கற்சுறா. நன்றி அபத்தம்.
கடுமையானதும் பல்வேறு மன உளைச்சல்களைக் கொண்டதுமாகக் கடந்து போன காலங்களின் “சில பதிவுகள்” கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியன. பலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினாலும் அதிகமானவர்களுக்கு அதனை எழுதுவதில் தயக்கம் இருக்கிறது. தமது அனுபவங்களைப் பொது வெளியில் பேசுவதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. பேசுவதனால் எங்காவது ஓரிடத்தில் தாங்கள் இந்தப் பொதுச் சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் எழுகின்ற தயக்கந்தான் அந்தத் தயக்கம் என்று நினைக்கிறேன்.
வெறுமனே இவ்வாறான அனுபவப் பகிர்வுகள் தனிப்பட்ட மனிதர்களைச் சுற்றி அடையாளம் காட்டப்பட்டாலும், ஒரு சமூகமாக- ஒரு இனமாக அந்தத் தனிப்பட்ட மனிதர்களது செயற்பாடுகள் மிகவும் கட்டுக் கோப்பான தொடராகவும் மிகத் திட்டமிட்ட தொடர் பரப்புரையாகவும் இருந்து விடுவது நமக்குக் கிடைத்த சாபக் கேடு. இவ்வாறுதான் மொத்த சமூகத்தின் தலைவிதியாக அவை பொதுப்புத்தி மட்டத்தில் கட்டிக் காக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் அபத்தம் இதழில், விமல் குழந்தைவேலுடனான இடைமறிப்பு உரையாடலின் பகுதியில் பிரதேசவாதம் பேசுவதில் சாதி பேதம் இருப்பதில்லை என்பதனைச் சுட்டிக்காட்டி -யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் துயரம் சொல்லமுடியாத அளவு துயரமானதுதான். அனாலும் அங்கே வாழும் அத்தனை சாதிகளும் ஒன்றாக இணைந்து பிரதேசவாதம் பேசுவதையும், தங்களை விட மற்றய பிரதேசத்தவர்களை அவர்கள் அணுகும் போது, அனைவரும் ஒரு சேரச் சேர்ந்து கிழக்கு- மலையகம்- மற்றும் வன்னிப் பிரதேசத்தவர்களைப் புழுவிலும் கேவலமாக அணுகுவது பற்றி எழுதியிருந்தேன். மற்றயவர்களை இழிவாக நினைக்கும் தன்மையும் தங்களைத் தூய்மையானவர்களாகவும் படிபறிவில் தங்களை மேன்மையானவர்களாகவும் காட்டிக் கொள்ளும் தன்மையையும் அவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் பொதுவெளியில் தெரிவிப்பார்கள். அதுதான் அவர்களுடைய திமிர். அந்தத் திமிர் எந்தச் சிறு கூச்சமுமற்று தாங்கள் அறிந்திராத சிங்களவர்களைக் கூட மோட்டுச் சிங்களவர்கள் என்றுதான் அடையாளம் காட்டுகிறது. அதற்கு அவ்வளவு திமிர்.
இந்த யாழ்ப்பாணத் திமிர் என்பது தனியே கல்வியிலோ, அரசியல் நடவடிக்கைகளிலோ மட்டும் தன்னை வெளிக்காட்டி நிற்பதாகத்தான் ஒற்றைப் பார்வையில் வெளியில் தெரியும். ஆனால், தான் உண்ணும் உணவிலிருந்து அன்றாடம் உரையாடும் “ஐசே” உரையாடல் தொடக்கம் ஈழவிடுதலைப் போராட்டத்தில் மற்றய பிரதேசத்தவர்களைக் கொலை செய்யத் தூண்டிய சிந்தனை வரை அது திமிர் கொண்டே தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நம் முன்னோர்களது அனுபவங்கள் தொடக்கம் இன்று வரை இதற்கு பல உதாரணங்களைச் சொல்லி விட முடியுமென்றாலும் இங்கே நான் சுட்டிக்காட்ட முன்வருவது நமது யுத்த காலத்தில் இந்த யாழ்ப்பாணத் திமிர் எப்படித் தலை விரித்தாடியது என்று மட்டுந்தான்.
ஏனெனில் இந்த “யாழ்ப்பாணத் திமிர்” என்ற கதையாடல் மிகப்பெரியதொரு கதையாடல். அது யாழ்ப்பாணத்திற்குள் வாழ்பவர்களை மட்டும் பீடித்திருக்கவில்லை. அதற்கு வெளியிலிருப்பவர்களையும் அது பீடித்திருந்தது. பீடித்திருக்கிறது. புலம்பெயர்ந்த பின்னாலும்கூட அது பின் நகர்ந்ததுதான். சாதியச் சிந்தனையைப் போல் அது வெளிப்படையாகத் தோன்றினாலும், அதற்குச் சாதி பேதமிருக்கவில்லை என்பதுதான் இன்னொரு ஆபத்தான நிலையே.
அதனை நான் பட்டுணர்ந்ததாலும் பார்த்துணர்ந்ததாலும் படித்துணர்ந்ததாலும் முடியுமானவரை எனது எழுத்துக்களில் அதனைக் கேள்விக் குள்ளாக்கியே வந்திருக்கிறேன். அதனால்த்தான் அது மிகவும் ஆபத்தானதாக உணருகிறேன். இதனை ஒரு சிறு பக்க விளக்கங்களுடன் மட்டுப்படுத்திப் பேசிவிட முடியாது. அதற்கு நீண்டகால வரலாறு உண்டு. அந்த நீண்டகாலவரலாறு குறித்த ஆய்வு அல்ல இது. அதனை ஆய்வு செய்வதற்குரிய போதிய தகமை என்னிடம் தற்பொழுது இல்லை. அதனால்த்தான் கட்டாயம் நாம் பேசியே ஆகவேண்டிய பகுதி குறித்து அக்கறை கொள்கிறேன்.
நமது யுத்தகாலத்தில் இந்த “யாழ்ப்பாணியத்திமிர் எவ்வாறு நகர்ந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால்த்தான் அதுபற்றிப் பேச முனைகிறேன். அதனைச் சொல்லும் தகமை என்னிடம் மேலதிகமாக இருப்பதாகவே உணருகிறேன். அதனால் நான் ஏற்கனவே பேசியது போல் அதனை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணத்திற்குள் கல்வி கற்க வந்த பிற பிரதேச மாணவர்களுக்கு, யாழ்ப்பாணத்து மாணவர்களாலும் அந்தபாடசாலைகளின் ஆசிரியர்களாலும் ஏற்படும் உள- உடல் துன்புறுத்தல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை என்பதனை நன்கு அறவேன். அதேபோல் பிறபிரதேசங்களுக்கு கல்வி கற்பிக்கச் செல்லும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களுக்குக் கொடுக்கும் துன்பங்களுக்கும் துஸ்பிரையோகங்களுக்கும் பெரும்பாலும் குறைவிருந்ததில்லை. யாழ்ப்பாணத்திற்க்குக் கல்வி கற்கவரும் வன்னி மாவட்ட மாணவர்களைக் காட்டான் என்றும் யங்கிள் என்றும் வன்னி என்றும் அந்தப் பாடசாலை ஆசிரியர்களே பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. 1977 கலவரத்தில் தமது ஊரைவிட்டு வெளியேறி வடபகுதிக்கு வந்து கல்விகற்ற மலையகத்தைச் சேர்ந்த மாணவனை மலைவெட்டி என்று பெயரிட்ட ஆசிரியர்களையும் எனக்குத் தெரியும். இவ்வாறான சிந்தனை பொதுப்புத்தியிலிருந்துதான் ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் தாவுகிறது. இந்த மாதிரியான மானிட சமூகத்திற்கு விரோதமான கருத்தியல் ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தியலாக இன்று வரை கொண்டு காவப்படுவது என்பது, இந்த யாழ்க்காணியச் சமூகம் ஒரு பொழுதிலும் உன்னத சமூகமாக உய்த்து உணர்ந்து வளரவே வளராது என்பதற்காகன இன்னுமொரு அறிகுறி.
இதன் மறுபுறம், யாழ்ப்பாணத்திலிருந்து பிறமாவட்டங்களுக்குக் கல்வி கற்பிக்கத் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுபவர்களது சிந்தனையும் இதே போன்றதுதான். பெரிதான வேறுபாடுகளைக் காணமுடியாது. தாம் கல்வி கற்பிக்கச் செல்லும் சமூகம் தங்களை விடத் தாழ்ந்தவர்கள் என்பதனை அவர்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அங்கே வாழ்பவர்களுக்கு ஒரு வாழ்வு முறை இருக்கிறது என்பதனை அறியாதவர்களல்ல அவர்கள். ஆனால் அவர்களிலும் விட தம்மை மேலானவர்கள் என்று சிந்திந்துக் கொள்ளவைக்கப்பட்ட ஒரு யாழ்ப்பாணிய மனநிலை கொண்டவர்களின் நடைமுறை இது. கனடாவில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அக்கறை கொள்வதாகப் படங்காட்டும் ஒரு யாழ்ப்பாணிய மனநிலை கொண்டவருக்கு இந்த வதைகள் புரியாதிருப்பதும் அதற்கெதிராகப் பேசாதிருப்பதும் வேடிக்கையானது. வெறுமனே விளையாட்டானதும்கூட. இங்கே இன்னொரு விடயம் விவாக ஆராயப்பட வேண்டும். வடபகுதியை விட்டு வேறு பிரதேசங்களுக்குக் கல்வி கற்பிக்கத் தெரிவுசெய்து அனுப்பப்படும் ஆசிரியர்களது தெரிவு முறை குறித்ததுதான் அது. அதன் பின்னால் உள்ள அரசில் விபரங்களையும’ நாம் தீர ஆராய வேண்டும். தமது இடங்களில் வேலை கொடுக்காமல் பிற பிரதேசங்களுக்கு அனுப்பப் படுபவர்களின் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆராய்ந்தால் இன்னும் யாழ்ப்பாணியத்தின் கேவலமான பக்கங்கள் வெளித்தெரியவரும்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கற்பிக்க அனுப்பப்படும் ஆசிரியர்களுள், நானறிந்திருந்தவர்களில் எங்காவது ஒரு சிலரைத் தவிர மிகுதி அனைவரும் சிந்தனையில் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவ்வாறானவர்களை சிறிய புள்ளியிலேனும் சரியான முறையில் தன்னுடைய “மண்” திரைப்படத்தில் புதியவன் இராசையா அவர்கள் பதிந்திருப்பார். ஆனாலும் இந்தவகைப் பக்கங்கள் எல்லாம் நமது இலக்கியத்தில் வெளிப்படுவதேயில்லை.
அது ஏனெனில் இன்னொருபுறம் ஈழ இலக்கியம் என்பதே இன்று யாழ்ப்பாணத்திமிருக்குள் பயணப்படுவதாகத்தான் பெரும்பாலும் அடையாளம் காட்டப்படுகிறது. அதன் மொழி பேசும் இலக்கியங்களே பேசுபொருளாக்கப்படுவதும் பிற காணாமல் விடப்படுவதுமாகத்தான் கொண்டு காவப்படுகிறது. உணவு முறைகளோ ஆடை வகைகளோ அல்லது ஆடல் மற்றும் பிற கலை வடிவங்களோ யாழ்ப்பாண வலயத்திற்குள்ளேதான் இருந்துதான் தொடங்குகிறது என்பதான ஒரு கருத்தின் பின்னாலுள்ள மிகமோசமான முட்டாள்த் தனத்தை அவர்கள் விளங்கவேயில்லை. கட்டாயம் மருந்தெடுத்துக் குணமாக்கப்பட வேண்டிய வருத்தம் இது.
ஆனால் இவர்களுக்கு தங்களது இருப்பு நிலை தெரிவதில்லை. தங்களுக்கு ஒரு “நோய்” இருப்பதென்பதையே அறியாதவர்கள் அவர்கள். அவர்கள், “தாங்கள் புத்திசாலிகள்” என்று சொல்வது ஒன்றும் பாரதூரமான சொல் அல்ல. ஆனால் தாங்கள்தான் புத்திசாலிகள் என்பது ஒரு நோய். இப்படியொரு நோய் தங்களுக்கு இருக்கிறது எனத் தெரியாது கதை சொல்லிக் கொண்டிருக்கும் நமது பேரறிவாளர்கள் அனைவருக்கும் மனநோய் பிடித்திருக்கிறது என்பதே உண்மை.
அடுத்து,
இலங்கைவாழ் தமிழ் இனத்தை அடையாளம் காட்டி எழுப்பப்பட்ட தமிழீழ எழுச்சி என்பது யாழ்ப்பாணியத் திமிருக்குள் சுருங்கிச் சுருண்டது என்பது ஏதோ திடீரென நடந்ததொரு சம்பவமல்ல. அது நமது சாபக்கேட்டின் தொடர்ச்சி.
இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனாலும் ஒரு சிறு சம்பவத்தைச் சொல்லுகிறேன்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.1984 காலப்பகுதி. பழைய முறிகண்டிக்கும் புத்துவெட்டுவானுக்குமிடையில் கண்டிறோட்டில் வெடிக்க வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியினால் வீதி முழுதாக முடக்கப்பட்டிருந்தது. அந்த வீதியூடான போக்குவரத்து முழுதாகத் தடை செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து யாழ் செல்லும் சொகுசுப் பேரூந்துகள் பூநகரிப்பாதையூடாகப் பயணிக்க, மாங்குளத்தின் வழியாக மல்லாவி வந்தடைந்தன. கிட்டத்தட்ட ஐந்தாறு பெரிய வாகனங்கள். வந்த நேரம் மாலை ஆனதால் ஊர்வாசிகளால்அவர்களுக்கான தங்குமிட வசதிகள் அங்குள்ள பாடசாலையில் தயார் செய்து கொடுக்கப்பட்டது. எங்கள் பாடசாலையில் மூன்று வாகனங்கள் தரித்து நின்றன. அதிலிருந்த பயணிகளுக்கான தேனீர் மற்றும் உணவு வசதிகள் விரைவு படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டது. அந்தச் செயற்பாட்டில் எனது தந்தையின் ஈடுபாடு மூலமாக நானும் எனது சகோதரர்களும், நண்பர்களும் பங்காற்ற வேண்டியிருந்தது. நாங்கள்தான் வீடுவீடாகச் சென்று மரக்கறிகளும் அரிசியும் சேகரித்தோம். இதெல்லாம் ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் நடைபெற்ற விடயங்கள்.
நமது பாடசாலையில் தங்கவைக்கப்பட்ட பயணிகளுக்கு நுளம்புத்திரி கொழுத்திவிடுவதிலிருந்து வாங்கில்களை அடுக்கிப் படுக்கை அமைப்பது வரை நாங்கள் ஒழுங்கமைத்துக் கொடுத்துக் கொண்டோம். அவர்களுக்கான தேனீரும் உணவும் பாடசாலையின் பின்வளவில் திடீரென நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட அடுப்பில் தயாராகிக் கொண்டிருந்தது. நாட்டு நிலைமை சரியாகி நல்லமுறையில் பாதுகாப்பாக அவர்கள் தமது பயணத்தைத் தொடரும் வரை அவர்களுக்கு உதவி செய்து விடவேண்டும் என்பதுதான் நமக்குச் சொல்லப்பட்டது. அதில் ஒரு குறையும் வந்துவிடாதபடி நாம் கரிசனையுடன் செயற்பட்டோம். மல்லாவியில் மொத்தம் மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டாலும் எனது பாடசாலையில் கிட்டத்தட்ட 60 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்.
அங்கிருந்த அனைவருக்கும் தேனீர் தயாரிக்கப்பட்ட போதும் ஓரிருவரைத் தவிர வேறு யாரும் தேனீர் அருந்தவில்லை. சிலர் தாங்கள் தேனீர் குடிப்பதில்லை என்றார்கள். அவர்களிலும் ஒரு சிலர் மல்லாவிக் கடைத் தெருவுக்குச் சென்று தேனீர் அருந்தி வந்ததாக அறிந்தோம். மல்லாவியிலும் சில யாழ்ப்பாணத்தவர்களும் கடை வைத்திருந்தார்கள்.
மாலை புட்டும் மறுநாள் மதியம் சோறு, பயிற்றங்காய் பிரட்டல், பருப்பு என்று சமைத்த உணவில் பெரும்பாலானவற்றை மறுநாள் மாலை நாங்கள் நிலத்தில் வெட்டித் தாட்டோம். ஓரிருவரைத் தவிர யாருமே அதனை உண்ணவில்லை. அவ்வளவு திமிர் அவர்களுக்கு. மரணப்படுக்கையில் இருக்கும் போதும்கூட சாதியவாதமும் பிரதேசவாதமும் யாழ்ப்பாணியத்தவர்களிடமிருந்து ஒருபொழுதும் விட்டுப் போகாது.
ஒரு சாதாரண பொதுப்புத்தி அறிவோடு, சமூகவிழிப்புணர்வு அற்று தன்னை வெளிக்காட்டும் ஒரு யாழ்ப்பாணியத்தானின் மனநிலைக்கும் தன்னை ஒரு புத்திசாலி என்றும், அறிவுத் துறையில் தன்னை மீறி எதுவுமில்லை என்றும் சொல்லி வரும் யாழ்ப்பாணியத்தானுக்கும் அடிப்படைச் சிந்தனை ஒன்றுதான். அதுதான் “ நான் பெரியாள்” என்ற சிந்தனை.
இந்த “அசல் யாழ்ப்பாணியக் கருத்தியல்” தன்னை முழு நிர்வாணமாக நமது யுத்தகாலத்தில் வெளிக்காட்டி நின்ற இடங்கள் மிக முக்கியமான இடங்கள்.
ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டம் என்று சொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே யாழ்ப்பாணியச் சிந்தனைக்குள் குறுக்கப்பட்ட நிலை குறித்து “அசல் யாழ்ப்பாணிய” மனநிலை கொண்டோர் கவலை கொள்வதேயில்லை.
1986 களில் ரெலோ விடுதலை இயக்கப் போராளிகளிலும் ஈ.பி. ஆர்.எல்.எவ். இயக்கப் போராளிகளிலும் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தவர்களை மட்டும் அதிகமாகக் கொலை செய்து அவர்களைத் தடை செய்வதாக அறிவித்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். இதனை எவ்வித மறு பேச்சுமின்றி கைகட்டி வாய்பொத்தி மவுனமாக ஆதாித்து நின்றவர்கள் இந்த “அசல் யாழ்ப்பாணிய” மனநிலை கொண்டவர்கள். தமது தமிழ்த் தேசியத்தில் எந்தக் குறை விழுந்தாலும் அறிக்கை விடும் இந்தப் பெரிய படிப்பாளிக் கூட்டம் இதற்கு ஒரு சிறு எதிர்ப்பும் தெரிவிக்காது கடந்து போனதென்பது வியப்பானதேயல்ல. அது கட்டமைக்கப்பட்டது.
இதன் பிற்பாடு 1990 காலப்பகுதியில் வடபகுதியிலிருந்து ஒட்டு மொத்த முஸ்லீம் மக்களும் துடைத்து வெளியேற்றப்பட்ட போதும் இந்த “அசல் யாழ்ப்பாணிய”க் கூட்டம் அதனை வரவேற்று நின்றது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்த கட்டளையின் பேரில் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையைப் புலிகள் மேற்கொண்டனர். அந்தக் கொலைகள் எல்லாமே தமழீழ விடுதலைப் போராட்டாத்திற்காகப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகத்தான் இந்த “ அசல் யாழ்ப்பாணிய” வாதிகள் இன்றுவரை நம்பி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
இன்று முழத்திற்கு முழமும் நிமிடத்திற்கு நிமிடமும் “இன அழிப்பு”க் குறித்துப் பேசிவரும் இந்த “அசல் யாழ்ப்பாணிய” கருத்துரைப்பாளர்கள், இந்தக் கொலைகளெல்லாம் எப்படி தமது தேசியத்திற்கே கேடு விளைவித்தது என்று சிந்திக்கத் தயாராக இல்லாத மடைச்சாம்பிராணிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறான சிந்தனையற்ற மோட்டுச் சமூகத்திடமிருந்து எந்த எதிர்ப்புணர்வும் எழவே எழாது என்ற நிலையில் கிழக்கில் 2004 ஏப்ரல் 10ந் திகதி வடக்குப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைதான் வெருகல் படுகொலை. கிழக்குப் பிளவு நடந்த இந்த 2004 காலப்பகுதியில் புலம்பெயர் தேசங்களிலிருந்த அச்சவுணர்வை இந்த “அசல் யாழ்ப்பாணிய” மனநிலை கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு கிழக்கு மாகாணத்தவனையாவது கொன்று விடத்துடித்துக் கொண்டிருந்தது இந்தப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணிய மண். கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கப் பயந்து வீட்டிற்குள் இருந்த கிழக்கு மாகாணத்தவர்கள் இருந்தார்கள். 1990ம் ஆண்டு காலத்தில் புலம்பெயர் தேசத்தில் கூட ஒரு முஸ்லீம் ஒருவர் வெளியில் நடமாடமுடியாதிருந்த நிலையை ஒத்ததாக இருந்தது இந்தக்காலமும். இப்பொழுது நினைத்தால் இது வேடிக்கையாகத்தான் இருக்கும். இந்த யாழ்ப்பாணிய மனநிலை கொண்டவர்கள், அப்பொழுதுகளில் இங்குள்ள வானொலிகளில் ஆற்றிய உரைகளும் ஆய்வுகளும் ஏராளம் ஏராளம். அவ்வாறான துவேசம் படிந்த கதைகளை எந்த வெட்கமும் இல்லாது இந்த வானொலிகள் காற்றலைகளில் ஒலிபரப்பின. அதனையும் மேவி புலம்பெயர் சூழலில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளோ அந்தக் கோரத்தாண்டவத்திற்கு தமது ஆதரவுக் குரலை வெளிப்படையாக வழங்கி நின்றார்கள். தமிழ்ச்சூழலில் ஒரு சிறிய எண்ணிக்கையைத் தவிர, தம்மை அறிவாளர்கள் என்று அடையாளம் காட்டுபவர்களோ அல்லது ஈழ அரசியற் செயற்பாட்டாளர்களோ யாருமே எந்த வியாக்கியானங்களையும் தெரிவித்ததாக நான் அறியவில்லை.
ஆனால் 2006 ஒக்ரோபர் 16 இல் சட்டரீதியாக வடக்குக்கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டபோது இந்த “அசல் யாழ்ப்பாணிய மனநிலை” கொண்டவர்களது தூக்கமும் மவுனமும் கலைந்தது. நமது ஈழ தேசியத்திற்கு இடைஞ்சல் வந்து விட்டது என்றும் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது நியாயமற்றது என்றும் அது ஆரோக்கியமான செயல் இல்லை என்றும் பல்வேறுபட்ட தரப்பினர் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்லஸ் தொடக்கம் ஈ.பி. ஆர்.எல். எவ். சிறீ சுகு, மனோ கணேசன்,புளொட் சித்தார்த்தன், தமிழ்க் கூட்டமைப்பினர் என்று ஒரு பெரும் பட்டியல் இந்தக் கதைக்குள் வருகின்னறன.
இந்த அறிக்கையாளர்களுக்கு தமிழினத்தின் பெயரில் செய்யப்பட்ட எத்தனையோ படுகொலைகளுக்கு ஒரு அறிக்கை விடத் துப்பற்றுப் போனது. இந்தக் காலப்பகுதியில்த்தான் தினக்குரலில் “ “யாழ்ப்பாணத்தைப் பிரித்து வைப்பது யார்” என்று பீஷ்மர் எழுதுகிறார். ஏ9 பாதை மூடப்பட்டது குறித்து எழுதும் பீஷ்மர், நாட்டைத் துண்டாடக் கூடாது எனச் சொல்லிவரும் அரசு இப்பொழுது யுத்த உபாயத் தேவைக்காக யாழ்ப்பாணத்தை ஏறத்தாழ புவியியல் அடிப்படையில் ஒரு தனித் துண்டாகக் கொள்கிறது.” என்று எழுதுகிறார்( நவம்பர் 2006 தினக்குரல்). அவருக்கு யாழ்பகுதி தற்பொழுதுதான் முதன்முறையாகப் பிரிக்கப்பட்டது என்ற கருத்து. 1987 இல் ஒபறேசன் லிபறேசன் காலத்தில் கூட முழுதாகத் தடை செய்யப்பட்டதனை அவர் மற்ந்து போயிருப்பார்.
ஈழத்தில் அவ்வப்போது நடைபெறுகின்ற யுத்த மாற்றங்களை எப்பொழுதும் தங்களுடைய “ அசல் யாழ்ப்பாணிய” அடிப்படைச் சிறுமைத் தனத்திற்கு ஏற்றாற்போல் கதை சொல்லி வந்தவர்களில், இந்தவகை ஆய்வாளர்களும் இவர்களைத் தாங்கி நடந்த பத்திரிகைகளும் முக்கியமானவர்கள், இன்றுள்ள நிலாந்தனைப் போல்.
இவர்கள் யாருக்குமிடையிலும் ஒரு பேதமில்லை. எவ்வாறு வடகிழக்கு பிரிக்கப்பட்டபோது ஓடிவந்து தமிழர் தாயகம் – மக்களின் அபிலாசை என்று அறிக்கை விட்ட கும்பல் இருந்தது. அதேபோன்று இன்று மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று சொல்லும் இந்தக் கும்பலுக்கும் அவர்களுக்கும் பேதமில்லை. எல்லாமே ஒரே நுகத்தடியில் பொருத்தப்பட்ட வேறு வேறு மாடுகள்.
பின்னூட்டமொன்றை இடுக