2010 ஏப்பிரலில் அதாவது எனது வலைப்பககம் உருவாக முன்ப எழுதியது .தேனியில் பிரசுரமாகியது. தற்செயலாக பழயவற்றை பார்த்த போது இன்னமும் நான் சொன்ன விடயம் மாறவில்லை என்பதால் மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.
நடேசன்
அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒரு பெண்மணியிடம் அங்கே பணியிலிருந்த இராணுவ ஊழியர் ஒருவர் “ உங்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை” என்று பரிதாபப்பட்டாராம்.நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நின்றபோது அந்த இராணுவஊழியர் அந்தப்பெண்மணியிடம் சொன்ன அதே கருத்தையே சில படித்த சிங்கள அன்பர்கள் என்னிடமும் சொன்னார்கள். அக்கருத்தை நான் ஆமோதிப்பேன் இல்லையெனில் சிரித்து சமாளிப்பேன். ஆனால் மனதிற்கு அது கசப்பான உண்மைதான்.
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்ப்பிரதேசங்களில் 24 அணிகள் போட்டி இடுவதாக எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கூறினார் . இதேவேளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருப்பதாக பத்திரிகையில் பார்த்தேன் தமிழ்ப் பகுதிகள் கடந்த 30 வருடங்களாக ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட பிரதேசமக இருந்ததால் தற்பொழுது சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு ஏராளமானவர்கள் பதவிக்குப் போட்டி இடுகிறார்கள். பத்திரிகையாளர்கள் ஏழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் டொக்டர்கள் ஏன் சிட்னியில் இருபது வருடங்களாக வசித்து வந்த நண்பர் செல்வராஜாகூட இத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இவர்களைவிட விடுதலைப்புலி எதிர்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் பல அணிகளின் சார்பில் போட்டி இடுகிறார்கள்.
இலங்கைத்தமிழர்கள் தங்களது தலைவர்களை, வழிகாட்டுபவர்களை தாங்களாக தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு பொன்னான சந்தர்ப்பம். காலம் காலமாக கல்வியில் பெருமை வாய்ந்ததாக சொல்லும் இந்த தமிழ்ச்சமுதாயம் தனக்கு முன் வைக்கப்பட்டவர்களின் தராதரங்களை சீர் தூக்கிப் பார்த்து திறமையான பொற்கொல்லன் போல் உரசிப்பார்த்து தேர்ந்து எடுக்கும் என நம்புகிறேன்
நிச்சயமாக சம்பந்தர் தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அணியின் தரம் தற்பொழுதுதான் கூடியுள்ளது என்பது உண்மை. நண்பர் செல்வராஜா அரசியல் விஞ்ஞானம் படித்தவர் விரிவுரையாளர் சிவச்சந்திரன் முன்னாள் யாழ். மாநகர ஆணையாளர் சிவஞானம் போன்றவர்கள் நிச்சயமாக பாராளுமன்றத்துக்குச் செல்ல தகுதியானவர்கள். இவர்களைப்; போன்றவர்கள் போட்டியிடக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். இல்லையெனில் நண்பர் செல்வராஜா சிட்னியை விட்டுப் போய் இருக்க மாட்டார். பேராசிரியர் சிவச்சந்திரன் பல்கலைக்கழகத்துடன் இருந்திருப்பார். முன்னாள் ஆணையாளர் சிவஞானம் இளைப்பாறிய நிலையை தொடர்ந்திருப்பார்.
கடந்த பாரளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் 22பேர் அங்கத்துவம் வகித்தனர். திறமையானவர்கள் என நான்கணிக்கும் சம்பந்தர் சுரேஷ் போன்றவர்களும் உயிருக்கு பயந்து விடுதலைப்புலிகளின் குரலாக ஒலித்தார்கள் இவர்களோடு மேலும் சிலரை ஊரில் எதற்கும் பிரயோசனம் இல்லை என தெரிந்தும் தாம் நினைத்தவர்களையும் விடுதலைப்புலிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்கள். இம்முறை அப்படியான பலர் நீக்கப்பட்டுள்ளார்கள். தற்போதைய தமிழர்கள் இருக்கும் நிலையில் நீக்கப்பட்டவர்கள்; அதிதீவிரவாதம் பேசியவர்கள். இவர்களின் இத் தீவிரவாதம் பலன் அளிக்காது. இந்த நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் அரைவாசிக்காவது தமிழ் தேசியகூட்டமைப்பு அணி கைப்பற்றும் என நினைக்கிறேன்.
இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்துக்கு என்ன செய்வார்கள் என்பதே இங்கே இருக்கும் முக்கியமான கேள்வி. இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு எந்தவொரு தைரியத்தையும் கொடுக்கவில்லை.
தமிழ்த்தேசியம் சுயநிர்ணயம் எனப் பிரபாகரன் பேசியபோது 25000 பயிற்றப்பட்ட புலிகளும் கிட்டத்தட்ட 6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயதங்களும் இருந்தன. ஆனால் இறுதியில் நடந்தது எல்லோருக்கும் தெரியம். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உங்கள் வார்த்தையை கேட்காது என்பது உங்களுக்கே தெரியும்;. கிடைக்காத விடயங்களை பேசாமல் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பேசுங்கள். மாகாண அதிகாரங்கள் வந்தால் வன்னிமக்களுக்கு சாப்பாடு போடாது. சோறா சுதந்திரமா எனக் கேட்டவர்கள் நீங்கள். இம்முறை குறைந்த பட்சம் 5 வருடத்துக்காவது பொருளாதாரத்தைப் பற்றி பேசுங்கள்.
தற்போது உங்கள் முன்னே இருக்கும் முக்கிய மூன்று விடயங்கள்:-
1) அகதி முகாம்களில் இருக்கும் வன்னிமக்களும் அவர்களின் புனர்வாழ்வும்
சகல வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது இந்த வன்னிமாவட்டம். போர் காலத்தில் மட்டுமல்ல போருக்கு முந்திய விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் கையேந்தித்தான் வாழந்தார்கள். இலங்கை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் உணவளித்தன. இந்த நிலைதான்; பலவருடங்களாக நீடித்தது. நிச்சயமாக யுத்தத்தால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதை சீர்படுத்;துவது வன்னிமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களது கடமை.
2)அரசாங்க சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி இளைஞர்களை விடுவித்து இவர்களை கொழில் பயிற்சியில் ஈடுபடுத்தவேண்டும். இவர்கள்தான் தமிழ்சமூகத்தின் விடுதலைக்காக தூயசிந்தையோடு உயிர்கொடுக்கப் போனவர்கள். இந்த இளைஞர்கள் தற்பொழுது அரசியலில் மட்டும் அனாதையில்லை. சகல விதத்திலும் அனாதைகள்
குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற முரளீதரன் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த போது அவர்களுக்காக பேச ஒருதலைமை இருந்தது. பலரது வாழ்வுகள் பாதுகாக்கப்பட்டது. பல பெண்பிள்ளைகள் வாழ்வாதரத்துக்காக போராடினாலும் குடும்பங்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றி கனவு காணுகிறார்கள். ஆனால் வடபகுதி இளைஞர்கள் பிழையாக வழி நடத்தப்பட்டது மட்டுமன்றி எதிர்காலத்தைப்பற்றிக்கூட நினைக்க முடியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு போருக்கு ஆயுத உதவி செய்த வெளிநாட்டுத்மிழர்கள் பலர் தற்போது வாய்மூடி மௌனிகளாகிவிட்டனர். இதுவரைகாலமும் சேர்த்த பணத்திற்காகதான் நாடுகடந்த ஈழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என கப்சாவிடுகிறார்கள். எனவே இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் தெரிவாகவிருக்கும் தமிழ்த்தலைவர்கள்தான் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு தொழில் பயிற்சி கூடங்களை உருவாக்கிக்கொடுத்து தங்கள் கைகளை நம்பி இருக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றவேண்டும்
3 வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தி:-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை இரண்டாவது உலகப்போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை கட்டமைத்ததை உதாரணமாகக்கொண்டு கட்டி எழுப்பவேண்டும்
இந்த மூன்று விடயங்களிலும் உங்கள் கடந்தகால முயற்சிகள் மிக சொற்பம். உணர்வுமயமான பேச்சினால் காலத்தை ஓட்டினீர்கள். தற்போது தமிழ் இனம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது.
இவற்றை நீங்கள் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புத் தேவை. அரசாங்கத்தை எதிர்த்து திட்டிக்கொண்டு எதுவும் சாதிக்க மாட்டீர்கள். தற்போது இலங்கை அரசாங்கத்தின்மீது இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் வதியும் தமிழர்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை சரிவர பாவிக்க வேண்டிய சரித்திர கடமை தங்களிடம் உள்ளது.
தற்போதைய நிலையில் சிங்கள மக்களும் இந்தப்போரினால் பாதிப்படைந்துள்ளார்கள். கிட்டத்தட்ட முப்பதினாயிரம் இராணுவத்தினர் உயிரை இழந்துள்ளார்கள். அவர்கள் குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கிறது
எவ்வளவு ஆயிரம் பேர் அங்கவீனர்களோ?
விடுதலைப் புலிகளின் கைகளால் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் அகதிகளாக்கப்பட்ட (யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட) முஸ்லிம் மக்களிடம் பாதிப்பு ஆழமாக மனதில் பதிந்திருக்கும்.
எமது நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு 83 ஜுலைகலவரம் நடந்துள்ளது.
இவர்களது துன்பங்களுக்கு நாங்கள் ஏதோவிதத்தில காரணமாக இருந்திருக்கிறோம். இவர்களது துன்பங்களை அங்கீகரித்து இன நல்லுறவை வளர்த்தால் மட்டுமே இலங்கையில் தமிழர்களுக்கு சுபீட்சம் வரும். பல்லினம் கொண்ட நாட்டில் நாங்கள் மட்டும் தனித்து முன்னேற முடியாது.
பாரிய கடமையை செய்வதற்கு நீங்கள் மகாத்மாக்களாக இருக்கத்தேவையில்லை. எம்மக்களது துன்பங்களோடு மற்றவர் துன்பத்தையும் புரிந்துகொண்டு மக்களிடம் உண்மையை பேசினால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.
பின்னூட்டமொன்றை இடுக