ரிமதி பாத்தோலியஸ் விலகியதும் ஆதர் அல்பிரட் என்ற இளைப்பாறிய மிருக வைத்தியர் வைத்தியசாலை மனேஜராக நியமிக்கப்பட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில் இளைஞராக வேலை செய்தவர். அதன் பின்பு சொந்தமாக வைத்தியசாலை வைத்து பல வருடங்களாக நடத்திக் கொண்டு இருந்தபோது அவரது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதற்கு மறந்து விட்டது. அந்த விடயம் அவரது கிளினிக்கில் நடந்ததால் உடனே அம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் அவரது இதயத்திற்கு உபரியாக பேஸ்மேக்கரை வைத்து இன்னும் பத்துவருடங்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்கள். இனி மேல் வேலை வேண்டாம் என வீட்டில் மனைவி கட்டளையிட்டுவிட்டார்.
இப்படியான மருத்துவ விடுமுறையில் இருந்தவரை, நிர்வாக குழுத் தலைவரான திரு லோட்டன் பலவந்தமாக கட்டி இழுத்துக்கொண்டு வந்து ‘நாங்கள் பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறோம். தற்பொழுது தலைமை வைத்தியரில்லாமல் வைத்தியசாலை நடக்கிறது.. இதற்கான பொறுப்பை ஏற்று நடத்த உங்களைத் தவிர ஒருவரையும் எமக்கு தெரியவில்லை’ என கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டதால் மறுக்காமல் ஒப்புக் கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்க வந்தார்.
வைத்தியசாலை நிலைமை அவருக்கு சொல்லப்பட்டது போல் மோசமில்லை என்பது அங்கு வேலை செய்பவர்கள் பலரோடு பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் அவரது பரிதலில்,தொடர்ச்சியாக இருந்த தனிப்பட்ட கோபதாபங்கள் ஊதிப் பெருத்ததால் இந்த நிலைமை வந்துள்ளது. பெரும்பாலானவர்கள் மற்றைய இடங்களிலும் பார்க்க குறைந்த ஊதியத்தில் மன நிறைவுடன் அர்ப்பணிப்பாக வேலை செய்கிறார்கள். இப்படியானவர்களைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். புதிய வைத்தியசாலையைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து வருடமாவது செல்லும். இந்தக் காலத்தில் புதியவர்களை அதிகம் உள்வாங்காமல் ஏற்கனவே வேலை செய்பவர்களை வைத்து நடத்துதல் இலகுவானது என்ற முடிவுக்கு ஆதர் அல்பிரட் வந்தார். மேலும் இதில் முக்கியமானவர் காலோஸ் சேரம் என்பதை புரிந்து கொண்டதும் நேரடியாக காலோஸ் சேரத்திடம் சென்று பேசவிரும்பினார். காலோஸ் உடன் பேச விரும்பியதற்கு இரு காரணங்கள். ஒன்று சக வைத்தியர் என்ற விதத்தில் தொழில் முறையான மரியாதை காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுவது. இரண்டாவது இவ்வளவு காலமும் வைத்தியசாலையை நிர்வாகித்த மனிதனிடம் கேட்காமல் அந்த வேலையை எடுத்துச் செய்வது நியாயம் அற்றது என்ற அற உணர்வாகும்.
எழுபது வயதான ஆதர் அல்பிரட் ஆறடிக்கு மேலான உயரமும் நிமிர்ந்த தோற்றமும் கொண்டவர். இன்னமும் பொன்னிற தலைமையிர்கள் சில நரைக்காது இளமைக்காலத்து அழகை எடுத்துக் கூறியது. நீலக் கண்களின் மேலுள்ள மூக்கு கண்ணடி அவரது மூக்கின் மேல் சிறிது முன்தள்ளி விலகி விழுந்து விடும என்பது போல இருக்கும். சிறு வயதில் இங்கிலாந்தின் தொழிலாளர் குடும்பத்தின் வழி வந்ததால் எந்தவிடயத்திலும் மனிதர் சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். ஆடம்பரம், படாடோபம் இல்லாத எளிமையான மனிதர். சிறுவனாக பெற்றோருடன் இங்கிலாந்தை விட்டு புலம்பெயர்ந்து மெல்பேனில் ஆறுவயதில் இருந்து கல்வி கற்றாலும். சிறிய அளவில் பிரித்தானிய ஆங்கிலத் தொனி அவரது உச்சரிப்பில் இன்னும் தொக்கி இருக்கும். மிருகவைத்தியத்துறையை விட தச்சுவேலை, கார் மெக்கானிக் போன்ற வேலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தபடியால் எந்த ஒரு வேலைக்கும் எவரையும் எதிர்பார்க்காமல் உபகரணங்களை எடுத்துக்கொண்டு நேரடியாக வேலையில் இறங்கிவிடுவது அவரது பழக்கம். வேலையில் மனிதர்களில் உயர்வு தாழ்வு எதுவும் பார்க்காத மனிதர். அவரது நியமனத்தின் பின்பாக வைத்தியசாலையில் வேலை செய்வதற்கு அவருக்கு புதிகாக ஒரு ஆபிஸ் அறையை தெரிவு செய்து ஒழுங்கு படுத்திய பின் அடுத்த நாள் வேலை தொடங்கும்படிதான் மிஸ்டர் லோட்டன் கேட்டிருந்தார். ஆனால் முதல் நாள் காலை காலை எட்டுமணிக்கு வைத்திய சாலைக்கு வந்து பல விடயங்களை தானாக சரிப்படுத்த விரும்பினார். அதிகாலையில் எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் பின்கதவு வழியே உள்ளே வந்தார். நாய்கள் பூனைகளின் கூடுகளை கழுவி சுத்தம் செய்து உணவு அளிப்பவர்கள் மட்டுமே அந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வந்திருந்தார்கள். நேரடியாக வைத்தியசாலையின் மேல் மாடியில் உள்ள பூட்டாமல் திறந்திருந்த பழைய சாமான்களைப் போட்டு வைக்கும் சிறிய அறையொன்றை தனது அறையாக்கி கொண்டார்.
அந்த அறையில் மேசையையும் கதிரைகளையும் தவிர பழைய ரைப்ரைட்டர், புத்தகப் பெட்டிகள், பாவிக்காத மருத்துவ உபகரணங்கள் குவிந்து கிடந்தன. அவற்றில் ஒரு மில்லி மீட்டருக்கு தூசி படிந்து கிடந்தது. மனத் தளர்ச்சியடையாமல் மேசையையும் கதிரையையும் துடைத்து ஒழுங்காக வைத்து விட்டு ‘எல்லாவற்றையும் தூசு தட்டி ஒழுங்காக்க இன்று முழுநாளும் போய்விடும். இதில் நேரத்தை வீணாக்காமல் வந்த காரியத்தில் நேரடியாக இறங்க வேண்டும். முதல் விடயம் இந்த வைத்தியசாலையில் அமைதியை நிலை நாட்டவேண்டும்” என நினைத்தபடி கீழே இறங்கி கொரிடோர் வழியாக தேநீர் கூடத்துக்கு சென்ற போது வைத்தியசாலையின் பின்கதவால் காலோஸ் வந்து கொண்டிருந்தான்
‘ஹலோ காலோஸ், காலை வணக்கங்கள்’ என்றதும் ‘நான் கேள்விப்பட்டது உண்மையா? நீங்கள் தான் இனி மேல் இந்த வைத்தியசாலையின் மனேஜர் என கேள்விப்பட்டேன்.’
‘நான் நிர்வாகக்குழுவுக்கு காலோசிடம் பேசிவிட்டு எனது முடிவை சொல்வதாக சொல்லி இருக்கிறேன். அது சம்பந்தமாக பேச நினைத்து கீழே இறங்கி வரும் போது நீங்கள் எதிரில் வந்தீர்கள்.
‘எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ரிமதி பாத்தோலியஸ் வேலையை விட்டுப் போனது நான் எதிர்பார்க்காத ஒன்று. பத்துவருடம் தலைமை வைத்தியர் என தலையில் வைத்திருந்த முட்கீரிடத்தை இறக்கி வைத்தது எனக்கு இப்பொழுது வேலை இலகுவாக இருக்கிறது. அந்தப் பதவியையும் சேர்த்து நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் சந்தோசப்படுவேன்’ என சிரித்தபடி
‘காலோஸ் இந்த வைத்தியசாலையில் மனேஜர் என்ற புதுப் பதவியை என்னிடம் எடுக்கும்படி நிர்வாக குழு கேட்டிருக்கிறது. இது சம்பந்தமாக உங்களது அபிப்பிராயத்தை கேட்க விரும்புகிறேன்’
‘ஆதர் , நான் இந்த வைத்தியசாலையில் பதினைந்து வருடங்கள் வைத்தியராகவும் அதில் பத்து வருடங்கள் தலைமை வைத்தியராகவும இருந்தேன். நாலு கிழமைக்கு முன்புதான் விலகினேன். என்னைப் பொறுத்தவரை ஒரு சிலர் தொடர்ச்சியாக பிரச்சனை கொடுத்தார்கள். எனக்கும் அலுத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சந்தோசமாக வேலை செய்ய வேண்டும். அந்த சந்தோசம் எனக்கு கிடைக்காத போது எனது நாற்காலியை பாதுகாக்க விரும்பியவனில்லை’
‘எல்லா விடயத்தையும் பலரோடு பேசுவதன் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் நிர்வாக குழுவினர் உங்கள் மேல் மிகவும் மதிப்பும், மரியாதையும்; வைத்திருக்கிறார்கள. இந்த வேலையை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்யமுடியுமானால் நான் புதிதாக வேண்டிய பண்ணைக்கு சென்று விடுவேன். நூறு ஏக்கரான அந்தப் பண்ணையில் ஐம்பது இறைச்சி மாடுகள் வாங்கி விட்டிருக்கிறேன். வார விடுமுறைநாட்களில் அங்கு சென்று தங்கி இருப்பதற்காக அங்கிருந்த பழைய வீட்டையும் புதுப்பித்துக் கொண்டிருந்த போதுதான் லோட்டனின் தொலைபேசி வந்தது. எனது பழய பாடசாலை நண்பராகியதாலும் இந்த வைத்தியசாலையில்தான் எனது ஆரம்ப வைத்திய பயிற்சியை பெற்றதால் என்னால் இந்த அழைப்பை மறுக்க முடியவில்லை. வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நான் மீண்டும் வேலை செய்வது பிடிப்பில்லை. வேலைக்கு போனால் எனது இரத்த அழுத்தம் கூடிவிடும் என்பது அவர்களது காரணமாக இருக்கிறது. ஏற்கனவே பேஸ் மேக்கர் வைத்திருக்கிறேன்.’
‘என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் இந்த வேலையில் இருப்பது நல்லது. எனக்கெதிராக ரொன் ஜொய்ஸ்சும் ரிமதி பாத்தோலியஸ் நடந்து கொண்டதில் இனவாதமான தன்மை இருந்தது. எனக்கு மேல் இருந்த காழ்புணர்வால் அவர்கள் பழிவாங்க நினைத்ததும் என்னைப் போல் வேறு நாட்டில் இருந்து வந்த சிவாவைதான்.’
‘சிவாவின் மேல் வைத்த குற்றச்சாட்டைப் பார்த்தேன். எந்த ஆதாரமும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். ரிமதியை நான் புரிந்து கொண்டாலும் ரொன் ஜொய்சை புரிந்து கொள்ள முடியவில்லை அந்த மனிதரின் வயதும் அனுபவமும் அவரைக் கைவிட்டு விட்டது. ரொன் வைத்திய விடுப்பில் நின்று கொண்டிருக்கிறார். அடுத்த கிழமை பதவி விலகுகிறார். அத்தோடு நிர்வாக குழு செயலாளர் என்ற அவரது வேலை இல்லாமல் போகிறது. அவரது வேலையையும் உங்களது வேலையையும் பார்த்துக் கொண்டு புதிய வைத்தியசாலையை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் கடினமானது. இந்த வயதில் என்னால் அது ஏலாது. இதனால்தான் தலைமை வைத்தியர் பதவியை நீங்கள் மீண்டும் பொறுப்பேற்றால் எனக்கு இலகுவாக இருக்கும்.’
‘நான் எடுப்பதானால் இரண்டு நிபந்தனைகள் உண்டு. இனிமேல் நிர்வாக குழுவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்காது. எனது விடயங்கள் உங்கள் மூலமாகத்தான் நடைபெறும். இரண்டாவது விடயம் என் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்வில் பழிவாங்கப்பட்ட அப்பாவியாகிய சிவாவை உள்ளெடுக்கவேண்டும்.’
‘காலோஸ் நீர் கேட்ட விடயங்கள் ஏற்கனவே நடந்து விட்டன. நான் மனேஜர் என்ற முறையில் நிர்வாக குழுவில் அங்கத்தினராக நியமிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் புதிய கட்டிடம் விடயமாக பேசுவதற்கு நான் அங்கு இருப்பது பல நடைமுறை சிக்கல்களையும் நேர விரயத்தையும் குறைக்கும். வைத்தியசாலை விடயங்களை நிர்வாகக் குழு என் மூலம் அறிந்து கொள்ளும். அடுத்ததாக நான் சிவாவிடம் சென்று ரிமதி பாத்தோலிஸ்சோடு நிர்வாககுழு தெரிந்தோ தெரியாமலோ துணை போனதற்காக நிர்வாக குழுவின் சார்பில் மன்னிப்பு கேட்கப் போகிறேன். தவறு நடந்தால் மன்னிப்பு கேட்டபின்புதான் நல்லிணக்கம் ஏற்படும்.’
‘அப்பொழுது எனக்கு மீண்டும் பதவியை ஏற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.’
—————–
காலை நேர தேநீர் அறையில் வெளிப்புறத்தில் தனியாக இருந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது ஷரன் சுந்தரம்பிள்ளையின் எதிரே சிரித்தபடி வந்து எதிரே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள். இறுக்கமான கறுப்பு ஜீன்ஸ் அணிந்து அதற்கு மேல் பொருத்தமாக கருப்பு புள்ளி கொண்ட வெள்ளை நிறமான மேற்சட்டையும் அணிந்திருந்தாள். வைத்தியர்களுக்கான வெள்ளை மேலங்கியை தனது உடையின் மேல் அவள் அணிந்திருந்தாலும் அந்த மேலங்கி முன்பகுதி திறந்து விடப்பட்டிருந்ததால் அவளது முன் அழகுகள் அப்படியே தெரிந்தன. வழமையை விட பளிச்சென்று சற்று முன்னால் செய்து வைத்த தங்கச்சிலை போல் தெரிந்தாள். அவள் மிருக வைத்தியம் படிக்காமல் ஏதாவது பிரான்சு அழகுசாதானப் பொருட்களுக்கு மாடலாக சென்றிருந்தால் பலரின் இதயவலிகளுக்கு மூலகாரணமாக இருந்திருப்பாள். சிறிய ஓலைக்குடிசைக்குள் பெட்ரோமக்ஸ் லைட்டை வைத்தால் அந்த குடிசையை மீறி வெளியே வரும் பிரகாசம் போல இந்த வைத்தியசாலைக்கு இவளது அழகின் ஒளி அதிகமாகி விட்டது. இந்த வைத்தியசாலையில் வேலை செய்பவர்களில் போலின், ஜோவான் போன்ற நர்சுகள் சராசரிக்கு மேற்பட்ட அழகானவர். அதே போல் புதிதாக சேர்ந்த கத்தரின் என்ற வைத்தியரும் சிறிது உயரம் குறைந்தாலும் செந்தீ போன்ற தலையுடன் கண்ணை அள்ளும் அழகானவள். அவர்களுடன் பேசும் போதும் பழகும்போதும் சாவகாசமாக நட்பாக பேசும் சுந்தரம்பிள்ளைக்கு அவர்களிடம் இல்லாத கவர்ச்சி ஷரனிடம் இருப்பது உடல் மொழியா அல்லது மோகனமான சாகஸமா தெரியாது. உடலின் அசைவுகள் அவளை நித்திய நர்த்கையாக பிரகாசிக்க வைத்தது. அவளது அருகே நிற்பவர்கள் அடையும் பாதிப்பு பிரகாசமான விளக்கின் அருகே செல்லும் போது உடலிலை தகிக்கும் வெப்பமாக போல் இருக்கிறது என மனத்தில் அச்ச உணர்வை கொடுத்தது.
போர்க்களத்தில் உடல் கவசங்களும், ஆயுதங்களும் திடீரென இல்லாமல் போய், நிராயுதபாணியாக்கப்பட்ட போர்வீரன் கூட மற்போர் புரிய முயற்சிக்கும் மனநிலையில் இருப்பான். ஆனால் இவள் மொத்தமான சரணாகதி கேட்டாலும் தவறில்லை என எண்ணும் போது இவளது அவயவங்கள் கூரிய போர்கருவிகளாக மாறி உயிர்ப்பலி கேட்கிறதே. இவள் ஒரு புராதன காலத்தில் உயிர்காவு வேண்டும் தேவதையோ?
இவளை விலத்தி போவதே பிரச்சினையை தவிர்க்க சிறந்த வழியாக இருக்கும் என சிந்தித்தான் சுந்தரம்பிள்ளை. அழகான பறவையாக இருந்தாலும் அதனது கூரிய அலகு நகம் போன்றவற்றை நினைத்து நெருங்கிப் பழகாமல் இருப்பது துாரத்தில் இருந்து பார்த்து ரசிப்பது அச்சம் மட்டுமல்ல முன்னெச்சரிக்கை காரணமானதுதான். சாம், நொரேல் போன்றவர்கள் ஏற்கனவே ஷரனைப்பற்றி கூறிய கதைகள் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் ஆழமாக பதிந்திருந்தது.
எதுவானாலும் குறைந்த பேச்சுடன் சிறிய காலை வணக்கத்தோடு அவளை கடந்து மீண்டும் வேலைக்கு போக நினைத்து விரைவாக தேனீரை குடித்த போது ‘சிவா உனது பிரச்சனைகளை கேள்விப்பட்டு மனம் வருந்தினேன். நான் அதைவிட பெரிய பிரச்சனையில் அகப்பட்டு இருந்ததால் அன்று நடந்த வைத்தியர் கூட்டத்துக்கு வர முடியவில்லை.
ஒவ்வொரு வார்த்தைகளும் உறையில் சுத்தப்படாத சுவிஸ் நாட்டு கருப்பு சொக்கிலட் போல் வெளிவந்து விழுந்தன. அவளது முகத்தில் வழக்கத்தைவிட பூரிப்பும் அலங்காரமும் தெரிந்தது. நேரடியாக அவளைப் பார்த்து பேசினால் என்ன அள்ளி விழுங்குவது போல் பார்க்கிறாய் என்று கேட்டு விடுவாளோ என்ற அச்சத்தில் அவளது இடுப்பைப் பார்க்தபடி ‘என்ன உனது பிரச்சினை?’ என்ற போது கண்களை சிறிது சுழட்டி விட்டு தோளை திருப்பி கொண்டு மேலும் அருகில் நாற்காலியை இழுந்து அருகில் வந்தாள்.
‘என்ன கேட்டதற்கு பதில் பேசவில்லை’?
‘நான் உனக்கு சொல்லி என்ன பிரயோசனம். நீ என்னைக் கவனிப்பதில்லையே.’
‘என்ன புதிர் போடுகிறாய்?’
எதிரில் இருந்த சுந்தரம்பிள்ளையின் நாய்காலியில் தனது காலணிகளை கழற்றிய வெறும் பாதங்ககளால் உதைத்தபடி ‘நான் கிறிஸ்ரியனிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் இருக்கிறேன். நல்ல ஆம்பிளைகள் யாராவது உன்னைப் போல் அமைதியானவானாக இருந்தால் எனக்கு தகவல் சொல்’ எனக் கண்களை சிமிட்டினாள்.
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் இவளுக்கு அசாத்தியமான துணிவு மட்டுமல்ல ஆண்களை நித்தியமான காம உணர்வில் மூழ்கடிக்கும் வேலையை கால்விரல்களாலே செய்கிறாளே என நினைத்தபடி ‘என்னைப்போல கறுப்பாக இருந்தால் பரவாயில்லையா?
‘ கறுப்பிற்கு நான் போனஸ் புள்ளிகள் தருவேன்’ என சிரித்து இடது காதை மறைத்த அவளது கூந்தலை கைகளால் எடுத்து வலது பக்கத்தில் விட்டு அழகிய கழுத்தை சிறிது சாய்தாள்.
ஆண்கள் மனத்தில் விரகதாபத்தை ஊட்டும் செய்கைகள் காலையில் பத்து மணியளவில் செய்கிறாளே படுபாவி. இவளுடன் பேசினால் இன்றய பொழுது எப்படி முடியுமோ ‘ஷரன் நான் வேலைக்கு போகவேண்டும்’ என்றதும் ‘ என்னை வெட்டி விட்டு போகிறாய்.’ என்ற படி கால்களை நீட்டி வழியை குறும்பாக தடுத்தாள்.
அந்த வழியால் வந்த கொலிங்வுட் ‘தம்பி கவனம். உடலையும் மனத்தையும் பார்த்துக் கொள். டிராமாக் குயினின் பேச்சுகளை உண்மையென நம்பாதே
‘எப்படி கொலிங்வூட் இன்னும் பழைய பூனைக் கடியின் நினைவுதான் ஷரன்மீது கோபம் தீரவில்லையா? ’ என சொல்லிய படி அந்த கொரிடோரில் திரும்பி மருத்துவ ஆலோசனை அறைக்கு சென்றான்.
அந்த அறையில் ஆதர் அல்பிரட் ,சுந்தரம்பிள்ளைக்காக காத்துக் கொண்டிருந்தார்.
பார்த்தவுடனே சுந்தரம்பிள்ளைக்கு முதல் சந்திப்பிலேஅவரில் மதிப்பு வந்து விட்டது. ஆறடிக்கு மேற்பட்ட உயரத்துடன் தீர்க்கமான கண்களும் கூரிய மூக்கும் அவரை ஒரு சதாரணமான மனிதராக காட்டவில்லை.
‘சிவா நான்தான் ஆதர். இன்றுதான் இந்த வைத்தியசாலைக்கு இருபது வருடங்களுக்கு பின்பாக வந்திருக்கிறேன். நானும் உங்களைப் போல்தான் பஞ்சம் பிழைக்க இந்த நாட்டுக்கு பெற்றோரால் ஐந்து வயதில் கப்பலில் கூட்டிவரப்பட்டேன். அந்தக் கப்பல் இரண்டு நாட்கள் கொழும்பில் சாப்பாட்டுப் பொருட்களை வாங்குவதற்காக தங்கி நின்றது. கண்ணுக்கு எங்கும் பச்சையாக தெரிந்தது மட்டும்தான் இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் சிலோன் எனக்கூறினார்கள் இல்லையா?’
புதிதாக ஒருவருடன் பேசும் போது அவருக்கு இலகுவான விடயத்தையும் நெருக்கமான விடயத்தையும் பேசி பேச்சை ஆரம்பிக்கும் போது பேச்சுவார்த்தை இலகுவாக இருக்கும். பல அவுஸ்திரேலியர்களிடம் இந்த பழக்கம் உள்ளது. நேரடியாக விடயத்துக்கு வந்தது விடுவது கீழைத் தேசத்தவரது பழக்கம். பேசப்படும் விடயம் விருப்பமற்ற விடயமாக இருக்கும்போது மேற்கொண்டு பேசமுடியாது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன் பின்னால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது போய்விடுகிறது. அடிப்படையில் எல்லோருக்கும் மொழி பேசுவதற்கு தெரிந்தாலும் அந்த மொழி சில மனிதர்களிடம் சிற்பியின் கையில் உளி போல் லாவகமாக பிரயோகிக்கப்படுகிறது. மற்றவர்கள் அதை கசாப்பு கடைகாரனின் கத்தி போல் பாவிக்கிறார்கள்.
‘எழுபதுகளில்தான் சிறிலங்கா என மாறியதும் அங்கு சண்டை தொடங்கியது. சண்டையால் என் போன்றவர்கள் குடும்பங்களாக வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.’
‘சண்டை என்பது நாடுகள், இனங்கள் ஏன் தனிமனிதர்களை விட்டு வைப்பதில்லை. எவ்வளவு உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்படுகிறது? நல்ல வேளை நாங்கள் இந்த நாட்டில் குண்டு வெடிப்பின்யின் சத்தங்கள் கேளாமல் கந்தக மனத்தை சுவாசிக்காமல் அமைதியாக வாழ முடிகிறது. ஆனால் அதைப் பலரால் உணரமுடியாதது துர்ப்பாக்கியம்’
‘உண்மைதான்.என்னையும் ரிமதியையும் கூட விடவில்லை’
‘இங்கே இப்படியான சண்டைகள் தேவையற்றது. நமக்குச் சிலரைப் படிக்கும் .சிலரைப்பிடிக்காது. ஆனால் நமக்கு பிடிக்காதவர்கள் நம்மோடு வேலை செய்யக்கூடாது என நினைப்பது நல்லதல்ல. இந்த வைத்தியசாலையின் மனேஜராக இன்று முதல் நான் பொறுப்பு ஏற்கிறேன். பல விடயங்களை ஆராய்ந்து விசாரித்துப் பார்த்தேன் அந்த ரோசியின் எக்ஸ்ரேயை கூடப் பார்த்தேன். அந்த ஒப்பரேசனில் எந்தத் தவறும் இல்லை. அந்த விடயத்ததில் ரிமதி பத்தோலியஸ் நடந்தது தவறானது. உமக்கு நடந்தவற்றிற்கு நான் நிருவாகத்தின் சாரபில் மன்னிப்பு கேட்கிறேன்.’
‘ஆதர், என்னைப் பொறுத்தவரை ரிமதி பத்தோலியஸ் ராஜினாமா செய்தவுடன் இந்த விடயம் முடிந்துவிட்டது. அத்துடன் இந்த விடயத்தை முற்றுப்புள்ளி வைத்து விட்டு அதை கடந்து போக விரும்புகிறேன். தீராத சண்டை நடக்கும் நாட்டில் இருந்து புகலிடம் தேடி வந்தேன். இங்கு இப்படி சிறிய சண்டைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க விருப்பமில்லை. என் வாழ்வுக்காலத்தை முடிந்தவரை பிரயோசனமாக செலவிடுவதை விரும்புகிறேன்.இலங்கையில் இருந்து இங்கு வந்த பல மிருகவைத்தியர்கள் இங்குள்ள பரிச்சையில் தேர்வு பெறாமல் தொழிற்சாலைகளிலும், டாக்சி ஓட்டுனரக வேலை செய்யும் போது மிக நான், கடினமாக படித்து இங்கு வேலை செய்யத் தகுதி பெற்றேன். இதை வீணாக்க நான் வரும்பவில்லை. எனது வழக்கறிஞர் வேலை நீக்கத்திற்கு எதிராக வைத்தியசாலைமீது வழக்கு போட ஆலோசனை கூறியபோது அதனாலே மறுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் உங்களைப் போன்ற ஒருவர் இந்த வைத்தியசாலைக்கு வருவது எனது விருப்பம். நான் நிர்வாகக் குழு அங்கத்தவர்களிடம் என்னிலும் பார்க்க சீனியரான மிருகவைத்தியர் ஒருவர் நான் செய்தது தவறு என முடிவுக்கு வந்தால் நானே விலகுகிறேன் என்றேன். எனது செய்கையில் நியாயம் இருப்பது தெரிந்ததால் நான் இந்த ஒரு மாதம் மனம் தளராது போராடினேன். இந்த வைத்தியசாலையை நிர்வாகம் செய்ய புது இரத்தம் தேவை என்பது எனது விருப்பமும். இதைத்தவிர இந்த வைத்தியசாலையில் நாலு அல்லது ஐந்து வருடங்கள் காலோஸ் மற்றும் உங்களைப் போன்றவர்களுடன் வேலை செய்து, என்னை வெளியலகிற்கு தயாராகிக் கொள்ள நான் விரும்புகிறேன். இதையே எனது இலட்சியமெனவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்’
‘சிவா உமது மன உறுதிக்கும் தெளிவான சிந்தனைக்கும் எனது பாராட்டுகள். புதிதாக குடியேறியவர்களது கஷ்டத்தை முற்றாக தெரியாவிட்டாலும் எனது தாய் தந்தையரைப் பார்த்து புரிந்து கொண்டேன். எனது தந்தை ஆறு நாட்களில பன்னிரண்டு மணித்தியலங்கள் வேலை செய்து எங்களைப் படிக்கவைத்தார். ஞாயிற்றுகிழமை தேவாலயத்திற்கு போகவில்லை என்றால் அன்றும் வேலை செய்திருப்பார். அக்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே எங்களுக்கு இலகுவான நாளாக இருக்கும்.அம்மாவின் மனம் தேவாலயத்துக்கு போவதை பற்றி சிந்திப்பதால் எங்களில் அதிக கவனம் இராது’ என சொல்லிவிட்டு சிரித்தபடி காலைப் பொழுதிலே முக்கிய பிரச்சனைகளை தீர்த்த திருப்தியுடன் ஆதர் மீண்டும் தனது ஆபிசை தூசி தட்டி துப்பரவாக்கத் திரும்பி சென்றார்.
எழுபது வயதிலும் கம்பீரமாக செல்லும் ஆதரின் மனம் திறந்த பேச்சு சுந்தரம்பிள்ளைக்கு படித்திருந்தது. இந்த மனிதரின் வயதில் என்னால் இப்படி நடக்க முடியுமா என்ற சிந்தனை வந்து போக தவறவில்லை.
—-
நாட்களும் கிழமைகளும் வேகமாக கடந்து சென்ற பின் ஒரு மாலை பொழுது நாலு மணியளவில் சுந்தரம்பிள்ளை வழக்கமாக செல்லப்பிராணிகளின் மருத்துவ ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இரண்டு இளைஞர்கள் உள்ளே வந்தார்கள். சிறிது உயரமாக இருந்தவர் தனது கையில் கறுப்புப் பூனையை வைத்து நெஞ்சோடு அணைத்தபடி உள்ளே வந்தார். இருவரிலும் அண்ணன் தம்பி போன்ற முகச்சாயல் இருந்தது. இருவரது தோள்களும் எடை தூக்கி பயிற்சி செய்யபவர்களைப் போல வீங்கி விரிந்து புடைத்திருந்தது. அவர்களது நெஞ்சுப் பாகம் விரிந்து இடுப்பு பகுதி ஒடுங்கி மல்லர்கள் போல் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மஞ்சளும் பச்சையுமான அவுஸ்திரேலிய தேசிய வர்ணத்தில் அரைக்கை ஸ்போட்ஸ் சேட் அணிந்திருந்தார்கள். விளையாட்டு வீரர்களாக பார்வைக்கு தெரிந்த அவர்களுக்கு இருபத்தைந்துக்கு வயதுக்கு கீழ்தான் இருக்கும் போல் தெரிந்தது. அவர்களது செல்லப்பிராணியின் கோப்பில் உள்ள அவர்களது பெயர் போலந்து நாட்டை சேர்ந்ததாக இருந்தது. இந்த வைத்தியசாலையில் பல நாட்டவர்கள் வருவதால் பெயரில் வைத்து எந்த நாட்டின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்வது சுந்தரபிள்ளையின் மனத்தில் குறுக்கெழுத்து போட்டி போன்று ஒரு வித மனக்கணிப்பு பயிற்சியாக மாறிவிட்டது.
அந்த இளைஞர்களில் பூனையை வைத்திருந்தவர் மேசையில் பூனையை விட்டதும் அந்தப் பூனையின் தலையை மற்றவர் கைகளால் தடவினார். அவர்களது அணைப்பு, தடவுதல் என்பன இருவரும் அந்தப் பூனையை அதிகமாக நேசிப்பவர்கள் எனக் காட்டியது. ஒரு வீட்டில் இரு சகோதரர்களால் அந்தப் பூனை அன்புடன் வளர்க்கப்படுவதாக அனுமானிக்க முடிந்தது.
‘டொக்டர் இந்த ஸ்ரார் பேபியின் தலையில் ஒரு கட்டி உள்ளது’ என சுட்டிக் காட்டியதும் அது என்ன என்பதை சுந்தரம்பிள்ளை உடனடியாகப் புரிந்து கொண்டான்.
‘இது வேறு ஒரு பூனையின் கடியால் வந்தது. இந்த கட்டியில் இருந்து சிதலை எடுக்கவேண்டும். இதை இலகுவாக எடுக்க முடியும். ஆனால் நீங்கள் வெளியில் இருப்பது நல்லது. பூனையை பிடித்துக்கொள்ள எனக்கு ஒரு நேர்சின் உதவி வேண்டும்.’
‘நாங்கள் உதவி செய்கிறோம். எங்களுக்கு பிடிப்பதற்கான திடகாத்திரம் உள்ளது’ என உதவியாக வந்தவர் தனது கைகளை மடக்கி புஜபலத்தை காட்டினார்.
வீங்கிப்புடைத்திருந்த அந்தக் கைகளால் பூனையை மட்டுமல்ல பெரிய புலியைக் கூடப் பிடிக்கக் கூடிய பலம் பொருந்தியது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
இந்த நேரத்தில் சாம், பின் பகுதியால் உள்ளே வந்ததால் அவர்களது உதவியை நேரடியாக நிராகரிக்காமல் ‘எனது நேர்சுக்கு இதற்குதான் வைத்தியசாலை வேதனம் கொடுக்கிறது. ஆனால் நீங்கள் இந்த அறையில் நின்று நாங்கள் செய்வதைப் பார்ப்பதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை’
‘நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்த முறை நாங்களே இதை செய்யலாம். வைத்தியரும் தேவை இல்லை. எங்களுக்கு பணமும் விரயமில்லை. ஆனால் என்ன உங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்’ எனச் சிரித்தபடி கூறினார் பூனையை கொண்டுவந்தவர்.
தனக்குள் ஒரு நமட்டு சிரிப்புடன் சாம் ‘அது நல்லதுதான் நண்பர்களே. நாங்கள் வேறு வேலை தேட வேண்டி இருக்கும். நீங்கள் ஒலிம்பிக்கு பயிற்சி எடுக்கிறீர்களா?
‘நாங்கள் ஏற்கனவே எடை தூக்கும் போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய குழுவில் தேரந்தெடுக்கப்பட்டு தற்பொழுது சிறப்பு பயிற்சிக்கு அடுத்த மாதம் கான்பரா செல்ல இருக்கிறோம்’ என இளையவாராக இருந்தவர் கூறினார்.
‘உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். எங்கள் வாழ்த்துகள்’என சாம் சொல்லி விட்டு பூனையை கையில் வாங்கினான்.
சாமின் கையில் மிருகங்கள் வரும் போது மிகவும் ஆறுதலடைந்துவிடும். அவன் செல்லப்பிராணிகளை கைகளில் எடுக்கம் போது அவைகள் அரை மயக்கத்தில் கண்ணை மூடிவிடும். மிருகங்களை தூக்குவது ஒரு கலை. ஓவ்வொரு மிருகத்தையும் வெவ்வேறு விதமாக தூக்கவேண்டும். இதைவிட மிருகங்கள் மனிதர்களின் உடல் மணத்தில் அவர்களது உணர்வை புரிந்து கொள்கிறது. முக்கியமாக குதிரைகள் நாய்கள் மனிதர்களின் பயத்தை இலகுவாக தெரிந்து கொள்ளும். இதே போல் பூனைகளாலும் தங்களுக்கு ஆறுதலளிக்கும் இடங்களையோ ஆபத்தான இடங்களையோ புரிந்து அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.
சாம் மேசையில் வைத்து அந்த ஸ்ரார் என்ற கறுப்பு பூனையை பிடித்த போது ‘இந்த கட்டியின் முனையில் சிறிய கீறல் ஏற்படுத்தினால் முழுச் சீழும் வடிந்துவிடும். அதைச் சுத்தப்படுத்தி அன்றிபயற்றிக் தருவோம்’எனக் கூறினான். இரண்டு இளைஞர்களும் பரிசோதனை மேசையில் இருந்து விலகி நின்றார்கள்.
சுந்தரம்பிள்ளை கூரான பிளேட்டால் கட்டியின் கனிந்த பகுதியில் மெதுவாக வெட்டியதும் இரத்தம் கலந்த சீழ் வெளியே வந்தது. அந்தச் சீழைப் பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய போது அருகில் இரண்டு பெரிய இடியோசை போன்ற சத்தங்கள் அடுத்தடுத்தபடி கேட்டது. நிமிர்ந்து பார்த்த போது இரண்டு இளைஞர்களும் இப்பொழுது நிலத்தில் மயக்கமாக கிடந்தார்கள். இரண்டு மல்லர்கள் மல்யுத்தத்தின் இறுதியில் விழுந்து கிடப்பது போல் இருந்தது. மல்யுத்தச் சண்டையில் தோற்ற மல்லர் மட்டுமே விழுந்து கிடப்பார்கள். வென்றவர் நின்றுகொண்டிருப்பார். இங்கே அதுதான் வித்தியாசம். குனிந்து பார்த்தபோது நெஞ்சுப்பகுதியை பார்த்தபோது அவர்களது சுவாசம் தெளிவாகவும் சீராக இருந்தது.
சுந்தரம்பிள்ளை பூனையை விட்டு விட்டு பக்கத்து தண்ணீர் குளாயில் இருந்து இரண்டு கைகளால் குளிர்ந்த தண்ணீரை எடுத்து இருவரது முகத்திலும் தெளித்த போது இருவரும் இப்பொழுதுதான் நித்திரையிலிருந்து எழுவது போல் பரக்க பரக்க எழுந்தார்கள்.
‘நான் ஸ்ராரை விட்டு விட்டு உங்களுக்கு மருத்துவம் பார்க்கும் நிலை வந்து விட்டதே. ஆனால் ஸ்ராரின் வைத்தியத்துக்கு பணம் கொடுத்தால் போதுமானது ’ சுந்தரம்பிள்ளை சிரித்தபடி
‘மன்னிக்க வேண்டும்’ என்றபடி ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள்.
அந்த சிரிப்பில் சங்கடம் அவமானம் கலந்து, குறும்பு செய்து அகப்பட்ட பாடசாலை சிறுவர்கள் போல் நெளிந்தார்கள்
‘உங்கள் ஸ்ராரை நீஙகள் கையில் பிடித்தீர்கள் என்றால் நான் மருந்து எடுத்து தருகிறேன்’ என சாம் அவர்கள் கையில் கொடுத்தான்.
‘எதாவது தேனீர் அல்லது காப்பி அருந்துகிறிர்களா’ என்று மீண்டும் சாம் கேட்ட போது சிவந்த முகங்களுடன் ‘வேண்டாம்’ என்றார்கள்.
‘அடுத்த முறை நீங்கள் வந்தால் உங்களை வெளியில் இருக்க வைத்துவிட்டுதான் உங்கள் பூனைக்கு வைத்தியம் செய்ய வேண்டும்’ என சொல்லி மருந்துகளை இளையவனது கையில் கொடுத்தான் சாம்‘ஒலிம்பிக்கில் உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துகள’என சொல்லி அவர்களை வெளியனுப்பினான்

பின்னூட்டமொன்றை இடுக