வண்ணாத்திக்குளம் -மீண்டும் பதவியா



அலுவலகத்தில் அன்று வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்;தேன். ஒரு கடிதம் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டதாக இருந்ததால் மெனிக்கேயிடம் கொடுத்து வாசிக்கிச்சொன்னேன். மெனிக்கே படித்து விட்டு
‘பதவியா மகாவித்தியாலயத்தில் கால் நடை விவசாயம் பற்றி இம்மாதம் பதினைந்தாம்; திகதி மாணவர்களுக்கிடையில் பேச முடியுமா என பாடசாலை அதிபர் கேட்டிருக்கிறார் ‘ என்றாள்.

பதவியா மகாவித்தியாலயத்தில்தான் சித்திரா வேலை செய்கிறாள் என்ற நினைப்பு வந்தவுடன் சந்தோஷத்தில் சிரித்து விட்டேன்.

‘என்ன மாத்தையா சிரிக்கிறீர்கள்?’, என்றாள் மெனிக்கே.

‘இல்லை, நான் வருகிறேன், என்று சிங்களத்தில் எழுதிக் கொண்டு வா,’ என அவளுக்கு கூறினேன்.

மெனிக்கே எழுதிக்கொண்டு வந்த கடிதத்தில் என் கையொப்பத்தை இட்டு என் கையாலேயே தபாலில் சேர்த்தேன்.

வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ருக்மனிடம், ‘நான் பதவியா போவதாக இருக்கிறேன் நீயும் வருகிறாயா?’ என கேட்டபோது, அவன் தனக்கு வேலை இருப்பதாகக்கூறினான். இது நான் எதிர்பார்த்தது தான்.

பதவியாவை நான் சென்றடைய காலை பத்து மணியாகி விட்டது. நேரடியாக பாடசாலை அதிபரின் அறைக்குச்சென்றேன்.

அதிபர் ஜெயசிங்கா நடுத்தர வயது மனிதர். அவரது பேச்சு அவரை கண்டிச்சிங்களவராக காட்டியது. உயரமான தோற்றமும் வெள்ளை தேசிய உடையும் அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது. பதவியா போன்ற விவசாய பிரதேசங்களில் ஆசிரியராக வேலை செய்வது இலகுவான விடயமல்ல. மேலும் மாணவர்களில் பலர் பொருளாதாரப்பிரச்சினைகளால் படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. இப்படியான இடங்களில் வேலை செய்வதற்குப் பொறுமையும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்களே வெளியூரில் இருந்து வரமுடியும். அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பதவியா போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்வது உண்டு. ஜெயசிங்காவை பார்த்தால் அப்படி வந்தவராகத்தெரியவில்லை.

எனது கையை பிடித்தபடி, ‘நாங்கள் அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி’, என அதிபர் ஜெயசிங்கா கூறினார்.

‘நீங்கள் அழைத்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.’

‘எங்கள் பாடசாலைக்கு உங்களைப் போன்ற படித்தவர்களை அழைத்து மாணவர்களிடம் பேச வைத்தல் மூலம் விஞ்ஞானத்தில் அவர்களுக்கு அக்கறை உண்டாகும் என நினைக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் மாதம் ஒருவரை அழைத்து வருகிறோம். முக்கியமாக உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் இது நல்ல பயனை உருவாக்கும் என நினைக்கிறோம் ‘ என அதிபர் கூறினார்.

‘எனக்கு சிங்களம் அதிகம் பேச வராது’ என்றேன். அவை அடக்கமல்ல. உண்மையும் அதுதான்.

‘பரவாயில்லை உங்களால் முடிந்தவரை பேசுங்கள்’ எனக்கூறினார்.

அதிபரின் அறையில் இருந்து வெளியே வந்த போது எதிரே சித்ரா வந்தாள்.

‘எப்படி இருக்கிறீர்கள்’? என சித்ரா கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.

‘நீங்கள் பேசுங்கள்’, என கூறிவிட்டு அதிபர் ஜெயசிங்கா மீண்டும் தனது அறைக்குச்சென்றார்.

‘இது எல்லாம் உன் வேலை தானே?’ ஒத்துக் கொள்வது போல தலையைக் கவிழ்த்தாள்.

‘மதவாச்சியில் இருந்து நீங்கள் வருவீர்களா? என அதிபர் கேட்டபோது நீங்கள் வருவீர்கள் ‘ என்று சொன்னேன்.

அவளுடைய சிவப்பு நிறச் சேலையும் அதே நிறத்தில் சட்டையும் அவள் கண்கள்தான் வண்ணத்துப்பூச்சிகளா, அல்லது அவளே ஒரு பென்னம் பெரிய வண்ணத்துப்பூச்சியா?

‘இன்று நல்ல அழகாக இருக்கிறாய்.’

‘நன்றி’, என நாணித் தலை குனிந்தபோது.. இந்த நாணம் அவளுடைய கன்னங்களிலே எவ்வாறு குங்குமத்தை அள்ளிச் சொரிந்தது?

‘கூட்டத்தை ஆரம்பிப்போம்’, என அதிபரின் குரல் கேட்டு இருவரும் திரும்பினோம்.

பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களுமாக அந்த ஹோலில் கூடியிருந்தனர்.

இலங்கை போன்ற நாடுகளில் எப்படி கால்நடைகளிலிருந்து மொத்த நன்மைகள் பெறப்படுவதில்லை என்றும், அதிலும் பதவியா போன்ற இடங்களில் மாடுகளில் பால் கறக்கப்படுவதில்லை என்றும், அப்படி எடுக்கப் பட்டாலும் சந்தைப்படுத்தப் படுவதில்லை என என் பேச்சிலே குறிப்பிட்டேன். இறுதியாக இந்த விடயங்களை மக்கள் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று தட்டுத்தடுமாறி எனக்குத்தெரிந்த சிங்களத்தில் கூறினேன்.

சித்திராவும் அதிபரும் கால் நடை வைத்தியத்தைப்பற்றி சிறிது கூறும்படி கேட்டபோது ஆங்கிலத்தில் கூறினேன். நான் கூறியவற்றை அதிபரும் சித்திராவும்; மாணவர்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் கூறினார்கள்.

அதிபர் எனக்கு நன்றி கூறிவிட்டு மாணவர்களுக்கு இறுதிப்பரீட்சை பற்றி கூறத் தொடங்கிய போது நானும் சித்திராவும் ஹோலை விட்டு வெளியே வந்தோம்.

கட்டடத்தின் வெளியே உள்ள மாமரத்தின் கீழ் இருவரும் நின்றோம். ‘சித்திரா! எப்போது மீண்டும் சந்திக்கலாம்?.’

‘நீங்கள் எப்போதும் பதவியா வரலாம்?’

‘நீ எப்பவாவது மதவாச்சி வரமாட்டாயா?’ என ஆவலுடன் கேட்டேன்.

‘அடுத்த வெள்ளிக்கிழமை வவனியாவுக்கு போக வேணும். எனக்கு ஒரு கடிகாரம் வாங்கினேன். ஆனால் அது பிடிக்கவில்லை. திருப்பிக்கொடுக்க வேணும்.’

‘அடுத்த வெள்ளிக்கிழமை நானும் யாழ்ப்பாணம் போக வேணும். உனக்கு சம்மதமாகில் மதவாச்சியில் இருந்து உன்னோடு வவனியாவுக்கு வருகிறேன்.’

‘எனக்கு சம்மதம்.’

அதிபர்; வெளியே வந்ததும் அவரிடமும் சித்ராவிடமும் விடை பெற்றுக் கொண்டு மதவாச்சி திரும்பினேன்.

விடுதியில் உடை மாற்றிக்கொண்டு மதவாச்சிக் கடை வீதிக்கு புறப்படத் தயாரானபோது ராகவனும் என்னுடன் சேர்ந்து கொண்டான்.

ராகவன் தனக்கு கட்டடத் திணைக்களத்தில் சனிக்கிழமை வேலை இருப்பதாக கூறினான். எனக்கு ராகவனின் அப்பாவித் தனமான சிரித்தமுகம் மிகவும் பிடித்திருந்தது.

வேலை முடிந்தால் விடுதியில் ராகவனை காணமுடியாது. இரவு பத்து மணிக்கு பின்புதான் மீண்டும் விடுதியில் காண முடியும்.

பலதடவைகள், ‘நீ எங்கு போகிறாய்? என்னையும் கூட்டிக்கொண்டு போ’, எனக்கேட்டிருக்கிறேன்.

‘அது உங்களுக்கு சரி வராத இடம்’, என சிரித்தபடி நழுவி விடுவது ராகவனின் வழக்கம்.

‘நான் தலைமயிர் வெட்டவேண்டும். எங்கு வெட்டலாம்?’

‘நம்மட யாழ்ப்பாணத்து ஆள் இங்கே சலூன் வைத்து இருக்கிறான். வாருங்கள் காட்டுகிறேன்.’

‘தலை மயிர் வெட்டவும் நம்ம ஊர் ஆளிடமா வெட்டவேண்டும்?’ என கேட்டபடி சலூனுக்குள் நுழைந்தோம்.

சுவரில் பெரிய அளவில் தமிழகஇ வடஇந்திய நாட்டு நடிகைகளின் முழு உருவப்படங்கள் சுவர்களை அலங்கரித்தன.

‘எப்படி ஐயா, என்றபடி சலூனின் பின் பகுதியில் இருந்து வாட்டசாட்டமான ஒருவர் வந்தார். முன் தலையில் மயிர் உதிர்ந்து இருந்ததால் நெற்றி மட்டும் அல்ல தலையின் அரைபக்கத்திலும் திறுநீறு பூசி சைவப்பழமாக காட்சிதந்தார்.

‘ஆறுமுகண்ணை, ஐயா நம்மடை ஆள் ஒருக்கா நல்லா தலையை வெட்டுங்கோ!’ என ராகவன் கூறினான்.


‘அதுக்கென்ன இருங்கோ ‘.

என் தலையில் கைவரிசை காட்டியபடி, ‘ஐயா யாழ்ப்பாணத்தில் எந்த இடம் ..’?
‘கொக்குவில்’

‘எவ்வளவு காலம் மதவாச்சியில் வேலை செய்கிறீர்கள்?’

‘இரண்டு கிழமை’

‘எங்க தங்கி இருக்கிறியள்?’

‘அரசாங்க விடுதியில்’

எனது தலைமயிரை வெட்டுவதை நிறுத்தி விட்டு ராகவனிடம் கோபமாக ‘நீ தான் அங்கு தங்கி இருப்பதும் இல்லாமல் ஐயாவையும் சேகுவாராக்காரன்களோடு சேர்த்து விட்டாய்’ என்றார்.

அவரது குரலில் இருந்த உண்மையான கோபம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

‘நான் தான் அங்கு போனேன். ராகவனுக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை.’ என்று நான் உண்மையை கூறினேன்.

‘அது சரி, அங்கே இருப்பவர்களெல்லாம் JVP காரர் என்பது பொலிசுக்குத் தெரியும். நீங்கள் அங்கு இருப்பது நல்லதில்லை. நாடு இருக்கிற நிலை சரியில்லை. என்மனதில் பட்டதைச்சொன்னேன்’.

ஆறுமுகத்திற்கு சிறிது தாரளமாகவே பணத்தை கொடுத்து விட்டு சலூனை விட்டு வெளியேறினேன்.

கண்டி வீதியில் நடக்கத் தொடங்கினேன். அந்த வீதியில் ஒரு நெசவுசாலை இருக்கிறது. அதன் எதிரில் மதவாச்சி வைத்தியசாலை அமைந்திருந்தது.

‘ராகவன்’ என பெண்குரல் ஒலித்தது. நானும் திரும்பிப் பார்த்தேன்.

நெசவுசாலைக்கு பக்கத்து வளவில் மாமரத்தின் கீழ் இரு பெண்கள்
தலை வாரியபடியே நின்று கொண்டிருந்தார்கள். நான் ராகவனை பார்த்த போது, ராகவன் ‘நீங்கள் போங்கள் நான் பின்னால் வருகிறேன்’, என்று கூறிவிட்டு பெண்களை நோக்கி நடந்தான்.

மாலை நேரத்தில் ராகவன் மறைவதற்கும் இது தான் காரணமாக இருக்க வேண்டும் என நினைத்தபடி விடுதியை நோக்கி நான் நடக்கலானேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.