பாலியின் தொன்மங்கள்.

இயற்கையை மனிதன் தெய்வமாக உலகத்தின் பல பாகங்களிலும்  வழிபட்டான் என்ற  செய்தி  நமது இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் உள்ளது.

கிரேக்கர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒலிம்பஸ் மலையில் வாழுகின்றன. அதுபோல் யப்பானில் ஃபியுஜி  மலை புனிதமானது.   நமது சிவனொளிபாதமலை மற்றும் ஒரு உதாரணம்.  இவ்வாறு   மலைகள்  தெய்வமானதற்கு உலகெங்கும் பல உதாரணங்கள் உள்ளன.

பாலித்தீவில்,  மலைகள், ஆறுகள்,  கடல்,  அருவிகள் எல்லாம் கடவுள் மயப்படுத்தப்பட்டுள்ளன  எனச் சொன்னேன் அல்லவா?    எனினும்  இது  புதுமையல்ல.   ஆனால்,  வியப்பாக இருந்தது, தெரு முனைகள்  எங்கும் மகாபாரத கதாநாயகர்களான  அருச்சுனன்  வீமனின்  இராட்சத சிலைகள் அமைந்துள்ளன.   ஆயுதங்களுடன்  அல்லது போர்க்கோலத்துடன்,  காவல் தெய்வங்கள்போன்று  நிற்கிறார்கள். போர்க்காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நான் பார்த்த பார்த்த சிலைகளிலிருந்து  அவை வேறுபட்டிருந்தன. 

பாலித்தீவில்  நான் பார்த்த அந்த சிலைகளில், உருவம் மட்டுமன்றி, அவற்றின்  பாத்திரத்தன்மைகளும் தெரிந்தது.

அருச்சுனன் கோபத்துடனும் வீமன் வெறியுடனும் அதனதன் பாத்திர இயல்புகளோடு  யதார்த்தமாக  அமைக்கப்பட்டிருந்தன. இந்திய அழகியல் கோணத்தில் அவற்றை  நாம் பார்க்கமுடியாது. அப்படிப் பார்த்தால் அவை விகாரமாகத் தெரியும்.  ரசிக்க முடியாது.  நாம் வேறுபட்ட சுவையோடு பார்க்கவேண்டும். அதாவது அழகியல் என்ற வகையில் இதுவரை நாம் பார்த்த இந்தியத் தன்மையிலிருந்து அவை வேறுபட்டிருந்து. உதாரணமாக மகாபலிபுரத்தில் நாம் பார்க்கும் அருச்சுனன் தபசு என்ற  சிலையை ஒரு இந்தியனல்லாதவன்  அல்லது மகாபாரதம் படிக்காதவன் பார்த்தால்,  அருச்சுனனது குண இயல்பைப் புரிந்து கொள்ளமுடியுமா?  ஆனால்,  பாலியில்   பாத்திரங்களின் குண இயல்பை வைத்து சிலைகள் வடித்துள்ளார்களோ  என நினைக்க வைக்கிறது.

பாரதக் கதையின் பக்கங்கள் மீது பொறுமையற்று சினத்தோடு மட்டுமல்ல   கொலை வெறியோடு அலைவதும்,   எதிரிகளை கொலை செய்தும் வீமனது இயல்பு. 

இடும்பி யார் ?  வேடுவ அல்லது காட்டுப்பெண்.  அந்தப் பெண்ணைக்கூட விட்டு வைக்கவியலாத கொந்தளிப்பான காமத்துடன் வலம் வரும் வீமனது குண  இயல்பை சித்திரிக்கும்  சிலைகள் ஓவியங்கள் இந்தியாவில் உள்ளனவா ?

எனக்குத் தெரியவில்லை.

ஆனால்,  பாலியில் பார்த்தேன்.  முக்கியமாக எங்களது தங்குமிடத்திற்கு (Nusa dua) அருகிலிருந்த மிகப் பெரிய வீமனது சிலை,  வீமன் டிராகன் போன்ற ஒன்றின் கழுத்தைக் கோபத்தோடு நெரிப்பதாக இருந்தது.

அது பரவாயில்லை.  

ஆனால் , வீமனது    கால் விரல்கள் நகங்கள் பெரிதாக இருந்தன . நீண்டு வளர்ந்திருந்த  கட்டைவிரல்களின்  நகங்கள் எனது மனதில் பகலிலும் இரவிலும்  அடிக்கடி வந்து அலைக்கழித்தது .  ஏன் எதற்காக என்ற கேள்வி,  ஒவ்வொரு நாளும் காரில் அந்த சிலையைக் கடந்து செல்லும்போது  மனதில் குமிழி விடுவதை தவிர்க்க முடியவில்லை.

ஏதோ காரணத்தால்   வீமன் கால் விரல் நகத்தை வெட்டாது இருந்திருக்கவேண்டும்  என நினைத்தேன் . பல நாட்களாக எனக்குள் விடை காணமுயன்றேன்.

 பாரத யுத்தத்தின் இறுதியில் வாயு புத்திரனான  வீமன்,  இராமாயணத்தில் தனது நெஞ்சைப்பிளந்து காட்டும் அனுமான்போன்று,    துரியோதனனது நெஞ்சைப் பிளந்தான், எனவும்   அந்தக் குருதியில் பாஞ்சாலி கூந்தலை முடித்தாள் எனவும்  பாரதம் சொல்வதால்  வீமனது  கை விரல்களில் கூரிய  நகங்கள் வளர்ந்திருக்க வேண்டும். அந்த நகங்களாலேயே  அவன்   துரியோதனனது மார்பைப் பிளந்துள்ளான் . அதேபோன்று  கால் விரல் நகங்களும் எதிரிக்கு எதிரான போர் கலசங்களாகப்  பயன்பட்டிருக்கலாம்  என்ற முடிவுக்கு வந்தேன்.  வீமனை விடுவோம்.  அனுமானைப் பல இந்திய ஓவியங்களில் பார்த்திருக்கிறேன் .  அவற்றில் எங்குமே  நகம் வளர்ந்து இருக்கவில்லை . 

அகொங் மலையே (Mount Agung) பாலியில்  உயரமானது.  இதனாலே பாலியின்  மழை, காற்று,  வெப்பம் என்பன  இயற்கைச் சூழலை கட்டுப்படுத்துகிறது.     நாங்கள் சென்ற நாட்கள் மழைக்காலம்.   ஒவ்வொரு நாளும் பலத்த மழை,  மாலை வேளையில் வானத்தை பிளந்து கொட்டும் . பெய்த மழை அங்கு தேங்காது.   கிட்டத்தட்ட பத்தாயிரம்  அடி உயரமான இந்த மலை ஒரு எரிமலையாகும்.

இடையிடையே தூக்கத்தில் எழுந்து சிறிதும் பெரிதுமாகப் புகைவிடும்.  1963  வெடித்தபோது 20 நாட்களாக எரிமலைக் குழம்புகள் வெளிவந்து ஏழு கிலோமீட்டர்கள்வரை சென்றது. இதனால் 1500 பேராவது இறந்திருக்கலாம்.  பல தடவை  இந்த எரிமலை பொங்கியபோதும்,   இந்தக் கோவில் அமைந்துள்ள பகுதி மட்டும் பாதுகாக்கப்படுகிறது . இதனால் பாலி மக்களது நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது . இதை தங்களது மேருமலையென்கிறார்கள்.

இந்த மலையின் அடிவாரத்தில் மும்மூர்த்திகளுக்கான ஒரு கோவிலுண்டு.   மிகவும் அழகாகப் பல  படிகளை வைத்து 500-600வருடங்களுக்கு  முன்பு கட்டப்பட்டது.

பாலி,  ஜாவாவிலிருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது . தொடர்ச்சியாகப் பாலியில் யாவனியர்களின் தாக்கங்கள் ஏற்படுகின்றன.   அரசு குலம் உருவாகும்போது யாவனியர்களுக்கும்   பாலி அரச வம்சத்திற்கும் திருமண உறவு ஏற்படுகிறது . உதயண என்ற அரசன்,  ஜாவாவின் இளவரசியை திருமணம் செய்தான்.  அவனது மகன் இரு பிரதேசங்களுக்கும் அரசராக இருந்தான்.  தற்போது பாலியில் உள்ள பல்கலைக்கழகம் உதயண பல்கலைக்கழகமாகும் .

ஜாவாவிலுள்ள இந்து  அரசே 5 நூற்றாண்டுகள் பாலியை ஆள்கிறது ( Majapahit dynastic rule (1343–1846) ஆனால்,  15  ஆம் நூற்றாண்டு வரையுமே  இந்து ராச்சியத்தின் ஆளுகையால் பாலியின் கலாச்சாரம் மேன்மையாகிறது . 15 அம் நூற்றறாண்டின் பின்பு  இஸ்லாமிய சுல்தான்கள்,  பலம் பெற்றதும்,  ஜாவாவின் இந்து ராச்சியம் சுருங்கி நலிவடைகிறது.

அதன்பின்பு ஐரோப்பியர்களின்  ஆட்சி ஜாவாவில் நடக்கும் காலத்தில்,  அவர்கள் 19 ஆம்  நூற்றாண்டுவரை  அவரகள் பாலியைப் பொருட்படுத்தவில்லை.  அதனால் பாலி தொடர்ந்து சுதந்திரமாக  இயங்குகிறது.   19  ஆம் நூற்றாண்டில் பல படையெடுப்புகளின்  இறுதியில் பாலியும் டச்சுக்காரரின்  ஆட்சியின் கீழ் வருகிறது . இது இலகுவாக நடக்கவில்லை.  ஐந்து முறை படையெடுத்தார்கள் . அதைவிட டச்சுக்காரருக்கு எதிராகப் பாலியில் தற்கொலைப் போரை நடத்தினார்கள்.  ஒரு முறை 400 பேர் தற்கொலை செய்ததாக வரலாறு சொல்கிறது. 

இரண்டாம் உலக  யுத்தத்தின் பின்பு இந்தோனேசிய தீபகற்பத்தில் (85 வீதமான இஸ்லாமியர்கள்) ஒன்றாக பாலி இருந்த போதிலும்,  தொடர்ந்தும்  தனித்தன்மையை பேணுவது ஆச்சரியமான விடயம் .

இஸலாமிய வருகையால் ஜாவாவிலிருந்து,  பாலித்தீவிற்கு  குடியேறிய  இந்து  மக்கள்( பிராமணர், அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பதவி வகித்தவர்கள்)   ஆரம்பத்திலே இந்த அகொங் மலையடிவாரத்தில் குடியிருந்தார்கள். அவர்கள் பல காலமாக உள்ளுர்வாசிகளோடு ஒன்றாக கலக்கவில்லை என வரலாறு கூறுகிறது.  தாங்கள் இருந்த மலையைத் தெய்வமாக வழிபடும் அவர்கள்,  அதன் அடிவாரத்தில் மும்மூர்த்திகளுக்குக் கோவில் கட்டுகிறார்கள்.

இந்தக்  கோவிலிலிருந்து எரிமலையை நோக்கி, கோவிலின் முன்பக்கத்தில் வாசல் கட்டப்பட்டுள்ளது.  இந்த வாசலிலிருந்து பார்க்கும்போது மலையைத் தழுவிய மேகங்கள் தெரியும் . இதைச் சொர்க்கத்தின் வாசல் (Heaven Gate) என்பார்கள்.  

உல்லாசப் பிரயாணிகள் இந்த வாசலில் நின்று படமெடுப்பதற்குப் பல மணி நேரம் வரிசையில்  காத்திருப்பார்கள்.    நாங்கள் இங்கு சென்றபோது,   படம் எடுக்க   மூன்று மணிநேரம் காத்திருக்கவேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் காத்திருக்காமல்  திரும்பி வந்தோம்.  கீழே வந்து  வேறு ஒரு இடத்தில் நின்று  அந்த மலை காட்சியை படமெடுப்பதற்குப் பணம் கேட்டார்கள். அவ்வாறு  படமெடுக்கும்போது கெமராவின் கீழே கண்ணாடியை வைத்து எடுத்தால்,  அதன்  தெறிப்பால்  வானம் கீழேயும் தெரியும் .

இங்கு நின்று படம் எடுப்பதற்கும் மேலே செல்வதற்கும்  உல்லாசப் பிரயாணிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள். அதேவேளையில் கோவிலின் உட்பகுதிக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதை விடப் பாலியில் நெருப்பைப் பொங்கும் இன்னுமொன்று  பட்டுர் எரிமலை  (Mount Batur).  அதற்கு நாங்கள் சென்றபோது மழையும் காற்றுமாக மேகம் மூடியிருந்தது  .

எரிமலைகளின்  அடிவாரத்தில்  இயற்கையில் நெருக்கடிகளுடன் வாழும் பாலியின்  மக்களிடம்,   உறுதியான  தெய்வ பக்தியும் எரிமலைகளைத் தெய்வமாக வணங்கும் இயல்பும் இருப்பது இயற்கையானதே.

திரும்பி வரும்வழியில் பார்த்த  ஒரு சிலை என்னை  சிந்திக்கவைத்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிலை வைத்து சூரியனை ஆண் தெய்வமாகவும் சந்திரனைப் பெண் தெய்வமாகவும் உருவகித்திருக்கிறார்கள் .   அவர்களை தங்களது விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு  உதவும் தெய்வங்களாகவும்,  சமூகத்தில் அமைதியை  உருவாக்குபவர்களாகவும்  நினைக்கிறார்கள். கிரேக்கர்கள்,   விவசாயத்தின் தெய்வமாக டியனிசிஸை  (Dionysus) வழிபடுவதுதான்  எனது நினைவுக்கு வந்தது.

வழிபாட்டுத் தலத்திற்குள் போகும்போது பெண்கள் கால்களையும் ஆண்கள் தோளையும் துணியால் மறைப்பதும்,  எவரையும் உட்பிரகாரத்துள் அனுமதிக்க  மறுப்பதும் , வீடுகளில் கோவில்கள் அமைப்பதும் வித்தியாசமானவை.

பாலியில் மாமிசம் புசிப்பது தடுக்கப்படவில்லை .   பாலியில் இந்து மதம் , மத்தியகாலத்தில் இந்தியாவிலிருந்து அகத்தியர்,  மார்க்கண்டேயர் போன்றவர்களால் பரப்பப்பட்டது என்ற தொன்மக் கதை   இருந்தபோதிலும் , பாலியின் ஆதிக்குடிகளது நம்பிக்கைகள்,  வழிபாட்டு முறைகளுடன் கலந்து மிகவும் இறுக்கமான புதிய வடிவமாகத்  தெரிகிறது.

பாலியில் நான் பார்த்த  மற்றைய அழகான கோவில்  தனா லாட்           ( Tanah Lot temple) . பாறைகளில் செதுக்கப்பட்டு  கடலுக்குள் உள்ளது.  அது கடலின் தெய்வமாக 400 வருடங்களுக்கு  முன்னர் கட்டப்பட்டது. இந்த கடற்பாறை  அழிந்துபோகும் நிலையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் கோவிலை,   நச்சரவம் காப்பதாகவும்,  இந்தக் கோவில்,  மீனவ மக்களை பாதுகாப்பதாகவும் நம்பிக்கை உள்ளது .

இப்படியான தொன்மம் பாலிக்கு மட்டுமல்ல எனது தந்தையின் ஊரான நயினாதீவிலும்  இப்படி  நாகப்பாம்பு வந்து நாகபூசணி அம்மன் கோவிலைப் பாதுகாப்பதாக   நம்பிக்கை உள்ளது.  மேலும் அந்த பாம்பைக் கருடன்  துரத்தியதால் கல்லொன்றில்  மறைந்தது எனவும்,  கருடனும் கல்லொன்றில் அமர்ந்து இளைப்பாறியதாகவும் சொல்லப்பட்டு  , பாம்பும் கருடனும் இருந்த கற்கள் என அவற்றை  எனது சிறு வயதில் உறவினர்கள் இரண்டு பாறைகளைக் கடலுக்குள் காட்டினார்கள் .

இடங்கள் மாறுபட்டபோதும் மக்களுக்கு எப்பொழுதும் தொன்மையான கதைகள் வேண்டும்.  அந்த தொன்மையிலிருந்து சமூகம் தன்னை இறுகப்பற்றியபடி வளர்த்துக்கொள்கிறது.  அது நயினாதீவாக இருந்தாலும் பாலியாக இருந்தாலும் ஒன்றே.

டச்சுக் காலனியில் இருந்தபோது பாலி ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக உருவாகி,  தற்பொழுது நூறு வருடங்கள் மேலாக இருந்தபோதிலும் தொடர்ச்சியாக கலாச்சாரத்தை பேணுவதும் கடினமான காரியம் . போதை வஸ்துக்கள் , விபசாரம் போன்றவை எப்பொழுதும் உல்லாசப்பணத்துறையின் கூட்டாளிகள்.  அவை பாலியில் இல்லையென்று சொல்ல முடியாத போதிலும் கவனமாகத் தடுக்கப்படுகிறது.

தற்போதுள்ள இந்தோனேசிய ஆட்சியை எல்லோரும் பாராட்டுவதை  என்னால் கேட்க முடிந்தது.  கார் சாரதிகள்,  தங்களிடம்  பத்து வருடங்களாக பொலிஸ் லஞ்சம் கேட்பதில்லை என்று சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை . ஒருவருக்குமேல்,   இருவர் சொன்னபோது நம்பாது இருக்கவும் முடியவில்லை.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.