‘சர்வதேச மகளிர் தினம் 2021’

By Vajna Rafeek at ATLAS IWD 2021

இந்த வருடத்து மகளிர் தினத்திற்கான பிரச்சார கருப்பொருள்

Choose to challenge

Women in leadership – achieving an equal future in COID-19 world!

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது!

தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலைகளிலும்  நிறைந்திருக்கிறார்கள் பெண்கள்.

பல்வேறு துறைகளில், பல சவால்களுக்கு மத்தியில் புகழ் வெளிச்சத்திற்கு வந்த ஏராளமான சாதனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது நாங்கள் எல்லோரும் அறிந்த உண்மை!

அரசியல், சமூக செயல்பாடுகள், பொருளாதார மேம்பாடு, பொழுது போக்கு , விளையாட்டு, தொழில் துறை, விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி என சகல துறைகளிலும் இன்று பெண்களின் பங்களிப்பு மேலோங்கி இருக்கின்றது.

சிகரம் தொடுகின்ற பெண்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் போகுறது!

இவை போற்றிப் புகழப்பட வேண்டிய தருணங்கள் தான்!

அடிமைத் தனத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தால் வேரூன்றி வரும் பெண்கள் மார்ச் 8 மட்டுமல்ல, ஆண்டின் அனைத்து நாட்களிலும் போற்றி பாராட்டப்பட வேண்டியவர்கள்.

1789 ஆம் ஆண்டு French புரட்சியின் போது பெண் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய பல கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் போர்க்கொடி தூக்கினர்.

அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே அன்று பிரதானமாக இருந்தது.

பெண்ணுரிமை போராட்டம் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது.

ஆனாலும் 17ம் நூற்றாண்டில் தொடங்கிய சமத்துவத்துக்கான போராட்டம் இந்த 21 ம் நூற்றாண்டிலும் தோடர்கிறது.

இது வேதனைக்குரிய விடயம்தான்.

இங்கிலாந்தில் வாழ்கின்ற பெண்களின் ஆயுள் காலம் – life expectancy  கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடும்போது 20% வீதத்தால் உயர்ந்துள்ளதாக ஒரு அண்மை கால தரவு கூறுகிறது. இது அவர்களது வாழ்கைத் தரம் உயரந்துள்ளதை பிரதிபலிக்கிறது!

ஆனாலும், இதில் முழுமையாக மகழ்ச்சி அடைய முடியாதுள்ளது!

ஏனென்றால், இங்கிலாந்தில் வாழுகின்ற Black Asian Minority Ethnic Community இன் ஆயுள் காலம் 10% விகிதம் தான் உயரந்துள்ளது.

இங்கேயும் சமத்துவம் இன்மை / inequality வெளிக்காட்டப்படுகிறது !

அபிவிருத்தி அடைந்த நாட்டிலேயே பெண்களுக்கு இந்த நிலை என்றால், அபிவிருத்தி அடையாத, அடைந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் வாழுகின்ற பெண்களின் நிலை கேள்விக் குறியாகின்றதல்லவா?

அடுத்தது, Facing challenges to achieve equal future in Covid -19 world!

இந்த வாசகம் இந்த வருடத்திற்குரிய மகளிர் தினத்திற்கான இன்னுமொரு கருப்பொருள்!

மனிதன் ஒரு சமூகப் பிராணி! Social Animal .

மனிதர்கள் சமூக செயற்பாடுகளில் இருந்து விலகி வீட்டுக்குள் முடக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறைக்குள்  கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் தள்ளப்பட்ட போது அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான் என்பதை தரவுகள் கூறுகின்றன!

இலங்கைப் பெண்,

இங்கிலாந்துப் பெண்,

பாரதப் பெண்,

பாரசீகப் பெண்,

ஆபிரிக்கப் பெண்,

ஆஸ்திரேலியப் பெண்,

அமரிக்கப் பெண்,

அந்தமான் பெண்

வளைகுடாப்  பெண்

வங்காளத்துப் பெண்

எந்த சிங்கப் பெண்ணானாலும் எதிர்நோக்குகின்ற சவால்கள் இந்த COVID -19 உலகில் ஒரே மாதிரியானவைகள் தான்.

சாதாரணமாகவே நெருக்கடிகளின் தாக்கங்கள் ஒருபோதும் பாலின-நடுநிலையானவை அல்ல, மேலும் COVID-19 ஒன்றும் இதற்கு விதிவிலக்கும் அல்ல.

குடும்ப கட்டமைப்புக்கு உட்பட்ட பெண்ணாகட்டும், அல்லது அதற்கு வெளியே உள்ள வாழ்வியல் கட்டமைப்புக்கு உட்பட்ட பெண்ணாகட்டும்,

அவர்கள் முகம்கொடுத்த, கொடுக்கின்ற பிரச்சனைகள், எதிர் கொள்கின்ற  சவால்கள் பாலின சமத்துவமானவை இல்லை என்றே அண்மை கால தரவுகள் மேலும் கூறுகின்றன.

ஒருபோதும் முற்றிலும் எதிர்பாராத, எதிர் கொள்ளாத சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், COVID-19 இன் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியின் தாக்கத்தை பெண்கள்தான் அதிகமாக  தாங்கி வருகின்றனர்.

வறுமை கோட்டிலும், அதற்கு கீழும் உள்ள  பெண்கள்,  COVID-19 பரவல், அதனால் ஏற்படும் இறப்புக்கள், வாழ்வாதார இழப்புகள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கான ஆபத்துகளை எதிர் நோக்குகின்றனர்.

COVID-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல தொழில்களில் பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள்.

உதாரணமாக, உலகில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் அதிகமாக வேலையில் அமர்த்தப் பட்டிருப்பவர்கள் பெண்களே. அவர்கள் வேலைக்கு சென்றால் தான் அவர்கள் வயிற்றுக்கு உணவு!

அவர்களுக்கு COVID-19 பற்றிய பயத்தை விட வேலை இழப்பு பற்றிய பயம் தான் மேலோங்கி நிற்கிறது.

இதுவும் COVID-19 பரவலுக்கும், கட்டுப்படுத்தலில் உள்ள சிரமங்களுக்கும் , உயிரிழப்பு அதிகரிப்பதர்க்கும் காரணமாகின்றது.

பெண்கள் நடத்தும் வணிகங்கள் பாதிக்கப்பட்டன!

வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டனர்!  இதில் 80 சதவீதம் பெண்கள்!

!

  சமத்துவமின்மை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கறது!

COVID-19க்கு முன்பு, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.1 மணிநேரம் சம்பளமில்லாத வேலையைச் செய்தார்கள். ஆண்கள் 1.7 மணிநேரம்தான் செலவிட்டார்கள் – அதாவது பெண்கள் உலகெங்கிலும் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் செய்தார்கள்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆண்களும் பெண்களும் ஊதியம் பெறாத வேலையில் அதிகரிப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் பெண்கள் அந்த வேலையின் பெரும்பகுதியைத் தொடர்ந்து சுமக்கிறார்கள். நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்கள் மீதே விழுகிறது.

உலகளவில், சுமார் 4 Billion மக்களுக்கு பாதுகாப்பாகன சுத்தமான சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. சுமார் 3 Billion பேருக்கு வீட்டில் சுத்தமான நீர் இல்லை. இந்த சூழ்நிலைகளில், பெண்கள் தான் நீர் சேகரிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பிற பணிகளையும் செய்கிறார்கள்.

பொருளாதார பாதுகாப்பின்மை என்பது வேலைகள் மட்டுமல்ல, இன்று வருமான இழப்பும் ஆகும். இது பல ஆண்டுகளாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் பனிப்பந்து விளைவைக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மீதான தாக்கங்கள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன! அவை கவனிக்கப்படாவிட்டால், கடினமாக இதுவரை வென்றெடுத்த பாலின சமத்துவத்தை மீழ மாற்றியமைக்கும் படி ஆகி விடும்.

COVID-19 நெருக்கடியின் முடிவில், 11 Million பெண்கள் பாடசாலையை விட்டு வெளியேறலாம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன; பலர் திரும்பி வரமாட்டார்கள் என முன்னைய நெருக்கடிகளின் சான்றுகள் கூறுகின்றன!

இந்த மாதிரியான கல்வியில் ஏற்படுகின்ற இடைவெளி, பாலின இடைவெளியை விரிவாக்கி,  பெண்கள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

இதில் பதின்ம வயது  கர்ப்பம், மற்றும் குழந்தை திருமண அதிகரிப்பு என்பனவும் இதில் அடங்கும்.

கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை என்பன பாலின அடிப்படையிலான வன்முறைகளை அதிகரிக்கவே செய்யும்.

தொற்றுநோய் குறையும் போது இந்த விளைவுகள் மறைந்து விடாது:

பெண்கள் எல்லா துறைகளிலும் நீண்டகால பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.

நம்மிடையே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு இந்த வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருக்கும். சமீபத்தில் தீவிர வறுமையிலிருந்து தப்பியவர்கள் மீண்டும் அதற்குள் விழுந்து விடுவார்களோ என்ற அச்சம் தலை தூக்குகின்றது!

மீட்பு முயற்சிகள் பெண்களை சென்றடைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சமூகமும் இதில் மும்முரமாக இயங்குகிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தெளிவான பாலின தாக்கங்கள் இருந்தபோதிலும், மீட்பு முயற்சிகள் பெண்கள் மற்றும் சிறுவர்களை மிகவும் தாமதமாகவே சென்றடைகின்றது!

COVID-19 ஐ தொடர்ந்து பாலின சமத்துவம் எப்படி இருக்கப் போகிறது! மீண்டும் கடந்த காலத்தை நோக்கி நகரப் போகிறோமா என்ற அச்சம் எழுகின்றது!

தீவிர வறுமை, வேலைவாய்ப்பு, சுகாதாரம், ஊதியம் பெறாத பராமரிப்பு, பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொற்றுநோய்களின் தாக்கம்,  மிக முக்கியமாக ஆராயப்பட்டு, அவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் வழங்க ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்திருக்கிறது!

இது மகிழ்ச்சியான விடயம் தான்.

பெண்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

ChooseToChallenge

எனக்கு பிடித்தமான, பொருத்தமான  தலைப்பு!

சவால்கள் நிறைந்த இந்த உலகை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதுதான், எங்களுக்குள் நாங்களே எடுத்துக் கொள்ளும் சத்திய பிரமாணமாக இருக்க வேண்டும் !

வாழும் சூழலை, சூழலில் தாக்கத்தை உண்டு பண்ணும் புறக்காரணிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது!

எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை எமது எண்ணங்களும் செயற்பாடுகளும் தான்!

மருதமுனையில் இருந்து மெல்பேர்ன் வரை ஒரு நீண்ட பயணத்தில், வாழ்வின் எனக்கான இலட்சியங்களை அடைவதற்காக, குடும்ப கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் பல விதமான சவால்களை ஒரு பெண்ணாக எதிர் கொண்டு சாதனை படைத்த பெண்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

என்னால் ஒரு சாதரண பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்கள் ஒவ்வொருவராலும் சவால்களை எதிர்கொண்டு சாதிக்க முடியும்!

சவால்களுக்கு முகம் கொடுக்க பெண்களாகிய நாங்கள் தயாறாகுவோம்.

சவால்களை எதிர்கொள்வோம்! வெற்றி கொள்வோம்!

நன்றி!

14 March 2021

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.