அவுஸ்திரேலியா
23-01-2012
வாசகருக்கு மட்டுமல்ல படைப்பாளிகளுக்கும் சேரட்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இக் கருத்துக்களை ஞானம் இதழுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
எனது சிங்கள நண்பர் ஒருவர் “இலங்கை தமிழ் இலக்கியத்தில், மாட்டின் விக்கிரமசிங்கா போன்று யாராவது இருக்கிறார்களா?”- எனக் கேட்டபோது எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
சிங்கள சமூகத்தில் ஒரு யுகப்புரட்சி செய்தது அவரது கம்பெரலிய நாவல். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. திரைப்படமாகவும் வெளியாகி விருதுகள் பெற்றது. அதற்கு இணையாக யாரைத் தேடமுடியும்? நான் இந்தியத்தமிழனாக இருந்தால் பாரதியின் பெயரை கூறி இருப்பேன. நான்தான் சுயமரியாதையள்ள ஈழத்தமிழனாச்சே.
“.கடந்த அறுபது வருடகாலத்தில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தரமான நூல்களைப் படைத்த சிலபேரை சந்திக்க விரும்புகிறேன்” என்று அந்த சிங்கள நண்பர் கொழும்பில் என்னிடம் கேட்டபோது, “இதற்கு பதில் தருவதற்கு பேராசிரியர் சிவத்தம்பிதான் சரியான மனிதர்” என்று சொல்லிவிட்டு அந்த நண்பரை அவரிடம் அழைத்துச்சென்றேன். அவரும் அதற்கான பதிலை திட்டவட்டமாகச் சொல்லவில்லை.
அந்த நண்பர் பல ஆங்கிலக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்திருப்பவர். முக்கியமாக பேராசிரியர் வித்தியானந்தனது இலங்கைத்தமிழர் இலக்கிய வரலாறு என்ற கட்டுரையை வாசித்து விட்டு, “பெரும்பாலனவர்கள் தமிழில் புதிதாக படைப்பதை விட்டுவிட்டு பழையவற்றை ஆராய்ச்சி செய்து கணக்கெடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
“திருக்குறள், கம்பராமாயணம் மற்றும் காப்பியங்களை முன்னோர்கள், தமிழர்களுக்கு முதுசமாக விட்டுச் சென்றதால் அதுவே பல தலைமுறைக்குப் போதுமானது என நினைத்திருக்கலாம். உங்களுக்கு அந்த வசதியில்லை. தேவை இருக்கிறது. செய்தீர்கள்.” என பெருமையாக அவரது வாயை அடக்கினேன்
இப்படிச் சொல்லி அவரை சமாளித்தாலும் எனது மனச்சாட்சி முன்னால் இருந்து கொண்டு முந்திரிக் கொட்டையாக வாயைத் திறந்தது. வாயை என்னால் அடைக்க முடியவில்லை.
‘கம்பெரலியவை படிக்காத படித்த சிங்களவர்களை நான் பார்த்தது கிடையாது. படித்த தமிழர்களில் பலர் தமிழ் மொழியைப் பற்றி நாட்கணக்கில் பேசுவார்கள் இவர்களில் எத்தனை பேர் ஒரு படைப்பு இலக்கிய நூலை வாசித்திருக்கிறார்கள். தமிழ் நூலை கையால் தொட்டுவிட்டு என்னால் வாசிக்க இயலாது என்று பெருமையாகச் சொல்வார்கள் . தங்கத்தின் மவுசு அதனது ஆபரணங்களில்தான் இருக்கிறது. மொழியின் மகிமை அதன் படைப்புகளில்தான் தங்கி இருக்கிறது.
இது தமிழ் வாசகர்களது நிலைமை
நன்றி ஞானம் பெப்ருவரி
பின்னூட்டமொன்றை இடுக