நன்றி: அபத்தம்.

நாவல் அல்லது சிறுகதைக்கு எது முக்கியமானது ? எனக் கேட்டால், தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் தன்மையே என நான் சொல்வேன். அதாவது எடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற அவாவை வாசிப்பவர்களுக்கு அது மனதில் உருவாக்கவேண்டும்.
அறிவு, பொழுதுபோக்கு , மற்றும் ரசனை என பல காரணங்களோடு ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, நான் கூறிய இக்கருத்து எக்காலத்திலும் பொருந்தும் . ஆனால், திரைப்படம் தொலைக்காட்சியெனக் கவர்ச்சியான ஊடகங்களை பார்த்து ரசிக்கும் நம் காலத்தில் வாசிப்பவர்களுக்கு அவாவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. பாடப் புத்தகம் ,மதப்புத்தமாக இருந்தால் மட்டுமே மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் முன்னேற்றமடைவதற்கு அவற்றை மனப்பாடம் செய்யும் தேவையிருக்கிறது. மேலும் நமது சமூகத்தில் புத்தகம் வாசிக்காததை பெருமையுடன் பலர் சொல்வார்கள்.
நல்ல புத்தகத்தை எப்படி தீர்மானிப்பது என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். இதற்காக நான் வைத்திருக்கும் அஸ்திரமொன்று உண்டு. புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கங்களிலும் என்னைக் கவரும் தன்மை இல்லையென்றால் அதனை கீழே வைத்துவிடுவேன். ஒரு விதத்தில் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கப்போகும்போது முகம் பிடித்திருக்க வேண்டும் என்பது போன்றது. எனது இந்தப் பரீட்சையில் பல தமிழ் புத்தகங்கள் தேறாது விடும். இதனால் புதிய புத்தகங்களை படிக்காது விடுவது வழக்கம். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமாக வாசிப்பவன் என்பதால் ஆங்கிலத்தில் பேசப்பட்ட செவ்வியல் நாவல்களே எனது கையில் வரும்.
எனது வாழ்நாள் சிறியது. அப்படியான காலத்தில் கஸ்டப்பட்டு தூக்கி முறிந்து வாசிப்பதற்கு என்ன தேவையுள்ளது என்ற நினைப்புடனே நான் செயல்படுவேன். பல தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்களை நினைத்து எழுதுவதில்லை என்பதால் பல புத்தகங்கள் எனது 50 பக்க பரீட்சையில் தோற்றுவிடும் .
பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அருந்ததியின் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் எனது நண்பர் மூலம் கிடைத்தது. அருந்ததி பல காலமாக எனது முகநூலில் இருப்பவர். இதுவே அவரது முதலாவது நாவலாகும் . இந்தப் புத்தகத்தை எடுத்தும் என்னால் கீழே வைக்க முடியாமல், இடைவெளியற்று வாசித்து முடித்தேன்.
கருப்பு பிரதியால் வெளியிடப்பட்ட 334 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஓட்டோபிக்சன் என்ற வகையைச் சேர்ந்தது. தான் சம்பந்தப்பட்ட விடயங்களை தன்னிலையிலும், சம்பந்தப்படாததை மூன்றாவது நபராகவும் இங்கு கதை சொல்லப்படுகிறது. யதார்த்தமான எளிய யாழ்பாணத்து பேச்சுத் தமிழ் நடையில் இந்த நாவல் செல்கிறது .
நாவலுக்கான பாத்திரங்கள் முழுமையாக உருவாகிப் பக்கங்களில் நடைபயின்று வருகின்றன. முக்கியமாக அம்மா, சின்னக்கா என்ற இரு பாத்திரங்களும் இந்த நாவலுக்கு இரு கால்கள் போன்றன. வாசித்து நாவலை மூடியவுடன் எங்களுடன் சேர்ந்து மனவெளியில் பலகாலம் உலாவும் தன்மையுள்ளன. அவர்கள் ஆண்களால் மற்றும் உறவினர்களால் நம்பவைக்கப்பட்டு, அல்லது இவர்களது அப்பாவித்தனத்தால் வஞ்சிக்கப்படுகிறார்கள். அந்த வஞ்சனையின் விளைவாக குடும்பத்தின் சிலுவைகளை பல வருடங்கள் சுமந்தபடியே மரணிக்கிறார்கள் .
நாவலின் கதாநாயகன் அரசரத்தினம், வில்லங்கமான பாத்திரம். நூறுவீதம் ஒரு கயவனாக ஒருவன் எப்படி வரமுடியுமோ அப்படி வருகிறது. அவனது கயமை சாதாரணமானதல்ல. தனது தவறுகளை பிற்காலத்திலாவது ஏற்று திருந்தும் தன்மையுள்ளவனுமல்ல. அல்லது ஏதாவது நியாயமான காரணத்தால் கயவனாகியவனுமல்ல. இவன்போன்று இலக்கியத்தில் அதிகம் கயவர்கள் இல்லை . நான் படித்தவற்றில், பெற்ற பிள்ளைகளே அவர்களது தந்தையை கொல்ல விரும்பும் கயவனாக கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தந்தை பாத்திரத்தை தாஸ்தாவிஸ்கி சித்தரிக்கிறார். தனது மகனது காதலியை பெண்டாள நினைப்பதுடன், அபலையான பெண்ணை பாலுறவுக்கு உள்ளாக்கி, பிறந்த பிள்ளையை வேலைக்காரனாக வீட்டில் வைத்திருப்பதுடன், மனைவியைக் கொடுமைப்படுத்தும் தந்தையாக வரும் (Fyodor Pavlovich Karamazov ) பாத்திரத்தை எவரும் மறக்கமுடியாது. ஆண்பால் உலகு நாவலில் வரும் அரசரத்தினம், அந்த பாத்திரத்தை எனக்கு நினைவு படுத்துகிறார் . இப்படியான ஒரு பாத்திரத்தை நான் வாழ்ந்த யாழ்ப்பாண சமூகத்தில் உருவாக்க முடியுமா? என்ற வியப்பும் என்னுள்ளே ஏற்படுகிறது.
போர்க் காலத்தில் மட்டுமல்ல , போர்க்காலத்திற்கு முன்பும், போரின் பின்பாகவும் உள்ள யாழ்ப்பாண சமூகத்தின் குறுக்கு வெட்டு முகம் இந்த நாவலில் தரிசனமாவதுடன், பிரான்சில் வாழும் புலம் பெயர்ந்தவர்களும் இந்நாவலில் உலாவுகிறார்கள். ஒரு விதமான சமூகவியல் பண்பாட்டின் பதிவாக தோன்றும் இந்த நாவலைப் படிக்கும்போது, யாழ்ப்பாணத்தவரான என் போன்றவர்களுக்கு பெருமைப்பட எதுவுமில்லை என்று தோன்றுவதுடன், குயினையின் மருந்து நூனி நாக்கில் பட்டபோது ஏற்படும் கசப்புணர்வு ஏற்படுகிறது. மனிதகுலத்தில் அதுவும் ஆண்கள் மீது கசப்பை மட்டும் இங்கு வடித்துக் காட்டுகிறது.
இந்த நாவலில் போர், சாதியம், வர்க்கம் போன்ற பேதங்கள் பேசப்பட்ட போதும் , அவற்றின் வட்டத்துக்குள் சுழலாது, மனித வாழ்வின் பிறழ்வுகள் கதையாக்கப்படுகிறது. நமது சமூகத்தின் கலாச்சாரம் பண்பாடு என்ற வெளித்தோற்றங்களை உரித்தெறியுயும் போது நிர்வாணமான தன்மை மட்டுமே தெரிகிறது. பல்லாண்டு கால கலாச்சாரம் என நாம் போற்றுவது வெறும் முகமூடியே என அழுத்தம் திருத்தமாக இந்த நாவல் அம்பலப்படுத்துகிறது.
இக்காலத்தைப்போன்று தெரபிஸ்ட், கவுன்சிலர் என மன அமைதிக்கு உதவுபவர்கள் இல்லாத அக்காலத்தில், மனிதர்கள் தங்கள் உள்ளத்துத் துயரத்தை மறைத்து கனத்த மனத்தோடு நடமாடுவார்கள். சந்தர்ப்பம் கிடைத்ததும் சுமையை இறக்குவதுபோல் வெளிக்கொணர்வார்கள். இறந்த வீட்டில் பல பெண்கள் அழுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் தங்களது சொந்த நெஞ்சுப் பாரத்தை மற்றவர்களது மரண வீட்டிற்குச் சென்று அங்கு இறக்கி வைக்கிறார்கள்.
இதேபோன்று எழுத்தாளனும் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவித்து வரும்போது , தனக்கு கிடைக்கும் நேரத்தில் அதை எழுத்தின் மூலம் இறக்குவது இந்த வகையாகும். கற்பனையில்லாத விடயங்கள் எனத் தனது உரையில் அருந்ததி எழுதியிருப்பதால், இது தமிழினியின கூர்வாளின் நிழலில் அல்லது புஸ்பராணியின் அகாலம் போன்று மனதின் கசப்பை ( Cathartic literature ) வெளிக்கொணரும் இலக்கியங்களாகும். 2500 வருடங்களுக்கு முன்பாக கிரேக்கர்கள் இந்தவகை எழுத்தை கதாரிக் எழுத்து என வகைப்படுத்தினார்கள் .
கூர்வாளின் நிழலில் மற்றும் அகாலம் என்பன அபுனைவானவை. இங்கு ‘ஆண்பால் உலகு’ புனைவாக வந்தாலும் பெரும்பகுதி உண்மையானவை என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது
இந்த நாவலில் நான் அவதானித்த முக்கியமான விடயம், போரை நடத்திச் செல்பவர்களால் சாதாரண மக்கள் படும் துன்பம் . கதாசிரியர் சொல்லாது, அந்தப் பாத்திரங்களின் வார்த்தைகளில் , அவர்களது வாழ்வின் மூலம் வெளியே வருகிறது. உதாரணமாக விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டபின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டை மலிவு விலைக்கு விற்க முன்வரும் இஸ்லாமிய இளைஞனும், விடுதலைப் போரில் இடுப்புக் கீழே கால் முறிந்த இளைஞனை ஒரு பெண் காதலிக்க முன் வந்த பின்பும் அவனை சமூகம் ஏளனமாக பார்த்து நகைப்பதால் அந்த ஜோடி ஒன்றாகத் தற்கொலை செய்வதும், இருபதினாயிரம் யூரோக்களை ஏப்பம் விட்ட நண்பனும் நமது சமூகத்தில் தொடர்ந்து நம்முடன் வாழும் அழியாத கோலங்கள்.
இந்த நாவலில் எனக்குக் குறையாகத் தெரிவது, மோசமான பாத்திரங்கள் எல்லாம் இறுதியிலும் பாதிப்படையவில்லை. நண்பனாக நடித்து சின்னக்காவை ஏமாற்றிய பாஸ்கரனும், கொலைக்கு காரணமான முக்கிய பாத்திரமான அரசரத்தினமும் மூன்று பெண்களை ஏமாற்றியதுடன் இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு போய் நன்றாக வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. பணத்தை ஏமாற்றியவர்கள் எந்த தண்டனையோ துன்பமோ அடைவதில்லை. அப்பாவிச் சிறுவனை கொலை செய்த விடுதலைப் புலிகள் அரசரட்ணத்தை தேடிவந்த போதும் அவன் இலகுவாக தப்புகிறான். யதார்த்தத்தில் கொடுமைகள் செய்பவர்கள் தப்புவது உண்மை என்றபோதும், குறைந்தபட்சம் இலக்கியத்தில் ( Poetic justice) இவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டுமென நான் விரும்புபவன்.
யாழ்ப்பாணம், சமூகம், விடுதலைப்புலிகள், ஆண்கள் எல்லாவற்றையும் நிறைவான( Positive) பாத்திரங்களாக பலர் தங்கள் நாவல்கள் , சிறுகதைகளில் எழுதியுள்ளார்கள். ஆனால், அருந்ததி தனது எழுத்தின் உள்ளே கரிக்கோடுகளாக மட்டுமல்ல கோணல் மாணலான சித்திரங்களாக வரைந்துள்ளர். ஒரு விதத்தில் நமது உருவங்கள் உண்மையில் அப்படி இருப்பது நமக்குத் தெரியவில்லையா? யாராவது வரைந்து காட்டும்போது அதிர்ச்சி ஏற்பட்டாலும், அதை மருந்தாக எமது சமூகம் விழுங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
படிப்பவர்களுக்கு அதிர்வை கொடுக்கும் நாவலை படைத்த அருந்ததிக்கு எனது வாழ்த்துகள்.
—0—
பின்னூட்டமொன்றை இடுக