தமிழ் அகதிகள் விரட்டப்பட்டனரா?

நன்றி எதிரொலி

விக்டோரியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்  மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேஸர் ஞாபகர்த்த விரிவுரை 24 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்தநிகழ்வில், understanding the voice referendum என்ற தலைப்பில் இந்தநிகழ்வு இடம்பெற்றது.

மொனா  பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெலிஸா கஸ்டன் மற்றும்  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கான விக்டோரியா மாநில செனட்டர் ஜனா ஸ்ரீவாட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு டன்டிநொங் பிரதேசத்திலிருக்கும் விக்டோரிய தமிழ்க் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேஸர், தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக நீண்டகாலமாகக் குரல் கொடுத்தவர். புலம்பெயரும் தமிழ் அகதிச் சமூகத்துக்கு உறுதுணையாகச் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடிவுக்காக இறுதிவரை குரல் கொடுத்துவந்தவர். வாழும் காலத்திலேயே தமிழீழத் தேசியத்தலைவரால் ’மாமனிதர்’ என்ற உயரிய கௌரவம் வழங்கப்பட்டவர். இவ்வாறான மாமனிதனின் நிகழ்வில் தாம்  விரட்டப்பட்டதாக எதிரொலியை தொடர்பு கொண்டு ’அகதிகள்’ பலர் தெரிவித்திருந்தனர். இது குறித்து அகதிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் விக்டோரியா தமிழ்ச் சங்கத்தின் நிர்வகத்தின் சார்பில் தெரிவித்த கருத்துகளையும் பகிர்கின்றோம்.

குரல்-1

“ விக்டோரியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டடில் நடைபெற்ற மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேஸரின் நிகழ்வுக்கு  ஏன் நாங்கள் சென்றோம் என்றால் அவர் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவர். அவரின் நிகழ்வில் செனட்டரை சந்தித்து எங்களுக்காகவும் குரல் கொடுங்கள் என வலியுறுத்தவே சென்றிருந்தோம். நாம் ஆர்ப்பாட்டம் செய்யவும் இல்லை, அந்த நோக்கமும் இல்லை. ஆனால், நாங்கள் நிகழ்வுக்குள் செல்ல முன்னரே மண்டபத்தின் வாசலிலேயே வழி மறிக்கப்பட்டுவிட்டோம். எங்களைச் சுற்றி நாலைந்து பேர் வட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் ஒரு மாதிரி உள்ளே சென்றோம். எங்களை பின் கதிரைகளில் மட்டுமே அமர அனுமதித்தனர். 

செனட்டர் பேசி முடியும் வரை நாம் காத்திருந்தோம். அதன் பின்னர் நான் தயவு செய்து நான் ’உங்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்க வேண்டும் அனுமதியுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அந்த ஒற்றை வசனத்தை தவிர்த்து நான் ஏதும் கேட்கவில்லை. சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என் பின் கழுத்தைப்பிடித்து இழுத்து வெளியே அனுப்ப முயற்சித்தார்.

’11 வருடங்கள் கடந்தும் நாம் நிர்க்கதியாக நிற்கின்றோம். எங்களுடைய பிரச்சினை குறித்து  செனட்டர் குரல் கொடுக்க முடியுமா ?’ என்ற கேள்வியே என்னிடமும் எம் சார்ந்த அகதிகளிடமும் இருந்தது.

அங்கிருந்த நான்கைந்துபேர் எங்களை வெளியேற்றுவதற்காக வன்முறைச் சொற்களைப் பயன்படுத்தினர். அதில் ஒரு ஐயா எங்களைப் பார்த்து காறித்துப்பினார். சிலர் கெட்டவார்த்தையால் பேசினர்.

கல்வி கற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் – தங்களைத் தாங்களே நாகரிகமானவர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவது தான் தமிழ் கலாசாரமா…? தமிழ்ச் சங்கம் என்று சொல்பவர்கள் தமிழ் அகதிகளை ஏற இறங்கப் பார்க்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வை எப்படி இந்தத் தமிழ்ச் சமூகம் பார்க்கிறது. இதன் பின்னர் அங்கு வேறொரு மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வரவழைத்து எம்மை  வெளியேற்றவும் முயற்சி செய்தனர். அந்த முயற்சி தோல்வியடைந்தபோது , ‘வெளியேறா விட்டால் பொலிஸாரை அழைத்து உங்களை தூக்கிப்போட வேண்டிவரும்’ என ஒருவர் மிரட்டினார். அதேவேளை செனட்டரை பின்வழியாக அழைத்துசென்றுவிட்டனர். செனட்டரோடே நாம் பேச முனைந்தோம். அவரே சென்ற பின்னர் நாம் ஏன் அங்கு நிற்கவேண்டுமென நினைத்து வெளியேறிச் விட்டோம். நாம் அங்கிருந்து சென்ற பின்னர் பொலிஸார் வந்தார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.

ஒருவேளை இவர்கள் அனுமதித்திருந்தால் செனட்டர்   எங்களுடன் பேசியிருப்பார் என்ற எனக்கு தோன்றுகிறது.

செனட்டரைச் சந்திக்க வழியேற்படுத்தித் தரலாம் என்று கூறி அந்தச் சங்கத்தின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தனது தொலைபேசி இலக்கத்தை தந்தார். இரண்டொருநாட்களுக்கு பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் இதுவரை பதில் இல்லை. ஒரு தமிழ்ச் சங்கத்தின் தலைவரே எங்களின் அழைப்பை ஏற்கவில்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் செனட்டரை அணுகுவது எவ்வளவு கடினம் என்று எண்ணிப்பாருங்கள்.

விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் பங்குதாரர்களாக அகதிகளும் இருக்கின்றனர். வரிசெலுத்துபவர்களின் பணத்திலிருந்து  மத்திய – மாநில அரசுகள் இந்த மண்டபத்துக்கு நிதியளித்துள்ளன. ஆனால் இந்த மண்டபம் சமூக மண்டபமாக இயங்குவதாகத் தெரியவில்லை.

இப்போது  எனக்குள்ள கேள்வி, தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்த மாமனிதனின் நினைவுகூரலில் தமிழ் அகதிகள் விரட்டப்படுவது சரியா?

ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்காக ஆதரவளிக்கக் கோரும் தமிழ்ச்சங்கம், இலங்கையில் ஒடுக்கப்பட்ட வன்முறைக்குள் சிக்குண்டு, சிதறுண்டு பல நாடுகளில் தஞ்சமடைந்து இன்று ஆஸ்திரேலியாவில் நிரந்தர வாழ்வுக்காகப் போராடும் அகதிகளை விரட்டுவது சரியா..?”- இவ்வாறு தனக்கு அன்றைய நாளில்  நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்தார் ஈழ ஏதிலியான  பிரசாந் குமரவேல்.

பிரசாந் குமரவேல் தற்போது தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.  வைத்தியராக வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.

“ நானும் எனது பெற்றோரும்  1998 ஆம் ஆண்டு  முதல் சுமார் 15 வருடங்களாக தமிழ்நாட்டு அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்தோம். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்தோம். எங்களுக்கு நிரந்தர வதிவிட விசா இல்லை. எனது கல்லூரி நண்பர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள்.  படிப்பார்கள். அரசு பணம் கொடுக்கிறது. எனக்கு அப்படி அல்ல. நான் படிப்பதற்கு 70 ஆயிரம் டொலர் கட்டவேண்டும். இரண்டு வேலைகள் செய்யவேண்டும். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவதே கடினம். இப்படிப் போராடித்தான் நான் படிக்கிறேன்.என்னைப் போல பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.என் பெற்றோரும் அகதிகள், நானும் அகதி.இதற்கு முற்றுப்புள்ளி என்னோடேயே வைக்கவேண்டும் .  எப்போதாவது ஒருநாள் நிம்மாதயாக துங்கமாட்டோமா என்ற ஏக்கமே எங்களை இந்தப் போராட்டத்துக்குள் தள்ளிவிடுகிறது ”– என்கிறார் பிரசாந்.

குரல்-2

“ என்னுடைய அம்மா நீண்ட துரம் நடக்கின்றார்,எங்களுக்கான விடிவுக்காக. அந்தத் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுக்குப் போனோம். அங்கு இருந்த ஒரு சிலர் எங்களை ’உள்ளே போக முடியாது’ என்று சொன்னார்கள். அங்கிருந்தவர்கள் எங்களோடு கதைத்த விதம் பிழையாக இருந்தது. அவர்கள் என் அம்மாவோடு போனவர்களைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்கள். எனக்கு கவலையாக இருந்தது. அங்கிருந்த ஒருவர் அதிபர் என்று சொன்னார்கள். ஆனால் அவர் அதிபராக நடந்துகொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் ஆஸ்திரேலியாவில் 11 வருடங்களாக இருக்கின்றேன். நான் பல நிகழ்வுக்குச் சென்றிருக்கிறேன். பாடசாலையில் எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்கள் என்னை மரியாதையாகவே நடத்துகின்றனர்.  எனக்கு இது முதல் அனுபவம். இந்த நிகழ்வில் எங்களை அவமானப்படுத்தினார்கள். அவர்கள் தமிழ்ச் சங்கம் என்று பயன்படுத்துவது தவறு என நான் நினைக்கின்றேன். ஏனெனில் அவர்கள் தமிழர்களான, தமிழ் ஏதிலிகளான எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே அவர்கள் அதன் பெயரை சிட்டிசன் தமிழ்ச் சங்கம் என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்”- என்று 18 வயது நிரம்பிய பாடசாலை செல்லும் மாணவி ஒருவர் தெரிவித்தார்.

குரல்-3

“ நான் 1985 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து இலங்கையின் பல பகுதியில் உள்ளூரில் அகதியாக வாழ்ந்திருக்கிறேன். திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 3 மாதங்களாக  காட்டுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறோம். அதுமட்டுமின்றி நான் ஆஸ்திரேலியா வரும் வரை நான் எனது சொந்த வீட்டில் உறங்கியதில்லை. எங்களிம் இந்த இடப்பெயர்வு வாழ்க்கை உள்ளூருடன் முடிந்துவிடவில்லை.    தமிழ்நாட்டு அகதி முகாம் , பின்னர்  ஆஸ்திரேலியா வந்து  பப்புவா நியுகினி என பல தடுப்பு முகாம் வாழ்க்கையை அனுபவித்தும் இன்னும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவில்லை.  ஆஸ்திரேலியா வந்த பின்னர் தான் ஒரு நாளைக்கு 15 மாத்திரைகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். எங்களின் மனஉளைச்சல்களைச் சொல்லி அழுவதற்கான இடம் தெரியவில்லை. அரசியல்வாதிகளை சந்திக்க வழி தெரியவில்லை. நாங்களும் பல இடங்களில போராடுகிறோம். ஆனால் எப்போதும் யாரையும் சந்திக்க முடிவதில்லை. இந்நிலையில் தான் விக்டோரியாத் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் நிகழ்வுக்கு செனட்டர் ஒருவர் வருகிறார், அவரிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைப்போம் என்று எண்ணினோமே தவிர   ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை.

“நாங்கள் குறித்த நிகழ்வுக்குச் சென்ற வேளையில் வாசலில் வைத்தே மறிக்கப்பட்டோம். அந்த வேளையில் நாம் செனட்டரிடம் எமது பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்று அங்கிருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்,  ’’  இந்த நிகழ்வில் நீங்கள் அவருடன் பேச முடியாது . அவர்களிடம் நீங்கள் தனிப்பட அனுமதியைக் கோரி அங்கு போய் பேசுங்கள்”  என்று   கறாரான தொனியில் தெரிவித்திருந்தனர். நான் அவரிடம் கேட்டேன் ’நீங்களே இப்படிச் சொல்லலாமா?  எங்களுக்கு உதவி செய்யுங்கள். 22 பெண்கள் எங்களின் விடிவுக்காக நடக்கின்றனர் ”என்று சொல்லி முடிக்க முன்னரே அங்கிருந்த நிர்வாகி ஒருவர், ”அதுகளுக்கு விசர்”என்று கூற, நாங்கள் திரும்பச் சொன்னோம் ”நீங்கள் ஒரு தமிழராக இருந்து இவ்வாறு பேசலாமா ?”. அதன் பின்னர் வெளியே வந்து நின்றோம்.  பின்னர் கொஞ்ச நேரத்தில் மீண்டும் உள்ளே போயிருந்தோம். அங்கு எங்களைச் சுற்றி நாலைந்து பேர் வட்டம் போட்டுக்கொண்டேயிருந்தனர்.  நாம் அமைதியான முறையில்  தான் இருந்தோம். எந்தவிதமான கோஷங்களோ முழக்கங்களோ போடவில்லை. செனட்டரின் பேச்சு முடிந்த பின்னர் ’நாம் ஒரு 5 நிமிடங்கள் பேச வேண்டும்’ என்று கேட்டோம். அதற்குச் சங்கத்தின் நிர்வாகிகள் விடவில்லை. அதுமட்டுமின்றி அங்கிருந்தவர்களைத் தள்ளி வெளியேற்ற முயற்சித்தனர். நாம் எந்த வன்முறையையும் பின்பற்ற வில்லை. ஆனால் பொலிஸாரை அழைப்பித்து எங்களை வெளியேற்ற முனைந்தமை பொலிஸார் வந்த பின்னரே எனக்குத் தெரியும் . பொலிஸார் வர முன்னரே நாம் வெளியேறி விட்டோம்.   பல அகதிகள் விசா இன்றி நிர்க்கதியில் இருக்கின்றோம். இந்த நிலையில் பொலிஸாரை வரவழைப்பது ஒரு தமிழ் சார்ந்த அமைப்பின் சரியான போக்கா? இந்தப் பதிவில்   என்னுடைய பெயரைப் போட வேண்டாம் . காரணம் , நேரடியாகவே எம்மைக் காட்டிக்கொடுக்கின்றனர். பெயரைப் போட்டால்  என்ன நடக்குமென நீங்களே யோசித்து பாருங்கள்”- என்றார் அந்நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத் தலைவி ஒருவர்.

குரல்-4

“ நானும் எனது  மகளும்  சுமார் 12 வருடங்களாக நிர்க்கதியான நிலையில் இருக்கின்றோம். வைத்தியத் துறையில் கல்வியையும் தொடர முடியவில்லை – நிரந்தர வதிவிடமும் இல்லை என்ற நிலையில்,  நிம்மதியான வாழ்வைத் தேடி எனது மகள் மெல்பேர்ண் தொடக்கம் கன்பரா வரை நடந்துகொண்டிருக்கின்றார். இந்த நேரத்தில் தான் ’ விக்டோரியா தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் நிகழ்வுக்கு செனட்டர் ஒருவர் வருகிறார் , அவருக்கு எங்களின் நிலைமையை நேரடியாக சொல்ல வாய்ப்பு கிடைக்கும்’ என்று சென்றோம். நாங்கள் உள்ளே செல்லும் வாசலில் வைத்தே தடுத்து நிறுத்தப்பட்டோம். அங்கு தடுத்தோர் பலர் ’உங்களுக்கு விசா நிராரிக்கப்பட்டது சரி. அகதிகளுக்கு விசா கொடுத்தாச்சு தானே. வெளியே செல்லுங்கள் ’என்று விரட்டினர்’  – சுரேன் ஜீவரட்ணம் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

..

விக்டோரிய தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான  திரு. பரமநாதனிடம்  தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் குறித்து வினாவுதற்காக எதிரொலி சார்பாக நேரம் கோரப்பட்டது. நேரம் தரப்பட்ட பின்னர் அவர்  ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் குஞ்செய்தியில்,

’தமிழ்ச் சமூகம் சார்பாக இரண்டு முக்கியமான பிரமுகர்களை இந்த நிகழ்வுக்கு அழைத்திருந்திருந்தோம். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில்  செனட்டர் தனக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. அதேவேளை, இந்த நிகழ்வில் தமிழர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.  அங்கு வந்திருந்த அகதிகள் பதாகைகளைத்  தாங்கியிருந்தனர். எனது கருத்தின்படி கன்பரா சென்று அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். நாங்கள் நடந்து சென்று ஊடகத்தின் பார்வையை பெற வேண்டும். அத்துடன ஒரு மாமனிதனின் நினைவு நிகழ்வில் இப்படி ஆர்ப்பாட்டம் செய்வது நியாயமானதா.? அன்றைய நாளில் நடந்த நிகழ்வு எனக்கு  கவலையளிக்கிறது. அத்துடன் இந்தச்சம்வம் குறித்து மேலும் கலந்துரையாட விரும்பவில்லை ” இதுதான் அந்தக் குறுஞ்செய்தி.

(இந்தச்சம்பவம் குறித்து ஏதேனும் மாற்றுக்கருத்துகள் இருப்பின் எதிரொலிக்கு மின்னஞ்சல் மூலம் எழுதியனுப்பினால் பிரசுரிக்கப்படும்)

ஜே.ஜே 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.