பிறந்தநாளில் பாலித்தீவு

இம்முறை எனது பிறந்ததினம்  பாலித் தீவில் கழிந்தது. அந்த நாளில் நடந்த சம்பவத்துடன் தொடங்குவது நல்லது என நினைக்கிறேன்.

அழகான கடற்கரையோரத்திலுள்ள பாறையில் செதுக்கப்பட்ட  பாலியின் பிரசித்தி பெற்ற, ஆயிரம்  வருடங்கள் பழமை வாய்ந்த உலுவத்து கோவிலின்  (Uluwatu Temple)  படிகள் மீது  அந்தி சாயும்  நேரத்தில், மெதுவாகச் சுற்று வட்டாரத்தையும் அங்குவரும் மக்களையும் பார்த்து ரசித்தபடி என்னை மறந்து  ஏறிக்கொண்டிருந்தேன்.

எதிர்பாராமல்  எனது தோளில் எனது ஆறு வயதுப் பேரன் பாய்ந்தது போன்ற உணர்வோடு  குனிந்து தடுமாறி,   தள்ளாடியபடி  அந்தப் படிகளில் மெதுவாகச் சரிந்த என்னை,  ஒரு உயரமான வட இந்திய இளைஞன் தனது பலமான கைகளால் பிடித்துக் கொண்டான்.

எனக்கு  வந்த  அதிர்ச்சியில் அவனுக்கு நான் நன்றி  சொல்ல சில விநாடிகள் எடுத்தது. என் பின்னாலே தொடர்ந்து வந்த மனைவி அவனுக்கு நன்றி சொல்லியவாறு  என்னைப் பிடித்தார்.

 நான் என்னைச் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து நின்று,   தோளில் தொங்கிய கெமராவை தடவிப் பார்த்தேன்.  நல்லவேளை கெமராவிற்கு  ஏதும் நேரவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.  ஆனால்,  எனது கண்களைச்  சுற்றிப் பார்த்தபோது ஆகாயம் மங்கலாகத் தெரிந்தது. மாலை நேரமானாலும் அந்தி சாயவில்லை . மேல்நோக்கி ஏறிட்டுப் பார்த்தபோது,  படிக்கருகே உள்ள சுவரில் எனது மூக்குக் கண்ணாடி ஒரு சாம்பல் நிற  குரங்கின் வாயிலிருந்தது .

  “ குரங்கு கண்ணாடியை எடுத்தது தெரியவில்லையா?  “   என்ற மனைவியின் குரலுடன்  உடன் வந்த எனது நண்பனின் நகைச்சுவையான சிரிப்பும் தொடர்ந்தது.

வாட்டசாட்டமான அல்பா ஆண் குரங்கு . அந்தக் குரங்கின் திடீரென்ற  கொரில்லாத் தாக்குதலும் அது எடுத்த வேகமும்  என்னை ஆச்சரியப்படவைத்தாலும்,  எப்படி  அந்தக் கண்ணாடியை அக்குரங்கிடமிருந்து வாங்குவது என்ற எண்ணமே  மேலோங்கியிருந்தது .

அது என்னைப் பார்த்து,   ஏளனமான சிரிப்புடன் கண்ணாடியின் காதில் சொருகும் பகுதியைப் பற்களால் கடித்தது.  அதை எல்லாரும் வேடிக்கை பார்த்தார்கள். அப்போது  அதற்குக் கொடுக்க என்னிடமும் எந்த உணவும் இருக்கவில்லை. எட்டிப் பறிக்கவும் முடியாது.  

கழுத்தில் அடையாள அட்டை தொங்கும் பாலி இளைஞர் வந்து தன்னிடமிருந்த வாழைப்பழத்தை குரங்கை நோக்கி எறிய அது கண்ணாடியை நிலத்தில் போட்டது . எடுத்துப் பார்த்தேன்.  பற்களால் கடித்த அடையாளமிருந்தது. நல்ல வேளையாகக் கண்ணாடி உடையவில்லை.

என்னை விழாது பிடித்த இந்திய இளைஞனுக்கு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து நன்றி சொன்னேன். அவன் அதற்கு   “ இது கோயில்.  அதனால் எப்பொழுதும் நன்மை நடக்கும்   “ எனத் தத்துவார்த்தமாகச்  சொல்லிச் சென்றான்.

மனைவி,   “ கடவுள் நம்பிக்கையில்லாதவர்களுக்கும் கோவிலில் நல்லதே நடக்கும்.  “  என எனது நம்பிக்கையின்மையைக் குத்திக்கிழிக்கத்  தவறவில்லை.

பாலிக்கு  தற்பொழுது வருபவர்களில் இந்தியர்களே அதிகம்.  அதிலும் இளைய வயதானவர்கள் அதிகம்.  சீனர்கள் கொரோனாவால்  வெளியேறுவது தடை செய்யப்பட்ட காலம். ஐரோப்பியர்கள் அதிகமில்லை . கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியர்களும் இந்தியர்களுமே தற்போதைய தங்களது உஞ்சவிருத்திக்கு உதவும் உல்லாசப்பிரயாணிகள் என கார் சாரதிகள்  சொல்லக் கேட்டேன்.

கோவிலின் உள்ளே செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது என்பதால்,  எல்லோரும் கோவிலின் சுற்றுப்புறத்தையே பார்க்க முடியும். மேற்கு கடற்கரையின்   பாறைகளின் ஓரத்தில்  அமைந்துள்ள ஆதிகால கடல்த் தெய்வமான சிவனது  கோவிலிது . ( புர சேகர – Pura Segara –  என்பது  சமஸ்கிருத மொழியில் கடற்கோவில் ) பாலியிலும்   இந்தோனேசியாவிலும்  அதிகமாகச் சமஸ்கிருதம் பாவிக்கிறார்கள்.  இந்தக்  கோவில், மாலை நேரத்தின் ஒளியோவியத்தின் பின்னணியில் நீலக்கடல் பசுமையான மரங்கள் என  கண்களுக்கு விருந்தான தரிசனம்  .

சமுத்திரத்தின் கீழுள்ள எரிமலைகளின் சீற்றத்தால் உருவாகிய பாலியில் கடல் , மலை,  எரிமலை , அருவிகள் ஆறுகள் எல்லாம் ஆரம்பத்தில் தெய்வங்களாக    வணங்கப்பட்டன. பிற்காலத்தில் அவை இந்து மதத்துடன் ஒன்றாகக் கலந்து (ஹைபிரிட்- Hybrid))  புனிதமாகிவிட்டது .

கோவிலிலிருந்து திரும்பி வரும்போது,  வேறு ஒரு பெண்ணின் கருப்பு கண்ணடியைக் குரங்கொன்று பறித்தபோது,  அதற்கும்  பழம் கிடைத்ததும்  திருப்பிக்  கொடுத்தது . இங்குள்ள குரங்குகள் இப்படி கோவிலுக்கு வருபவர்களின்  கண்ணாடி,   கெமரா , கைப்பை என்பவற்றைப் பறிப்பதும்,  அவைகளைப்பெற  பழங்களைக் கொடுப்பதுமான பண்டமாற்று  பழக்கத்திற்கு அவை வந்துள்ளன. அத்துடன் எமது அரசியல்வாதிகளை நினைக்க வைத்தன.     98.2 % வீதமான எமது  டி என் ஏ யை அவை கொண்டுள்ளதால் அவை எம்மைப்போல் நடப்பது ஆச்சரியமில்லை என்ற சிந்தனை ஏற்பட்டது .

கருடாழ்வாருக்கு மிகப் பெரிய செப்புச் சிலையைத் திறந்து வைத்து அத்துடன் கலாச்சார மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த மண்டபத்தில் மோடி அரசால் திறக்கப்பட்ட உயரமான வல்லபாய் பட்டேலது சிலையையும் வைத்து ஒப்பிடுகிறார்கள் .

 அதைப் பார்த்தபின்பு  இந்து மதத்தை,   வருவாய் பண்டமாக உல்லாசப் பிரயாணத்துறையில் பாவிக்கிறார்கள் என நினைத்தேன். மதங்களை அரசியலுக்கும் மற்ற மதத்தினர்மீது வெறுப்பை உருவாக்கவும்  பாவிக்கும் காலத்தில்  மக்களது பொருளாதாரத்திற்குப் பாவிப்பதில் என்ன தவறு?  என எனது  மனது  சமாதானமாகியது.

எனது கார்ச்  சாரதி என்னிடம்,   “  ஏன் இந்தியாவின் மனிதர்களுக்குப் பெரிய  சிலை வைக்கிறார்கள் . நாங்கள் கடவுளுக்கு மட்டுமே வைப்போம்.   “  என்றபோது எனக்கு அந்தக்கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை .  ஒரு காலத்தில் இந்து மதத்தில் மட்டுமல்ல,  பல மதங்களில் கோவில்களது கோபுரங்கள்  மசூதிகளது மினரட்டின்  உயரத்தை விட அதிகமான உயரத்தில் வீடுகளே கட்டக்கூடாது என்ற விதியிருந்தது.

பல அரசர்கள் ஆட்சி செய்த  இந்தியாவை இணைத்தவர் வல்லபாய் பட்டேல்என்பதால் என்ற எனது பதில் அந்த பாலி சாரதிக்குத் திருப்தியாகவில்லை என்பது  அவரது முகத்தில் தெரிந்தது .

1987 இல் அவுஸ்திரேலியா வந்த பின்னர்  எங்கள் குடும்பத்தின் முதல் வெளிநாட்டு பயணம் பாலியே. கிட்டத்தட்ட 25 வருடங்கள் இருக்கும் . அக்காலத்தில் பார்த்த பல விடயங்கள் மனதிலிருந்து விலகிவிட்டன . அவுஸ்திரேலிய பணத்திற்கு கை நிறையக் கட்டுக்கட்டாக  பணம் ( 10000 ருபியா – 1 அவுஸ்திரேலிய  டொலர்)  தந்து,  இந்தியாவிருந்து வந்தேனா என ஆவலுடன்  அவர்கள் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.

அக்காலத்தில் குட்டா (Kuta) என்ற பகுதியில் தங்கினோம்.  அதுவே பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் தங்குமிடம். அவுஸ்திரேலியர்கள் பாலி என்ற இடத்தை மட்டுமே தெரிந்தவர்கள்.  பலருக்கு இந்தோனேசியாவின தலைநகரத்தின் பெயர் தெரியாது. பாலியில் மிகவும் விசேடமான உணவு சுட்ட குட்டிப் பன்றி.  எந்தக் கடைகளிலும் பியர் , விஸ்கி கிடைக்கும். இந்தோனேசியாவின் மற்றைய பகுதிகளில் உணவு விடுதிகளில் கோழியிலே,  சொசேஜ் பேக்கன் என்பன தயாரிக்கப்படும். மது  கிடைக்காது.

2002ல்  குட்டா இரவு விடுதியில் நடந்த  குண்டுத் தாக்குதலில்  202  பேர் இறந்தார்கள் 209 பேர் காயமடைந்தார்கள். இறந்தவர்களில் 88 பேர் அவுஸ்திரேலியர்கள். அவுஸ்திரேலிய – இந்தோனேசிய  உறவில் பூகம்பம் வெடித்த சம்பவமாக இது வரலாற்றில் குறிக்கப்பட்டது.

இஸ்லாமிய மதத் தலைவர் (Jemaah Islamiyah) ஒருவரின் தலைமையில் நடத்தப்பட்ட  இந்தக் குண்டு வெடிப்பு அவுஸ்திரேலியர்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது மட்டுமல்லாமல்   இந்தோனேசியர்களையும் அதிர வைத்தது.

உலகத்திலே மிகவும் மிதமான இஸ்லாமியர்கள் வாழுமிடம் இந்தோனேசியாவே என்பது எனது கருத்து . இந்தோனேசிய பாதுகாப்புத் துறையினர்  இந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை உடனே கண்டுபிடித்தார்கள்.  ஆனால்,  பாலித்தீவின்   அமைதிக்கு   அதுவரை காலமாக இருந்த நற்பெயர் அழிந்தது . பலருக்கும் வேலையற்றுப் போய்விட்டது. மீண்டும் பாலி எழுந்து நடந்து வர பல வருடங்கள்  எடுத்தது. மீண்டும் கொரோனாவால் அது தடைப்பட்டது.

  குண்டு வெடிப்பு நடந்த  அந்த இரவு விடுதியில் பரிசாரகராக வேலை செய்தவர்  பல நாட்கள் எங்களுக்கு வாகன சாரதியாக இருந்தார்.  அவர் மூலம் பல விடயங்கள் தெரியவந்தது. 

இந்த நேரத்தில் மேற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஃபியோனா வூட் (Fiona Melanie Wood) பிளாஸ்ரிக் சேர்ஜனையும்  நாம் நினைக்கவேண்டும். குண்டு வெடிப்பில் பல அவுஸ்திரேலியர்கள் தோல்கள் கருகியபடி உயிர்  தப்பினார்கள். அவர்களை குணப்படுத்துவதும்    எரிகாயமுற்ற    தோலுக்கு   சிகிச்சையளிப்பதும் கடினமான வேலையாக இருந்தது .

அக்காலத்தில்  தொழில்நுட்ப முறையில் தோல் இழையங்களை வளர்த்தெடுத்து,  அதை மீண்டும் பொருத்தக் குறைந்தது மூன்று  கிழமைகளாகும் .   ஆனால்,  பேராசிரியர் ஃபியோனா வூட் விசேடமான முறையில் தோல் கலங்களை உருவாக்கி,  தோலில் ஸ்பிறே பண்ணுவதன் மூலம் விரைவாக புதிய தோலை உருவாக்கும் முறையைக் கண்டு பிடித்தார். அதற்காக அவர் அவுஸ்திரேலிய அரசால் (Australian of the year) கவுரவிக்கப்பட்டார்.

சில துரதிஷ்டமான விடயங்கள் நன்மையான புதிய விடயங்களுக்கு வழிவகுத்துள்ளது  என்பதற்கு இந்த பாலி குண்டுவெடிப்பும் உதாரணம் .

இம்முறை  எமது பயணத்தில் நாங்கள் குண்டு வெடிப்பு நடந்த அந்தப் பகுதியைத் தவிர்த்து வேறு இடத்தில் தங்கியபோதும்,   இங்குள்ள விடுதியில் வாகனங்களுக்கு இலங்கையின் போர்க்காலம் போன்று,  வாகனத்தின் கீழ் கண்ணாடி வைத்து பார்ப்பது,  கார் இலக்கங்களை மற்றும் சாரதிகளின் பெயர்களை பதிவுசெய்வது   என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தன . மேலும் நாங்கள் இருந்த பகுதி 2022  இல்  G 20 நாடுகளின் மகாநாடு நடந்த பகுதிக்கு அருகாமையில் இருந்தமையால்  பலமான பாதுகாப்பு இருந்தது.

இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்பு போனபோதும் நத்தார் – புத்தாண்டு  விடுமுறைக்காலம். ஆனால் , அப்போது  இருந்த பாலி இப்போது பல விதத்தில் மாறியிருந்து. இப்பொழுது  பெரிய நட்சத்திர விடுதிகள், நெடுஞ்சாலை என்பதுடன்  போக்குவரத்து நெருக்கடிகள்  வாகனங்களை   திணற வைத்தது.

பாலித் தீவின் வெளித்தோற்றங்கள் மாறியபோதிலும்,  பாலி மக்களில் மாற்றமில்லை.  மிகவும் இறுக்கமான இந்து கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். மாணவர்கள், பாடசாலைகளில் பத்தாம் வகுப்பு வரையில் காயத்திரி மந்திரம் சொல்கிறார்கள்  என்றால் பாருங்கள். கோவில்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.  அதைவிட குடும்ப கோவில்கள்,  கிராமக் கோவில்கள்,   நகரக் கோவில்கள் எனப் பல உண்டு . காலையில் கடவுளுக்கு அர்ப்பணிப்பு செய்த படையலை  பாதையோரத்தில் வைப்பார்கள் . கவனமாக அவற்றை மிதிக்காது நடக்கவேண்டும்.

இஸ்லாமிய மதத்தை மட்டுமல்ல,  காலனி ஆதிகத்திலிருந்தபோது டச்சுக்காரர்கள் கிறீஸ்தவ மத மாற்றம் செய்ய முயன்றதையும் பலமாக எதிர்த்தார்கள்.

பாலியில் உள்ள இந்து மதம்,  புதைந்திருந்த ஆதிகாலத்துப் பொருளை மியூசியத்தில் வைத்திருப்பது போன்றது என நான் சொல்லவில்லை . பிரபலமான இந்திய வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.

எப்படி அந்த முடிவுக்கு வந்தார்?

மத்திய காலத்தில் யாவா தீவிலிருந்தது  இந்து மதம்.   11 ஆம் நூற்றாண்டுவரை யாவா இந்து இராச்சியமாக( Majapahit Kingdom) இருந்து இஸ்லாமாக மாறும்போது,  அங்கிருந்த  சமூகத்தின் முக்கியமானவர்கள் , அரச பிரதானிகள்,  பிராமணர்கள் என்போர் பாலித் தீவுக்கு  இடம் பெயரும்போது தங்கள் மதத்தை மட்டுமல்ல கலாச்சாரத்தையும் எடுத்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்கிறார்கள்.   அதுவரையிலும் பாலியில் முறையான அரசு இருக்கவில்லை. அங்கு இருந்த மதம் என்பது முனனோர்களை வணங்குவதே . இந்து மதம் வந்ததும்  சமூகம் ஒழுங்கமைப்பு பெறுவதுடன் புதிய அரச குலம் உருவாகிறது.

பாலியில் உள்ள இந்து  சம்பிரதாயங்கள் –  கலாச்சாரங்கள் அதிக மாற்றமின்றி மத்திய காலத்தில் இருப்பதால்,  அவர்களுக்கு தற்போதைய இந்தியாவின் இந்து கலாச்சாரம் வியப்பாக இருக்கலாம்.  அத்துடன் பாலி,  87 வீதமான இஸ்லாமியர்கள் வாழும் இந்தோனேசியா நாட்டில்  தனித்தன்மை     ( Exotic) இருக்கிறது.

அவர்களது சிற்பம்,  கலை,  ஓவியம்,  நடனம் , சங்கீதம் என்பவற்றை ரசிப்பதற்கு வெளிநாட்டிலிருந்து மட்டுமல்ல இந்தோனேசியாவின் பல பகுதியிலிருந்து பாலிக்கு விடுமுறையாக வருகிறார்கள் . அவர்களுக்கு தங்களது ஊரில் அழிந்து போனதைப்  பார்க்கவும் செய்ய முடியாதவற்றை இங்கு செய்யவும் பாலி ஒரு சொர்க்கபுரியாக உள்ளது.

நாங்கள்போன காலத்தில் பாலியின் தெருவெங்கும் பென்ஸ் , அவ்டி மற்றும் BMW கார்கள் நிறைந்திருந்தன . அதைப்பற்றிக் கேட்டபோது  எங்கள் சாரதி அவர்கள் சுரபாயா  யாகார்த்தா மற்றும் பாண்டுங் போன்ற நகரங்களிலிருந்து  கட்டுமரம் போன்றவற்றில்  கார்;களைக்கொண்டு வந்தவர்கள் என்றார்..

நன்றி https://wowtam.com

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.