நன்றி – அபத்தம். கார்த்திகை.

மாவிலாற்றின் நீரை 2006ல் ஜூலையில் விடுதலைப்புலிகள் விவசாயிகளுக்கு கிடைக்காது அணையை மறித்தபோது, இலங்கை அரசு இலங்கையின் கிழக்கே போர் தொடங்கியது. அந்தப் போர் தமிழர்களுக்குப் பேரழிவாக மே 2009யில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. விடுதலைப்புலிகள் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய வரலாறு பலர் மறந்துவிட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்காலை பேசியபடி விடுதலைப்புலிகள் மேய்ந்த அதே மேச்சல்த் தரையில் மேய்ந்தபடி ஜெனிவாவுக்கு எண்ணற்ற தரம் துலாக்காவடி எடுத்துள்ளார்கள். ஆனால் இது அதைபற்றிய எனது கட்டுரையல்ல.
ஈழம் நாலாவது போர் தோல்வியில் முடிவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே கானல் தேசத்தில் லியோ லியோரோல்ஸ்ரோய் போரும் சமாதானத்தில் உள்ளதை படிமமாக குறிப்பிட்டுள்ளேன்:
“அப்பிள் நிலத்தில் விழுவது, அதனது காம்பு சூரிய வெப்பத்தில் காய்ந்துவிடுவதாலா? காற்று பலமாக வீசியதாலா? புவியீர்ப்பினாலா? அல்லது அப்பிள் மரத்தின் கீழே நின்ற சிறுவன் அதை உண்பதற்கு விரும்பியதாலா?”
இப்படிப் பல காரணங்கள் பழமொன்று விழுவதற்கு இருக்கும்போது, ஏனைய விடயங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கலாம் என ருஷ்ஷிய எழுத்தாளர் லியோரோல்ஸ்ரோய் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் நம்மவர் மத்தியில் 50 நாடுகள் ஒன்றிணைந்து தாக்கியதே முக்கிய காரணமாக பேசப்படுகிறது.
மெல்பேனின் நடந்த உதயம் பத்திரிகையின் நிருவாக ஆசிரியராக நான் அக்காலத்தில் இருந்தபோது சம்பூரில் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் நடந்த போரில் எடுத்த 40 மேற்பட்ட படங்கள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதில் மணலால் அமைந்த பதுங்கு குழிகளின் உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உடல்கள் கருகி இறந்தபடி கிடந்தது என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் ஆய்வு செய்தபோது, அமெரிக்காவினால் தலைபான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பாவிக்கும்படி பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட மல்ரிபரல்( MBRL) என்ற பீரங்கிகளால் அந்த சம்பூர் தாக்குதல் நடந்தது . அதற்கான குண்டுகள் கிழமைதோறும் கொழும்புக்கு கப்பலில் வந்தன . மல்ரிபரல் பீரங்கிகள் குண்டுகளை ஒரே நேரத்தில் சுடுவதுடன், அவைகள் வீழ்ந்த இடத்தில் சுற்று வட்டாரத்தையே எரிக்கும் தன்மையுடையவை. அவைகள் ஏரியா வேபன்( Area Weapon) வகையைச் சேர்ந்தவை. போர்வீரனது தகமைகள், திறமை , பயிற்சி என்ற இங்கு முக்கியமில்லை. போரில் பாவிக்கப்படும் சுடுகலன்களே போரின் விளைவுகளைத் தீர்மானிக்கிறது.
அப்பொழுது என்னால் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. இந்தப் போர், விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களுக்குத் தோல்வியில் முடியும். அதைவிடப் போரின் முடிவில் சிறுபான்மை சமூகமும் ஒரு பொருட்டற்று போகும் என்பதால், பல தடவைகள் உதயத்தில் போருக்கு எதிராகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உதயத்திலும் , இலங்கைப் பத்திரிகைகளிலும் எழுதினேன். நான் மட்டுமல்ல டீபிஸ் ஜெயராஜ் ஆனந்தசங்கரி போன்றவர்களும் எழுதினார்கள்.தமிழ்நாட்டிலிருந்து பா ஊ கனிமொழி அமைச்சர் சிதம்பரம் போன்றவரகள்முயற்சித்தார்கள். நிட்சயமாக நோர்வே முயற்சித்திருக்கும்- ஆனால் கெடுகுடி சொல் கேட்காது. இப்படி முயற்சிக்காதவர்களே தற்போது தம்பி எப்ப முடியும் திண்ணை எப்போது காலியாகும் எனஆவலுடன் காத்திருந்தவர்கள்.
அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் தங்களது மூளையைப் பாவித்து 100- 50 பேர் கொண்ட சிறிய யூனிட்டுகளாக பிரிந்து காட்டில் வேகமாக இயங்கியபடி போர் நிறுத்தத்தையோ சமாதானம் பேசவேண்டும் எனச் சாதாரண மக்களது நன்மை கருதி உள்ளூரக் கனவு கண்டேன் . ஆனால் இறுதியில் நான் துரோகியாகப் பல முட்டாள்களால் பிரகடனப்படுத்தப்பட்டேன். அதற்கு உதவியாக இன்பத்தமிழ்வானொலி,SBS எனப்படும் வானொலிகளும் உதவினார்கள்.
அக்காலத்தில் தினமும் பல மணிநேரம் போர் நிகழ்வுகளில் பல சானல்களில் வரும் செய்திகளைப் பார்ப்பேன் . அக்காலத்தில் சொந்த தொழிலானபடியால் கம்பியூட்டரில் ஐந்து மணிநேரம் செலவழிக்கமுடிந்தது. அத்துடன் பத்திரிகைக்குச் செய்தி சேகரிப்பதுமாக இருந்ததால் அவை மனைவியால் கண்டு கொள்ளமுடியவில்லை.
கடந்த ஐந்து வருடங்களாக இளைப்பாறி இருப்பதால் உக்கிரேன் ருஷ்ஷியப் போரில் பிபிசி அல்ஜிசீரா என்பன அக்கால தமிழ்நெட் அல்லது இலங்கை அரசின் மிலிட்ரறி தகவல் பகுதி போலாகி விட்டது . ருஷ்ஷிய சமுக வலைத்தளமாகிய ரெலிகிராம் மற்றும் ருஷ்ஷிய தகவல் நிலைகளை என்பவற்றுடன் யுருயுப் என்பனவற்றில் சேர்த்துப் பார்க்கும்போது போர் மேகத்தில் எழும் புழுதிகளை ஊடுருவிப் பார்க்கமுடியும் . இதற்குப் பல மணி நேரம் செலவாகும் . இதைப் பார்த்து, உக்ரோனியன்- ருஷ்ஷியா போரை அறிந்து உங்களுக்கு என்ன பிரயோசனம் என மனைவியும், எப்பொழுதும் யுக்ரோன் போரா என எனது பேரனும் கேட்கிறார்கள். மனைவி மருத்துவ சனல்களையும், பேரன் சிறுவர் சனல்களையும் பார்க்கும்போது நான் பார்த்தவை யுருயுப்பில் தெரியும்.
இலங்கைப் போர் போல் இதுவும் ஒரு முட்டாள் தனமான நடவடிக்கையால் உருவாகியது. 2014ல் ருஷ்ஷியாவிற்கும் உக்ரேனியனுக்கும் இடையே பிரான்ஸ் ஜேர்மனி மத்தியஸ்த்தத்தில் உருவான மின்ஸ் ஒப்பந்தம் (Minsk Accord) நேட்டோ நாடுகளால் திட்டமிட்டு முறியடிக்கப்பட்டதால் போர் உருவாகியது. எனது நோக்கம் இங்கும் போரின் காரணத்தை ஆராய்வது நோக்கமில்லை.
உக்ரேனில் தற்பொழுது நடக்கும் போரில் போர் வீரர்களுக்கு எந்த மதிப்புமில்லை.போர்வீரர்கள் காட்டுத்தீயில் அகப்பட்ட குருவிக் குஞ்சுகளாக கருகி இறக்கிறார்கள் என்பது கவலைக்குரியது.
டோர்ன் எனப்படும் சிறிய ஆளற்ற விமானத்தால் பார்த்தபடி கீழே உள்ள பீரங்கியோ அல்லது டாங்கி அல்லது ஏவுகணை கொண்டு பல கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து குறிபார்த்து ஒரு நகரத்தையோ அல்லது ஒரு கூட்டம் படைவீரர்களையோ தாக்கமுடியும். தற்போதைய போரில் பெரும்பாலான இறப்புகள் இப்படியாகக் குண்டுகளாலோ, படைகள் நகரும்போது பீரங்கிகளோ, அல்லது நெருப்பு வீசும் பீரங்கியால்(Thermobaric bombs) பொசுக்கப்படுகிறார்கள். காயப்பட்டு தப்புவார்கள் குறைவு அப்படித் தப்பினாலும் அங்கங்கள் இழந்தவர்களாகவே உயிர் தப்புவார்கள்.
ஒரு காலத்தில் குதிரைகள், தேர்கள்மீது ஏறி வாள் வில் பாவிப்பதும், பின்பு துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதும் என்ற வகையிலிருந்து போர்முறை மாறிவிட்டது. . அக்காலத்தில் நாங்கள் படித்த போர்களில் மனிதர்கள் பங்கு முக்கியமாக இருந்தது. இவர்கள் வீரர்கள் என அடையாளப்படுத்துவார்கள். தற்பொழுது அது குறைந்துவிட்டது. இப்பொழுது டாங்கிகள், பீரங்கிகள் ஏன் விமானங்களது தேவை கூட குறைந்துவிட்டது. ஆளில்லாத டோர்ன்களது முக்கியமே உள்ளது.ஆகாயத்தில் மிதந்தபடி காத்திருந்து தாக்கும் டோர்ன்கள்( loitering drones ) முக்கியமானதாக கருதப்படுகிறது.
சமீபத்தில் ஒரு உக்ரேனியா கொமாண்டர் கூற்றுப்படி “ ஒவ்வொரு குழுவிலும்15 மேற்பட்ட ராணுவ வீரர்கள் மட்டுமே தாக்குதலுக்குச் செல்கிறார்கள் “ என்கிறார்: காரணம் அதற்கு மேலான தொகையாகப் போர்வீரர்கள் இருந்தால் ருஷ்ஷிய டோனர்கள் கண்டு பிடித்துவிடும் என்கிறார்
இதுவரை போர் முறைபற்றி எழுதினேன். ஆனால் போர்முறை மட்டுமல்ல போர் நோக்கத்திலும் வேறுபாடுகள் உள்ளது. இலங்கைப் போரில் தரைப்பிரதேசத்தை எப்படியும் கைப்பற்றவேண்டும் என்ற தேவை இருந்ததால் இலங்கை அரசு மூன்று வருடங்கள் போரை நடத்தியது. தற்போதைய ருஷ்ஷியாவை பொறுத்தவரை அவர்களுக்கு அதிக நிலம் தேவையில்லை. நேட்டோவால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆயுதம் தரித்த உக்ரேனிய ராணுவத்தை அழிப்பதுடன் இனிமேல் எதிரியாகவோ , சவாலாகவோ அல்லது நேட்டோவின் எடுபிடியாக எதிர்காலத்தில் இயங்காது இருக்கவேண்டும் என்பதே ருஷ்ஷியாவின் குறிக்கோள் என்பதால் போரில் போர்வீரர்களை மட்டுமல்ல உக்ரேனேனின் முக்கிய எண்ணைச் சுத்திகரிப்பு, போர்த்தளவாடங்களது கழஞ்சியம், மின்சார உற்பத்தி நிலையங்களை அழிப்பது மட்டுமே தேவைப்படுகிறது .
உக்ரெனியன் அழிந்து அங்கு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. ருஷ்ஷியாவின் பொருளாதாரம், படைப்பலம் என்பவற்றில் ஏற்படும் பாதிப்பு , அழிவு எங்களுக்குத் தேவையானது என்ற நோக்கத்தில் நேட்டோ மற்றும் அமரிக்கா நாடுகள் செயல்ப்படுகின்றன. இந்த போரில் இதுவரை நாம் அறிந்து கொள்ளாத போரின் நோக்கமாக உள்ளது.
இதைவிட இன்னுமொரு விடயத்தை பார்த்தேன்.
நமது விடுதலைப்புலிகளுக்கும் இங்கும் ஒரு ஒற்றுமை உள்ளது விடுதலைப்புலிகளுக்கு வங்கிகளில் கடன் வாங்கி பணம் கொடுத்த தமிழர்கள் பல நாடுகளிலிருந்தாலும் சுவிஸ்லாண்டில் மட்டுமே அதிகமானவர்கள் தங்கள் கடனட்டையை வைத்து பணம் கொடுத்தவர்கள் அதற்குக் காரணம் சுவிஸ்லாந்திலுள்ள விடுதலைப்புலி பொறுப்பாளர்களது திறமையே. மற்றைய இடங்களிலிருந்தவர்கள் அந்தளவு திறமைசாலிகள் அல்ல. கனடா பிரான்சில் கொஞ்சம் சரத்தை(லுங்கி) தூக்கி கட்டும் சண்டியர்கள் மட்டுமே. அஸ்திரேலியாவில் பிற்காலத்தில் ஒருங்கிணைப்புக்குழுவிற்கு பொறுப்பாக இருந்த எனது பாடசாலை நண்பர் சண்முகம் சபேசன் தானாக தனது வீட்டை அடைவு வைத்து செலவு செய்தார் – ஆனால் அவரை சுற்றி இருந்தவர்கள் பலர் பணக்காரராகினார்கள். அதே போல் இங்கும் 6300 உக்ரோனிய அதிகாரிகளும் ஐந்து லட்சத்திற்கு அளவான உன்ரேனிய வீரர்களும் இறந்தபோதும் உக்ரேனியார் பலர் மில்லியனர்களாகிவிட்டார்கள்- இதையே அமரிக்காவும் சொல்கிறது.
அமெரிக்காவும் கடனில் மூழ்கிய நாடு ( 33 trillion)). சீனா, அமரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கடன் பத்திரங்கள்( Bond) மூலம்( வாங்கி உக்ரேனிய போருக்கு உதவுகிறார்கள் என்பதும் நாம் கவனிக்கவேண்டியது.
இதற்கப்பால் கொஞ்சம் போரை அவதானித்தால் பல ஒற்றுமைகளை நீங்கள் காணலாம். இலங்கை அரசால் 3 வருடங்கள் போரை நடத்தமுடியும் எனும்போது ருஷ்ஷியா தற்போது ஒன்றரை வருடங்கள் மட்டுமே செல்கிறது முடிவைக்காண இன்னமும் சில வருடங்கள் நாம் காத்திருக்கவேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக