சிறுகதைத் தொகுப்பு  ஒப்பாரிக்கோச்சி.

எழுத்தாளர் மு.சிவலிங்கம் பல வருடங்களுக்கு  முன்பு தனது ஒப்பாரிக்கோச்சி சிறுகதைத் தொகுப்பினை எனக்குத் தந்திருந்தார்.

ஏதோ காரணத்தால்  இந்தப் புத்தகம்,     சிறுவயதில் தொலைத்த சில்லறைக் காசாக நழுவிவிட்டது . புதிய வீடு மாறியபோது மீண்டும் கையில் கிடைத்தது,  இம்முறை  வெளிநாட்டுப் பயணத்தின்போது எடுத்துச் சென்றேன்.  முழுக்கதைகளைப்  படித்ததும்,  இதுவரையில் ஏற்கனவே படித்த  பல கதைகளில் நான் காணாத,  அல்லது காணத் தவறிய   மலையக மக்களின் வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தை எழுத்தாளர் சிவலிங்கத்தின்  கதைகளில் என்னால் காணமுடிந்தது.

கதைகள், கார் கதவைத் தொடும்போது ஏற்படும் ஸ்ரரிக்  மின் அதிர்வை மனதில் ஏற்படுத்தியது. அவை  புனைவற்ற சிறுகதைகள்.  பச்சைப் பசுமையான மலையகம்,  தடிப்பான துயரத்தில் நெய்யப்பட்ட    கரும் பாயாக விரிந்தது.  மனதில் படபடத்தது.

84  ஆம் ஆண்டுகளில் நூவரெலியா நகரத்தின்  அருகே இறாகலையில் உள்ள சூரிய காந்தி தோட்டத்தின் மத்தியிலுள்ள அரச மிருக வைத்தியசாலையில்   நான் ஆறு மாதம் வேலை செய்த காலத்தை நினைவு கூரவைத்து .  சிறுவயதில் அப்பன் எனக்கு அடித்த முதல் அடி நினைவுக்கு வருவதுபோல்,  மனதை ஈரமாக்கியது.  அக்காலத்தில் சிங்கள கிராம மக்கள்,    தோட்டத் தொழிலாளர்களின்  லயங்களை எரித்த சம்பவமே என்னை நாட்டை விட்டு வெளியேறவைத்தது.  ஒருவிதத்தில் சிங்கள மக்களாலோ அல்லது அரச படைகளாலோ நேரடியாகப் பாதிப்பற்றவனாக நாட்டை விட்டு வெளியேறிய நான்,  மற்றைய இலங்கைத் தமிழர்களிலிருந்து வேறுபடுகிறேன்.  நான்  மலையத்திலிருந்த காலத்தை வைத்து 1988 இல் மக்கள் குரல் என்ற அவுஸ்திரேலிய கையெழுத்து சஞ்சிகையில் எழுதியதே எனது முதல் ஆங்கில கட்டுரை. அது இன்னமும் விக்கிப்பீடியாவில் உள்ளது.

பிற்காலத்தில் இலங்கை சென்ற போது, நான் கண்ட  மலையக மக்களின் வாழ்வு நிலைமைகள்  பல மடங்கு முன்னேறியிருந்தாலும்,  காணி அற்ற நிலைமை நிழலாகத் தொடர்கிறது.  மற்றைய இலங்கையின் பகுதிகளில் நடந்த  நகரமயமாக்கல்,  அட்டை  வேகத்தில் மலையகத்தில்  ஊர்கிறது. இதனால் தொழிலாளர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நிலையற்ற தன்மையுடன் மலப்புழுக்களாக நெளிவதை  எழுத்தாளர் மு சிவலிங்கம்  பல  கதைகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஏனைய எழுத்தாளர்களைப்போன்று  மலையக மக்கள் பாதிப்படைவதற்கு அரசும்  தொழிற்சங்கத் தலைவர்களும்தான்  முற்றிலும் பொறுப்பு என்று காண்பிக்காது,  மலையக மக்களது  மனநிலைகளும்   அதற்குக் காரணம் என்பதை  ‘பல்லுப்பெருமாள்’ சிறுகதை மூலம் எழுத்தாளர் தெளிவாகக் காட்டுகிறார்.

தோட்டத்தில் ஒரு ஏக்கர் காணி கொடுத்தபோது அதை வாங்காது வயதான கிழவியொருத்தியின் காம்பரா லயத்துக்காகச் சண்டை போடுவதும், பின்பு சிங்கள தொழிலாளிக்கு அந்த காணி போனபோது மனமுவந்து அங்கு தோட்ட வேலை செய்வதுமான கதையாக ‘ பல்லுப் பெருமாள் ‘  கதை வருகிறது . இந்தக் கதை  நகைச்சுவை சொட்டும் வகையில்  எழுதப்பட்டுள்ளது.

பல கதைகள் மக்களைச்  சுரண்டும்  தொழிற்சங்கத் தலைவர்கள் பற்றியது. ஆடுகள் கூட சிறந்த மேய்ப்பனைத் தேடும்போது,  நமது வட- கிழக்கு  தமிழினம் தொடர்ச்சியாகக் கையாலாகாத  தலைவர்களை தேர்ந்தெடுப்பதுபோல்,  மலையக தொழிற்சங்க வாதிகளும் மக்களை ஏமாற்றுபவர்கள் எனத் தெளிவாகக் காட்டுகிறார்.

சிறுகதைகளின் கருக்கள்,   பிரித்தானியர்கள் காலத்திலிருந்த நிலையிலிருந்து நிகழ்காலம் வரையும் தொடர்கின்றன .

முதற்கதையான  ‘ஒப்பாரிக் கோச்சி’ ,  சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தில் நாடற்றவர்களாக வலுக்கட்டாயமாக அனுப்பப்படுபவனது நெருக்கடி நிலையைச் சொல்கிறது . இரண்டாவது கதை,  தோட்டப் பாடசாலைகளை, தனி ஆசிரியர்களாக ஐந்து வகுப்புகளைக்  கட்டி  இழுக்கும் பரிதாப நிலையை காட்டி ,  எப்படி தோட்டப் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன  என்பதை புரியவைக்கிறது. பல கதைகள் சுகாதார,  மருத்துவ நிலையங்களின்  பற்றாக்குறை  பற்றியது. அதைவிட ஒரு கதை  மலையக  சிறுவர்கள்,  கொழும்பிலிருக்கும்  செல்வந்தர் வீடுகளில்,  பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக  நமக்குக் காட்டுகிறது .

மொத்தத்தில்,   நீண்ட  காலமாக  நீரிழிவு  உபாதையால் பாதிக்கப்பட்டு,  அதனைப்  புறக்கணித்து விட்டவனை பார்க்கும் மருத்துவர்,  இறுதியில்  அவனது சிறு நீரகம்,  கண்கள்,  இதயம் ,  கல்லீரல் எல்லாம் பழுதாகி இருப்பதாகவும்   அத்துடன் அவனது  கால் நரம்புகள் வேலை செய்யாது,  விரல்கள் மரத்தோ அழுகியோ போய்விடும்  எனச்சொல்து போன்ற காட்சியை இந்தக் கதைகளை வாசித்து முடிக்கும்போது நாம் எமது  மனக்கண்ணில் தரிசிக்க முடியும்.

கதைகளைப் படிக்கும்போது வேறு ஒரு எண்ணமும் ஏற்பட்டது. கதை சொல்லல்  என்பது நேரடியாக முகத்தில் ஒருவர் நிமிர்ந்து காறித்துப்புவது போன்றிருந்தது . அதாவது குற்றவியல் மருத்துவர் பிரேதப் பரிசோதனையில் கத்தியால் கீறிக்காட்டுவதுபோன்ற தன்மை இங்கு தெரிகிறது.

வாசிப்பவரின்  கற்பனைக்கோ ஒளிவு மறைவுகளுக்கோ கதையாசிரியர் இடம் கொடுக்காதது ஒரு குறைபாடு என இங்கு  கூறமுடியாது . ஏனென்றால் நமது விமர்சகர்கள்,   “   தெளிவாகக் கூறவேண்டும் . அல்லது நேரடியாகச் சொல்லவில்லை  “  என்பார்கள்.

ஜோன்  ஹேசி (John Richard Hersey )  ‘ஹிரோஷிமா’  நாவலில் , அமெரிக்கா  போட்ட அணுக்குண்டால் ஏற்பட்ட விளைவுகளைச் சித்திரிப்பார் .  குண்டு வெடிப்பின் விளைவுகள்,  எப்படி புயலாக உருவாகி,  தீயாகப் பரவி மக்களைக் கருக்கியது என்பதோடு இளம்பெண்களது தோல்கள் கருகியதையும்  விவரிப்பார்.   ஒரு பத்திரிகையாளராகச்  சென்று  இப்படியான உண்மை நிகழ்வுகளை நாவலாக்கியுள்ளார்.  இதனால் வாசகர்களுக்கு  அதிர்வுகள் ஏற்படும் .

இப்படியான நேரடியான கதை சொல்லல் உத்தி  செய்தியாளர்களால் போர் முனைக்கதைகள்  சொல்லப் பயன்படுகிறது. தற்போது உக்ரேய்ன் போர்முனையில் நடப்பதை விவரிக்கும்   பிபிசி மற்றும் சி என் என் போன்றவை,  கேட்பவர்களது மூளையைச் சலவை செய்யும் உத்தியாகப்  இந்தப் போர்முனையை  பாவிக்கின்றன.

இவை புதியதல்ல,  ஏற்கனவே உள்ளதுதான்.   முன்பாக நேச்சுரலிசத்தோடு  எழுதியவர்களான பிரான்சிய எழுத்தாளர்கள்  எமிலி ஷோலா ,  மாப்பசான் போன்றவர்கள்    இத்தகைய  எழுத்தைப் பாவித்தார்கள். இவர்களது கதாபாத்திரங்களின்  வாழ்வை அவர்கள் வாழும் சூழ்நிலை தீர்மானிக்கிறது என்பதோடு,  துருக்கிய  கோப்பிபோல் கசப்பான எழுத்தாக இருக்கும் . 

இப்படியான எழுத்துகள் தமிழில் அதிகமில்லை. தமிழ்நாட்டு  எழுத்தாளர் இமையம் மட்டும் இதைத் தனது முக்கிய எழுத்தாகப்           ( Genre) பாவிக்கிறார்.  இவரது எழுத்துகளிலும் இப்படியான கசப்பான தன்மை வார்த்தைகளில் வந்து நமது மனதில் தங்கி நிற்கும்.

புத்தகத்தைப் படித்து  முடித்தால்   நாக்கில் பட்ட கசப்பான மாத்திரையின் உணர்வுபோல்  தேங்கி இருக்கும். மு. சிவலிங்கத்தின்  ஓப்பாரிக்கோச்சியிலும் அப்படியான கசப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

நன்றி : http://www.thayagam.com/…/02/Apaththam-second-issue1.pdf

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.