அவுஸ்திரேலியா பசுமாடுகளாலும்; செம்மறி ஆடுகளாலும்தான் அபிவிருத்தியடைந்தது என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.. அதன்பின்னர் தங்கம் அடுத்து நிலக்கரி இப்பொழுது இரும்பு என்று கனிவளங்கள் என்று சொல்லப்பட்டது. இவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. கால்நடைகளால் வருமானம் கிடைத்த அக்காலத்தில் முக்கியமாக பசுமாடுகளுக்கு காசநோய் வந்து, அது குழந்தைகளை தொற்றத்தொடங்கிய காலகட்டத்தில், தனிமனிதராக மெல்பனில் வில்லியம் கெண்டல் என்பவர் தனியார் மிருக வைத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். பலவருடங்களுக்குப் பின்புதான் மெல்பன் பல்கலைக்கழகம் அதனைப் பொறுப்பேற்றது.
மனிதகுலம் அனுபவிக்கும் சகல வசதிகளும் மற்றும் பல்கலைக்கழகங்கள் மருத்துவ மனைகள் மட்டுமல்லாது நாம் எல்லோரும் தமது உரிமையென அனுபவிக்கும் சகலவிடயங்களுமே யாரோ சில தனிமனிதர்களின் கடின உழைப்பில்தான் உருவாகியுள்ளன. அந்த தனிமனிதர்களதான்; பின்புலத்தில் நின்று ஆரம்பத்தில் இருந்து உருவாக்கி இருப்பார்கள். தோமஸ் அல்வா எடிசன் மின்சார பல்புக்கு பின்னால் இருந்திருக்கிறார். சகல ஜனநாயக அரசாங்கங்களுக்கும் அடிப்படையில் பிளேட்டோவின ரீப்பப்ளிக் என்ற கருத்தாடல் காரணமாக இருந்திக்கிறது. இப்பொழுது கூட எந்த நாட்டிலும் சமூகத்தை உருவாக்குபவர்களாக மிகச் சிலரே இருப்பார்கள். அவர்களை சமூகப் பொறியியலாளர் எனச் சொல்வோம்..
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தனி மனிதர்களாக வந்தது மட்டுமல்ல, தனி மனிதர்களாகவே வாழுகிறார்கள். இங்கு ஒருவரில் ஒருவர் தங்கி இருக்காத மேலைத்தேய வாழ்க்கைக்குள் புகுந்து விடுவதால், தனித்தனி தீவுகளாக மாறிவிடுகிறார்கள். இவர்களை சமூகமாக ஒன்றிணைப்பது அந்த சமூகத்துக்குப் பொதுவான விடயங்களான சமயம், மொழி மற்றும் பிறந்த மண்ணில் இருந்து நம்மைத் தொடர்ந்து வரும் மண்பற்று போன்ற விடயங்களே. இந்த விடயங்கள் ஒரு மணிக்கயிறு போன்று அழகானது. வலிமையானது. அத்துடன் அந்தக் கயிற்றை எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதையும் பொறுத்தது. கழுத்தை சுருக்கிட கொலைகாரன் கயிறைப் பாவிப்பது போல சமூக நலன் சார்ந்தவரினால் உபயோகமான கயிறாகவும் பாவிக்கப்படலாம்.
இலங்கையில் பலகாலமாக நடந்த போரின் காரணத்தால், போருக்கு உதவுவது என்ற மனப்பான்மையும் ஒருகட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்களை இணைத்தது. இந்த இணைப்பு எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை, தற்பொழுது அந்தப் போர் முடிந்ததன் பின்னர் அவதானி;க்கக் கூடியதாக இருக்கிறது.
கடந்த இலங்கைப் போர்க்;கால கட்டத்தில், ஆரோக்கியமாக மொழியின் பேரால் மெல்பனில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க முற்றபட்டவர்கள் இருவர். இருவரும் எனது நண்பர்கள் என்பது எனக்கு பெருமையான விடயம். ஒருவர் மாவை நித்தியனந்தன். இவர் பாரதி பள்ளி என்ற பாடசாலையை உருவாக்கி சிறுவர் சிறுமியர்களுக்கு தமிழ் போதிக்கத் தொடங்கினார்.
மற்றவர் முருகபூபதி. இலங்கையில் நீடித்த போரினால் அதன் வன்முறையால் தகப்பனை இழந்த குழந்தைகள் ஏழ்மையால் கல்வியை இடைநிறுத்தாமல் தொடருவதற்காக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை உருவாக்கியதுடன், பின்னர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற அமைப்பையும் தொடக்கினார். இந்த அமைப்புத்தான் இந்நாட்டில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து இங்குள்ளவர்களுக்கு இலக்கியப்பிரக்ஞையை அறிமுகப்படுத்தினார்;. அவுஸ்திரேலியாவில் 1989 இல் முதலாவது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதுதான் நான் எனது வாழ்க்கையில்; பார்த்த முதல் புத்தக வெளியீடு, இதன் பின்புதான் என்போன்றவர்கள் இங்கு இலக்கியத்திற்காகப் பேனை பிடிக்கத் தொடங்கினோம்..
இருபது வருடங்களுக்கு மேலாக மாணவர் கல்வி நிதியத்தையும் இலக்கியச் சங்கத்தை பத்து வருடங்களுக்கு மேலாகவும் முன்னின்று அவர் நடத்துவதன் மூலம் இந்த அவுஸ்திரேலியாவில் தமிழ் சமூகம் வீச்சுடன் இருப்பதை வெளிஉலகுக்கு அவர் காட்டியது மகத்தான விடயம். அத்துடன் இந்த நாட்டில் இருந்து இலங்கைத்தமிழ் குழந்தைகளுக்கு உதவும்போது அது தனிமனிதச்செயலாக மட்டுப்படாமல் சமூகமாக ஒன்றிணைந்து நடக்கிறது. இதன்மூலம் தனித் தீவாக இருக்கும் மக்கள் தமது சுய விருப்பில் இணைந்து ஒன்றுகூடுகின்றனர். அதுவே பாரியசாதனையாகும். இப்படியான விடயங்களில் தனி நபர்கள் ஈடுபடும் போது அவர்கள் அதற்காகக் கொடுக்கும் விலை. அர்ப்பணிக்கும் நேரம், அவரது குடும்பத்தின் சௌகரியம் என்பன பலர் அறியாதவை.
தனிப்பட்டவர்களாக இங்கு வந்த முதலாவது தலைமுறையில் இலங்கைத்தமிழர்கள் வெற்றி கண்டு அவுஸ்திரேலிய சமூகத்தில் இணைந்திருக்கலாம். ஆனால் சமூகமாக ஏற்படுத்திய சாதனைகள் மிக அரிது. இந்தப்பின்னணியில்தான் இந்த நாட்டுக்கு வந்த நண்பர் முருகபூபதியின் செயற்பாடுகளைப்பார்க்கின்றேன்.
எழுத்தாளராக பத்திரிகையாளராக அவரது தகைமைகளை அலசுவதற்கு பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த இடத்தை நான் விட்டுவிடுகிறேன்
இப்படியான நண்பருக்கு அறுபதாவது வயது பிறந்ததை முன்னிட்டு மணிவிழாவை கொண்டாட நண்பர்கள் பலரும் தீர்மனித்து அண்மையில் மெல்பனில் கொண்டாடியதன் மூலம், இந்தச் சமூகம் பதிலுக்கு முருகபூபதிக்கு நன்றி சொல்லியது.
நன்றி சொல்வது மனிதப்பண்பு. அத்துடன் குடும்பத்துடன் சென்று நன்றி சொல்வது தமிழ்ப் பண்பு. அதற்கு ஏற்ப நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குடும்பமாக வந்து கலந்து கொண்டது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த மணிவிழா நிகழ்வு மெல்பனில் சற்று வித்தியாசமானது. வழக்கமான பொன்னாடைகள், பூமாலைகள், மேளதாள வாத்தியங்கள் இல்லை. இவ்வாறு ஒரு எழுத்தாளர், சமூக சேவையாளர் கௌரவிக்கப்பட்டது முதன்மையானது. அவுஸ்திரேலியாவில் நண்பர் முருகபூபதி போல் பலரை எதிர்காலத்தில் உருவாக்க இந்த மணிவிழா ஒன்றுகூடல் உதவும் என்பது எனது நம்பிக்கை. இவ்விழாவில் உரையாற்றியவர்கள் வெறுமனே முருகபூபதிக்கு புகழாரம் சூட்டாமல் சமூக நலன் சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப்பேசியதும் முன்மாதிரியானது.
மேற்கு அவுஸ்திரேலியா மெடொக் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் அமீர் அலி அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள இருந்தார். எதிர்பாராதவிதமாக விமானப்போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கலால் அவரால் வரமுடியவில்லை. எனினும் அவரது உரையை அவரது நண்பர் ஜனாப் செய்யத் அலவி சமர்ப்பித்து உரையாற்றினார். சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை இலங்கையில் ஏன் அவசியமானது என்பது அந்த உரையில் வலியுறுத்;தப்பட்டது.
முருகபூபதியின் நீண்ட கால நண்பரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளரும் மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி லயனல் போபகே, ‘நெருக்கடியான கால கட்டத்தில் எழுத்தாளரினதும் கலைஞரினதும் பணி’ என்ற தலைப்பில் உரையாற்றி தனக்கும் முருகபூபதிக்கும் இடையில் தோன்றிய நட்பையும் நெருக்கத்தையும் நினைவு கூர்ந்தார்.
இவர்கள் இருவரதும் உரைகளையடுத்து முருகபூபதி அவுஸ்திரேலியாவில் ஸ்தாபக உறுப்பினராக இருந்து அங்கம் வகித்த அமைப்புகளின் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றன. அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் முன்னாள் தலைவரான திரு. எஸ்.கொர்னேலியஸ், குறிப்பிட்ட அகதிகள் கழகத்தில் முருகபூபதியின் பங்களிப்பையும் அதனூடாக தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பற்றிப் பேசினார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், சட்டத்தரணி செ. ரவீந்திரன், ‘படைப்பிலக்கியவாதியின் மனிதநேயம்’ என்ற தலைப்பில் உரையாற்றுகையில், “அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடி வந்து, தன்னை பொருளாதார ரீதியில் வளர்த்துக்கொள்வதைவிடுத்து தமிழ் சமூகம் சார்ந்த நலன்களுக்கே முன்னுரிமை கொடுத்து முருகபூபதி இயங்கியதை 1989 இல் அவரது சமாந்தரங்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலிருந்தே அவதானித்து வருகின்றேன். அதனையும் அவர் தனது தேவைக்காக நடத்தாமல் இலங்கைப்போரினால் அநாதரவான குழந்தைகளின் கல்வித்தேவைக்காகவே நடத்தி ஒரு அமைப்பையும் ஸ்தாபித்தார். அத்துடன் தான் என்றென்றும் நேசிக்கும் இலக்கியப்பணிகளையும் முன்னெடுத்தார்.” எனக்குறிப்பிட்டார்.
இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் நிதிச் செயலாளர் திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா தமது உரையில், “தனது சிறு பராயத்தில் அவுஸ்திரேலியா வந்தபோது இங்கு நடந்த பாரதி விழா பேச்சுப்போட்டியில் முருகபூபதி மாமா எழுதித்தந்த உரையைப்பேசி முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றேன். இன்று உங்கள் முன்னிலையில் தமிழில் பேசுவதுடன் அவர் உருவாக்கிய மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்து வேலை செய்கின்றேன். இளம் தலைமுறைக்கு இந்தப்பணிகள் சிறந்த வாய்ப்பாகும் என்று கருதுகின்றேன்.” என்றார்.
அவுஸ்திரேலிய தமிழ் கலை இலக்கிய சங்கத்தின் சார்பில் கவிஞர்கள் ஆவூரான் சந்திரன், மற்றும் நிர்மலன் சிவா ஆகியோர் கவி வாழ்த்து சமர்ப்பித்தனர்.
இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி கௌசல்யா அன்ரனிப்பிள்ளை, சங்கத்தின் சார்பில் முருகபூபதிக்கு மணிவிழா நினைவுப்பரிசான கேடயம் வழங்கினார். கல்வி நிதியத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி மதிவதனி சந்திரானந்த் முருகப+பதிக்கு நிதியத்தின் சார்பில் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி மாலதி முருகபூபதியும், முருகபூபதியின் புதல்விகள் திருமதி பாரதி ஜேம்ஸ், திருமதி பிரியாதேவி முகுந்தன் ஆகியோர் மணிவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறியபின்னர் இந்த மணிவிழா நாயகன் நண்பர் முருகபூபதி ஏற்புரை வழங்கினார்.
அவர் தமது உரையில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியவர்களுக்கும் தன்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவாவுக்கும் பத்திரிகையாளனாக அறிமுகப்படுத்திய வீரகேசரி நிறுவனத்திற்கும் தனது படைப்புகளுக்கு களம் வழங்கும் பத்திரிகைகள், இதழ்கள். இணையத்தளங்களுக்கும் தனது பெற்றேர்கள், ஆசான்கள், வழிகாட்டிகள் நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொண்டார்.
அந்த ஏற்புரையையும் வெறுமனே நன்றி பகரும் சடங்காக்காமல் இலங்கைப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக புகலிட தமிழ் மக்கள் மேற்கொள்ளவேண்டிய இக்காலத்திற்குத் தேவையான பணிகளையும் முன்மொழிந்தார். எவ்வாறு கல்வி நிதியம் மூலம் இயன்றவரையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுகின்றோமோ அதே போன்று போரில் விதவைகளாக்கப்பட்ட எமது சகோதரிகளின் வாழ்வுக்கு உதவ முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். ஒரு விதவைச்சகோதரியின் குடும்பத்தின் பராமரிப்புச்செலவை ஒரு புலம்பெயர் குடும்பம் ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆக்கபூர்வமான நிவாரணப்பணியை மேற்கொள்ள முடியும் என்றார். உதவ முன்வரும் குறிப்பிட்ட புலம் பெயர் குடும்பம் இலங்கைக்கு விடுமுறைகாலத்தில் செல்லும்போது நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் உறவை பேணுவதற்கும் இந்த மனித நேய நடவடிக்கை உதவும் என்றார்.
முருகபூபதியின் இந்தக்கருத்தில் எனக்கும் உடன்பாடு இருப்பதனால் ‘வானவில்’ என்ற திட்டம் ஒன்றை நண்பர்கள் சிலருடன் இணைந்து தொடக்கியுள்ளேன்.
‘எமது உறவுகள்’ என்ற பேசு பொருளுக்கு இத்தகைய நடவடிக்கைகள்தான் உயர்ப்பைத்தரும் என்றும் நம்புகின்றேன். மொத்தத்தில் நண்பர் முருகபூபதியின் மணிவிழா பலவிதத்திலும் முன்மாதிரியானது. இதனை ஒழுங்குசெய்தவர்கள் நிச்சயமாக சமூகநலன் சார்ந்து மனநிறைவுகொள்ளலாம்.
courtesy -Thenee

பின்னூட்டமொன்றை இடுக