
நோயல் நடேசன் நன்றி அபத்தம்
அன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தனுக்கு விடுமுறை நாள். படுக்கையிலிருந்தபடி தொலைபேசி வழியே முகநூலைப் பார்த்தவனுக்கு, அதிலிருந்த பதிவொன்று நெஞ்சாம் குழியுள் ஒரு பூகம்பமாக அதிர்ந்து சில கணத்தில் ஓய்ந்து, இதயத்தில் சுருக்கென ஏதோ கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, உடலங்கும் பரவிய அந்த உணர்வுடன் மேலும் படுக்க முடியாது எழுந்தவன், கட்டிலில் சாய்ந்து இருந்தபடி நெஞ்சைக் கையால் அழுத்தமாக நீவியபடி பழைய நினைவுகளுடன் போராடினான்.
சாதாரணமாக உதறித் தள்ளிவிட்டுப் போகமுடியாத பதிவு அது. உறங்கு நிலையிலிருந்த வித்து, மழைத்துளி கண்டு முளைவிடுவது போன்று அந்த செய்தி அவனைத் திக்குமுக்காடச்செய்தது.
முக்கியமான விடயங்கள் நல்லது கெட்டது எதையும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மனைவி ராதையுடன் பரிமாறும் அவனுக்கு இதை யாரிடம் சொல்லது?
எப்படிச் சொல்வது?
பதின்மூன்று வருடங்களுக்கு முன்பாக முகநூலில் விடுத்த நட்பு அழைப்புக்கு விவியனிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் பின்னால் நடந்த கொரானா காலத்தில் முகநூலில் அழைப்பு வந்ததா எனத் தேடிப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. வெள்ளை பொக்சர் நாயுடன் விவியன் எடுத்த முகநூல் படம் தெளிவாக அவளை அடையாளம் காட்டியது. 2020 பின்பாக எந்த முகநூல் பதிவும் இருக்கவில்லை. பெருந்தொகையானவர்கள் முகநூலில் பதிவுகள் போடாது மற்றையோர் பதிவுகளை மட்டும் பார்ப்பவர்கள். அந்த வகையில் விவியனும் ஒருத்தியோ?
ஆனால் இன்று 2020 ஜூலை 25ம் திகதி விவியனின் முகநூலில் விவியன் நண்பியான மார்க்கிரட் ஒரு பதிவை சேர்த்திருந்தாள் “சிறுவயதிலே இருந்து எனது தோழியாகி, பின்பு விக்ரோரியன் ஓவியக்கல்லூரியில் ஒன்றாகப் படித்து ஐம்பது வருடங்களாக மகிழ்விலும் துன்பத்திலும் கலந்து கொண்ட எனது தோழி விவியனின் மறைவு எனக்குப் பெரிய இழப்பு. பல வருடங்கள் முன்பாக இருவரும் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று அங்குள்ள சுவட்ரோ மக்களோடு இருந்தபோது அங்குள்ள அனாதை சிறுவர்கள் பள்ளியில், ஓவியங்கள் தீட்ட விவியன் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் என்னால் மறக்கமுடியாது. தற்பொழுது தனது ஓவியம்போல் ஃபாக்னர் இடுகாட்டில் அமைதியாகத் தூங்குகிறாள். அவளுக்கு எனது அஞ்சலிகள்’ என எழுதியிருந்தார்.
விவியன், எனக்கும் ஒரு முறை தனது தென்னாப்பிரிக்கப் பயணக்கதையை சொல்லியிருந்தாள். அதில் இரண்டு தடித்த ஆப்பிரிக்கப் பெண்கள் மத்தியில் தான் படுத்திருந்த போது அவர்கள் விட்ட குறட்டையில், இரவு தூங்காத அனுபவத்தை நகைச்சுவையோடு விவரித்ததும் இன்றும் நினைவில் உள்ளது.
வசந்தனது மனத்தில் இரைச்சல், அதிர்வுகளை உருவாக்கியபடி காட்டாறு கரை புரண்டு ஓடியது. தொலைப்பேசியை அருகில் வைத்துவிட்டு பழைய நினைவுகளைப் பரசூட்டாக விரித்து தனது இளமைக் காலத்தை நோக்கிச் சஞ்சரித்தான்.
இதுவரையில் நண்பர்கள், மனைவி என எவரிடம் பகிர்ந்து கொள்ளாத, இளமைலிருந்தும் அள்ளி வாரிப்போடமுடியாது உறைந்து போயிருக்கும்: முதல் முத்தம், பகிர்ந்து கொண்ட காதல், விரும்பியோ விரும்பாமலோ பார்த்த பெண்ணின் அந்தரங்கங்கள், காமம் சார்ந்த நிகழ்வுகள் எல்லாருக்கும் உண்டு. பதின்மூன்று வயதில் காமத்தின் பாதையில் முதலடி எடுத்தபின் முப்பதுகளில் திருமணம் என்ற சட்டபூரவமான பந்தம் ஏற்படும்வரையும் முற்றும் துறந்த முனிவனாக ஒருவன் இருப்பான் என எதிர்பார்க்க முடியாது. இளமையின் அந்தரங்க நினைவுகளை கோவிலில் திருடிய நகைகள்போல், மற்றவர்கள் மத்தியில் சொல்லிப் பெருமைப்படமுடியாது. இடையிடையில் வெளியே எடுத்தோ, இருட்டில் தடவியோ பார்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காய் தின்றவன் தண்ணீர் குடிக்கும்போது ருசிப்பதுபோல் பிற்கால உறவுகளிலும் ஒரு தித்திப்பை உருவாக்கலாம். ஆனால் அவைகளைப் பிற்காலத்தில் மனைவி, குழந்தைகள் என்று வந்தபின், அதுவும் நடத்தர வயதின் பின் பகிர்ந்து கொள்ளமுடியுமா என்ன? அதனால் எந்த லாபமும் இல்லை. தேவையற்ற மனக்கசப்பே மிஞ்சும்.
நாற்பது வருடங்களுக்கு முன்பாக அதாவது 80பதுகளின் ஆரம்பக் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்புத் திட்டத்தின் கீழ் மேற்படிப்புக்குப் புலமை பரிசில் பெற்று மெல்பேன் வந்தவன் வசந்தன். புலமைப்பரிசு வழங்கிய பணத்தில் படித்தும் கைச்செலவுக்குப் பஞ்சாபி உணவுக்கடையில் வேலை செய்துகொண்டும் சராசரி மாணவனாக மற்றும் இரண்டு இலங்கை நண்பர்களோடு பல்கலைக்கழகத்தின் அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் குடியிருந்தான். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியே விவியன். நாற்பது வயதைத் தாண்டிய விவியனுக்கு ஒரு மகன் அடிலேய்ட்டில் படிப்பதால் அவனது அறையை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். விவியன் திருமணம் செய்து விவாகரத்தானதால் பல காலமாக வேலை செய்யவில்லை. மாலை நேரத்தில் உணவகங்களில் பகுதிநேர புகைப்பட கலைஞராக வேலை செய்தாள். அக்காலத்தில் கைபேசிகள் இல்லை. உணவக விருந்துகளில் புகைப்படம் எடுப்பது பலருக்கு பகுதி நேர வேலையாகவிருந்தது.
வசந்தனுக்கும் மற்றைய இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விவியனை பல நாட்கள் பார்க்காது இருக்கமுடியும். மாடிக்கு வந்து போவதற்குத் தனியான வழி உள்ளது. மாத முடிவில் வாடகைப் பணத்தை கொடுப்பதற்கு அவளைச் சந்திப்பதைத் தவிர மற்றைய எந்தவிதமான தொடர்பும் இல்லை.
83ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் வசந்தனது குடும்பம் இலங்கையில் பாதிக்கப்பட்டது. அவனது வீடு எரிந்து பெற்றோர்கள் கொழும்பு அகதி முகாமிலிருந்தார்கள். அக்காலத்தில் ஒழுங்காகப் பல்கலைக்கழகம் செல்லாது வசந்தன், பறக்கும்போது மரக்கிளையில் அடிப்பட்டு நிலைகுலைந்து தரையில் விழுந்த பறவையாகத் தத்தளித்தான்.
அக்காலத்தில் வசந்தனிடம் வந்து ஆறுதல் சொல்லிய விவியன், உணவுகள் கொண்டு கொடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தக்காலத்தில் வசந்தனோடு இருந்தவர்கள் ஆன்ரி என கூப்பிட தொடங்கியபோது விவியன், என்னை விவியன் என்றே அழையுங்கள் அல்லது விவா என அழையுங்கள் என்றாள் . அக்காலத்தில் நட்பான அன்னியோன்னியம் ஏற்பட்டபோதும் இரண்டு வருடங்கள் பின்பாக எல்லோரும் பிரிந்துவிட்டார்கள்.
வசந்தனுக்கு முனைவர் பட்டம் கிடைத்ததும், மெல்பேன் பல்கலைக்கழகத்திலே வேலை கிடைத்தது. இதனால் சில நாட்களில் வேறு அபாட்மெண்ட் எடுத்து சென்று விட்டான். யாழ்ப்பாணத்தில் இருந்த பெற்றோர்கள், இலங்கையில் நெருக்கடி அதிகரிக்க 87ல் சென்னைக்குச் சென்று விட்டனர். அங்கு இலங்கை பெண்ணெருத்தியை பார்த்து திருமணம் செய்ய சொல்லியபடியிருந்தனர்.
பல்கலைக்கழக ஆய்வு வேலை வசந்தனுக்கு நிரந்தரமற்றதானதால் திருமணத்தை மறுத்தபடியிருந்தான். இறுதியில் பெற்றோரின் நச்சரிப்பு காரணமாகவும் பலகாலம் அவர்களைப் பார்க்காத தவிப்பால் சென்னை வருவதாகச் சொல்லியிருந்தான்.
இக்காலத்தில் ஒரு நாள் தற்செயலாக ரயில் நிலையத்தில் விவியனை சந்தித்தபோது, சென்னை போக இருப்பதாகச் சொன்னான். அவள் ‘நானும் எனது நண்பி மார்கிரட்டும் இந்தியாவின் கேரளாவிற்கு பத்து நாட்கள் போகவிருக்கிறோம். நீயும் எங்களுடன் வந்தால் எங்களுக்குத் துணையாக இருக்கும்’ என்று அழைத்தாள். அவர்களது பயணநாளை கேட்டு அவனும் ஆன்லைனில் பதிவு செய்வதாகவும் சொல்லியிருந்தான்.
அது ஒரு ஜூலை: மெல்பேனில் குளிர்கால நாள். வசந்தன் விமான நிலையத்திற்குப் போன போது விவியன் மட்டும் அங்கே நின்றாள்.
‘மார்கிரட்டின் மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் பயணத்தை நிறுத்திவிட்டாள். நீ ஏற்கனவே எங்களை நம்பி பயணத்தில் பதிவு செய்து வருவதால் நான் பயணிப்பது எனவந்தேன்’ என்றாள்.
இது வரையும் இரு பெண்களுடன் போவதாக இருந்த பயணத்தில் வசந்தனுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது தன்னை நம்பியே விவியன் வருவதால் அவனது இதயம் கனத்தது. மூன்று வருடங்கள் உணவு, வசிப்பிடம் என ஆதரவு தந்து, அன்பு காட்டிய பெண். வேறு வழியில்லை.
விவியனது வயது நாற்பத்தைந்தாக இருந்தபோதிலும் அதிகம் நரையில்லை. மெல்லிய உடல், தோல் சுருங்காத கழுத்து, ஒட்டிய வயிறும் ஒடுங்கிய இடுப்பு எல்லாம் ஐந்து வருடங்களைக் குறைத்துக் காட்டியது. மற்றவர்கள் அவனைத் திரும்பி வித்தியாசமாக பார்ப்பதான உணர்வு ஏற்பட்டது. யார் இவன்? ஏன் வெள்ளைக்காரப் பெண்ணுடன் செல்கிறான் என்ற உணர்வு அவனுள் குறுகுறுத்தது. அதே நேரத்தில் அதில் என்ன தவறு? என்ற நினைப்பும் ஒரு புறம் சமாதானம் செய்தது. விமானத்தில் இருவருக்கும் வேறு இடங்களில் இருக்கை அமைந்ததால் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டன.
கொச்சியில் இறங்கியவர்கள் ஏற்கனவே பதிவு செய்தபடி வாகனத்தில் பயணித்து ஆலப்புழாவை இரவில் சேர்ந்தார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இரு வேறு அறைகளில் தங்கியபின்பு மதியத்தில் படகுப்பயணம் ஆரம்பித்தது. அந்த சிறிய படகு ஒரு குடும்பத்துக்கானது. மதியத்திலிருந்து ஆரம்பித்த பயணத்தை விவியன் ரசித்தாள். ஆற்றின் கரையோரங்களில் நடப்பவை அவளுக்கு வியப்பைக்கொடுத்தன. அந்த கிராமத்து மக்களது சூழல், உடை, கலாச்சாரம் என்பன பற்றி பலதை விவியன் தெரிந்து வைத்திருந்ததால் வசந்தனுக்கு அவை புதிய வியடங்களாகத் தெரிந்தன. வசந்தனுக்கு இதுவே முதலாவது இந்தியப் பயணம். ஆரம்பத்திலே தமிழ்ச் சினிமாவில் பார்த்ததை விட இந்தியாவைப் பற்றி தனக்கு அதிகம் தெரியாது என ஒப்புக்கொண்டுவிட்டான். மாலை நேரத்தில் ஜேசுதாசின் பக்தி பாடல்கள் காற்றில் மிதந்து, ஆற்றில் தழுவி படகிற்கு வந்து சேர்ந்தன. மாலையில் உணவு, மீன் கறியுடன் கிடைத்தது. ஒரு கிராமத்தருகே இரவு படகை நிறுத்திவிட்டார்கள். விவியனை அறையின் உள்ளே இரவில் படுக்க சொல்லிவிட்டு வெளியே உள்ள வராந்தாவில் உள்ள மூங்கில் சோபாவில் படுத்து தூக்கத்திலிருந்தவனை நடுநிசியில் கேரளத்தின் பருவ மழை வானத்தைப் பிளந்து சோபாவில் படுத்திருந்தவனைத் தட்டி எழுப்பியது. நல்லவேளையாகப் படகின் பகுதிகள் உள்ளே தண்ணீர் வராதபோதும வராந்தாவில் சாரல் மட்டுமே அடித்தது. உள்ளே செல்வோமா என யோசித்தபடி இருந்த வசந்தனை, விவியன் உள்ளே வரும்படி அழைத்தாள். தவிர்க்க இயலாத சந்தர்ப்பம்; இருவரும், ஒரே கட்டிலில் படுத்தபோது நடுநிசியில் தொடங்கிய மழை காலைவரையும் தொடர்ந்தது வசந்தனுக்குச் சிவராத்திரியானது மட்டுமல்ல, அது முதல் ராத்திரியானது!
அதிகாலையில் சேவல்கள் கூவியது. இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் பார்த்து காலையில் மன்னிப்புக் கேட்ட போதிலும் அந்த ஒரு கிழமையும் மூனூர், கன்னியாகுமரி பெரியார் தேசிய பூங்கா என இரவுகள் முதலிரவுகளாக தொடர்ந்தன. வாகனச் சாரதி முகமது இருவரையும் திருமணமானவர்கள் என நினைத்துப் பேசியபடி வந்தான்.
மீண்டும் கொச்சியில் விமான நிலையத்தில் மெல்பேனுக்கு வழி அனுப்பியபோது, வயதாகிய பெண் என என்னைப் புறக்கணிக்காது இந்த பத்து நாளும் உண்மையான துணையாக இருந்ததற்கு எனது நன்றிகள் என இறுக்கமாகத் தழுவி முத்தமிட்டாள்.
வசந்தனுக்கு அந்த பத்து நாட்கள் மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை வலம் வந்த மகிழ்வு. சிற்றின்பமா அல்லது இதுதான் பேரின்பமா? தற்காலிகமா நிரந்தரமா?
விவியனுக்கு அவனிலும் பதினைந்து வயது அதிகம் ஆனால் கண்ணனைவிட ராதாவுக்கு 18 வருடங்கள் மூத்தவள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைப்பில் அசையாது நின்றவனை விவியன், ‘உன்னை மறக்கமுடியாது’ என இறுக அணைத்து விடைகொடுத்துவிட்டு மெல்போனுக்கு பயணிக்க, வசந்தன் சென்னைக்குப் புறப்பட்டான்.
சென்னைக்கு வந்ததும் ராதாவைக் காட்டினார்கள். ராதா, சென்னையில் வணிகம் படித்து, கணக்கியலில் மேற்படிப்பு படித்த கொழும்பைச் சேர்ந்த அழகான பெண். எந்தக்காரணங்களாலும் அவளை எவரும் நிராகரிக்க முடியாதவள். வட பழனி கோவிலில் மிகச் சொற்பமானவர்கள் மத்தியில் திருமணம் நடந்தது.
——
வசந்தன், மெல்பேன் திரும்பியதும், மறு நாள் விவியனுடன் மெல்பேன் நகரிலுள்ள உணவகத்தில் உணவருந்தியபின்பு அவளை வாகனத்தில் மீண்டும் விவியனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
வீட்டில் விவியனை நெருங்கிக் கட்டிப்பிடித்து முத்தமிட முனைந்தபோது அவளது இடது கையின் ஐந்து விரல்கள் அவனது உதடுகளை “உஸ்” என்றபடி மறைத்தன. அவளது வலது கை, அவனது கையிலுள்ள மோதிரத்தைப் பிடித்து அவனது கண்ணெதிரே உயர்த்தி சிரித்துவிட்டு
‘உனது உதடுகளை ராதாவிற்காக ஈரமாக வைத்திரு’ என்றாள்.
நெஞ்சில் அஸ்திரமாகத் தைத்த அவளது வார்த்தைகள் அவனை நிலைகுலையச் செய்தது. விவியனை விட்டு விலகி அருகிலுள்ள சோபாவில் வீழ்ந்தான்.
வீழ்ந்தவன் மீது தொடர்ந்து வார்த்தைகளை விவியன்,அர்ச்சுன பாணங்களாகத் தொடுத்தாள்.
‘நான் உன்னைக் கேரளாவில் சந்தித்தபோது நீ பிரம்மச்சாரியாக இருந்தாய். அப்பொழுது நீயும் நானும் ஒன்றாக உறவு கொண்டபோது எம்மிடம் ஒரு நியாயம் இருந்தது. இப்பொழுது திருமணமாகியவன் என்பதால் நியாயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ராதா தனக்கு மட்டுமே நீ உரியவன் என நம்பியிருப்பாள். அதுதான் பெண்களது இயல்பு. அந்த நம்பிக்கையை நான் கலைக்கக்கூடாது’ என்றாள்.
அவளது கருத்துகளில் உள்ள நியாயங்கள் புரிந்தாலும் தலைக்கேறியிருந்த காம உணர்வின் அழுத்தத்தில் தலைகுனிந்தபடி மவுனமாக இருந்தான்.
விவியன் தனது நியாயங்களைத் தொடர்ந்தாள்:
‘பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனது கணவன் பிரான்சிஸ் தனது வேலை செய்யுமிடத்தில் ஒரு பெண்ணிடம் தொடர்பாக இருந்தது தெரியவந்ததால் நான் அவனை விட்டுப் பிரிந்தேன். அப்பொழுது எனது மகனுக்கு பதின்மூன்று வயது. மகனுக்காகவாவது பிரான்சிஸை மன்னிக்கலாம் என நான் நினைக்கவில்லை. நான் வெறுத்த அதே விடயத்தை இப்பொழுது நீ செய்ய நான் அனுமதிக்க முடியாது. நீ என்னை நேசித்தால் என்னிடமிருந்து விலகிவிடு. அது உனக்கும் நல்லது… எனக்கும் நல்லது’ என்றாள் உறுதியாக.
விவியனிடத்தில் மேலும் பேசி பிரயோசனமில்லை என உணர்ந்த வசந்தன் அங்கிருந்து வெளியேறினான்.
விவியன் மூட்டிய காமத் தீ அவனைச் சுட்டது. காமம் ஒரு நோய் என்பது உண்மையே. என்றும் காமம் அவனுள் இருந்தபோதிலிரும் அது சாம்பலின் மறைவில் தகித்தபடியிருந்தது. பாரம்பரியமான கட்டுப்பாடு, சமூக ஒழுக்கம் என்பன போர்வையாக இருந்தது. ஆனால் ஆலப்புழா கட்டு வள்ளத்தில் விவியனது அணைப்பு எரிபொருளைச் கலந்து போர்வையை எரித்துவிட்டது.
அடுத்த வருடத்தில் வந்த வலன்ரைன் நாளொன்றின் எதிர்பார்ப்புகள் அதிகமில்லாதபோதும், குறைந்த பட்சமாக அவளோடு பேசவிரும்பி வசந்தன் அவளது வீட்டின் கதவைத் தட்டியபோது, கதவைத் திறக்க மறுத்துவிட்டாள். தொலைப்பேசியில் எடுத்து ‘உனக்காக பூச்செண்டு கொண்டு வந்தேன் அதையாவது வாங்கிக்கொள். வேறு எதுவும் தேவையில்லை ‘ என்றான்
‘அந்தப் பூச்செண்டையும் எடுத்துச் செல். உனது நினைவு எனக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் தயவு செய்து என்னைவிடு. நீ உள்ளே வந்தாலோ பூசெண்டைக் கண்டாலோ எனது இதயமும் தடுமாறும். அதுவும் இன்று நீ வந்தது நல்லதல்ல‘ என்று கூறி
தொலைப்பேசியை துண்டித்தாள்.
முப்பத்தைந்து டாலர்கள் கொடுத்து வாங்கிய சிவப்பு ரோஜாமலர் செண்டை அவளது வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, காரில ஏறிய வசந்தன் நேரடியாக தெற்கு மெல்பேனிலுள்ள விபசார விடுதிக்குச் சென்றான். வாழ்வில் அதுவே முதல் முறையாகவும், அங்கிருந்து வெளியேறும்போது இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என உறுதியெடுத்தான்.
அதன் பின்பு இருவருக்கும் எந்த தொடர்புமில்லை.
மூன்று மாதங்களில் ராதா மெல்பேன் வந்து இறங்கிய பின்பாக, குழந்தைகளின் படிப்பு, வீடு – அதற்கான கடன் எனப் பல அத்தியாயங்கள் தொடர்ந்து சமுத்திரத்தின் எதிர்கரையாக விரிந்தன. விவியனின் நினைவுகள் இடையிடையே நெஞ்சத்தின் வந்து குளத்தில் எறிந்த கல்லாக குமிழிகளை ஏற்படுத்தியபோதிலும், யாழ்ப்பாணத்தில் வசித்த வீடு, கொழும்பில் படித்த கல்லூரி, பழகிய நண்பர்கள் என்ற தரிசனங்கள் வேகமாக ஓடும் வாகனத்தில் வந்து மறையும் காட்சிகளாக பின்னோக்கி சென்றன.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் பின்பாக முகநூல் வந்தபோது, ஒருநாள் விவியன் நினைவு வந்தபோது, முகநூலில் இருக்கிறாளா எனத் தட்டி பார்த்தபோது பூங்கா ஒன்றில் எடுத்த படத்தில், முற்றாக நரைத்த தலையுடன், சிறிது உடல் பருமனாக இருந்தபோதும், முகத்தோற்றத்தில் மாற்றமற்று வெள்ளை பொக்சர் நாயுடன் இருப்பது தெரிந்தது. அதில் அவளது ஓவியக் கண்காட்சி, சுற்றுச் சூழல், மனித உரிமை என்ற பதிவுகள் இருந்தன.
ஆலாப்புழாயில் கட்டு வள்ளத்தில் செல்லும்போது உடலுறவு கொண்டபின்பு தென் ஆபிரிக்காவின் நிற வேறுபாடுகளையும், பாலத்தீன மக்களின் துன்பத்தையும் பற்றி தெளிந்த உணர்வுடன் பேசினாள். விவியன் பேசிய விடயங்கள் என்ன என்பது புரிந்தாலும் அந்த நேரத்தில் ஏன் பேசுகிறாள் எனமனத்துள் வசந்தன் நினைத்தான். அவளுக்கு அதைச் சொல்லவில்லை . அவளது அனுபவங்கள் வசந்தனுக்கு இல்லை என்பதும்,அன்று அவளது வார்த்தைகளை வேத மந்திரங்கள் புரியாதபோதும் தொடர்ச்சியாக அமைதியாக கேட்கும் பக்தனாக அன்று சிவராத்திரி அனுஷ்டித்தான். அந்த பத்து ராத்திரிகளும் மறக்க முடியாதவை.
குறைந்த பட்சம் அவளுடன் முகநூலிலாவது தொடர்பு கொள்வோம் என்ற ஆசையில் அவளுக்கு முகநூல் நட்பு அழைப்பு விட்டான் ஆனால் பதில் கிடைக்கவில்லை. ஆனால் அவன், அவளது பதிவுகளை சில நேரத்தில் பார்ப்பதுண்டு.
அவளது நினைவுகள் வந்தாலும், பல காலங்கள் பார்க்காது இருந்துவிட்டு இன்று பார்த்தபோது அவளது இறப்பு தெரிந்து.
மரணமானவர்களது நட்பைத் தடைசெய்யும் வசந்தன், இன்று விவியனை பின்தொடர்வதற்கான பதிவைச் செய்துவிட்டு, அவளது புதிய பதிவுகள் இனி முகநூலில் வராது போனாலும் என்னுள் தொடரும் என மனத்தில் நினைத்தபடி படுக்கை அறையை விட்டு வெளியே வந்தான்.
‘காலை உணவை விரைவில் முடித்தால், இன்று ஞாயிற்றுக்கிழமை மார்கட் போவோமா?’ என்றாள் எதிரே வந்த ராதா.
ராதாவை, கண்ணன் திருமணம் செய்யவில்லை ஆனால் எனக்கு அந்த விடயத்தில் அதிஸ்டமோ!
‘ராதா, இன்று என்னை மன்னிக்கவேண்டும் நான் படிக்கும்போது மூன்று வருடங்கள் ஒரு வீட்டில் நண்பர்களுடன் இருந்தேன். 83 கலவர நேரத்தில் எங்களை ஆதரித்து உதவியாக இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் விவியன் மரணமாகிவிட்டாள். அவளது உணவைப் பலமுறை உண்டிருக்கிறேன். எப்போது, எப்படி மரணமடைந்தாள் எனத் தெரியாது. கொரோனா காரணமாக இருக்கலாம். இன்று அவளது சமாதிக்கு நான் சென்று மலர் வளையம் வைத்தால் நல்லது என நினைக்கிறேன்’ என்றான்.
‘வழக்கமாக சென்ரிமன்ரல் இல்லாத மனிதராகிய நீங்களா? நானும் வரவேண்டுமா?’
‘நான் மட்டும் போகிறேன். எனக்கான கடமையாக இதை நினைக்கிறேன். உனக்கேன் தேவை இல்லாத அலைச்சல்’ என்று சொல்லிவிட்டு குளிப்பறை நோக்கிச் சென்றான் வசந்தன்.
பின்னூட்டமொன்றை இடுக