முருகபூபதி – அவுஸ்திரேலியா
சொல்லமறந்த கதைகள் 16
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. இதனை இயற்றிய கவியரசு கண்ணதாஸன் கூட ஒருகாலத்தில் பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்து நாத்திகம் பேசியவர்தான்.
ஆனால் காலப்போக்கில் ஒரு ஆத்மீகவாதியானார். சொர்க்கத்திற்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியும் எழுதியுமிருப்பவர்.
எனினும் அவர் மறைந்தகாலத்தில் அவரின் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் இருந்தன. மதநம்பிக்கை என்பது அவரவர் வாழ்வு சம்பந்தப்பட்டது. மனமாற்றம் போன்று மதமாற்றங்களும் தவிர்க்கமுடியாதவைதான். நீதிச்சட்டங்களினாலும் தடுத்துவிடமுடியாது.
மதத்தை அவமதித்ததற்காக தண்டனை பெற்றவர்களும் நாடுகடத்தப்பட்டவர்களும் தலைமறைவாக வாழ்பவர்களும் உலகெங்கும் பேசப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தில் சங்கிலி மன்னன் காலத்தில் இந்து மதத்திலிருந்து விலகி கத்தோலிக்க மதத்தை தழுவிய குற்றத்திற்காக நூற்றுக்கணக்கானோர் மன்னார் கரிசல் பிரதேசத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இன்றும் அந்த மறைந்த ஆத்மாக்களுக்காக அங்கே தேவசாட்சிகள் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது.
கிழக்கிலங்கையில் பள்ளிவாசலில் புலிகளினால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
நவாலி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடந்து பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
யுத்தகாலத்தில் பல வழிபாட்டுத்தலங்கள் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன.
ஓப்பரேஷன் புளுஸ்டார் நடவடிக்கையின்போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் தாக்குதலுக்குள்ளானது. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் சிலவற்றில் இந்துக்கோயில்களும் தீவைப்புக்கு இலக்காகித்தானிருக்கின்றன.
ஆனால் இச்சம்பவங்களுக்கான காரணங்கள் வேறு.
இனக்கலவரங்கள் போன்று மதக்கலவரங்களும் உளவியல் சார்ந்ததுதான். கடந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகெங்கும் புதிய புதிய நோய்கள் தோன்றியிருப்பதுபோன்று புதுப்புது சமயங்களும் புதுப்புது சாமியார்களும் தோன்றிவிட்டார்கள். நோயாளிகள் மருத்துவமனைகளுக்கும் சாமியார்கள் நீதிமன்றங்களுக்கும் சென்றுவருகிறார்கள். ஊடகங்கள் செய்திகளை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. யூ டியூபுகளும் பரப்புரையில் ஈடுபடுகின்றன.
அவுஸ்திரேலியாவில் பலவருடங்கள் வெளியான உதயம் ( தமிழ், ஆங்கிலம்) இருமொழி மாத இதழில் ஒரு செய்தி எனது சிந்தனையில் ஊடுறுவியது.
செய்தி இதுதான்:-
மெல்பன் மருத்துவமனையில் ஒரு முதிய இந்து தமிழ் அன்பர் நோயுற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். அது அவரது அந்திம காலம். அதனைத்தெரிந்துகொண்ட அவர் தேவாரம் திருவாசகம் தெரிந்த ஒருவரை வரவழைத்து தனக்கு அருகில் இருந்து பாடச்சொல்ல முடியுமா என்று தனது இறுதிவிருப்பத்தை அங்கிருந்த தாதியரிடம் சொல்லியிருக்கிறார். வேற்று மதத்தைச்சேர்ந்த தாதியர் அந்த அன்பரின் விருப்பத்தை நிறைவு செய்ய அவரது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் தேவாரம் திருவாசகம் பாடத்தெரியாது. இங்கிருக்கும் பிரபல இந்துக்கோயிலுடன் தொடர்புகொள்ளச்சொல்லி தாதியருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
தாதியரும் குறிப்பிட்ட பிரபல சிவா-விஷ்ணு கோயிலுடன் தொடர்புகொண்டு தேவாரம், திருவாசகம் தெரிந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள்.
“ இதுபோன்ற சமூகப்பணிகளில் தங்கள் கோயில் ஈடுபடுவதில்லை” என்ற பதில்தான் கிடைத்துள்ளது. அதனால் தாதியர் மட்டுமல்ல காலம்பூராவும் இந்து சமயத்தில் நம்பிக்கைவைத்து வாழ்ந்துவந்த அந்த அன்பரும் ஏமாற்றமடைந்தார். சில நாட்களில் அவர் இறைவனடி சேர்ந்தார்.
எனது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தையும் இங்கு இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்யவிரும்புகின்றேன்.
எனக்கு சிலவருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு வந்து சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சில நாட்களில், சத்திரசிகிச்சைக்காக நாள்குறித்துவிட்டு வீட்டுக்குச்சென்று ஓய்வு எடுக்குமாறு அனுப்பிவிட்டார்கள்.
ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து எனது மனைவிக்குத்தெரிந்த ஒரு சாயிபாபா பக்தை மெல்பன் வந்து, என்னையும் பார்க்க வந்தார். எனது உடல்நலக்குறைவு பற்றி அறிந்தவுடன், தனக்கு முன்னே என்னை அமரச்செய்துவிட்டு பிரார்த்தனைசெய்தார். பிறகு சாயிபாபா தனக்குத்தந்த திருநீற்iறை ஒரு சிறியபையிலிருந்து எடுத்து எனது நெற்றியில் பூசிவிட்டு, சுகமாகிவிடும் சத்திரசிகிச்சையே அவசியமில்லை என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
இந்த அதியற்புத அதிசய தகவலை எனது மருத்துவர்களுக்கு என்னால் சொல்லத்தான் முடியுமா?
உரியநாளில் நானும் சத்திரசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சத்திரசிகிச்சை திட்டமிட்டவாறு எந்த விக்கினமும் இல்லாமல் நடந்தேறியது. எனக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை அளித்த இருதயசிகிச்சை மருத்துவநிபுணர், தாம் வருடத்தில் சுமார் முன்னூறு பேருக்கு இந்த சத்திரசிகிச்சை செய்வதாகச்சொன்னார். அவரிடம் அந்த சிங்கப்பூர் சாயிபக்தையின் திருநீறு மகத்துவத்தை எப்படித்தான் சொல்வது?
சரி, சிகிச்சை நடந்து மறுநாள் விசேட கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனது உடலில் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் சிறிய குழாய்களும் வயர்களும் எங்கே தொடங்குகின்றன, எங்கே முடிகின்றன என்பதையும் பார்த்து ரசிக்க முடியாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டு மல்லாந்து படுத்திருக்கின்றேன்.
எனது அருகில் மனைவி, என்னையே பார்த்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறாள். சிலநாட்களுக்கு எனது நச்சரிப்பு அவளுக்கிருக்காது என்ற ஆறுதல் அவளுக்கு இருக்கக்கூடும்.
ஒரு மாலைநேரம்.
எனக்கு முன்னே ஒருவர் தோன்றினார். எனது பெயரை சிரமப்பட்டு விசாரித்துக்கொண்டு வந்திருக்கிறார். அவுஸ்திரேலியாவில் எங்கள் பெற்றோர் சூட்டிய பெயர் பெரும்பாலும் வழக்கத்திலிருக்காது. எனது தந்தையின் பெயரையே ளுரச யேஅந ஆக பாவித்துவிடுவார்கள். அனுமதிக்கப்பட்டிருப்பது லெட்சுமணனா? அல்லது முருகபூபதியா? என்ற கவலையுடன் அவர் ஒவ்வொரு வார்டுகளையும் சுற்றியலைந்துவிட்டு வந்து எனது மனைவியிடம் எனது பெயரைக்கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு எனது கட்டிலருகே வந்தார்.
வந்தவரை அதற்கு முன்னர் நான் சந்தித்ததில்லை. அவரது கரத்தில் சிறிய வேதாகமப்புத்தகம். எனக்காக ஜெபம் செய்யவந்திருப்பதாகச்சொன்னார்.
சரிதான்… வீட்டுக்கு வந்தவர் திருநீறுடன் வந்தார்.
மருத்துவமனைக்கு வந்திருப்பவர் வேதாகமத்துடன் வந்திருக்கிறார். அடுத்து இனி யார் வரப்போகிறார்கள் என்ற கவலை நெஞ்சை அரித்தது. எரித்தது. எனினும் மீண்டும் மாரடைப்பு வராது என்ற நம்பிக்கையும் பிறந்தது.
அவர் கண்மூடி ஜெபம் செய்தபின்பு, “ உங்களை இங்கே யார் அனுப்பியது?” என்று மெதுவாகக்கேட்டேன். எனக்கு நன்கு தெரிந்த ஒரு அம்மணியின் பெயரைச்சொன்னார். எனது சுகத்திற்கு ஜெபம் செய்துவிட்டு வருமாறு அந்த அம்மணிதான் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
சிலநாட்களில் சுகமாகி வீடுதிரும்பியிருந்தேன். ஒரு நாள் பகல்பொழுது இரண்டு பெண்கள் தாம் ஜகோவாவின் சாட்சிகள் அமைப்பிலிருந்து வந்திருப்பதாக சொல்லிக்கொண்டு உட்பிரவேசிக்க முயன்றார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன்.
அவர்கள் சென்றபிறகு மனைவியின் முகத்தைப்பார்த்தேன்.
“ பரவாயில்லை அக்கறையுள்ள பெண் ரசிகர்களை சம்பாதித்துவிட்டீர்கள்…” என்றாள்.
“ இதயச்சிகிச்சையின் பலன் இதயக்கனிகள்தானோ?” என்றேன்.
இத்தனை வேடிக்கைகள் வெளியுலகில் நடந்துகொண்டிருக்கையில், இவை எதுவுமே தெரியாமல் மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு கூடங்களிலும் பல மருத்துவர்கள், நிபுணர்கள் இரவு பகலாக கண்விழித்து சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டு அமைதியாகவும் நிதானமாகவும் மனித உயிர்களை காப்பாற்றிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
இந்தச்சம்பவங்களின் பின்னணியில் நம்பிக்கை என்ற சிறுகதையை மல்லிகையில் எழுதியிருக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு இங்குள்ள இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வட-கிழக்கில் இந்திய அமைதிப்(?)படை நிலைகொண்டிருந்தது.
வந்திருந்த படையினரில் சிலர் மச்சம் மாமிசம் சாப்பிடாதவர்கள். போரில் மனித உயிர்களை குடிக்கநேர்ந்தாலும் உணவில் மாமிசத்தை தவிர்த்துக்கொள்வதில் ஆச்சரியம் இல்லைத்தான். யூத இனத்தை வேரோடு அழிக்க முனைந்த ஹிட்லர் கூட மச்சம், மாமிசம் சாப்பிடவில்லை.
குறிப்பிட்ட சில சைவபோசன இந்தியப்படையினருக்கு ஒருவேளை உணவு தந்த குற்றத்திற்காக ஒரு இந்துகுருக்கள் குடும்பத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் அச்சுவேலிக்கு சமீபமாக நடந்திருக்கிறது.
அந்த இளம் தம்பதியரின் சில குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அநாதரவானார்கள். அவர்களின் சிறியதாயார் அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்க நேர்ந்துள்ளது. எமது கல்வி நிதியத்திற்கு குறிப்பிட்ட சிறியதாயார் அத்தாட்சி ஆவணங்களை அனுப்புவதற்கு முன்னர் ஒரு ஏரோகிராமில் தங்கள் நிலை குறித்து சுருக்கமாக எழுதி அனுப்பியிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குழந்தையின் கல்விச்செலவை பொறுப்பேற்பதாகவும் கல்வி கற்கும் பாடசாலை விபரங்களை அனுப்பிவைக்குமாறும் பதில் எழுதியிருந்தேன்.
அந்தக்கடிதம் அந்த சிற்றன்னையின் கரத்தில் கிடைத்த தருணம் புலிகள்- இந்தியப்படைகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது.
புலிகள் பிரேமாதாஸாவுடன் கொழும்பில் சந்திப்பு தொடங்கியதும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் இயக்கமும் முடிவுக்கு வந்து, இந்தியப்படைகளுடன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து கப்பல் ஏறிவிட்டார்.
ஒரு முதலமைச்சரே கப்பல் ஏறும்பொழுது ஏற்கனவே புலிகளினால் பாதிக்கப்பட்ட அந்தக்குழந்தைகளும் சிற்றன்னையுடன் கப்பல் ஏறிவிட்டது அதிசயம் அல்ல. தமிழ்நாடு மண்டபம் முகாமுக்கு இடம்பெயர்ந்த அந்த சிற்றன்னை, மறக்காமல் தன்னுடன் எமது மாணவர் கல்வி நிதிய முகவரியையும் எடுத்துச்சென்று விரிவான கடிதமும் இதர ஆவணங்களும் அனுப்பியிருந்தார்.
அந்தக்குடும்பத்தில் ஒரு குழந்தையின் கல்விச்செலவை நான் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு ஒருதடவை பணம் அனுப்பிக்கொண்டிருந்தேன். அந்த சிற்றன்னை தங்களின் குடும்பப்பின்னணிகளையும் கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தார். கடிதங்கள், கடவுள் துணை, முருகன் துணை, ஓம் சிவமயம் என்றுதான் தொடங்கியிருக்கும்.
எமது கல்வி நிதியம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்குவதற்கு, தான் தினமும் கடவுளை பிரார்த்திப்பதாகவும் எழுதியிருப்பார். அக்கடிதங்கள் உணர்ச்சியின்பாற்பட்டது. உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா? என்றெல்லாம் எழுதுவார்.
பாதிக்கப்பட்டிருந்தவேளையில் எங்கள் நிதியத்தின் சிறுஉதவி அவருக்கு பெரிதாகப்பட்டிருக்கிறது.
சிலவருடங்களில் அந்தக்குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. எமது உதவியும் தொடர்ந்தது.
ஒருசமயம் நானும் எனது நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்த சிற்றன்னைக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக்கொள்ள நிதியுதவி செய்தோம். அதன்பிறகு தமிழகம் சென்னைக்கு தலயாத்திரை சென்ற ஒரு குடும்ப சிநேகிதி ஊடாக அந்தக்குடும்பத்தினருக்கு உடுபுடவைகளும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அந்த சிநேகிதியும் நேரில் சந்தித்து தனது தரப்பிலும் உதவிகளை வழங்கிவிட்டு திரும்பி வந்து தகவல் சொன்னார்.
இறுதியாக அந்தக்குடும்பம் சென்னைக்கு அருகில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு சமீபமாக வசித்தார்கள். அக்காலப்பகுதியிலும் கடிதத்தொடர்புகள் இருந்தன. நிதியுதவியும் தொடர்ந்தது. படித்த பெண்ணான அந்தச்சிற்றன்னை தனது சுயமுயற்சியால் ஒரு மரக்காலையில் எழுவினைஞர்- தட்டச்சாளர் வேலையையும் பெற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில் கடவுள் துணை, முருகன் துணை, ஓம் சிவமயம் என்றெல்லாம் தொடங்கும் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தவரின் கடிதங்களில் திடீர் மாற்றம் அதிசயமாக நிகழ்ந்தது.
இயேசு இரட்சிப்பார் என்று தொடங்கும் கடிதங்கள் வரத்தொடங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கையில் வடக்கில் அச்சுவேலியில் இந்துக்கோயிலுக்கு பூமாலை கட்டிக்கொடுத்த குருக்கள் சமூகத்தில் வந்த பெண்ணில் ஏற்பட்ட அந்த மாற்றத்தின் பின்னணியை எனது படைப்பாளி, பத்திரிகையாளன் உணர்வு அறியத்துடித்தது.
எனக்குக் கிடைத்த ஒரு பதிலில், கருங்கல்லினால் பிள்ளையார் சிலையும் வடிக்கலாம். அம்மிக்குழவியும் செய்யலாம் என்றிருந்தது.
எனக்குப்புரிந்துவிட்டது. ஒரு சமயப்பிரிவினரால் மூளை சலவை செய்யப்பட்டு அவர் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்.
ஓடும் நீர் பள்ளங்களில் வந்து நின்று தேங்கிவிடும். பாதிக்கப்பட்டவர்களும் பற்றுக்கோல்களின் துணை நாடிவிடுவார்கள்.
இலங்கையின் வடக்கில் ஒரு காலத்தில் ஆலயத்திற்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டவர்கள் மதம் மாறிய கதையை நாம் மறந்துவிடமுடியாது. அதற்கு பலகாலத்திற்கு முன்னர் மன்னார் கரிசலில் மதம் மாறிய இந்துக்கள் பலர் சங்கிலிமன்னனின் ஆணைப்பிரகாரம் தங்கள் தலைகளை இழந்த வரலாற்றையும் மறக்க இயலாது.
மதங்கள் புதிதுபுதிதாகத்தோன்றும். மதம்மாறும் படலங்களும் நீடிக்கும். நாத்திகவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஆத்மீகவாதிகளும் தத்தமது வாதங்களை தொடரத்தான் செய்வார்கள்.
ஜெயகாந்தன் ஒரு சமயம் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
பகுத்தறிவுவாதிகளை பகுத்தறிவு காப்பாற்றட்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.
—0—-
பின்னூட்டமொன்றை இடுக