தாத்தாவின் வீடு – நாவல்.

ஒரு பயணியின் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுத்த சில பக்கங்களின் தொகுப்பு- எஸ். ரஞ்சகுமார்.

நன்றி : காலச் சுவடு.

நோயல் நடேசன் அவர்கள் எழுதிய தாத்தாவின் வீடு என்ற நூலைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை இந்தச் சபையிலே பகிர்ந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச்சங்கத்தினால் கேட்கப்பட்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவப்பகிர்வு என்பது பொருள்மயக்கம் தருகின்ற ஒரு பதம். அது நூல் நயமாகவோ, மதிப்பீடாகவோ, திறனாய்வாகவோ, பூரணமானதொரு விமர்சனமாகவோ அல்லது கண்டனமாவோகூட இருக்கலாம். இன்று நடைபெறுவதைப் போன்ற சினேகபூர்வமான இலக்கியச் சந்திப்புகளில் வாசிப்பு அனுபவப்பகிர்வு என்பது பொதுவாக நூல்நயம் உரைத்தலாகவே அமைந்து விடுவதுண்டு.

எங்களூரில் வேடிக்கையான நாட்டார் கதையொன்று வழக்கில் இருக்கின்றது. இரவுக்கூத்துக்குத் தன்னையும் கூட அழைத்துப் போகுமாறு கண்பார்வையற்ற ஒருவன் தனது வீட்டாரைக் கேட்டானாம். ‘கண் தெரியாத நீ, கூத்தில் எதைப் பார்க்கப் போகிறாய்’ என்று அவனை உதாசீனப்படுத்தி, வீட்டிலுள்ள ஏனையோர் அனைவரும் கூத்துப் பார்க்கப் போய்விட்டார்கள். வீம்பு பிடித்த அந்த மனிதனும்ரவின்இருட்டில் தட்டித் தடவித் தடுமாறி நடந்து, கூத்து நடக்கும் இடத்தைத் தேடிப் போனானாம். போகும் வழியில்

ஒரு பெரிய ஈச்சம்பற்றை இருந்ததாம். அதற்குள் வசித்த சில முயல்கள் காச்சுமூச்சென்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனவாம்.

கண் தெரியாத ரசிகனும் அந்தப் பற்றைதான் கூத்து நடக்குமிடம் என்று முடிவுசெய்து, விடியும்வரை அந்தப் பற்றைக்குப் பக்கத்திலே இருந்து முயல்கள் எழுப்பிய சத்தஞ்சந்தடிகளைக் கேட்டுக் கொண்டிருந்தானாம். விடியும் வேளையில் வெளிச்சம் வர, முயல்களும் வெருண்டு வெளியே ஓட, ஓமோம் கூத்து இனி முடிந்ததென எண்ணி, அவனும் வீட்டுக்குத் போய்ச் சேர்ந்து, வீட்டாரின் கேலிப் பேச்சுக்கும், ஏளனச் சிரிப்புக்கும் ஆளானானாம். அர்த்தம் எதுவுமற்ற வெற்றுப் பேச்சுக்களையும், வெறும் செயல்களையும் கண்டு, ‘ஈச்சம்பற்றைக்குள் கூத்துப் பார்த்த கதையோ, நீ கதைக்கிறாய்’ என எங்களூரில் பெரியவர்கள் கேலி செய்வதை எனது சிறுபராயத்தில் நான் கேட்டிருக்கிறேன்.

ந்தக் கதையை நான் இங்கே சொல்வதற்குக் காரணங்கள் சில உண்டு. தாத்தாவின் வீடு என்ற இந்த நூலைத் தனது இளம்பராயத்து நினைவுகளை மீட்டிப் பார்க்கும் உத்தியில் நோயல் நடேசன் எழுதியிருப்பது முதலாவது காரணம். இந்த நூல் ஈச்சம்பற்றையல்ல, ஒரு கூத்துமேடையே என்பது இரண்டாவது காரணம். ஈச்சம்பற்றைக்குள் கூத்துப் பார்க்கும் வழக்கம்என்னிடம் இல்லை என்பது மூன்றாவது காரணம்.

ஈச்சம் பற்றைக்குள் கூத்துப் பார்த்தவன், வேறு எவரும் காணாததைத் தான் கண்டதாகக் கதையளப்பான். கண்டறியாதன எல்லாம் தனக்குக் காணக் கிடைத்ததென்று கூசாமல் புளுகுவான். எனவே நூல்நயம் என்ற போர்வையில், நோயல் நடேசனைப் பற்றிய போலி மதிப்பீடு, முகஸ்துதி என்பவற்றை  இந்த சிற்றுரையில் நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நோயல் நடேசன் மிகவும் வெளிப்படையானவர். அரசியல் சார்ந்த அவரது நிலைப்பாடும், செயற்பாடுகளும் அதிதீவிரத்தன்மை கொண்டவை. அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாட்டுச் சாதனங்களில் ஒன்றாகவே தனது எழுத்துக்களை அவர் கருதிச் செயற்படுகின்றார். அவற்றின்மீது நிகழ்த்தப்படும் காரசாரமான உக்கிர எதிர்வினைகளைக் கண்டு, தனது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள அவர் என்றுமே முனைந்ததில்லை.  இவற்றின் காரணமாக அவர்மீது எனக்கு மதிப்பு இருக்கின்றது.

ஆனால் ஒருவரது அரசியல் நிலைப்பாடும், செயற்பாடுகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. தனது  நிலைப்பாடும், செயற்பாடுகளும் தான் சார்ந்த சமூகத்தினால் கருத்திலெடுக்கப்பட வேண்டுமென நோயல் நடேசன் விரும்புகின்றார். ஆனால் அவரது நோக்கத்துக்கு மாறாக, அவர் சார்ந்த சமூகம் அவரைப் புறக்கணிக்க, மனுக்குல விரோதிகள் அவரது செயற்பாடுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. நோயல் நடேசனிடம் அதனைத் தவிர்க்கும் உபாயங்கள் எவையுமே  இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

தாத்தாவின் வீடு அவரது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விட்டுவிலகி, வெளியே செல்கின்ற ஒரு நாவல். தனது நிலைப்பாட்டில் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து தப்பிக்கும் ஒரு உத்தியாகவே இந்த நாவலை அவர் எழுத முனைந்தார் என்று கருதுவதற்கு, எனக்கு உரிமை இருக்கிறது என்பதை அவரும், நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். தனது சிறுபராயத்தை நனைவிடைதோய்தலாக நினைவுகூர்வதன் மூலமாக அதனைச் சாத்தியப்படுத்த அவர் முனைகின்றார்.

யாழ்ப்பாணத்தின் மிகவும் பின்தங்கிய தீவான, எழுவைதீவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்கின்ற நட்சத்திரன் என்பவரது நினைவுகளாக இந்த நாவல் ஆரம்பிக்கின்றது. தனது தொழிலில் கொண்ட தேர்ச்சி, புலப்பெயர்வு என்பனவற்றின் காரணமாகப் பொருளாதார வளம் கொண்ட நட்சத்திரனது (நோயல் நடேசன்) நித்திரை குழம்பிய பிரமை கொண்டதொரு இரவாக, முதலாவது அத்தியாயம் விரிகின்றது. வயது முதிர்ந்து இறந்த தாத்தாவும், பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே காலமான ஒன்றுவிட்ட

சகோதரனான சமரசமும் அந்த இரவில், மங்கிய ஒளியில், தனது பாரம்பரிய வீட்டைத் திருத்திக் கட்டுவதைப் போன்றதொரு பிரமை நட்சத்திரனுக்கு உண்டாகின்றது. நல்லதொரு ஆரம்பம், மாயாயதார்த்தவாதமாகக் கதை தொடரப் போகின்றதோ, என ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை வாசித்த எனக்கு மிகப்பெருத்த ஏமாற்றம். புவியியல் வகுப்புகளில் எழுதப்படும் மிகச் சாதாரணமான கட்டுரையாக அது அமைந்திருந்தது!

ஆனாலும் நட்சத்திரனது இளம்பராயத்தின் நினைவுகளையும், வாழ்வனுபவங்களையும் சுவையாகச் சொல்வதன் மூலமாக கதை வேகமாகப் பின்னர் நகர்கின்றது. எழுவைதீவின் குறிப்பிட்டதொரு காலகட்டத்தின் கதை சிறிய சம்பவங்களாலும், பெரிய நிகழ்வுகளாலும் ஒரு சட்டகத்துக்குள் மாட்டப்படுகின்றது. அதன் காரணமாக ஒரு நெடுங்கதையாக மட்டுப்படுத்தப்படும் அபாயத்தைத் தாண்டி, தாத்தாவின் வீடு ஒரு நாவலாகப் பரிணமிக்கின்றது.

நட்சத்திரனது தாத்தா, அம்மா, அப்பா(அப்பு), பெரியம்மா(சீனியம்மா), அயலவர்கள் முதலானவர்களின் கதை சிறிய சம்பவங்களாகச் சொல்லப்படுகின்றன. இவ்வாறான பொதுமைப்பண்புடைய ‘சிறிய பாத்திரங்களை’ நாமெல்லோரும் எமது ஊரிலும் எமது வாழ்விலும் சந்தித்திருக்கிறோம். அவர்களை எமக்கும் நெருக்கமானவர்களாக நாம் உணர முடியும். இந்தப் பொதுமைப்பண்பு ஒரு நாவலுக்குப் பலம் சேர்க்கும் காரணிகளில் பிரதானமான ஒன்று.

நட்சத்திரனது சீனியம்மாவின் மகனான சமரசம், எழுவைதீவில் ஒரு அகதியாகக் கரையொதுங்கும் தமிழ்நாட்டின் தலித் இளைஞனான ராமலிங்கம் ஆகியோர் தாத்தாவின் வீடு என்னும் இந்த நாவலின் ‘பெரிய பாத்திரங்கள்’. இந்தப் பாத்திரங்களிடம் பொதுமைப்பண்புகள் எவையும் இல்லை. இவர்கள் சிறப்பியல்பு கொண்டவர்கள்.

ராமலிங்கத்தின் வருகையும், எழுவைதீவில் அவனது வாழ்க்கையும், முழுமை பெறும் வகையில் நன்கு சித்திரிக்கப்படுகின்றன. அவன் தாத்தாவினது (நட்சத்திரனது) குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமான, நேசிக்கப்படுகின்ற, நற்பண்புகளுடைய, ஒரு அகதி இளைஞன். ஆனால் அந்தக் காலகட்டத்தின் யாழ் மனோபாவத்தின் பிரகாரம், ராமலிங்கம் ஒரு ‘கள்ளத்தோணி’! ராமலிங்கம் வாசகனது மனதில் ஆழமாகப் பதிகின்றான்.

சமரசம் ‘உள்ளுணர்வு’ உள்ள ஒரு சிறுவன். சமரசத்தினால் சரியாக விபரிக்க முடியாத அவனது கனவுகள் எழுவைதீவில் நிகழும்  துர்நிகழ்வுகளாகப் பலிக்கின்றன. மிகவும் பின்தங்கியதொரு கிராமமான எழுவைதீவில் போதிய வைத்திய வசதிகளின்றி அவன் சிறுவனாகவே இறந்து போகிறான். சமரசம் – நன்கு வளர்த்து விபரித்து விஸ்தாரமாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாத்திர

வார்ப்பு. ஆனால் இந்த நாவலில் அவ்வாறு செய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலையைத் தருகின்றது. சமரசம் எவராலும் மறக்க இயலாத ஒருவனாக வாழ்ந்திருப்பான்.

இலங்கையின் சமூகங்கள் எல்லாமே தமக்குள் தாமே மூடிக்கொண்டவை. அவற்றை வெளியிலிருந்து எவராவது திறக்க முனைந்தால், அவை மிகுந்த பதற்றமடைகின்றன. எனவேதான் இலங்கை எப்போதும் ‘அரசியல் கொதிநிலை’யில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் மேலும் ஒருபடி அதிகமாக, தன்னைத்தானே றுகப் பொத்தி மூடிக்கொண்டிருக்கின்றது. தனியே தவிக்கவிடப்பட்ட யாழ்ப்பாணத்தின் தீவுகள், மிகச் சிறியதொரு மாற்றத்துக்கும் நெடுந்தவமியற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றன.

அவ்வாறாகத் தனியே தவித்த எழுவைதீவை, வெளியார் சிலரது வருகைகள் திறக்க முயற்சித்ததன் விளைவைச் சொல்வதுதான், தாத்தாவின் வீடு என்னுமிந்த நாவலின் அடிப்படை. விதானையார், தபால்காரன், பொலிஸ்காரர்கள் முதலிய அரச உத்தியோகத்தர்கள், இந்த வெளியாரில் முதல் வகையினர். தீவிலிருந்து வெளியே போய்த் திரும்பவும் வருபவர்கள் இரண்டாம் வகையினர். எழுவைதீவைத் தாம் மறைந்து வாழ்வதற்குத் தோதானதொரு தளமாகப் பயன்படுத்துகின்ற, சமூக விரோதிகளும், கடத்தல்காரர்களும் மூன்றாவது வகையினர். அவர்களை ஒடுக்குவதாகக் காரணம் காட்டி, எழுவைதீவில் முகாம் அமைக்கின்ற இலங்கையின் அரச படையினர் நான்காவது வகையினர்.

றுதியாக, இறுதியாக, இந்திய ஊடுருவல்காரர்கள் ஐந்தாவது வகையினர். இந்திய ஊடுருவல், இரண்டு தளங்களில் இலங்கையில் நிகழ்கின்றது. பண்பாடு, கலாசாரம், தத்துவம் முதலியன முதலாவது வகை. இவை நன்மை தருபவை. இவற்றைப் பிரயோகிக்கும் அரசும், அது கடைப்பிடிக்கும் அரசியலும் இரண்டாவது வகை. இவை எப்போதும் இலங்கைக்குத் தீங்கு விளைவிப்பதாயிருப்பதே, ஆதிகாலந்தொட்டு எமது வரலாறு. இந்த வரலாறு வன்முறையுடன் கூடிய ஆக்கிரமிப்பாக, எமது விதியாகத் தொடர்ந்துஎழுதப்படுகின்றது. எழுவைதீவில் ராமலிங்கத்தின் கரையொதுங்குதலும், அவனது கரையொதுங்குதலுக்குச் சமாந்தரமாக,எழுவைதீவில் கொண்டு வந்துவிடப்படும் இந்திய வெறிநாய்களும், மேலே குறிப்பிடப்பட்ட நன்மை, தீமை இரண்டுக்குமான குறியீடுகளாக நாவலில் வெளிப்படுகின்றன.

நகரமயமாதலுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட எழுவைதீவின் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயரத் தூண்டப்படுகின்றனர். எழுவைதீவின் கள்ளிறக்கும் தொழிலாளி, கொல்லுப் பட்டறைத் தொழிலாளி, சிறு வியாபாரிகள் முதலானோர் இவ்வாறான இடம்பெயர்தலுக்கு உதாரணமானவர்கள். நல்ல கல்வியைப் பெறும் நோக்கத்தில் சிறுபராயத்திலேயே பிறந்த மண்ணிலிருந்து வேறாக்கப்படும் சிறார்கள் இவர்களை விடவும் முக்கியமானவர்கள். தாத்தாவின் வீடு என்றஇந்த நாவலின் பிரதான பாத்திரமும், கதைசொல்லியுமான நட்சத்திரன் அவ்வாறானதொரு  சிறுவன்.

மேலே குறித்த அனைத்துக் காரணிகளின் விளைவாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட னக்குரோத யுத்தம் காரணமாகவும், இலங்கையின் ஏனைய சமூகங்களைப் போலவே… சின்னஞ்சிறு தீவான எழுவைதீவின் வாழ்வும், வளமும் சிதறுகின்றன. அந்தச் சிதறல் பூதாகரமாக உருவெடுக்கும் சந்தர்ப்பத்தில் நட்சத்திரன் வளரிளம் பருவத்தை அடைகின்றான்.

நட்சத்திரனாகத் தன்னை எமக்குக் காண்பித்த நோயல் நடேசன், இதற்குப் பின்னரும் பெரிதும் வளர்க்காமல் புத்திசாலித்தனமாக இந்த இடத்தில் நாவலை நிறைவு செய்கின்றார்.

நோயல் நடேசனது எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவரது ‘தமிழ்’ மிகவும் ஆயாசம் தரும். அவர் தமது தொழிற்கல்வியின் காரணமாக ஆங்கிலத்தில் சிந்திக்கப் பழகியவர். ‘தமிழின் அழகு’ அவருக்கு வாலாயப்படுவதில்லை. இலங்கையின் தமிழிலக்கியம் வீரியம் பெற்ற அறுபதுகளிலிருந்து இன்றுவரை, பல தலைமுறைகளாக இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகள் தமது தமிழை விதம்விதமாக ‘அழகு’ செய்திருக்கிறார்கள். குரலற்றவர்களின் குரல்களும் செவிமடுக்கப்பட வேண்டும் என்ற நியாயத்துக்காக அறுபதுகளின் ஆரம்பத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு சில சகாயங்கள் காண்பிக்கப்பட்டதும் உண்டு. அதே சமயத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாக எழுதுபவர்களும் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறார்கள். எனவே நோயல் நடேசனது தமிழுக்குச் சப்பைக்கட்டு கட்டும் நோக்கம் எனக்கு இல்லை. அவரது படைப்புக்களுக்கு ‘அவரது தமிழ்’ பெருங்குறை.

இறுதியாக மேலும் சிலவற்றைச் சொல்லலாம் என ஆசைப்படுகின்றேன். தனது பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், நகரங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கிய நோயல் நடேசனது பயணம், நயினாதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை முதலிய தென்னிந்திய நகரங்கள் என்பனவாகத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் மாநகரத்தில் ‘ஒருவாறு’ நிலைபேறடைந்தது. ஆனால் அவரது பயணங்கள் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ச்சியாக அவர் பல நகரங்களுக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல நாகரீகங்களின் எச்சங்களைப் பார்வையிடுகின்றார். அவற்றைப் பதிவு செய்கின்றார்.

இடையிடையே தமது பிறந்த ஊருக்கும் போய் வருகின்றார். அடிப்படை வசதிகள் குறைந்த அந்தச் சிறிய தீவில்,இன்றும் ஓர்மத்துடன் வாழ்பவர்களுக்காகத் தனது சொந்தப் பணத்தில் வைத்தியசாலை கட்டிக் கொடுக்கின்றார். இவற்றைச் செய்யும் ஈழத்து எழுத்தாளர்கள் மிகவும் அபூர்வம். அதற்கான வசதியும் சூழலும் அவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதும் மெய்யானதுதான்.

என்றாலும் எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது. பயணமும், யாத்திரையும் ஒன்றா? இவற்றுள் எந்த வகையில் நோயல் நடேசனைச் சேர்ப்பது? ஆனாலும் தாத்தாவின் வீடு வாசிப்பதற்கு உகந்ததொரு நாவல் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.