பண்ணையில் ஒரு மிருகம்” “ எனது ஐந்தாவது நாவல்.



இலங்கையில் ஏற்பட்ட இனமோதலின் காரணமாக மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது ஆரம்பத்தில் ஒரு வருடமும் சில மாதங்களும் தாம்பரத்திற்கு அருகே மாமல்லபுரம் செல்லும் பாதையில் அமைந்த சிறிய பண்ணையில் மிருக வைத்தியராக வேலைசெய்த காலத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்களையும் அவதானங்களையும் கற்பனையுடன் கலந்து எழுதியதே இந்த நாவல்.
பேராசிரியர் ராமசாமி தன் விமரசனக்குறிப்பில் எழுதியது “இந்தியச் சாதியத்தை வெளியாரின் பார்வையில் இந்த நாவல் தருகிறது அத்துடன் அக்கால சமூகத்தின் குறுக்கு வெட்டப் பார்வையும் தெரிகிறது “
ஐ ஏ எஸ் அதிகாரி மற்றும் எழுத்தாளரான ப. சிவகாமி இந்த நாவலுக்கு முன்னுரை எழுதும்போது, அமானிசிய நிகழ்வுகளால் சாதிக் கொடுமைக்கு நீதி வழங்கப்படுகிறது “என்றார்
நான் இந்த நாவலை எழுதும்போது, கத்திமேல் நடப்பதுபோல் எழுதினேன் – காரணம் நான் வாழ்ந்து ஆனால் புரிந்து கொள்ளாத சமூகத்தின் பாத்திரங்களை உருவாக்கும்போது அவர்கள் பேசுவதை மட்டும் எழுத்தில் கொண்டு வந்தேன். பெரும்பாலானவை கதைசொல்லியின் மனவோடையாகவே எழுதினேன். அது தவறாக இருந்தாலும் தன் கருத்தாக (Subjective Opinion) ,இருக்கட்டும் என நினைத்தேன். மேலும் எனது நாவல் சிலரைக் கோபப்படுத்தலாம் என்ற எண்ணமும் இருந்தது
சாதியத்தை எழுதும்போது, பெருமாள் முருகனது மாதொரு பாகன் எந்த எழுத்தாளருக்கும் நெஞ்சில் அரவமாக ஊராது போகாது.
இந்த நாவலை பதிப்பித்த காலச்சுவடு நிறுவனத்தினருக்கு எனது நன்றிகள் இந்த நாவலை விருதுக்குத் தேர்ந்தெடுத்து, ஒரு எழுத்தாளன் சமூகத்தில் பற்றுக்கொண்டே அந்த சமூகத்தை விமர்சிக்கிறான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக நான் புரிந்து கொள்கிறேன். இறுதியாக இலங்கைத் தமிழர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் எனது நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்
பின்னூட்டமொன்றை இடுக