமநிலையில் வைத்திருந்தது. இங்கு அநாதையாக உணர்ந்தேன். மதிய உணவு மாலையில் வந்தது. அதன் பின்பு வரிசையில் நிற்கப் பண்ணினார்கள். புதிதாக வந்தவர்களுடன் சேர்த்து எனது தலைமயிர் முற்றாக வழிக்கப்பட்டது. தாடியை விட்டுவிட்டார்கள். அரைக்காற் சட்டை வழங்கப்பட்டது.
அதிக நேரம் அந்தக்கட்டிடத்துள் இருக்கவில்லை. அன்று இரவுக்கு முன்பாக என்னைக் கிணறு போன்ற ஒரு குழியில் இறக்கினார்கள். அந்த இடத்தில் சிறிதும் பெரிதுமாக ஆழமான குழிகள் இருந்தன. அதன் மேல் இரும்புக் கதவு போடப்பட்டிருந்து. மூடிய கிணறுபோல் இருந்தவைகளில் நாலு அல்லது ஐந்து மனிதர்கள் பெரிய குழிகளுக்குள் இருந்தார்கள். ஆழமான அந்தக் குழிகளுள் கயிற்று ஏணியால் ஏறி இறங்கவேண்டும். ஒரு நாளைக்கு மதியத்தில் மலம் கழிக்க ஏற விடுவார்கள். சலம் கழிக்க பழைய சாராயப்போத்தல் தந்திருந்தார்கள். உணவு கிணற்றுள் வாளி வருவதுபோல் வரும். என்னோடு அங்கு ஐந்துபேர்; அதில் பெரும்பாலானவர்கள் அதிக காலமாக இருக்கிறார்கள். உடை, உருவ அமைப்பில் ஆதிகால மனிதர்களைப் பார்பதுபோல் இருந்தது.
இந்தக் குழிகளில் சுதந்திரவாடையை உணர்ந்தேன். விடுதலைப்புலிகளின் உளவாளிகள் இருக்கமாட்டார்கள் என்ற காரணத்தால் பேசுவதற்கு அதிக சுதந்திரம் இருந்தது. என்னுடன் குழிக்குள் இருந்தவர்கள்; வித்தியாசமான வயது, தோற்றம் உள்ளவர்கள் அவர்களோடு பேசியபோது அவர்களில் ஒருவர் வேறு இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவரிடம் மற்றையவர்கள் எங்கே? இயக்க ஆயுதங்கள் எங்கு புதைத்து வைக்கப்பட்டுள்ளன எனக்கேட்டுத் தலையில் அடித்ததால் சித்தசுவாதீனமடைந்து இருந்தார். அவரது பெயர் அவருக்கு தெரியாதிருந்தது. சிவபெருமான் எனப்பெயரிட்டு சிவாவென உள்ளே இருந்தவர்கள் அழைத்தார்கள். பெரும்பலான நேரம் அவர் உடையணிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் மற்றவர்கள் அரைகாற்சட்டையை போட்டுவிட்டார்கள். அவருக்கு சிரங்கு வந்தது. அவரது உடையே அவருக்கு சுமையாக இருந்ததால் வெளியே மலம் கழிக்க செல்லும்போது மட்டும் உடை அணிவார். மற்றப்படி பிறந்தமேனியோடு இருப்பார் என்றார்கள். ஒரு நாள் உடையற்று மலம் கழிப்பதற்காக மேலே ஏறிவிட்டார். அங்கிருந்த காவலாளி கன்னத்தில் அறைந்து மீண்டும் உள்ளே தள்ளிவிட்டார். குழிக்குள் விழுந்தவர் சுவரில் ஒட்டிய பல்லியாக கால், கைகளை விரித்தபடி முகத்தை நிலத்தில் புதைத்திருந்தார். நீண்ட நேரமாக அவர் எழவில்லை.
இது நான் பார்க்கும் இரண்டாவது சாவு என நினைத்தேன்.
இன்னும் எத்தனை மரணங்களைப் பார்க்கப்போகிறேன்?
எனது மரணமும் இங்கே நடந்து விடுமா? எரிப்பார்களா? புதைப்பார்களா? இஸ்;லாமியனாக இருந்து எரித்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கடைசி ஆசையெது எனக்கேட்பார்களா? அப்படிக் கேட்டால் புதைக்கும்படி சொல்லமுடியும். இவர்கள் தமிழ் மக்களையே இப்படித் துன்புறுத்தும்போது எனது விருப்பத்தை மதிப்பார்களா? அதுவும் மதம் சார்ந்த விருப்பத்தை நிறைவேற்றுவார்களா?
இந்த முகாமில் யார் பொறுப்பு எனத் தெரியாதே? வாப்பா, உம்மா எப்படி குடும்பத்தை ஓட்டுகிறார்கள்? சித்தப்பா ஒருவர் கொழும்பில் இருக்கிறார். அவரிடம் போவார்களா? மென்மையாக வளர்ந்த பர்வீன் என்ன செய்வாள்? யார் குடும்பத்தை யார் காப்பாற்ற முடியும்? எல்லாரையும் படைத்தவனே படியளக்கிறான். அல்லாவின் வழி என இருப்பதையே செய்யமுடியும்.
சிவபெருமான் மயங்கிவிட்டாரா இல்லை, இறந்துவிட்டாரா..? என பார்க்க அருகில் சென்றேன். அவரது முதுகில் அசைவு தெரிந்தது. காப்பாற்ற வேண்டும் என நினைத்து “டொக்டருக்கு சொல்லுங்கள்” எனக் கூக்குரலிட்டோம். மேலிருந்து இரண்டு வாளி தண்ணீரை ஊற்றினார்கள். காய்ந்திருந்த தரை முழுவதும் சேறாகியது. சிவபெருமான் மெதுவாக எழுந்தார். சேறு படிந்த மேனியுடன் தாடி, சடைமுடி என்பன அவரை ஒரு சித்தராகக் காட்டியது. எல்லோரும் சிரித்தபடி மீண்டும் ஒரு வாளி தண்ணீர் கேட்டு அவரைக் கழுவிவிட்டு உடையணிந்து மேலே ஏற்றி மலமிருக்க கொண்டு சென்றோம்.
பங்கருக்குள் அவ்வாறு இருந்தபோது எதிர்காலத்தில் நம்பிக்கையற்றுப் போயிற்று. எனது வாழ்க்கையின் இறுதி நாட்கள் இவையே;. பேசிப் பயனில்லை என மௌனம் காத்தேன். சிவபெருமான் மட்டும் எப்பொழுதும் சிரித்தபடி இருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவரை முழியன் என்றும் வேறு பல தூசணங்கள் கொண்டும் திட்டியபடி இருந்தார். பிரணவன் என்ற ஒருவர் அவர்தான் எங்கள் ஐந்துபேரில் வயது குறைந்தவர். திடமான தேகம். கதைத்து சிரிப்பார். மன்னாரைச் சேர்நதவர் என்னுடன் காக்கா காக்கா என நெருக்கமாகப் பேசினார்.
“காக்கா, சிவபெருமானுக்கு எவரிடத்திலும் பயமில்லை.மிகத்துணிவுடன் தொடர்ச்;சியாக தலைவரைத் திட்டியபடியே இருக்கிறார். எங்களுக்கு அதுகூடச் செய்ய முடியவில்லை.” என்றார்.
“தம்பி, நீங்கள் என்ன பிழை செய்தீர்கள்?”
“நான் என்ன பிழை செய்தேன்? என்ற கேள்வியைக் கேட்டபடி இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள். பல வருடங்கள் இங்கு இருந்தவர்களுக்குக்கூட இதற்கு பதில் தெரியாது. பலர் செய்த தவறு என்ன எனத்தெரியாமலே மரணமானார்கள். நான் எதற்காகப் பிறந்தேன் என ஞானிகளும் முனிவர்களும் கேட்பதுபோல் நாம் என்ன தவறு செய்தோம் என்று தத்துவ ரீதியில் கேட்டபடி இருக்கிறோம். நான் மற்ற இயக்கத்தவன்கூட அல்லன். விடுதலைப்புலியாக சேலத்தில் பயிற்சியும் அதன் பின்பு கண்ணிவெடி புதைப்பதற்கு விசேடபயிற்சியும் பெற்றவன். விக்டர் என்ற மன்னார் தளபதியின் கீழ் இருந்தேன். விக்டர் கொலை செய்யப்பட்டது இயக்கத்தால் எனத் தெரிந்ததும் விலகியோடவிருந்தேன். பலர் விலகி மன்னார் மூலமாக இந்தியாவுக்கு போனார்கள். நான் கொழும்புக்குப் போய் வெளிநாடு செல்வதற்காக மன்னார் ரவுணில் உள்ள வீட்டிற்கு பணம் எடுக்கப்போன போது பிடிக்கப்பட்டேன். உளவுத்துறையிடம் உண்மையைச் சொன்னேன். அவர்கள் இந்தியா சென்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு நானே பொறுப்பென என்னை அடித்து சிறையிலடைத்து தண்டித்தார்கள். அதன்பின் இந்திய இராணுவம் வந்தபோது என்னை மீண்டும் உள்ளிழுத்தார்கள். துரதிர்ஸ்டம் என்னை விடவில்லை. வன்னிப்படையணியில் மாத்தையாவின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டேன். மாத்தையா பிடிபட்டதும் அவரோடு நெருங்கியிருந்த ஏராளமானவர்கள் பிடிபட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள். நானும் சித்திரவதை செய்யப்பட்டேன். காக்கா, எனக்கு பத்துவிரலிலும் நகங்களில்லை. இதோ தெரிகிறதா?” எனக்காட்டிய போது, எனது கைவிரல்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டேன்.
“காக்கா, ஏதோ ஒரு காரணத்தால் உயிர் பிழைத்துள்ளேன். சிவபெருமானில் நான் பொறாமைப்படுகிறேன். அவருக்கு உடலில் கடித்தால் நகத்தால் சொறியமுடியும் இல்லையா?” எனச் சொல்லியபோது பிரணவனது இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர்த்துளிகள் உருண்டன.
மிகவும் மெலிந்த திலக் என்பவர் காரைதீவு என்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். முப்பது வயது ஆனால் மேலும் வயதான தோற்றத்துடனான மாற்று இயக்கத்தவர். ஆனால், அவர்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு இந்திய ஆமியால் ஒரு கிழமை மட்டும் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டவர். தற்பொழுது அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை குறைவு. கண்ணாடி போட்டால் தெரியலாம். இங்கு இரவும் பகலும் இருளாக இருப்பதால் கண்ணாடி கிடைத்தும் பிரயோசனமில்லை. அந்த பங்கரில் இருக்கும் மற்றைய மனிதர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர். அவர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் கொலை செயப்பட்டபோது துண்டுப்பிரசுரமடித்தவர். முப்பத்தைந்து வயதான திருமணமான மனிதர். பண்ணாகத்தைச் சேர்ந்த அவர் பெயர் பொன்னம்பலம். இன்னமும் கூட்டணி ஆதரவாளர். முழுநாளும் பேசாது நாளைக் கடத்தினார். அவர்கள் மூவரும் ஒருவிதத்தில் நடைப்பிணமாக வாழ்ந்தார்கள். எந்த பிடிப்போ இல்லாமல் வாழ்பவர்கள் மத்தியில் பிரணவன் மட்டும் அந்த இடத்தில் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சியுடன் நடந்தபடியிருப்பார். அவரை நானும் பின்பற்றினேன். வெளியாலே விடுகிறார்களே இல்லை கொலைசெய்கிறார்களோ இருக்கும் வரையில் உடல் உறுதியாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டேன்.
“முதல் முறை நான் பிடிபட்டதும் கொலை செய்யப்படுவேன் என நினைத்தேன். இந்தியன் ஆமியிடம் பல தடவை அரும்பொட்டில் தப்பினேன். மாத்தையாவின் உதவியாளர் நூற்றம்பதுக்கு மேல் இறந்தும் நான் தப்பியதால் இம்முறையும் நான் மீண்டும் உயிர்வாழ்வேன். அதற்காக நான் எந்தனை நாட்களும் இருக்கத் தயார். எனக்கு ஊரில் ஒரு காதலியும் இருக்கிறாள். அவளுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது. அவளைப் பார்க்கவேண்டும்.அவளுக்கு திருமணமாகாமல் இருந்தால் அவளை மணம் செய்வேன். இல்லையெனில் அவளைப் பார்த்தாலே போதும். அவளின் மீது உள்ள காதலே என் உயிர்காக்கும் மருந்து” என்று வெட்கத்துடன் தலை தாழ்தினான் பிரணவன்.
அவனது காதலை நினைத்து ஆச்சரியப்பட்டதுடன், நாற்பது வயதாகிய எனக்கு காதலோ, பெண்தொடர்போ இல்லாது குடும்பத்தை நினைத்து வாழ்வைக் கரைத்ததை நொந்துகொண்டேன். ஆனால் பிரணவன் பேச்சில் தெரிந்த உறுதி, என்னையும் திடமாக்கியது. சேலத்தில் அவன் பயின்ற உடற்பயிற்சிகளை எனக்கும் சொல்லித்தந்தான். இரவில் இருவரும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தோம்.
ஒரு நாள் இரவு மழை பல மணி நேரமாக பெய்தது. வானமே பிய்த்துக்கொண்டு எங்கள் குழிக்குள் இறங்குவதுபோல் இரைந்தபடி இருந்தது. வெள்ளம் குழிக்குள் வந்து இடுப்பளவுக்கு வந்துவிட்டது. நான் பயந்து விட்டேன். எவரும் எட்டிப்பார்க்கவிலை. குளிரில் விறைத்து நடுங்கியபோது நீரில் மூழ்கி அல்லது நாளை நோய் வந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஒருவரும் பேசவில்லை. சிவபெருமான கூட மவுனம் காத்தார் மழை எப்போது விடும் எனக் காத்திருந்தோம் தண்ணீர் மணம் ஆரம்பத்தில் மூக்கைத் துளைத்தது . பின் பழகிவிட்டது. எங்கள் குழிகளுக்கும் மலக்குழிகளுக்கும் அதிக தூரமில்லை.
“வெள்ளத்தில் அள்ளுப்பட்டு காட்டிலிருந்து பாம்பு ஏதாவது வந்தால் தவிர பயப்படத் தேவையில்லை” அது பிரணவன் குரல் . கரிய இருட்டில் எதுவும் தெரியவில்லை. இடையில் வந்த மின்னல், மட்டும் எங்களை இனம்காட்டியது . அதைத் தொடர்ந்து இடி முழக்கம் வானம் பிளந்து நீர்கொட்டுவது போல் பயமுறுத்தியது. கைகால்கள் விறைத்து சூம்பிவிட்டன. இப்பொழுது சிவபெருமான் வழக்கம்போல் தலைவரை திட்டத் தொடங்கியது எங்களுக்கு ஒருவித சந்தோசத்தைக் கொடுத்தது . பித்துப்பிடித்த மனிதனாக அவர் இருந்ததால் காவலாளிகள் கேட்டாலும் பொருட்படுத்துவதில்லை . அவரால் திட்டியபடி உயிர் வாழமுடிந்தது .
“கழுத்துவரை வந்தால் மட்டும் உங்களை மேலே எடுப்பார்கள். மற்றப்படி நீங்கள் சாகமாட்டீர்கள் என அவர்களுக்குத் தெரியும்.” பிரணவனது மொழிகள் அன்று எனக்கு மனஆறுதலாக இருந்தன. அடுத்தநாள் நண்பகலில் அவ்வளவு வெள்ளமும் வடிந்துவிட்டது. எப்படி என ஆச்சரியம் அடைந்தேன்.
“இந்தக் குழிகளில் வடிகால்கள் உள்ளன. அவற்றைத் திறக்காமல் வைத்திருப்பதுவும் சித்திரவதையில் அடங்கியது.” சிரித்தான் பிரணவன் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல்.
எனது பங்கர் வாழ்வு அதிக காலம் நீடிக்கவில்லை. ஒரு மாதத்தின் பின்பு அதிகாலையில் பங்கரில் இருந்து என்னை வெளியே கொண்டு சென்றனர். அங்குள்ளவர்களைப் பிரிந்துசெல்வது துயரமாக இருந்தது. ஆனால், என்னோடு இருந்தவர்கள் என்னை ஏதோ கொலைக்களத்திற்கு கொண்டு செல்வதாக நினைத்துக் கண்ணீர் உகுத்தார்கள். சிவபெருமான்கூட திட்டுவதை நிறுத்தி என்னைப்பார்த்தார். அவரது முகத்திலும் என் மீதான பரிதாபம் தெரிந்தது.
மேலே வந்ததும் எனக்கு பிரிவதில் இருந்த துயரம் தொலைந்து பயம் வந்தது. நீங்கள் கிளிநொச்சி போகிறீர்கள் என்றார்கள். ஏற்கனவே பிரணவன் மூலம் தெரிந்திருந்தாலும் அப்பொழுது இது என்ன இடம் எனக் கேட்டேன். தயங்கியபடி ஒருவர் “இது துணுக்காய்” என்றார்.
விலங்கில்லாமல் துப்பாக்கிகளுடன் இருவர் என்னை ஒரு ஜீப்பில் ஏற்றி ஒரு வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். புதிய உடைகளுடன் துவாயும் லைஃபோய் சவர்காரமும் தந்து குளிக்கும்படி கட்டளை இட்டார்கள். அந்தக் குளிப்பின் ஆனந்தத்தை சொல்லமுடியாது. பிடிபட்டு இரு மாதத்தின் பின்பு குளிப்பது இதுவே முதல் தடவை. அதுவும் சவர்க்காரம் பூசி கிணத்தில் குளிப்பது ஆனந்தந்தைக் கொடுத்தது. மழையில் நனைந்து வெள்ளத்தில் கழுவிய உடலுக்கு கிளிநொச்சி மழையால் நிரம்பிய கிணற்றுத் தண்ணீர் அமிர்தமாக இருந்தது. பல வாளிகள் அள்ளிக் குளித்தேன். கொலை செய்வதற்கு முன்று என்னைக குளிக்கச் சொல்வார்களா? அப்படியானால் அங்கே முடித்திருக்கலாமே? லைஃபோய், பெட்ரோல் என இங்கு விரயம் செய்யவேண்டும் ? என பல எண்ணங்கள் மனத்தில் அலைமோதின.
உடைமாற்றி வந்ததும் என்னைக் கொண்டு வந்தவர்களால் பாணும் சூடாக பருப்புமென காலை உணவு பரிமாறப்பட்டது. என்னால் நம்பமுடியவில்லை. யாழ்ப்பாணத்தில் கிராமங்களில் உள்ள கோவில் வேள்விக்கு கிடாய் தயாராக்குவது போல் என்னைக் கவனிக்கிறார்களா? என்னிடம் எதுவும் தவறு இல்லை எனத்தெரிந்து கொண்டார்களா?
பத்துமணிக்கு கிளிநொச்சி வந்துவிட்டேன். இப்பொழுது மதியமாகிவிட்டது. எவரும் வரவில்லையே? யோசித்தபடி இருந்தேன். அந்த வீட்டில் இயக்கப்பாடல்கள் ரேடியோவில் ஒலித்தன.
ஆறடி உயரமான சிவப்பு நிறமான மீசைவைத்த ஒருவர் பின்கதவைத் திறந்தபடி பச்சை இராணுவ உடையுடன் என்னை நோக்கி வந்தார். அவரது இடுப்பில் பிஸ்ரல் வெளித்தெரிந்தபடி இருந்தது. அவர் நிச்சயம் முக்கியமானவராக இருக்க வேண்டும் என நினைத்து எழுந்தேன்.
“இருங்கள். எப்படி பங்கர் வாழ்க்கை?” எனச் சிரித்தார்.
என்ன பதில் கூறுவது என மௌனமாக நின்றேன்.
“நாங்களும் காட்டு பங்கருக்குள் பல நாட்களாக பட்டினியாக இருந்திருக்கிறோம். நாங்கள் படாத கஸ்டத்தை மற்றவருக்கு கொடுக்கவில்லை. எங்களுக்குத் தெரிந்த சுவையை மற்றவர்களுக்கு பரிமாறுகிறோம். எங்களைப்போல் மற்றவர்களையும் சமமாக நடத்துவது எங்கள் தலைவரின் கொள்கை” என சிரித்துவிட்டு, “இப்பொழுது உங்களுக்கு விடுதலை தந்து வீடு அனுப்புகிறோம்.” என்றார்.
“உண்மையாகவா?”
“உண்மையாக. ஆனால், உங்களிடம் மிகச் சிறிய பிரதியுபகாரத்தை எதிர்பார்க்கிறோம். உங்களை மீண்டும் கடல் மோட்டார் இயந்திரங்களை விற்கும் தொழில் செய்வதற்கு அனுமதிக்கிறோம். ஆனால் நீர்கொழும்பில் இருந்து, நாங்கள் சொல்லும் ஒருவருடன் இணைந்து செய்யவேண்டும். முக்கியமாக எங்களது தென் இலங்கையின் விடயங்களுக்கு உதவவேண்டும். இதற்கு சம்மதமானால் இன்றே விடுதலை அல்லது வாழ்நாள் முழுவதும் பங்கர்தான்.”
நம்பமுடியவில்லை. இந்த மனிதர் புலனாய்வுத்துறையில் முக்கியமானவர் என்பதை ஏற்கனவே ஊகித்துவிட்டேன். அந்த மனிதரை நம்புவதைத்தவிர வேறு வழியில்லை.
“எனது குடும்பத்தை பார்க்கலாமா?”
“தாராளமாக, எல்லா உதவியும் செய்யலாம். கல்யாணம்செய்து குடும்பம்கூட நடத்தலாம். ஆனால், எங்கள் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருக்கும்.”
“சரி ,ஒத்துக்கொள்கிறேன்”
“உங்களது பணம் சரியாக இருக்கிறதா எனக் கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என எனது பெட்டியை கொண்டுவந்து தந்தார்கள். அதில் எனது உடுப்புகள் மட்டுமல்ல பணமும் அப்படியே இருந்தன.
“ஏதாவது பணம் தேவையெனில் பெட்டியில் உள்ள விலாசத்தில் உள்ள சிங்களவரிடம் கேட்கவும்”
அதன் பின்பு மன்னாருக்கும் அங்கிருந்து நீர்கொழும்புக்கும் போட்டில் கொண்டு வந்தார்கள். கொழும்பில் நடந்த பல சம்பவங்களுக்கு நாங்கள் உதவி செய்தோம். பர்ணாந்து அண்ணை நீர்கொழும்புக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளை கடலில் ஏற்றிசென்று மீன்பிடிக்கவும், சினோர்கிலிங் செய்பவர். அவரது மூலமாக கடைசியாக நாங்கள் உதவியது கட்டுநாயக்காவில் நடந்த அவர்களின் தாக்குதலுக்கு. எங்களால்தான் இந்த யுத்த நிறுத்தமே வந்தது. தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பது நிம்மதியாக இருக்கிறது. பர்ணாந்து அண்ணைக்கு மச்சான் இரணுவ தலைமையகத்தில் இருப்பதால் கொஞ்சம் பயமற்று இருக்கிறோம். ஆனால், எதுவும் சொல்ல முடியாது. யாருக்காவது எனது கதை சொல்லவேண்டும் என்பதால் சதாசிவண்ணை உங்களிடம் சொல்லிவிட்டேன்”
அத்துடன் அந்த டயரி எழுத்துகள் முடிந்திருந்தன. இவ்வளவு பெரிய கதை எழுதி அந்த டயரியின் பல பக்கங்கள் முடிந்துவிட்டன. இறுதிப்பகுதி கடைசிப் பகுதி அவசரமாக எழுதியது போல் அசோகனுக்கு இருந்தது. இயக்கத்தைப் பெரியப்பா வெறுத்ததன் காரணங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன. டயரியை வைத்துவிட்டு கம்பியூட்டரைப் பார்த்தான். இலங்கையில் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்றதாக தமிழ்நெட் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
பின்னூட்டமொன்றை இடுக