Cut and Past Journalism.

 

கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் !

Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் ! ! 

                                                                       முருகபூபதி

பாரிஸ் மாநகரில் வென்மேரி அறக்கட்டளை நடத்திய வாழ்நாள் சாதனையாளர்கள் விருது விழாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் நான் சென்றிருந்தபோது, சில நாட்கள் அந்த நகரில் தங்கியிருந்தேன்.

எனக்கு சிறிய வயதில் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின்  புதல்வி உமாவின் குடும்பத்தினர் என்னை ஒரு  நாள் மதியவிருந்துக்கு அழைத்திருந்தார்கள்.

விருந்தினையடுத்து, உமாவின் கணவர் கணேஸ்வரன், தாங்கள் ஊரும் உலகும் என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தை தொடங்கவிருப்பதாகவும், அத்துடன் ஒரு இணைய இதழையும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொன்னார்.

அதற்கு என்னிடமிருந்து ஒரு வாழ்த்துச்செய்தி வேண்டும் எனச்சொன்னவர், எனது செய்தியை காணொளியிலும் பதிவுசெய்தார்.

பின்னர், என்னைப்பற்றிய அறிமுகத்திற்கு குறிப்புகள் தேவை என்றார்.

“  கணினியில் எனது பெயரை நீங்கள் தமிழில் பதிவுசெய்தால் விபரங்கள் கிடைக்கும்.  “  என்றேன். 

உடனே அவர் தனது கைத்தொலைபேசியை வாயருகே கொண்டு சென்று  “ முருகபூபதி  “ என்றார்.

அந்த கைத்தொலைபேசியின் திரையில் எனது படத்துடன் முழுவிபரங்களும் வெளிவந்தது.

அதனைப்பார்த்து வியப்புற்றேன்.

இது இவ்விதமிருக்க, மற்றும் ஒரு செய்தியையும் சொல்கின்றேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தினம் வந்தது.

அதனை முன்னிட்டு, அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூலை மெய்நிகரில் வெளியிட்டோம். அந்தத்  தொடர் அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் வெளிவந்திருந்தது.

அதனை கணினியில் பதிவுசெய்ததும் அடியேன்தான். அம்பி மீது கொண்டிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலும், அதற்கு நேரம் ஒதுக்கி செய்து முடித்தேன்.  கவிஞர் அம்பி அவர்களுக்கு உடல் நலக்குறைபாடு வந்திருப்பதனால், அவரால் பேசுவதற்கு முடியாதிருக்கிறது.

அதனால்,  குறிப்பிட்ட சொல்லாத கதைகள் நூலில் இடம்பெற்ற அம்பியின் முன்னுரையை தனியாக எடுத்து, அம்பியின் ஏக புதல்வன் திருக்குமாருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.

மெய்நிகர் நிகழ்ச்சியின்போது, பாப்புவா நியூகினியில் வதியும் அம்பியின் புதல்வி மனநல மருத்துவர் திருமதி உமா சிவகுமார் அவர்கள்  அதனை வாசிப்பதாக ஒப்புக்கொண்டார்.

அதற்கிடையில் அம்பியின் புதல்வர் திருக்குமாரின் மனைவி தர்மினி, அந்த உரையை கூகுலில் பதிவேற்றி, அதனை குரலில் ஒலிக்கச்செய்துவிட்டு, எனக்கு அதன் இணைப்பினை அனுப்பியிருந்தார்.

தெளிவான உச்சரிப்புடன்  யாரோ ஒரு பெண்குரல் அந்த உரையை வாசித்தது.  அதில் மிகவும் பொருத்தமான  ஏற்ற இறக்கமும் இருந்தது.

நான் திகைத்துவிட்டேன்.

மேலும் ஒரு செய்தியை சொல்கின்றேன். 

எனது  உடன் பிறந்த அக்காவின் குடும்ப உறவினுள் நடந்த ஒரு திருமணத்தினையடுத்து   ஏற்பட்ட  நெருக்கடியினால்,  அந்தத்  திருமணம் விவாகரத்து வரையில் சென்று விட்டது.   அது தொடர்பான ஒரு ஆவணம் சுமார் பத்துப்  பக்கங்களில் சிங்கள மொழியில் எனக்கு கிடைத்திருந்தது.  அதனை வாசித்து புரிந்துகொள்வதற்கு சிரமம் இருந்தமையால்,  லண்டனில் சிங்களம்  வாசித்து சொல்லக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன்.  எனது கவலையை அருகிலிருந்து அவதானித்துக்கொண்டிருந்த  எனது பெறாமகனின் ஏக புத்திரி ( இவர் கண் சிகிச்சை நிபுணத்துவத்திற்கு பயிற்சிபெற்றுக்கொண்டிருப்பவர் )  “ தாத்தா… ஏன் கவலைப்படுகிறீர்கள். அந்த ஆவணத்தை எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்புங்கள் . சில நிமிடங்களில் அதனை கூகுலில் கொடுத்து தமிழில் மொழிபெயர்த்து தருகின்றேன்  “ என்றார். அவர் பிறந்தது டென்மார்க்கில் . 

அந்தப் பேத்தி சொன்னவாறு பேத்தியின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினேன். சில நிமிடங்களில் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு எதுவித எழுத்துப்பிழைகளுமின்றி எனக்கு கிடைத்தது. அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுகணமே அனுப்பிவைத்தேன்.

நான் இந்த எழுத்துலகில் 1970 ஆம் ஆண்டிற்குப்பின்னரே பிரவேசித்தேன்.

கல்லில் பொழியப்பட்ட தமிழ், பனையோலை ஏட்டிற்குச்சென்று,  வெள்ளீய அச்சாகி, பத்திரிகைகள், புத்தகங்களில் இதழ்களில் பதிவேற்றப்பட்டு, கடந்த நூற்றாண்டு முதல் கணினிக்குள் தீவிர பாய்ச்சலைக்கண்டு, மற்றும் ஒரு டிஜிட்டல் உலகிற்கு சென்றுள்ளது.

எனது பேரன், பேத்திகளின்  காலத்தில் எமது தமிழ் புதுயுகத்தில் பிரவேசித்துள்ளது.

நாம் இனி ஒளித்தோட முடியாது. எமது நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. எமது எழுத்துக்களை யாரோ முகம் தெரியாத ஒருவர் எங்கோ பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்.  அல்லது வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார். எவரது எழுத்தையும் எவரும் என்னவும் செய்ய முடியுமென்றாகிவிட்டது.

அண்மையில் எனது இரண்டு ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் ஒரு பிரபல தமிழ் நாளேட்டின் வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அக்கட்டுரைகளை நான் அந்தப்பத்திரிகைக்கு அனுப்பவில்லை.  புகலிடத்தில் வெளியாகும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கும் அந்த ஆக்கங்களை தரவிறக்கம் செய்து தங்கள் பத்திரிகையில் பதிவேற்றி, பக்கம் நிரப்பி வெளியிட்டிருக்கிறது அந்த ஆசிரிய பீடம் ! 

இலங்கையில்  ஒவ்வொரு  பிரபல நாளேடுகளும்  ( தமிழ் – ஆங்கிலம் – சிங்களம் ) அவற்றில் வரும் விளம்பரங்களுக்காக எவ்வளவு தொகையை அறவிடுகின்றன? என்பது அந்தந்த பத்திரிகைகளின் நிருவாகத்திற்கே வெளிச்சம்.

விளம்பரதாரர்களுக்கும் பத்திரிகைகளின் விளம்பரப்  பிரிவு முகவர்களுக்கும் ஊழியர்களுக்கும் மாத்திரம்தான் தெரியும்.

ஒரு இலட்சம் ரூபா முதல் ஆயிரக்கணக்கான ரூபா வரையில் இந்த நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்கின்றன.

ஆனால், அந்தப் பத்திரிகைகளில்  முழுப்பக்கம், அரைப்பக்கம், கால் பக்கம் எழுதும்  எழுத்தாளர்களுக்கு என்ன சன்மானம் தருகின்றன… ?  என்பது அதில் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கும் ஆசிரிய  பீடங்களுக்கும் மாத்திரமே வெளிச்சம்! 

நான் 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தேன்.  கடந்த 36 வருட காலமாக இலங்கை தமிழ் ஊடகங்களுக்கு எழுதிவருகின்றேன். அவற்றில் சில தொடர் கட்டுரைகளும் அடக்கம். பின்னாளில் அவற்றில் சில நூலுருப்பெற்றுள்ளன.

எனினும், குறிப்பிட்ட தமிழ் ஊடகங்களிடமிருந்து இதுவரையில் ஒரு சதமேனும் சன்மானமாக நான் பெற்றதில்லை.

அந்த ஊடகங்கள் தரப்போவதுமில்லை.  

எனினும்,  இலங்கையில் வாழ்ந்துகொண்டு அந்த ஊடகங்களுக்கு எழுதும் எழுத்தாளர்களுக்கு,  ஒரு ஆக்கத்திற்கு எவ்வளவு சன்மானத்தை வழங்குகின்றது என்பதையும் நாம் கேட்டறியமுடியாது. எமக்கு அது அவசியமுமில்லை.

இது தொடர்பாக அங்கிருக்கும் எழுத்தாளர்களின் சிந்தனைக்கே   இந்தப்பதிவை விட்டுவிடுகின்றேன்.

    1990 களில்  பாரிஸ் ஈழநாடுவில் ( ஆசிரியர் எஸ். எஸ். குகநாதன் ) நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் என்ற தொடரில் மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள் பன்னிரண்டு பேரைப்பற்றி எழுதினேன்.  பின்னர் அந்தத் தொடர் அதே பெயரில் நூலாகவும் வெளியானது.

அதில் இடம்பெற்ற சில கட்டுரைகள் சில ஊடகங்களில் மறுபிரசுரமாகியுமிருக்கின்றன.

எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர் நான் சந்தித்துப்பேசிப் பழகி உறவாடியிருக்கும்  பல கலை, இலக்கிய ஊடகத்துறை ஆளுமைகளை கடந்த ஐம்பது ஆண்டு காலத்துள் இழந்திருக்கின்றேன்.

அவர்கள் பற்றி தொடர்ந்தும் எழுதிவருகின்றேன். இலங்கையிலிருந்தவர்கள் பற்றி மாத்திரமன்றி, இந்தியாவிலும், கனடா, மற்றும் ருஷ்யா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியா நாடுகளில் வாழ்ந்தவர்கள் பற்றியும் எழுதிவருகின்றேன்.

கனடா பதிவுகள், தமிழ் நாடு திண்ணை, அவுஸ்திரேலியா தமிழ் முரசு , அக்கினிக்குஞ்சு, இங்கிலாந்து வணக்கம் லண்டன், பிரான்ஸ்  “ நடு  “  ஆகிய இணைய இதழ்களிலும் இலங்கை – தமிழக ஊடகங்களிலும் அவை வெளிவந்துள்ளன.  மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் நொயல் நடேசன் அவர்களின் வலைப்பூவிலும் சில பதிவுகள் பதிவேற்றம் கண்டுள்ளன.

சில நண்பர்கள் தங்கள் முகநூலிலும்  சிலவற்றை பதிவிட்டுள்ளனர்.

அதனால், கூகுளில் நான் எழுதிய ஆளுமைகளின் பெயர்களை பதிவிட்டு,   பக்கத்தில் எனது பெயரையும் பதிவிட்டால் குறிப்பிட்ட ஆக்கத்தை உடனடியாகவே பெற்றுக்கொள்ள முடியும்.  சமகாலம் அப்படித்தான் இருக்கிறது.

எனவே நாம் இந்த Download Journalism – Cut and Past Journalism குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனக்கருதுகின்றேன்.

நான் அடுத்து வெளியிடவிருக்கும் காலமும் கணங்களும் நூலில் இடம்பெறவிருக்கின்ற  கலை, இலக்கிய ஆளுமைகளின் பெயர்களை இந்தத் தொடரை படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு விட்டு விடுகின்றேன்.

இதில் இடம்பெற்றிருப்பவர்கள், எம்மிடம் தங்கள் நினைவுகளை தந்துவிட்டு, நிரந்தரமாக விடைபெற்றவர்கள்.

காலமும் கணங்களும்   நூலில் இடம்பெறுபவர்கள் 

1.  இரசிகமணி கனகசெந்திநாதன் (1917 – 1977)

2.  கே.டானியல்  (1929- 1986)

3. மு.தளையசிங்கம்    (1935 – 1973)

4. என். எஸ். எம். இராமையா   (1931 – 1990)

5. பேராசிரியர் க.கைலாசபதி ( 1933 – 1982 )

6. கே.ஜி. அமரதாஸ

7. எச்.எம்.பி. மொஹிதீன் ( 1932 – 1988 )

8. க.நவசோதி  (1941 -1990)

 9. ஈழவாணன்   (1935 – 1984)

10. நெல்லை.க.பேரன்  (1946 – 1991)

11. காவலூர் ஜெகநாதன் ( 1955- 1985)

12. விதாலிஃ புர்னீக்கா ( 1940 – )

13. சி.வி.வேலுப்பிள்ளை  (1914 -1984)

14. அ.செ.முருகானந்தன்  ( 1921 – 1998 ) 

15.  மு.கனகராசன் (1942 -)

16.  ராஜ ஸ்ரீகாந்தன்  (1948 – 2004)

17.   வண்ணை சிவராஜா

18. பேராசிரியர் சு. வித்தியானந்தன் (1924 – 1989)

19.  எம்.எச்.எம். ஷம்ஸ் ( 1940 – 2002)

20.  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்   (1947 – 2000)

21. நா. சோமகாந்தன்  ( 1933 – 2006 )

22. இளங்கீரன்    ( 1927-1997) 

23. ஏ.ஜே.கனகரட்னா (1934 – 2006)

24. இ.முருகையன் (1935 – 2009)

25.   ‘ தகவம்  ‘ வ.ராசையா  (  1921   –  2007)

26. எஸ். அகஸ்தியர் ( 1926 -1995) 

27. கே. கணேஷ்   ( 1920 – 2004)

28. சில்லையூர் செல்வராசன்  ( 1933 – 1995)

29. கி. லக்ஷ்மண ஐயர் ( 1918 –  1990)

30. தெ.  நித்தியகீர்த்தி (1947 – 2009)

31. எஸ்.வி. தம்பையா    (1932 – 2002)

32. பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 – 2011)

33. மருதூர்க்கொத்தன்  (1935 -2004)

34. மருதூர்க்கனி  (1942 -2004)

35. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை (1899 – 1978)

36. பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

37.  தனிநாயகம்  அடிகளார்   (1913 – 1980)

38.  முகம்மது சமீம்  ( 1933 – ???)

39.  சு.வில்வரத்தினம்  (1950 – 2006)

40. காவலூர் ராஜதுரை (1931 – 2014 )

41.  கலா.பரமேஸ்வரன்  ( 1944  – 1983)

42.  வ.அ. இராசரத்தினம்  (1925 -)

43. ‘எஸ்.பொ” பொன்னுத்துரை (1932 -2014)

44.    அன்புமணி    ( 1935 – 2014)

45.  சண்முகம் சிவலிங்கம் (1936 – 2012)

46.  பொ. கனகசபாபதி (1935 – 2014)

47.  நாவேந்தன்  (1932 -2000)

48.  தி. ச. வரதராசன்  (1924 – 2006)

49. செங்கைஆழியான்  ( 1941 -2016)

50.  சிவா சுப்பிரமணியம் (1942 – 2016)

51. கே. விஜயன்                   ( 1943 – 2016 ) 

52. பி. எம். புன்னியாமீன்   (1960 – 2016)

53. செ.கதிர்காமநாதன் (1942 – 1972)

54. ஏ. இக்பால்   (1938-2015)

55. எம்.எச்.எம். அஷ்ரப்  (1948 – 2000)

56. சிற்பி  சரவணபவன் ( 1933 – 2015 ) 

57. என்.கே. ரகுநாதன்  (1929-2018)

58. நீர்வை பொன்னையன்  ( 1930 – 2020 ) 

59.  ‘ மல்லிகை  ‘ டொமினிக்  ஜீவா ( 1927 – 2021 ) 

60.  மு. பஷீர் ( 1940 – 2021 ) 

61. கே. எஸ். சிவகுமாரன் ( 1936 – 2022 ) 

62. தெணியான் ( 1942 – 2022 ) 

63. செ. கணேசலிங்கன் ( 1928 – 2021 ) 

64. நந்தினி சேவியர் ( 1949 – 2021 ) 

65. பண்டிதர் க. மயில்வாகனன்  ( 1919 –

66.  சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி ( — 2020 ) 

67.  புதுவை இரத்தினதுரை ( 1948 – 2009 ???? ) 

68. எழுத்தாளர் உபாலி லீலாரட்ண.

69. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ( 1944 – 2020 )

70. தெளிவத்தை ஜோசப்  ( 1934 – 2022 ) 

ஊடகவியலாளர்கள் 

71. ‘ராமாராமநாதன் ( ——– )  

72.  எஸ்.எம்.கார்மேகம்  (1939 – 2005)

73.  ஆர். சிவகுருநாதன்  (1931- 2003)

74. கனக.அரசரட்ணம்     (1952 – 2009)

75. பொன். ராஜகோபால் ( 1932 – 1997) 

76. டேவிட் ராஜூ            (1935 – 2010)

77. ‘நடா‘  நடராஜா

78.  வீ.ஆர். வரதராஜா

79. ‘கோபு’ கோபாலரத்தினம் (  1930 –   2017)

80.  க.சிவப்பிரகாசம்          (1935 – 2017)

81. வீ.ஏ. திருஞானசுந்தரம் ( 1931- 2018)

82. எஸ். டி. சிவநாயகம்  ( 1921 – 2000) 

83. சிதம்பரப்பிள்ளை சிவக்குமார்  ( 1962 – 2022 ) 

84.  வவுனியா  மாணிக்கவாசகர்  ( 1947 – 2023 ) 

கலைஞர்கள்

85.  உடப்பூர் சோமஸ்கந்தர்

86. ஸ்ரீதர் பிச்சையப்பா  (1962 – 2010)

87.சுந்தாசுந்தரலிங்கம்  (1930 -2011)

88. ஓவியர் கே.ரி. செல்லத்துரை  (1915 – 1998)

89.வயலின்வி.கே. குமாரசாமி  (1925 – 2009)

90.  மரைக்கார்   ராமதாஸ்  (1947 – 2016)

91.  எம் . எஸ்.  கமலநாதன்  (1939 -2016)

92. அருட் தந்தை மரியசேவியர் அடிகளார் ( 1939 – 2021 ) 

93 . விஜயகுமாரணதுங்க  ( 1945 – 1988 ) 

இதழாளர்கள் – பதிப்பாளர்கள் 

94. புத்தகக்  கடை ஆர். ஆர். பூபாலசிங்கம் ( 1922 – 1982)

95.  சிரித்திரன்சிவஞானசுந்தரம் ( 1924 – 1996)

 96.   துரை. விசுவநாதன்      (1931 – 1998)

97.  திக்கவயல் தர்மகுலசிங்கம்  ( 1947 – 2011 ) 

98.  வீரகேசரி  எஸ். பாலச்சந்திரன்   (1935 – 2011)

சமூகப்பணியாளர்கள்

99.  சதானந்தன் மாஸ்டர்  ( 1940 – 2019 ) 

100. கிளார்க்கர் ஐயா இராஜேந்திரம்

101.  தன்னார்வத் தொண்டர் சொ. யோகநாதன்

102.  தோழர் வி.பொன்னம்பலம் (1930 – 1994)

103.   ரங்கநாதன் 

104.  தோழர்  மாணிக்ஸ் மாணிக்க

letchumananm@gmail.com 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.