நூல் விமர்சனம்
விமல் குழந்தைவேலின் கசகரணம் நாவலை படிப்பதற்கு முன்பே இதனைப்பற்றிய செய்திகள் காற்றோடு வந்துவிட்டன. “இந்த நாவலை தம்பி அக்கரைப்பற்று பாஷையிலும் சோனகர் பேசும் பாஷையிலும் எழுதி இருக்கிறான். இதை மற்றவை எப்படி புரிந்து கொள்ளப்போகிறார்கள்” என்று ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கூறி இருந்தார். அவரோடு பல காலமாக உரையாடும் சந்தர்ப்பங்கள் இருந்ததால், அக்கரைப்பற்றுப் பகுதி நில அமைப்பு, அங்கு வாழும் மக்களின் சாதி விபரங்கள் போன்றவற்றை ஓரளவு தெரிந்துவைத்திருந்தமையால் அக்கரைப்பற்றை அண்டியுள்ள, காரைதீவு, கோளாவில், மாவடிவேம்பு திருக்கோயில் ஆகிய பிரதேசங்களையும் அறிந்து கொண்டேன். இதற்க்கப்பால் திருக்கோயிலின் அழகிய சிவப்பு யுவதிகள் மற்றும் அங்கே கால்ப்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பற்றியெல்லாம் கேள்விஞானத்தில் அறிந்து கொண்டதால் அந்தப்பகுதியை மனதில் வைத்து ‘ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி’ என்ற சிறுகதையை முன்பு எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு கீழே கல்முனை வரையும் மட்டுமே சென்றிருக்கிறேன். அக்கரைப்பற்று திருக்கோயில் காரைதீவு போன்ற கிழக்கு மாகாண தென்பகுதிகள் கேள்வி ஞானத்தால் அறிந்தது மட்டும்தான்.
இந்த கேள்வி ஞானம் சாதாரணமானது அல்ல. ஞானசம்பந்தர் பெற்ற ஞானப்பாலைப்போன்று ஆழமானது. இந்தியாவில் இருந்த காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் இருந்து விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி எடுக்க வந்த இளைஞர்களிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. காரைதீவில் இருந்து வந்த ஒரு இளைஞன் எனக்கு மிக நெருக்கமான நண்பனாக இருந்தான். அவனுக்கு விருப்பமான குலாப்ஜாமூன் உண்பதற்காக அடிக்கடி கோடம்பாக்கம் ஆற்காடு ரோடில் உணவருந்த ஒன்றாகச் செல்வோம். சிறு வயதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் விடுதியில் அருகருகே இருந்த கட்டில்களில் படுத்து உறங்கியதால் உருவாகிய நட்பு அவன் இயக்கத்தில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. வங்கி உத்தியோகத்தில் இருந்த அவன் வேலையை உதறிவிட்டு தமிழ் ஈழக் கனவுடன் இந்தியாவுக்கு வந்தான். விடுதலைப்புலிகளால் அவனது கனவு மட்டுமல்ல உயிரும் சென்னை சக்காரியா காலனியில் வைத்து பறிக்கப்பட்டது.
இப்படியாக விமலின் நாவலின் தமிழ் ஈழக்கனவுகள் சுமந்தபடி வந்த தமிழ் இளைஞர்களுடன் பேசிப் பழகியது மட்டுமல்ல அந்தக் கனவுகளை சுமந்த முகமட் போன்ற இஸ்லாமிய இளைஞனையும் சந்தித்தேன். ஆரம்பத்தில் தமிழ் விடுதலை இயக்கத்தில் இணைந்து அரச படைகளுக்கு எதிராக தமிழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து போராட விரும்பிய அந்த இளைஞன், பின்பு காரைதீவில் தொடங்கி பின் அக்கரைப்பற்று சந்தை எரிப்பு வரையில் நீடித்த தமிழ் – முஸ்லீம் தகராறால் மனக்கசப்படைந்து இயக்கத்தில் இருந்து வெளியேற எத்தனித்தபோது இந்தியாவில் எனது அறையில் அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தேன். ஆரம்பத்தில் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஒரு தமிழ் இளைஞன் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவன் முஸ்லீம் இளைஞன். இந்திய இராணுவத்தால் போர் பயிற்சி பெற்றவன். சிலகாலத்தின் பின்பாகத்தான் இந்த உண்மைகள் தெரிந்தன. எனது அறையில் ஒரு மாதத்திற்கு மேல் இருந்த பின்பு பத்திரமாக ஊர்போய்ச் சேர்ந்தான் என ஆறுதல் அடைந்தேன். அந்த ஆறுதல் சில வருடங்கள் மட்டும்தான் நீடித்தது. நான் அவுஸ்திரேலியா வந்த பின்பு, அவனது ஊரிலே ‘காட்டிக்கொடுத்தான்’ என்ற அடையாளத்துடன் வேறு ஒரு இயக்கத்தால் கொல்லப்பட்டது கேள்விப்பட்டு மனவேதனைப்பட்டேன். சிவப்பான உறுதியான விரிந்த தோள்களைக் கொண்ட சத்துருக்கன் சின்ஹா போன்ற தோற்றம் கொண்ட அந்த இளைஞனின் பேரை மறந்து விட்டாலும் இந்த ‘கசகரணம்’ நாவலில் வரும் முகமட் அவனை நினைவுக்கு மீண்டும் கொண்டுவந்தான்.
கிழக்கு மாகாணம் விகிதாசாரத்தில் அதிக மனித அழிவுகளை சந்தித்தது. அரசாங்கப் படைகளினால் அழிப்பு, தமிழ் – முஸ்லீம் பிரச்சினையில் உயிர் இழப்பு பினனர், இயக்க மோதலில் மரணம் என கொலைகள் தொடர்ந்து இரத்த வாடை வீசும் கசாப்பு கடை பிரதேசமாக மாறியது.
அந்தப் பிரதேசத்தின் கதை சொல்லும் விமல் குழந்தை வேலுவின் கசகரணம் 84 ஆம் ஆண்டு; காலகட்டத்தை சித்திரிக்கிறது.
தமிழ் -முஸ்லீம் இனத்தகராறில் எரிக்கப்பட்ட அக்கரைப்பற்று சந்தையில் வியாபாரம் செய்யும் நான்கு பேர்களை பாத்திரமாக்கி கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதைமாந்தர் சாதாரண மனிதர்கள். பெரிய இலட்சியங்கள் அற்றவர்கள். தங்கள் குடும்பம், நாளைய வாழ்வு. அந்த வாழ்வில் சினிமா, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு உட்பட சின்னச் சின்ன கனவுகளை நிரப்பி தையல் பெட்டியுடன் விளையாடும் சிறுவன் செந்தில் போன்று தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களில் மூழ்கி இருக்கிறார்கள்.
தமிழர்கள் முஸ்லீம்கள் என மத வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் ஒன்றாக ஒருவரோடு ஒருவராக சேர்ந்து வாழ்ந்த சமூகங்களை அரசியல், விரோதிகளாக்குகிறது. ஓரு தாயிடம் உணவு அருந்தியவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்ய இந்த அரசியல் தூண்டுகிறது. கசகரணத்தின் முதல்பாகம் சகோதர வாழ்வை எடுத்துச் சொல்கிறது.
இந்தச் சகோதர வாழ்வு அமைதியானதோ சாத்வீகமானதோ அல்ல. ஆங்காங்கு வன்முறைகள் தலைகாட்டுகின்றன. ஆனால் அவை தனிமனித விழுமியம் சம்பந்தப்பட்டவை. சமூகமயப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது அல்ல. மனைவி தனக்குத் தெரியாமல் சினிமாப் படம் பார்த்து விட்டாள் என்பதற்காக சந்தையில் வைத்து அடிப்பவர், குறப்பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர், தியேட்டரில் படம் நின்றதற்காக அசிங்கமான வார்த்தையில் முதலாளியை திட்டுவோரை தடி கொண்டு அடிக்கும் தியேட்டர் முதலாளி என நடமாடும் சமூகத்தில் வன்முறைகள் பல வடிவங்களில் இருந்தது.
ஆனால் இந்த அரசியல் போராட்டம், தனிமனித வன்முறைகளுக்கு அரசியல் இனவாத சாயம்பூசி, அதற்கு சமூக அங்கீகாரம் கொடுத்து நிறுவன மயமாக்குகிறது. சமூகத்தில் உள்ள சண்டியர்கள்,பெண்களை துன்புறுத்தும் வன்முறையாளர்கள், இயக்கங்களில் சேர்ந்து வன்முறைக்கு அங்கீகாரம் பெறுகிறார்கள். நிறுவன மயப்படுத்தப்பட்ட வன்முறையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும் பெண்களையும் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் காட்டுத் தீயாக அழிக்கிறது. இந்த வன்முறை எரிபொருளாக, அரசின் வன்முறைக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கும் அங்கீகாரம் அளிக்கிறது. பலமானதும் இறுக்கமான கட்டமைப்புமுள்ள அரச இயந்திரம் வன்செயலில் திறமையாக ஈடுபடுகிறது.
இயக்க வன்முறையாளர் உயிர்களை அழிப்பதில் மட்டுமல்லாமல் உடைமைகளை தோட்டங்களை அழிக்கிறார்கள். இந்த வன்முறையை எதிர்கொள்ள அரசாங்கப் படையினர் மேலதிகமாக ஏவப்படுகிறர்கள். இதில் ஒரு விசித்திரமான விடயம் என்னவென்றால், வன்முறையாளரின் அழிவு மன நிலையானது இலங்கையில நடந்த வன்முறைச் சம்பவங்களில் உறைந்திருக்கிறது. அங்கு எப்பொழுதும் சந்தைகள் எரிந்திருக்கின்றன. யாழ்ப்பாணம் பெரியகடைச்சந்தை 81 இல் எரிபட்டது. வவுனியா சந்தையை விமானப்படையினர் எரித்த போது நான் நேரில் பார்த்தேன். அக்கரைப்பற்று சந்தை எரிந்த சம்பவம் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கிளிநோச்சி சென்றபோது நான் பார்த்த விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்ட தண்ணீரத் தாங்கி வன்முறை மனங்களின் வக்கிரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. மனிதர்கள் மத்தியில் தகராறு என்றால் தண்ணீரதாங்கியும் சந்தையும் உங்களுக்கு என்ன செய்தது?
இந்த நாவலின் முக்கிய வெற்றிக்குக் காரணம் எந்த ஒரு பகுதியினரையும் எதிரியாக்காமல் அதே போன்ற ஹீரோக்களை உருவாக்காமல் மனித இழப்பகளின் வலியை வெளிக்கொணர்ந்ததுதான். போர்க்கால எழுத்துகள் என்று கூறிக் கொண்டு எழத்துகளில் இரத்தத்தையும் தசையையும் தடவி எழுதாமல் ஒரு பகுதியினரை அசுரர்களாக்காமல் உள்ளத்தின் வலியையும் தனி மனித ஆற்றாமையையும் எழுத்தில் கொண்டு வந்ததாகும். கிழக்கிலங்கையின் ஒரு முக்கிய காலகட்டத்தையும் தமிழ் – இஸ்லாமிய உறவுகளின் சிதைவை புரிந்து கொள்ளவும் இந்த நாவல் உதவும். சமீப காலத்தில் வந்த இலங்கைப் படைப்புகளில் முக்கியமானது என நினைக்கிறேன்
பிரதேச மொழி வழக்கு கற்பாறைகள் நிறைந்த கடற்கரையில், மலைச்சரிவுகளில் குனிந்து கொண்டும் தவழ்ந்து கொண்டும் ஹைக்கிங் நடப்பது போன்ற மன நிலையை கொடுத்தாலும் இலக்கியத்தில் தேடல்மனப்பான்மை உள்ளவர்களால் நிச்சயமாக படிக்கமுடியும். சமீபத்தில் தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவல்களைப் படித்த போது இதே அனுபவத்தை பெற்றேன்.
இந்நாவலை தமிழ்நாடு காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
—-0—
பின்னூட்டமொன்றை இடுக