தமிழுக்கு அமுதென்று பேர் எனச்சொன்ன தமிழகமும்
இலங்கையில் சிங்களக்கிராமங்களும்
முருகபூபதி
அதிகாலையே புறப்பட்டால்தான் வவுனியாவுக்கு காலை 9 மணிக்குள் சென்றடையலாம் என்று வேன் சாரதிக்கு முதல்நாளே சொல்லியிருந்தேன். இலங்கை செல்லும்சமயங்களில் எனக்கு பயணங்களில் அந்த சாரதிதான் வழித்துணை.
அவர் எனது மனைவியின் முன்னாள் மாணவன். அதனால் குடும்ப நண்பருமானவர். பெயர் அலென். அவரது தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்புக்கு வந்து புடவைக்கடை நடத்தியவர். அதனால் அவர் தனது குடும்பத்துடன் நீர்கொழும்பு வாசியானவர்.
அலென் அதிகாலை மூன்று மணிக்கே வந்துவிட்டார். எனது தங்கையின் மகள் திருமணம் முடித்தவழியில் உறவினரான முன்னாள் ஆசிரியை கெங்காதேவியின் மகன் சஞ்சையும் இந்தப்பயணத்தில் எம்முடன் இணைந்துகொண்டார். அவர் கொழும்பில் ஒரு தனியார் கல்லூரியில் படிப்பவர்.
மருந்து மாத்திரைகளுடன் நான் பயணிப்பதனால் எனது நலன் கருதி என்னை தனியே வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு வீட்டில் விருப்பம் இல்லை. அதனால் அவர்களின் ஆறுதலுக்காக சஞ்சையை அழைத்தேன். காலை உணவும் வீட்டிலேயே தயாரித்து எடுத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
காலை ஏழுமணிக்குள் காலை உணவு உட்கொண்டால்தான் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளமுடியும். வழியில் அந்த வேளையில் உணவுக்கு சிரமப்படநேரிடும். கடந்த முறை வீதியோர ஹோட்டல் ஒன்றில் சுடச்சுட அப்பம் வாங்கிச்சாப்பிடவிரும்பியபோது எனக்கு கசப்பான அனுபவம் கிட்டியிருந்தது.
அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கையில் சிகரட்டை வைத்துக்கொண்டு புகைவிட்டவாறு மறுகையால் அப்பம் சுட்டார். புகைவிடும் சிகரட்டை வைத்திருந்த கையாலேயே அப்பத்தையும் எடுத்து சுற்றித்தந்தார். எனக்கு வயற்றைக்குமட்டியது.
பணம்கொடுத்து வாங்கியதை சாப்பிடாமல், பட்டினியோடு அந்தப்பயணம் தொடர்ந்தமையால் இம்முறை முன்னெச்சரிக்கையாகவே வீட்டிலிருந்து உணவை எடுத்துவந்தேன்.
பருவகாலங்கள் அரசியல்வாதிகளின் வாக்குப்போன்று அடிக்கடி பொய்த்துப்போகும். இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பருவகாலம், மனிதர்களின் பருவகாலம் போன்று நம்பமுடியாத திருவிளையாடல்களை காண்பிக்கவே செய்கின்றன.
இலங்கையில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியான மழை. போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்த டிசம்பர் மாதம். காலைவேளையில் மார்கழிக்குளிர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு தகவல் அமர்வு ஒன்றுகூடல்கள் டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளின் விடுமுறைக்கு முன்பதாக நடத்தவேண்டும் என்பது எமது நிகழ்ச்சித்திட்டம்.
வவுனியா பல்கலைக்கழக வளாக மாணவர்களின் நிகழ்ச்சி காலை பத்துமணிக்கு. அதனை முடித்துக்கொண்டு முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரிக்குச்செல்லவேண்டும். இரவு அந்தக்கல்லூரியில் தங்கியிருந்து மறுநாள் காலை அங்குள்ள மாணவர்களை சந்தித்து நிதிக்கொடுப்பனவுகளை வழங்கிவிட்டு போர் நடந்த பிரதேசங்களுக்குச்செல்லவேண்டும். அதன்பிறகு கிளிநொச்சிக்குப்பயணமாகவேண்டும்.
இரண்டு நாள் நிகழ்ச்சிநிரல் எந்தவித சிக்கலும் இல்லாமல் நிறைவேறினால்தான் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லமுடியும்.
கடந்த 2011 தொடக்கத்தில் முல்லைத்தீவுக்கு வந்து தைப்பொங்கல் தினத்தன்று நிகழ்ச்சியை நடத்தியபோதும் அடைமழைதான். மழைவெள்ளத்துக்கூடாக பயணிப்பதில் இருக்கும் சிரமம் அனுபவித்தவர்களுக்குப்புரியும்.
போருக்குப்பின்னர் மழைக்காலங்களில் அகதிமுகாம்களில் மக்கள் பட்ட கொடுந்துயரங்கள் நினைவுக்கு வந்தன. இயற்கையும் எங்கள் மக்களை பல சந்தர்ப்பங்களில் வஞ்சித்திருக்கிறது.
சாரதி அலன் வேகமாகவே வேனை செலுத்தினார். அவருக்கருகில் முன் ஆசனத்தில் அமர்ந்தவாறு அடிக்கடி அவரது வேகத்தை நிதானப்படுத்தினேன். எனினும் இருள்கவிந்த ஒரு வளைவில் அவரது நிதானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. வீதியோரத்தில் மறைந்திருந்த போக்குவரத்துதுறை பொலிஸார் வாகனத்தை நிறுத்திவிட்டார்கள். இனியென்ன…நடக்கும்?
சுமார் அரைமணிநேரம் தாமதம். தண்டம்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் கொழும்பு – யாழ் ஏ 9 வீதியில் பயணிக்கவிரும்பும் புலம்பெயர்ந்து வாழும் அன்பர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்பதற்காகத்தான். இருள்கவிந்த இடங்களில் மறைந்திருக்கிறார்கள் பொலிஸார்… அது அவர்களது நன்மைக்காக மட்டுமல்ல எங்களது நன்மைகளுக்காகவும்தான்.
மகிந்தர் பதவிக்கு வந்ததும் இலங்கையின் பல பிரதேசங்களில் வீதிகள் அழகாக செப்பனிடப்பட்டுவிட்டன. அதனால் விபத்துக்களும் அதிகரித்துவிட்டன. பொலிஸாரின் கண்காணிப்பும் உக்கிரம்.
புத்தளத்தைக்கடந்து அநுராதபுரம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறோம். அப்பொழுது காலை ஏழுமணியிருக்கும். வெளியே மழை பெய்கிறது.
வீதியோரத்தில் சுமார் எட்டு வயது நிரம்பிய ஒரு சிறுவன் பள்ளிச்சீருடையுடன் வந்துகொண்டிருந்த பஸ்வண்டியை நிறுத்துவதற்கு கை நீட்டுவதை தூரத்திலிருந்தே அவதானித்தேன். ஆனால் அது கடுகதி பஸ்ஸாக இருக்கவேண்டும். நிற்கவில்லை. அந்த மாணவன் ஏமாற்றத்துடன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு மழையில் நனைந்தவாறு மெதுவாக நடக்கிறான்.
“ அந்தச்சிறுவனை ஏற்றிக்கொண்டு போவோம்” என்று சாரதி அலெனிடம் சொன்னேன்.
“ அங்கிள் நானும் நினைத்தேன்… நீங்களும் சொல்கிறீர்கள்” என்றார்.
வாகனத்தை நிறுத்தி அந்தமாணவனை ஏற்றிக்கொண்டோம். என்வசம் இருந்த ரிசுபேப்பர்களை கொடுத்து தலையை துடைத்துக்கொள்ளச்சொன்னேன்.
“ ஸ்தூத்தி (நன்றி)” என்றான்.
அவனுடன் சிங்களத்தில் உரையாடினேன். அவனது தந்தை ஒரு விறகுவெட்டி. வீட்டில் ஒரு அக்கா இருக்கிறாள். தாய் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண் வேலைக்குப்போயிருக்கிறாள். அவனது பாடசாலை அநுராதபுரம் வீதியில் அவனது வீட்டிலிருந்து சுமார் ஆறுகிலோ மீற்றர் தூரம். தினமும் பஸ்ஸில் சென்று திரும்புவதற்கு 15 ரூபாய் செலவிடுகிறான்.
“ இனிவிடுமறை காலம் அல்லவா? பரீட்சைகள் முடிந்துவிட்டனவா?” எனக்கேட்டேன்.
“ இன்றைக்குத்தான் கடைசிப்பரீட்சை இரண்டு நாட்களில் விடுமுறை தொடங்குகிறது”
“ இன்று என்ன பாடத்தில் பரீட்சை?”
“ இன்று தமிழ்ப்பாடத்தில் பரீட்சை” என்றான்.
நானும் சாரதியும் உடன்வந்த சஞ்சையும் வியப்புற்றோம். அந்தச்சிறுவனின் பதில் எங்களுக்கு முற்றிலும் எதிர்பாராதது.
“ தமிழ் படிக்கச்சிரமமா?” எனக்கேட்டேன்.
“ கொஞ்சம் சிரமம்தான். ஆனால் படிக்கமுடியும்.” என்று அவன் நம்பிக்கை தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.
பாடசாலைக்கு முன்பாக அவனை இறக்கிவிட்டபோது “ அடுத்த தடவை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழில் பேசுவோம்” என்றேன்.
“ ஹரி மஹத்தையா..போஹோம ஸ்தூத்தி” என்று சொல்லிவிட்டு அவன் கையசைத்தவாறு விடைபெற்றான்.
சிங்களத்தில் ஹரி என்றால் தமிழில் சரி என்று பொருள். நாம் மேசை என்கிறோம் அவர்கள் மேசைய என்கிறார்கள். நாம் பெட்டி எனச்சொல்வதை அவர்கள் பெட்டிய என்கிறார்கள். நாம் பேனை என்பதை அவர்கள் பேனைய என்கிறார்கள்.
இப்படி தமிழுக்கும் சிங்களத்திற்கும் இடையே நிறைய பொருத்தப்பாடான பல சொற்கள், வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கின்றன.
தற்பொழுது தென்னிலங்கையில் ஏராளமான சிங்களப்பாடசாலைகளில் தமிழ் ஒரு பாடமாகக்கற்பிக்கப்படுகிறது. 1970 களில் கம்பஹா மாவட்டத்தில் பல பௌத்த பிக்குகளுக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நான் தமிழ்ப்பாட வகுப்புகள் நடத்தியிருக்கின்றேன். அதுபோன்று 1980 களில் அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் கொழும்பில் மருதானையில் அமைந்துள்ள பௌத்தவிஹாரையில் பல பிக்குகளுக்கு தினமும் மாலைவேளையில் தமிழ் கற்பித்திருக்கின்றேன்.
அக்காலப்பகுதியில் சிஹலஉருமைய, பொதுபலசேனா முதலான அமைப்புகள் இருக்கவில்லை. இந்த அமைப்புகள் உருவானதன் பின்னணி பற்றி எழுதுவதற்கு பல ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையில் எத்தனையோ சிங்கள அரசியல் தலைவர்களைப் பார்த்துவிட்டோம். ஆனால் இன்றைய ஜனாதிபதி மகிந்தர் போன்று தமிழ்பேசுவதற்கு எத்தனைபேர் அக்கறைகொண்டார்கள். அவர் ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ எழுதிவைத்துக்கொண்டு தமிழில் பேசுவதாகவே பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர் தமிழ் கற்பது எத்தனை பேருக்குத்தெரியும். தமிழில் பொதுநிகழ்வுகளில் பேசும்பொழுது ஏதும் தவறுவிட்டாலும் அருகில் தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுத்திருத்திக்கொள்கிறார்.
அவரைப்பார்த்து தானும் தமிழ்பேசுவதற்கு தேர்தல்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முயன்றவர்தான் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்கா. ஆனால் அவர் என்ன தமிழில் பேசினார் தெரியுமா…” மகிந்தா வீட்டுக்குப்போடா…கோத்தபாயா வீட்டுக்குப்போடா..”
யாழ்ப்பாணத்தில் அதனைக்கேட்ட தமிழ்மக்கள் சிரித்தார்கள். ஆனால் எதற்கு என்பதுதான் தெரியவில்லை.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக காலம்பூராவும் குரல்கொடுத்துவரும் சில சிங்களத்தலைவர்களுக்கும் தமிழில் பேசமுடியவில்லை. ஆனால் மூவின மக்களுக்காகவும் தொடர்ச்சியாகப்பேசிவரும் மனோகணேசன் என்ற தமிழ் அரசியல் தலைவர் சிங்களத்தில் சரளமாகப்பேசுவார்.
மினுவாங்கொடையில் தமிழ்கற்கும் சிங்கள மாணவர்கள் சிலரை, அங்கு கொரஸ என்ற கிராமத்தில் நடந்த எனது தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் மதகசெவனெலி வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம், பின்னர் கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தமிழ் – சிங்கள, சிங்கள – தமிழ் அகராதி நூல்களை வாங்கி அனுப்பினேன்.
அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் எம்மவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் வெள்ளை இன அரசியல் தலைவர்கள் தமது உரையின் தொடக்கத்தில், “வணக்கம்” என்று மாத்திரம் சொல்லிவிட்டு பிறகு ஆங்கிலத்தில் தமது உரையை ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் “நன்றி, வணக்கம்.” எனச்சொல்கிறார்கள். அதனைக்கேட்டு எம்மவர்கள் உள்ளம்பூரிக்க கரகோசம் எழுப்புகின்றனர்.
எமது தாய்மொழியை பிற இனத்தவர் பேசும்போது உச்சரிப்பில் மழலைத்தன்மை இருந்தபோதிலும் நாம் உள்ளம்பூரிக்கின்றோம்.
அன்று புத்தளம் – அநுராதபுரம் வீதியில் முற்றிலும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் சிங்கள மாணவர்கள் எமது தமிழ் மொழியை கற்கிறார்கள் என்பது அறிந்தபொழுது நானும் உள்ளம்பூரித்தேன்.
ஆனால், தமிழுக்காக தீக்குளிக்கும் அளவுக்கும் அடையாள உண்ணாவிரத சம்பிரதாயங்கள் தொடரும் அளவுக்கும் உணர்ச்சிப்பெருக்கில் வாழும் தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் அரிதாவதைப்பார்த்து என்னசொல்வது? தமிழுக்கு அமுதென்றுபேர் என்ற வரிகள் பாரதிதாஸனின் கவிதையுடன் நின்றுவிட்டதா?
நாம் வவுனியாவை வந்தடையும்பொழுது வானம் வெளுத்திருந்தது.
(பயணங்கள் தொடரும்)

பின்னூட்டமொன்றை இடுக