புத்தகம்: தாத்தாவின் வீடு
ஆசிரியர்: நோயல் நடேசன்

ஆசிரியரின் சொந்த ஊரான எழுவைதீவை களமாக கொண்டு புனையப்பட்ட நாவல் தாத்தாவின் வீடு. அவருடைய இளவயது அனுபவங்களிலிருந்து முகிழ்கிறது கதையின் கரு.
ஊரைப்பார்க்கவரும் பேரனான நட்சத்திரனுக்கும் அவனது தாத்தாவான சிவசாமிக்கும் இடையிலான உறவை வைத்து அவனுடைய ஞாபகங்களிலும் கனவுகளிலுமாக கதை நகர்கிறது.
நாவல் 1960- 1970 களில் இருந்த எழுவைதீவைப் பற்றி பேசுகிறது. அந்தக்கால சமூக பொருளாதார கட்டமைப்புகள், வசதிக் குறைபாடுகள், குடும்ப அமைப்பு, அரச நிர்வாகம், சாதியம், இந்தியாவுடனான தொடர்புகள் என்று கறுப்பு வெள்ளைக்குள் இழுத்துச் செல்கிறது.
குறிப்பாக அந்தக்காலத்திலிருந்த குடும்ப அமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மருத்துவ வசதி இன்மையால் ஏற்படும் மரணங்கள், பொருளாதார பிரச்சினைகளால் ஏற்படும் குடும்ப சச்சரவுகள் என கதை ஒரு பேரனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது.
நாவலை மேலோட்டமாக வாசிக்கின்ற போது ஆசிரியரின் நினைவுமீட்டல் போல தோன்றினாலும் கதை கூறல் உத்தி வாசகனை தொடர்ந்து வாசிக்க தூண்டுகிறது.
வரண்ட காலங்களில் தண்ணீருக்காக பெண்கள் படும் துன்பங்களை ஆசிரியர் வரட்சியால் கள் ஊறாதததால் ஏற்படும் ஆண்களின் பிரச்சினையுடன் ஒப்பிடுதல் சுவாரசியமானது.
சிறுவனான நட்சத்திரனின் பார்வை குடும்பத்தில் நிகழும் சின்னச் சின்ன சச்சரவுகள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை புரிய வைக்கின்றது.
வெறுமனே 1960- 70 களின் ஒரு தகவல் திரட்டாகவோ அல்லது ஆசிரியரின் ஞாபகமீட்டலாகவோ இல்லாது அக்கால வாழ்க்கைக்குள் வாசகரை வாழ வைப்பதில் வெற்றி பெறுகிறது நாவல்.
நண்பர்களிற்கு பரிந்துரைக்கின்றேன்.
பின்னூட்டமொன்றை இடுக