
மனிதர்களது அகவயக்காரணிகளான காதல், காமம், துயரம், நகைச்சுவை, பேராசை என்பனவற்றை வைத்து இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாக்கும்போது அப்படைப்புகள் காலம் கடந்து நிலைக்கும். நாம் அவற்றை கலாச்சாரம், பண்பாடு, நிலம் கடந்து புரிந்துகொள்ள முடியும். இலியட் ஓடிசி போன்ற கிரேக்கக் காவியங்களோ அல்லது நமது இந்திய காவியங்களான மகாபாரதம் இராமாயணம் போன்றவையோ மதமயபபடுத்தாது விட்டிருந்தாலும் நிச்சயம் நிலைத்திருக்கும். அவை அடிப்படை மனித இயல்புகளின் சாரத்தை எழுத்தில் வைக்கின்றன என்பதே அதற்கான காரணம்.
இந்த காவியங்களுக்கு நிகராக பண்டைய கிரிக்க நாடகங்கள் இன்றும் உலகத்தின் பல மேடைகளில், 2500 வருடங்கள் பின்னும், மேடையேற்றப்படுகின்றன. இவற்றைப் புரிந்துகொள்வதற்கு மொழியோ கலாச்சாரமோ தேவையில்லை. முக்கியமாக கிரேக்க துன்பியல் நாடகங்களை எழுதியவர்கள், அக்காலக் காப்பியங்களையும் தொன்மைக் கதைகளையும் கொண்டு எழுதினார்கள். அவர்கள் பெயர்கள் இன்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தவறாது உச்சரிக்கிறார்கள். அகமனான் , எடிப்பஸ் , மெடியா ( Aeschylus- Agamemnon, Sophocles-Oedipus the King and Euripides- Medea) போன்றோரின் பல நாடகங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்தவை, தெரிந்தவையே இங்குள்ளன.

இப்படிப்பட்ட கிரேக்க நாடக ஆசிரியர்களது நாடகங்களுக்கு ஈடானது முதலாவது மகாயுத்தத்தில் இணைந்து தனது 27 வயதில் இறந்த இளைஞன் ரோபட் புரோக்கின் நாடகம் (Rupert Brooke’s tragic one act play ‘Lithuania’ staged in 1915). 1915ல் லித்துவேனியா என்ற பெயரில் அந்த நாடகம் வெளிவந்தது. பிரித்தானியாவை சேர்ந்த இவன் இறக்காமலிருந்தால் ஷேக்ஸ்பியர், மில்டன் வரிசையில் இடம்பெற்றிருக்கலாம் . இந்த நாடகத்தைப்போல் பிரபலமானது சோல்ஜர் (The Soldier) எனும் ரோபட் புரோக்கின் ஒரு கவிதை.
The Soldier
If I should die, think only this of me:
That there’s some corner of a foreign field
That is for ever England. There shall be
In that rich earth a richer dust concealed;
A dust whom England bore, shaped, made aware,
Gave, once, her flowers to love, her ways to roam,
A body of England’s, breathing English air,
Washed by the rivers, blest by suns of home.
And think, this heart, all evil shed away,
A pulse in the eternal mind, no less
Gives somewhere back the thoughts by England given;
Her sights and sounds; dreams happy as her day;
And laughter, learnt of friends; and gentleness,
In hearts at peace, under an English heaven.
—-
நமக்கு முதல் நாள் குடித்த வைன் கழிவாக போவதுமல்லாது அடுத்த நாள் என்ன குடித்தோம் என மறந்துவிடும். ஆனால் பழக்கத் தோசத்தாலும் அந்தந்த நேரத்தின் போதைக்காகவும் வைன் குடிப்போம். அது போல்தான் நான் தமிழ்ப் படங்கள் பார்ப்பது : அடுத்த நாள் பெயர்கூட நினைவிராது. முடிவைப் பார்க்காது நித்திரைக்குச் சென்ற என் மனைவி, படத்தின் முடிவு என்ன என்றபோது மட்டும் என்ன பார்த்தேன் என சிந்திப்பேன். ஆனால் சில திரைப்படங்கள், பாடசாலைக்காலத்தில் மேசையின் கீழ்ப் பகுதியில் ஓட்டிய சுவிங்கமாக, பல காலமாக நினைவுகளில் குடியிருக்கும்.
காரணம் என்ன?
திரைத்துறைகளில் மனவியல் ரீதியான எதிர்மறை கதைகளைப் பார்க்கும்போது அவை மனத்தின் ஆழத்தில் பொந்தமைத்து அங்கு குறுகுறுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும். அவைகளைப் படமாக்குவதற்கு மிகுந்த துணிவு வேண்டும். பணத்தை மட்டும் லட்சியமாகக் கொண்டவர்களால் படமாக்க முடியாது. ஆனால் இப்படியான படங்களைப் பற்றிய நினைவுகள் பார்ப்பவர்களை விட்டு இலகுவில் விலகாது.
இந்தியத் திரைப்படங்களில், தமிழ் இந்தி தெலுங்கு மொழிப்படங்கள் வசூலை குறி வைத்து, நடிகர்களது விருப்பத்திற்கேற்ப கதை எழுதித் தயாரிக்கப்படுபவை. போருக்காக ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் போன்று ஓரே நோக்கம் கொண்டவை.
நமது மனத்துக்கு ஆறுதலாக, கன்னட திரைத்துறையிலும் மலையாளத்திலும் பரீட்சார்த்த முயற்சிகளை இடைக்கிடையே பார்க்க முடியும். மலையாளத்தில் கிரேக்க நாடகமான எலக்ரா, கிரேக்க அரசனின் மனைவி, காதலன் உதவியுடன் கணவனைக் கொல்லுவதை (Elektra by Sophocles) நயன்தாரா , பிரகாஷ்ராஜ், மனுஷா கோரலா போன்றவர்களை வைத்து ஒரு அருமையான படத்தை எடுத்திருந்தார்கள்.
சமீபத்தில் நான் பார்த்த படம் ‘கொன்றால் பாவம்’. கன்னட நாடகத்திலிருந்து தயாள் பத்மநாபனால் இயக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எங்கோ படித்த நினைவு வருகிறதே என்று தலையைக் குடைந்தபோது – அல்பேட் காமுவின் அன்னியன் (Stranger) கதாநாயகன் சிறையிலிருந்து படிக்கும் பத்திரிகையில் வந்த செய்தியாக வருகிறது. அந்த செய்தியில் செக்கேஸ்லேவாக்கியாவில் நடந்த உண்மை சம்பவமாக அது வருகிறது .
“அக்கால செக்கோஸ்லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி, குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன், தனது பணத்தை அவர்களுக்குக் காட்டினான். அன்றிரவு தாயும் சகோதரியும் அவனைக் கொலை செய்து பணத்தைத் திருடினார்கள். அடுத்த நாள் கணவனைத் தேடி வந்த மனைவி அவனை அடையாளம் சொன்னபோது தாய் கயிற்றில் தொங்கி உயிர்விட்டார். சகோதரி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்தார்.”
அல்பேட் காமுவின் இந்த நாவல் அன்னியன் (Stranger) 1945களில் எழுதப்பட்டது
ஆனால் இதன் முன்பே லித்துவேனியா என்ற ரோபட் புரோக்கின் நாடகம், கிரிக்க நாடகம்போல் சோகத்தில் முடிவதுடன் வறுமையிலும் பேராசை தவறு என்ற அறத்தை வெளிப்படுத்துகிறது. இந்த கதையின் கரு செக்கோஸ்லேவேக்கியா, லித்துவேனியாவில் மட்டுமல்ல இலங்கை இந்தியாவிலும் நடக்கலாம் . மனிதர்களின் நிறம், இடம், கலாச்சாரம் வேறுபாடாக தோன்றியபோதும் அடிப்படையில் பேராசை எங்குமுண்டு.
‘கொன்றால் பாவம்’ திரைப்படம், தமிழ்நாடு – தர்மபுரி மாவட்டத்தில் நிகழும் ஒரு குடும்பத்தின் கதை. வட்டிக்குக் கடன் எடுத்துத் துன்பப்படும் குடும்பம். அதில் காலம் கடந்தும் திருமணமாகாத பெண் மல்லிகா பெற்றோருடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அப்போது புதிதாகக் கிராமத்துக்கு ஒரு இளைஞன் வருகிறான். அவனிடம் கடன் கொடுத்தவர் வந்து குடும்பத்தினரை இழிவு படுத்தும்போது அந்த இளைஞன் தனது பணத்தைக் காட்டி அதை வைத்து கடனை அடைக்கும்படி கேட்க குடும்பத்தினர் மறுத்துவிடுகிறனர்.
இறுதியில் அவனது பணத்தை அடையும் நோக்கில் மல்லிகா அவனை ஆசை காட்டி மயக்க முயன்றபோது அவன் எரிந்து விழ, இறுதியில் அவனைக் கொன்று பணத்தை அபகரிக்க முழு குடும்பமும் திட்டம் தீட்டுகிறது .
மல்லிகா அவன் கழுத்தை வெட்டி கொலை செய்தபின், அந்த இளைஞன் ஆரம்பத்தில் வீட்டை விட்டு ஓடிய அந்தக் குடும்பத்து மகன் என்பது தெரிய வந்ததும் முழுக் குடும்பமும் தற்கொலை செய்கிறது.
மல்லிகாவாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு மிகவும் இயற்கையானது. பேசும் வசனங்கள், கல்யாணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பகட்டில்லாத பெண்ணின் நடிப்பு, ஒளிவு மறைவற்ற வார்த்தைகளோடு . – எதிர்மறையான ஒரு பாத்திரமாக நடிக்காது, திரைப்படத்தில் வாழ்கிறார்- ஒவ்வொரு கிராமத்திலும், கொலை செய்யாத போதிலும், பல மல்லிகாக்கள் வாழ்கிறார்கள். சார்லி மிகவும் திறமையான நடிகர்: அவரது முத்திரை தெரிகிறது. ஈஸ்வரி ராவை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. தாயாக, மிகவும் வலிமையான பாத்திரம். ஆண் பாத்திரமாக (சந்தோஸ் பிரதாப்) தனக்கான பகுதியைச் செய்கிறார்.
இந்தப் படத்தில் கதைக்கப்பால் வசனங்கள் தெறித்து விழுகிறன. அலங்காரமோ இரட்டைத்தன்மை, அடுக்கு மொழிகளற்று, மல்லிகாவின் வசனங்கள் நம்மை அதிரவைக்கிறன. ‘முற்றிய கத்தரிக்காய் சந்தையில் என்ன விலை தெரியுமா’ எனும்போது சீதன முறை சமூகத்தை நமக்குச் சவுக்கடியாக வெளிப்படுத்துகிறது. அதேபோல் கதைகளமான கிராமத்தை மிக அருமையாக கமரா சிறைப்படுத்தியுள்ளது.
இது ஒரு வித ‘சைகோலஜிக்கல் திரில்லர்’ என்பதுடன் படத்தின் இறுதி முடிவை ஊகிக்க முடியாதவாது சிறப்பாக கதை நகர்த்திப்படமாக்கியிருக்கிறார்கள். வெளிப்புற தாக்கங்களால் மனிதர்களில் மனங்கள் மாறுவதைத் தெளிவாக இத்திரைப்படம் காட்டுகிறது. ஆனால் கன்னடம் தெலுங்கில் வெளியாகி பின்பே தமிழில் எடுத்திருக்றார்கள் – எனவே கனவுகளில் மிதக்க விரும்பும் எமது ரசிகர்களுக்கு விருப்பமான படமாக இது இருக்குமா என்பது சந்தேகமே!
நடிகர் ரஜினிகாந்த் சொன்னதுபோல், ஐந்து நட்சத்திர உணவகத்திலும் இட்லி, தோசை மட்டுமே நாம் சாப்பிடுவோம் இல்லையா?
நன்றி- அபத்தம்
பின்னூட்டமொன்றை இடுக