எழுவைதீவுக்கு இந்த ஆரம்ப வைத்தியசாலை எனது முயற்சியால் அமைக்கப்பட்டாலும் எனது நண்பர் சூரியசேகரத்தின் உதவியின்றி அமைத்திருக்க முடியாது. தாஜ்மகாலை கட்டிய ஷாஜகானை நினைவில் வைத்திருக்கும் நாங்கள் அதை வடிவமைத்த கலைஞனையும் கட்டிய தொழிலாளர்களை மறந்து விடுகிறோம். இந்த வைத்தியசாலையை கட்டிய தொழிலாளர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக
ரோகம் எனப்படும் வியாதி மனிதனை பீடிக்கும் போது ஆண்டவனையும் மற்றவர்களையும் சபித்துக்கொண்டு அவதிப்படுகிறான். அந்த ரோகம் நீங்கிய பின் அதைப் பற்றி மறந்து விடுகிறான். ஒரு சிலர் மட்டுமே இந்த ரோகத்தை இல்லாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் இவர்களால்தான் தடை மருந்துகள் மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களால்தான் விஞ்ஞானம் வளர்ந்தது. ஆரோக்கியம் வளர்ந்தது.
சிறு வயதில் பாலியல் வியாதிகளைத் தவிர மற்றய வியாதிகள் பன்னிரண்டு வயதிற்கு முன்பு என்னை பீடித்தன. எங்கள் ஊரில் வைத்தியசாலை இல்லாததால் அம்மா என்னை சதாசிவம் அண்ணை என்ற உறவினர் மூலம் கடற்கரைக்கு தூக்கி வருவார். பிற்காலத்தில் என்னை தூக்க முடியாமல் தூக்கி வருவார். அவரது உடல் வேர்வையின் மணம் இன்னும் எனது மனத்தில் நினைவில் வருக்கிறது. இதே போல் கடற்கரைக்கு தூக்கப்பட்ட நான் வேலுப்பிள்ளை மாமாவின் பாய்மரத் தோணியில் வளர்த்தப்பட்டு மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவேன். மூளாய் வைத்தியசாலை எங்களுக்கு குடும்ப வைத்தியசாலை மாதிரி.
சதாசிவம் அண்ணையும் வேலுப்பிள்ளை மாமாவும் ஆவி வடிவத்தில் இந்த வைத்தியசாலையை பார்த்து தங்களுக்கு இனி வேலை இல்லை என நினைத்துக் கொள்ளவார்கள். அதே போல் இனி மற்ற அம்மாக்கள் எனது அம்மா போல் கஷ்டப்படத் தேவையில்லை.
பாதையில் செல்லும் நாம் ஒரு கல்லால் தடுக்கி விழுந்து காயப்பட்டால் அந்த கல்லை எடுத்து ஓரத்தில் போடுவோம். அந்தக் கல் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது என்ற மனிதாபிமான காரணத்தில் தான். இதே போன்ற ஒரு நினைப்பே என்னை இந்த வைத்கியசாலையை கட்ட தூண்டியது. இதை விட வேறு எந்த காரணமும் இல்லை.
நன்றி
பின்னூட்டமொன்றை இடுக