செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைப்பது ஒரு கஷ்டமான விடயம். அவைகளுக்கு தன்னைத்தான் பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு இலகுவான பெயராக வைக்க வேண்டும். அதே வேளையில் அதனை வளர்ப்பவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும். நாய்களுக்கு பெயர் சூட்டும் போது கிட்டதட்ட மனிதர்களின் பெயர்களில் பழைய வீரர்களின் பெயர் வைப்பார்கள். சிறுவயதில எங்களிடம் இருந்த நாய்க்கு பெயர் சீசர் மற்றயதின் பெயர் டார்சான். அவுஸ்திரேலியாவில் பல நாய்களின் பெயர் அலெக்ஸ. அதாவது அலெக்சாண்டரின் சுருக்கம். காலம் காலமாக வேட்டைக்கு நாய்களை மனிதர்கள் பாவித்தபடியால் இப்படியான மன நிலை ஏற்படுகிறது.
மனிதரில் அறிவும் அழகும் இல்லாத ஒருவருக்கு அறிவழகன் எனப் பெயர் இடுவதும் கருமையான பெண்ணை நிர்மலா என்பது போல போல் செல்லப்பிராணிகளுக்கும் அவர்கள் நிறத்துக்கும் தன்மைக்கும் முரணான பெயர் சூட்டப்படுவது உண்டு. இதற்கு எந்த சமூகமும் விலக்கல்ல. ஆனால் பூனையை பொறுத்தவரை உடல் நிறமே அதிகமாக தீர்மானிக்கிறது. ஏராளமனவற்றின் பெயர் பிளக்கி . கறுப்பு வெள்ளை கலந்த பூiனையை விஸ்கி என்பார்கள் -பிளாக் அன்ட் வைற் விஸ்கியை நினைவு படுத்தி. அதாவது கொஞ்சம் மூளையை போட்டு குழப்பி எடுத்த பெயராகும்.
அந்த நாயின் பெயருக்கான எழுத்தை கூட்டும்படி எனது நேர்ஸ் கூறிய போது பக்கத்தில் நின்ற எனக்கு சற்று வியப்பாக இருந்தது.
அது என்ன புதுமையான பெயராக இருக்கிறது? யுவானா என்று கேட்டேன் தகப்பனும் அவருடன் வந்த இரண்டு இளம் பையன்களும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் சிரிப்பை நிறுத்தி விட்டு மருயுவானா அதாவது கஞ்சாவை குறித்து சுருக்கி வைத்தது என்று தகப்பன் சொன்னார்.
எனது மிருக வைத்திய சாலை இருப்பது மத்திய தர வகுப்பு மக்கள் வசிக்கும் பிரதேசத்தில்.. வேலை இல்லாதவர்கள் கார் இல்லாதவர்களை சந்திப்பது அபூர்வமானது.
இதை விட தனது சுகாதாரத்தை பராமரிக்காமல் முகத்தில் தாடியுடன் அழுக்கான தேகத்தில் துர்நாற்றத்துடன் விரல் நகங்களில் அழுக்குக் கறை படிந்த, மஞ்சள் பொருக்கு மகுட மணிந்த பற்களுடன் சடை பற்றிய தலைமயிருடன் எனது வாடிக்கையாளராக ஒருவரை சந்திப்பது இதுதான் முதல் தடவை. கடந்த நுரற்றாண்டில் விளிம்பு நிலை மனிதரை சித்தரிககும் ஐரோப்பிய கதைகளை நினைவு கூரும் தன்மையுடன் ஆனால் மிக உடல் ஆரோக்கியம் கொண்ட அந்த நாற்பது வயது மனிதனின் பெயரை ரொபேட் என எனது நர்ஸ் கம்பியூட்டரில் பதிவு செய்தாள்.
நீல நிறமான கண்கள் இடுங்கி சிவந்திருந்தன.
இளம் பையன்களை வெளியே இருக்கச் சொல்லி விட்டு பரிசோதனை அறையுள் ரொபேட்டை உள்ளே அழைத்து அவரது நாயை பார்த்தபோது அந்த சிறிய நாயின் பெண்ணுறுப்பு ஒரு ரெனிஸ் பந்தின் அளவு சிவப்பு நிறத்தில் வெளித் தள்ளி இருந்தது. அதில் இருந்து உதிரம் சொட்டியது.
‘எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது?’
‘மூன்று நாட்கள்’
மனதில் நினைத்தேன். மூன்று நாட்களாக இதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறர்களே. என்ன மனிதர்கள்?.
“நாலு வயதான இந்த நாய்க்கு ஏன் கருத்தடை செய்யவில்லை. செய்திருந்தால் இது நடந்திராது.”
எந்த பதிலும் கூறாமல் தலையை குனிந்தபடி நின்றார் ரோபேட்
……..
மயக்க மருந்தை கொடுத்துவிட்டு சீனி கால் கிலோவை கரைத்து பெண் உறுப்பில் வைத்து அதன் வீக்கத்தை குறைத்து உள்ளே தள்ளி தைப்பதற்கு ஒரு மணி நேரமானது
“இந்த நாயிலும் கஞ்சா மணம வருகிறது போல இருக்கிறது.” – என்று எனது நர்ஸிடம் சொன்னேன்.
‘இவர்கள் கஞ்சாவில் சீவிப்பவர்கள் .அவர்களது கண்களையும் முகத்தையும் பார்க்கத் தெரியவில்லையா?’.
அப்பொழுது எனக்கு பழைய நினைவு வந்தது
பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஒரு தடவை வார விடுமுறை மாலைநேரத்தில் ஐந்து நண்பர்களாகச்சேர்ந்து சில மைல் தூரத்தில் இருக்கும் பனிதெனியாவிற்கு சென்று ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு கஞ்சா வாங்கி வந்து ஜெயத்திலகா மண்டபத்தில் வைத்து அடித்த போது நான் உட்பட நான்கு பேருக்கும் எதுவித கிக்கும் இருக்கவில்லை. ஆனால் ஒரு நண்பனுக்கு ஒரு பக்கம் முகம் விறைத்து விட்டது. கன்னத்தில் அறைந்த போது கூட வலி தெரியவில்லை என்றான் எல்லோருக்கும் பயம். அவனுக்கு நிரந்தரமாக விறைப்பு வந்தால் நாங்கள் எல்லோரும் அதற்குப் பொறுப்பு என நினைத்துக்கொண்டு மூன்று நாட்கள் நாங்களும் வகுப்புக்கு செல்லவில்லை.
நல்ல வேளையாக இரண்டு நாட்களின் பின்னர் அவனது முகம் பழைய நிலைக்கு திருப்பியதும்தான் எங்கள் முகத்தில் அமைதி வந்தது. நாங்கள் வகுப்புக்கு சென்றோம். அதுதான் கடைசியும் முதலுமான கஞ்சா பக்கம் தலை வைத்து படுத்த சம்பவம். கஞ்சாவை விட பெரியவை எங்கள் காலத்தில் இருக்கவில்லை.
அவுஸ்திரேலியாவில் போதை வஸ்த்துக்கள் கூட வர்க்க பேதம் கொண்டவை.
தொழிலாளர் வர்க்கத்தில் பொழுது போக்காக அடிப்பது கஞ்சா. இதற்கு கொக்காகோலா போத்தலையும் பிளாஸ்டிக் குழாயையும் இளைஞர்கள் பயன்படுத்துவார்கள். இந்தப்பழக்கம் இளைஞர் மத்தியில் பொழுது போக்கு அம்சமாகிவிட்டது. சிலர் குடும்பமாக இதை பாவிப்பதும் உண்டு. இந்தியாவில் குடும்பமாக தமிழ் படம் பார்க்கச்செல்வது போல. பலருடைய அபிப்பிராயத்தில் தீமை குறைந்தது எனக் கருதப்பட்டாலும் ரீன்ஏஜ் வயதில் மூளை வளர்ச்சி முற்றுப்படாத போது கஞ்சாவால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் சிஸ்ஸோபிரினியா ஏற்பட வழியுண்டு என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கஞ்சாவில் இருந்து உருவாக்கிய பாலில் இருந்து வரும் ஹாசீஸ், போதை கூடினாலும் இந்த நாட்டில் பாவிப்பவர்கள் மிக அரிது
மத்திய வர்க்கத்தில் ஹிரோயின் பெரும்பாலானவர்கள் கால் கை இரத்த நாளங்களில் ஏற்றுவது. இந்த போதைக்கு அடிமையாவது மட்டுமல்லாது ஹெப்பற்ரைரிஸ் எயிட்ஸ் என சில நோய்களும் பீடித்து இவர்கள் கடைசியில் சமூகத்தில் இருந்து வழுக்கிவிடுவார்கள்.
உயர் வர்கத்தினரால் பொழுது போக்காக பாவிக்கும் கொக்கையின் முரசிலும் மூக்கூடாக உறிஞ்சி பெரும்பாலாக பாவிப்பார்கள். தென் அமரிக்காவில் இருந்து வரவேண்டியதும் அதிக விலையுமாக இருப்பதால் இதனது பாவனை சில குறிப்பிட்டவர்களிடத்தில் மட்டுமே உள்ளது.
…….
ஓப்பரேசன் செய்த நாயின் கழுத்தில் ஒரு கொலர் போட்டு தையலை பல்லால் கடித்து விடாமல் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். எனது அறிவுரை விழலுக்கு இறைத்த நீராக மூன்று நாட்கள் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. சொல்லி வைத்தால் போல் நாலாவது நாள் அதே நாய் பெண் உறுப்பை இரண்டு மடங்கு வெளித்தள்ளிய படி கொண்டுவரப்பட்டது.
“என்ன நடந்தது? ரோபேட்”
சாட்டுக்காக கேட்டு வைத்தேன்
“சாப்பிட கஷ்டப்பட்டது. அந்த கொலரை நீக்கிய போது தையலை கடித்து அறுத்து விட்டது.” என்றார் ரொபேட்.
“இந்தமுறை மிகவும் சிரமமாக இருக்கும். அத்துடன் கருத்தடை ஒப்பரேசன் செய்கிறேன். திரும்பவும் அதனை உள்ளே தள்ள முடியாது. மேலும் இந்த குறைபாடு குட்டிகளுக்கும் வரும்’என்றேன்.
“எங்களுக்கு நாய்குட்டி வேணும்” என்றார்.
“அப்படியானால் என்னால் வைத்தியம் செய்ய முடியாது.” – என்றேன்.
சிறிது நேர மௌனத்தின் பின் நான் கொடுத்த பத்திரத்தில் ஒப்பம் இட்டார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக