சொல்லமறந்த கதை: 2

தமிழ் மூவேந்தர்களும் ருஷ்ய மன்னர்களும்

முருகபூபதி – அவுஸ்திரேலியா

ஓன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் அதிபராக கொர்பச்சேவ் பதவியிலிருந்த காலத்தில் அங்கு அவர் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை உருவாக்கினார். அதனால் சர்வதேச அரங்கில் இடதுசாரிகளிடத்தில் விமர்சனத்துக்கும் உள்ளானார். எனினும் அவர் அறிமுகப்படுத்திய மாற்றங்களை வலதுசாரிகள் விவாதத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
1985 இல் நாம் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் விழாவில் கலந்துகொள்ளச்சென்றபோது, அங்கு மக்களிடமிருந்த மாற்றங்களையும் அவதானிக்க முடிந்தது. கம்யூனிச நாடான சோவியத்தில் கொர்பச்சேவின் வருகைக்குப்பின்பு தோன்றிய மாற்றங்கள் அங்கு வரவேற்கப்பட்டன.
இரும்புத்திரையால் மறைக்கப்பட்ட தேசம் என வர்ணிக்கப்பட்ட சோவியத்தில் குருஷ்சேவ் பதவியிலிருந்தபோது நடந்த பல சம்பவங்கள், வலதுசாரிகளினால் எள்ளல் கதைகளாக புனையப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டதையும் அறிவோம். குருஷ்சேவ் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு, அவரை தண்டிக்குமுகமாக சைபீரியாவில் அமைந்த பண்ணை ஒன்றில் சாதாரண வேலைக்கும் அமர்த்தியதாக தகவல் இருக்கிறது.
கொர்பச்சேவ் காலத்தில் அங்கு மதுபாவனையில் கட்டுப்பாடு வந்தது. சோவியத் மக்கள் மதுவுக்கு அடிமையாகும் ஆபத்து தோன்றும் என்பதனால் தெருவில் குடித்துவிட்டு மதிமயங்கிவிழுந்து கிடப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். அதிலும் சுவாரஸ்யம் இருந்தது. எவ்வளவும் குடிக்கலாம். ஆனால் மயங்கிச்சரிந்து தெருவில் விழுந்துவிடக்கூடாது என்ற நிபந்தனையும் இருந்தது. விழுந்தால் நிச்சயம் கைதாகி தண்டனை அனுபவிக்க நேரிடும்.
தெருவில் ஒரு குடிகாரர் மதுபோதையில் தள்ளாடிச்சென்றால் அவர் தரையில் மயங்கிவிழும்வரையில் ஒரு பொலிஸ்காரர் அவரை பின்தொடருவாராம். பொலிஸ் பின்தொடருவதைப்பார்க்கும் குடிப்பிரியர் தள்ளாடினாலும் கீழே விழுந்துவிடாதிருக்க வீதியில் ஏதாவது ஒரு மின்கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றவாறு பின்தொடரும் பொலிஸ்காரரை கடைக்கண்ணால் பார்ப்பாராம்.
பொலிஸாரும் குறிப்பிட்ட குடிகாரர் தரையில் விழும்வரையில் கால்கடுக்க காத்துக்கொண்டு நிற்பாராம். இதெல்லாம் முன்னொருகாலத்து சுவாரஸ்யமான கதைகள்.
நாம் மாஸ்கோ சென்றபோது கைவசம் எடுத்துச்சென்ற அமெரிக்க டொலர்களை சோவியத் பணமாக மாற்றுவதற்கு அங்கிருந்த வங்கிகளுக்கு சென்றிருக்கிறோம். ஒரு அமெரிக்க டொலருக்கு அப்போது 7 ரூபிள்கள் வங்கியில் தந்தார்கள். அச்சமயம் மாஸ்கோவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் சிலர் எம்மைச்சந்திக்க நாம் தங்கியிருந்த மாஸ்கோவில் பிரசித்திபெற்ற இஸ்மாயிலோவா ஹோட்டலுக்கு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் தங்கியிருந்த அறைகளுக்கு வருவதற்கு அங்கு அனுமதியில்லை.
ஹோட்டலின் வெளியே கொங்கிறீட் தரையில் அல்லது புற்தரையில்தான் சந்தித்து உரையாடுவோம். அவர்களிடம் அமெரிக்க டொலர்களின் சோவியத் நாணயப்பெறுமதி பற்றி உரையாடும்போது, தங்களிடம் தந்தால் ஒரு டொலருக்கு 10 ரூபிள்கள் தருவதாகச்சொன்னார்கள்.
இதனைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“உங்களுக்கு அமெரிக்க டொலர் ஏன் தேவைப்படுகிறது?” என்று கேட்டேன்.
“ விடுமுறை காலத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அயல் நாடுகளுக்கு செல்வதாகவும் அங்கிருந்து திரும்பிவரும்போது சிறந்த வாசனைத்திரவியங்களான பெர்ஃபியூம்கள் கைக்கடிகாரங்கள் வாங்கிவந்து இங்குள்ளவர்களுக்கு விற்பதாகவும். அதனால் தமக்கு இலாபமும் இருக்கிறது.” என்றார்கள்.
சோவியத் நாட்டில் கிடைக்கப்பெறாத, அம்மக்களினால் தரத்தில் உயர்ந்தது எனக்கருதப்படுவனவற்றை எமது இலங்கை மாணவர்கள் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் கொர்பச்சேவ் பதவியிலிருந்தார். கட்டுப்பர்டுகள் தளர்ந்து சோவியத் சரிந்துகொண்டிருந்த காலத்தை அங்கு ஓரளவு அவதானிக்க முடிந்தது.
சோவியத்தின் ராதுகா பதிப்பகத்தில் உக்ரேயின் படைப்பாளியும் மொழிபெயர்ப்பாளருமான தமிழ் அபிமானி கலாநிதி விதாலி ஃபூர்ணிக்கா பணியிலிருந்தார். எனது மிகுந்த நேசத்துக்குரிய நண்பர். இலங்கையிலும் தமிழகத்திலும் அவருக்கு பல இலக்கியநண்பர்கள். தமிழ்நாட்டில் தமிழை அவர் பயின்ற காலத்தில் அவருடைய ஆசான்களில் ஒருவர்தான் அறிஞர் மு.வரதராசன். ஜெயகாந்தனின் ஆத்ம நண்பர். ஜெயகாந்தனின் படைப்புகளை ருஷ்ய மொழியில் மொழிபெயர்த்தவர். அதன் மூலம் ஜெயகாந்தனின் சோவியத் மொழிபெயர்ப்பு நூல்களுக்காக ரோயல்டி கிடைக்க வழிவகுத்தவர். இவரைப்பற்றி ஜெயகாந்தன் நட்பில் பூத்த மலர் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
இலங்கையிலிருந்து மாஸ்கோவுக்கு புறப்படும் முன்னர் நண்பர் ஃபூர்ணிக்காவுக்கு எனது வருகை பற்றி கடிதம் எழுதியிருந்தேன். மொழிதெரியாத அந்த நாட்டில் எனது தனிப்பட்ட பயணங்களுக்கு என்னுடன் வந்தவர் அச்சமயம் அங்கு கல்வி பயின்ற நண்பர் பாண்டியன். இவர் இலங்கையில் புகழ்பூத்த கவிஞர் மகாகவியின் மூத்த புதல்வர். கவிஞர் சேரனின் அண்ணன்.
ஃபூர்ணிக்காவுடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவரைப்போன்று தமிழ் தெரிந்த சோவியத் குடிமகன் ஒருவர் இலங்கையில், கொழும்பில் சோவியத் தூதரக தகவல் பிரிவில் பணியாற்றுவதாக தகவல் சொன்னார். இலங்கை சென்றதும் அவரைச்சந்திக்குமாறு ஒரு காகிதத்தில் அந்தத் தோழரின் பெயரையும் எழுதித்தந்தந்தார். ஃபூர்ணிக்காவின் நினைவாக, தமிழில் எழுதப்பட்ட அந்த காகிதத்தையும் இன்றுவரையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன். ஃபூர்ணிக்காவின் திடீர்மறைவு என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் பற்றி எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் தனி அத்தியாயத்தில் விரிவாகப்பதிவு செய்துள்ளேன்.
இலங்கை திரும்பியதும் கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் பணியாற்றிய நண்பர்கள் ஊடாக குறிப்பிட்ட சோவியத் அதிகாரியை சந்தித்தேன். அவரிடமிருந்த தமிழ் அறிவும் இலக்கியப்பிரக்ஞையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவருடைய நேர்காணலை பதிவுசெய்து வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியிட விரும்பினேன். எனது விருப்பத்தை அச்சமயம் பிரதம ஆசிரியராக பணியிலிருந்த சிவநேசச்செல்வனும் வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலும் ஏற்றுக்கொண்டனர். பிறிதொருநாள் சோவியத் தகவல் பிரிவுக்குச்சென்று சிலமணிநேரங்கள் குறிப்பிட்ட தமிழ் அபிமானியுடன் உரையாடி நேர்காணலுக்குரிய குறிப்புகளை எழுதிவந்தேன்.
எனது கேள்விகளில் தமிழ் மன்னர்கள் மூவேந்தர்கள் பற்றியும் சோவியத் ருஷ்யாவை அடக்கி ஆண்ட ஜார் மன்னரும் இடம்பெற்றிருந்தனர். சோவியத் அக்டோபர் புரட்சி பற்றியும் ஜார் மன்னரின் வீழ்ச்சி பற்றியும் முதலில் தமிழில் கவிதை எழுதியவர் எங்கள் மகாகவி பாரதி. மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்
ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி …..
என்ற கவிதை வரிகள் வாசகர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். குறிப்பிட்ட சோவியத் தமிழ் அபிமானி தனது நாட்டு உக்ரேயின் மகாகவி தராஷ் செவ்சென்கோவை பாரதியுடன் ஒப்பிட்டு கருத்துக்களை பரிமாரியபோது, எமது தமிழ் வேந்தர்களுக்கும் ருஷ்ய மன்னன் ஜாருக்கும் இடையில் நீங்கள் காணும் ஒற்றுமை வேற்றுமை பற்றிக்கேட்டேன்.
உடனே அவர் எழுந்து நின்று தனிநபர் அபிநயத்துடன் ஒரு நாடகக்காட்சியை நடித்துக்காண்பித்தார்.
ஒரு சங்க காலப்புலவர் கால்நடையாக வெகுதூரம் நடந்து வந்து அந்த தமிழ் மன்னரைக்காண வருகிறார். பயணக்களைப்பால் சோர்வுற்று அரண்மனை வளாகத்தில் மன்னர் ஓய்வெடுக்கும் சாய்மனைக்கதிரையில் அமர்ந்து களைப்பு மிகுதியால் உறங்கிவிடுகிறார். சொற்பவேளையில் மன்னர் அரண்மனைக்குத்திரும்புகிறார். வளாகத்தில் தான் வழக்கமாக அமர்ந்து ஓய்வெடுக்கும் ஆசனத்தில் யாரோ ஒரு ஏழைப்பாமரன் உறங்குவதைக்கண்டு வெகுண்டு, வாளை உருவி எடுத்தவாறு வெட்டுவதற்கு அருகே வருகிறான். பார்த்தால் ஒரு ஏழைப்புலவர். வாளை உறையில் போட்டுவிட்டு அருகிலிருந்த சாமரையை எடுத்து புலவருக்கு வீசுகிறான். இதமான காற்றில் புலவர் உறங்கி எழும்வரையில் பொறுமை காத்திருந்து அவருக்கு உணவும் பரிசுப்பொருட்களும் தந்து உபசரித்து அனுப்பிவைக்கின்றான்.
இந்த சங்ககாலத்துக் கதையை அழகாக விபரித்தார் அந்த சோவியத் தமிழ் அபிமானி. இவ்வாறு தமிழ் மன்னர்கள் தமிழுக்கு சேவையாற்றியுள்ளனர். அத்துடன் இலக்கியம், சிற்பம், ஓவியம், நடனம் முதலான கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் ருஷ்யாவின் ஜார் மன்னனோ மக்களை அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்தான். அதனால் லெனின் தலைமையில் அங்கு தொழிலாள, விவசாய, பாட்டாளி மக்கள் புரட்சி வெடித்தது. மக்கள் எழுச்சி வெற்றி பெற்றது.
அவரின் கருத்துக்கள் வித்தியாசமான அதிர்வுகளைத்தந்தது. அருமையான நேர்காணலை எழுதிய பின்பு தொலைபேசி ஊடாக குறிப்பிட்ட சோவியத் தோழருக்கு வாசித்துக்காட்டினேன். அவருக்கு பூரண திருப்தி. அதன் பிறகு எமது ஆசிரியர்களுக்கு அதனை காண்பித்தேன். அவர்களுக்கும் திருப்தி. அச்சுக்கு கொடுத்து அதன் அச்சுப்பிரதியும் (புரூஃப்) பார்த்து பக்கத்திலும் இடம்பெற்றபின்பு பத்திரிகை அச்சுக்குப்போகு முன்னர் மீண்டும் பார்த்து திருப்தியடைந்தேன்.
வீரகேசரி வாரவெளியீடு அச்சுக்குத்தயாராகிய இறுதிவேளையில் குறிப்பிட்ட பக்கம் நீக்கப்பட்டு ஒரு விளம்பரம் பிரசுரமானது. குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரைக்கு எனக்கு கிடைக்கவிருந்தது இருபது ரூபாதான். ஆனால் அந்த விளம்பரத்தினால் நிருவாகத்திற்கு பல ஆயிரம் ரூபாக்கள் கிடைத்திருக்கும்.
சோவியத் தூதரகத்திலிருந்து இறுதிநேரத்தில் வந்த உத்தரவுக்கு அமைய வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர், அந்த நேர்காணலை பக்கத்திலிருந்து எடுத்துவிட்டார். அதன் பின்னர் எக்காலத்திலும் அந்த நேர்காணல் வெளியாகவே இல்லை என்பது என்னைத்தொடரும் கவலைகளில் ஒன்று.
ஏன் அந்த நேர்காணல் இறுதிநேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டது?
இந்தக்கேள்வி மில்லியன் டொலரோ அல்லது மில்லியன் ரூபிள் பெறுமதியானதோ அல்ல.
ஆனால், இந்தக்கேள்விக்கு இரண்டு பெறுமதியான பதில்கள் எனக்குத் தரப்பட்டது.
பதில் 1. இலங்கையில் இருக்கும் ஒரு வெளிநாட்டு தூதுவராலயத்தில் தமிழ் தெரிந்த ஒரு வெளிநாட்டு ராஜதந்திரி பணியிலிருக்கிறார் என்பது இலங்கை அரசுக்கு தெரிந்துவிடக்கூடாது.
பதில் 2. பாட்டாளி மக்கள் புரட்சி வந்த பின்பு மன்னர் ஆட்சிகளை, அது எந்த மன்னராக இருந்தாலும் போற்றிப்புகழ்ந்து ஒரு சோவியத் பிரஜை பேசக்கூடாது?
இது எப்படி இருக்கிறது…?
இந்தச்சம்பவம் நடந்தபோது இலங்கையின் அதிபர் மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
குறிப்பிட்ட சோவியத் தூதரக தகவல் பிரிவு அதிகாரி தற்போது எங்கே கடமையில் இருக்கிறார் என்பது எனக்குத்தெரியாது. அதனால் அவரது பெயரைக்கூட வெளியிட தயங்குகின்றேன்.

—-0—-

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.