அனலைதீவு மக்களுக்கு மட்டும்

நடேசன்

சமீபத்தில் இலங்கை செல்ல முன்பு கனடாவில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் தொடர்புகொண்டார். அனலைதீவில்தான் ஒரு கம்பியூட்டர் வகுப்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதனால் அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும்படி கேட்டார். ஊருக்கு உதவ விரும்புபவருக்கு உதவ நினைத்தபடி இம்முறை அனலைதீவுக்கு செல்;ல முடிவு செய்தேன்.
ஆறு ஏழு வயதில் ஹெப்பரைரிஸ் என்ற ஈரல் நோய் என்னை தாக்கியபோது அனலைதீவு ஆஸ்பத்திரியின் தரையில் பாயில் படுத்திருந்ததும் எனது அம்மா என்னருகே அழுது கொண்டு இருந்ததும் தண்ணீரால் தரையில் வரைந்த ஓவியம் போல நினைவிருக்கிறது. அதைவிட எனது அனலைதீவில் திருமணம் செய்த மாமா ஒருவர் அடிக்கடி மனைவியின் கொடுமை தாங்காமல் எங்கள் எழுவைதீவுக்கு வந்து தாய் வீட்டில் தங்கிவிடுவார். அம்மா மாமாவின் நிலையை அறிந்து பரிதாபப்படுவார்.
இப்படி எனது பால்யகால பருவ ஞாபகங்கள் கசப்பாக இருந்ததால் பக்கத்து ஊராக இருந்தாலும் அனலைதீவைப்பற்றி பூரணமாக அறியாமல் அங்கு செல்வதைத் தவிர்த்திருந்தேன். இவ்வளவுக்கும் எங்கள் ஊர் ஆட்;கள் திருமணம் செய்வதற்கு பெண்ணோ மாப்பிள்ளையோ முதலில் பார்ப்பது அனலை தீவில்த்தான். இது மட்டுமல்ல அனலைதீவில் வடக்கு பக்கமா தெற்கு பக்கமா என்று துருவித்துருவி விசாரிப்பார்கள். ஆனாலும் எழுவைதீவுக்கு வந்து பெண் எடுத்த பின் குடித்தனமாக இருந்த பின்னரும் ‘ஐயனார் அறிய’ என்றுதான் சத்தியம் பண்ணுவார்கள். இது எழுவைதீவு ஆட்களுக்குப் பிடிக்காது. நம்மட ஊரில் தமிழ் கடவுள் முருகன் மேல்தான் சந்தியம் பண்ணுவது வழக்கம். அது பொய் சத்தியமாக இருந்தாலும். ஆனால் நயினாதீவு மாப்பிள்ளைமார் நாகம்மாளின் மேல் சத்தியம் பண்ணும் போது அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்வோம்.
நான் நினைக்கிறேன். கடவுளிலும் சாதி பார்க்கிற வழக்கம் தீவுப்பகுதியில் இருக்கு எண்டு. நாகம்மாள் முருகனை ஐயனாரைவிட உயர்ந்தவர் என்பது எங்கள் ஊர்காரரின் நினைப்பு.
—-
இந்த முறை செல்ல நினைத்தபோது நண்பர் டான் ரீவி குகநாதனும சேர்ந்து கொண்டார். அவரது அப்பா அந்த ஊர். அவரது உறவினர்கள் அங்கு இருப்பது வசதியாகிவிட்டது. நாங்கள் எழுவைதீவில் இருந்து போக சிறிய வள்ளத்தைத்தான் பிடித்தோம். வள்ளம் ஓடிய பெடியன் முன்னர் விடுதலைப்புலிகளின் படகோட்டி. பதினைந்து ஹோஸ் பவர் எஞ்சின் தூக்கி குத்திய போது ‘ஏன் இப்படி முன்பக்கம் தூக்கித் தூக்கி அடிக்கிறது’ எனக் கேட்டேன்.
“அண்;ணை 100 ஹோஸ் பவர் எஞ்ஜின் நாலு பிணைத்த படகை ஓடி இந்தியாவில் இருந்து பெட்ரோல் கடத்தி இருக்கிறேன்” என சிரித்தான்.
நாங்கள் நல்ல கையில்தான் இருக்கிறம் என நிம்மதியாக இருந்தது
அனலைதீவில் இறங்கியதும் பழனி நடராஜா என்பவரை சந்தித்தோம்
அவருக்கு அனலைதீவைப் பற்றிய சகல விடயங்களும் புள்ளி விவரங்களுடன் அத்துப்படி. வெறும் மேலுடன் நீளமான நரை மயிரில் கொண்டை போட்டபடி இருந்தார். நான் சந்தித்த பல தமிழ் அரசியல் வாதிகள் எல்லாம் அந்த மனிதரிடம் பாடம் எடுக்க வேண்டும் அந்தளவு ஆணித்தரமாக அனலைதீவுப் பிரச்சினைகளைத் தெளிவாகக் கூறினார்.
‘அனலைதீவில் 700 குடும்பங்களும் இரண்டாயிரத்து எழுநூறு பேரும் இருக்கிறார்கள் .மற்றத்தீவுகள் மாதிரியில்லை. இங்கு நல்லதண்ணீர் இருக்கிறது. விவசாயம் செய்யமுடியும். 200 ஏக்கருக்கு மேல் நெற்காணி இருக்கிறது. ஆனால் இந்த காணிகளின் உரிமையாளர்கள் எல்லாம் வெளிநாட்டில். ஆனால் நெற்காணி சட்டத்தின் படி வயல் செய்ய முடியும். ழுழு ஊரும் பயன் பெறமுடியும். ஆனால் வயலை உழுவதற்கு உழவு இயந்திரம் தேவை. இதைவிட மகாவித்தியாலயத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. இதை மேம்படுத்த பல முயற்சிகள் செய்ய வேண்டும். முக்கியமாக ஆசிரியர்கள் தலைமையாசிரியர்களது ஒத்துழைப்பு அவசியமாகிறது.
“இந்த விடயங்களை நீங்கள் ஏன் வெளிநாட்டில் உள்ள உங்கள் ஊர்காரருக்கு எடுத்துச் சொல்லக் கூடாது. கனடாவில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.” என்றேன்.
பழனி நடராஜா சிரித்தார்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த குகநாதன் ‘நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள்’ எனக்கேட்டார்.
‘ஏழாம் வகுப்பு.’
‘என்னால் நம்பமுடியவில்லை’ என குகநாதன் சொன்னார்.
என்னால் நம்ப முடியும். ஆனால் நான் ஏதும் சொல்லவில்லை.
மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்
பல டாக்குத்தர் எஞ்ஜினியர் ஏன் ஆராய்ச்;சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் சிலர் பேசும் போது இரண்டு நிமிடத்திற்கு மேல் கேட்க முடியாமல் இருக்கும். காரணம் அவர்கள் பேச்சுகளில் அவர்களது தொழில் சார்ந்த துறைகளுக்கப்பால் லொஜிக் என்பது இராது. இவர்களது அறிவுப்பரப்பு ஜப்பானிய போன்சாய் மரங்கள் போல் அழகாக இருக்கும். காரணம் எமது பாடத்திட்டம். எனவே பழனி நடராஜா போல் பாடசாலை படிப்பு குறைந்தவர்களின் சிந்தனை கட்டுப்பாடு அற்ற ஆலமர விழுதுகள் போல் இருக்கிறது
அவரது வீட்டில் அவர் மனைவி தேனீர் தர முயன்றபோது மறுத்து உங்கள் கிணத்துத் தண்ணி தாருங்கள என வாங்கிக் குடித்தோம். எனது சிறு வயது ஆசை நிறைவேறியது.
பழனி நடராஜா எழுவைதீவு வைத்திய சாலை திறப்பு விழாவுக்கு வந்த போது பத்திரிகையாளர்களையும் மற்றும் அரசாங்க உத்தியோத்தர்களையும் கண்டு அனலை தீவு சம்பந்தமாகப் பேசினார்
இவரைப்போல் ஊருக்கு ஒருவர் வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
மதிய சாப்பாடு குகநாதனது உறவினரின் வீட்டில் கிடைத்தது. ஊர் சல்லிதத்திரளி மீன் சமயல் பல காலத்திற்கு பிறகு. கடல் சூழ்ந்த தீவுகளுக்கு சென்ற எவரும் உணவு கொள்ளாமல் திரும்ப முடியாது. காலம் காலமாக தொடரும் பழக்கம். உணவுச்சாலைகள் இல்லாத இடங்களானபடியால் இந்தப் பழக்கம் வந்திருக்கலாம்.. எழுவைதீவில் எனது சிறு பராயத்தில் எங்கள் வீட்டில் பகல் முழுவதும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். அரசாங்க உத்தியோகத்தர் வியாபாரிகள் கோயில் தண்டல்காரர் இந்தியாவில் இருந்து தோணியில் வந்தவர்கள் என பலர் உணவுக்கு வந்திருப்பார்கள். யாழ்ப்பாணம் வந்தபின் எனக்கு தேநீர் மட்டும் கொடுத்து விருந்தினரை அனுப்பும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள சில காலம் சென்றது.
அனலைதீவு ஜெற்றியை அடைந்த போது சாக்குகள் நிரம்ப மாம்பழங்கள் யாழப்;பாணம் செல்ல தயாராக இருந்தது.
மரக்கறி, பழங்களை குடாநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் ஓரேதீவு அனலை தீவுதான்
மீண்டும் அனலைதீவில் இருந்து ஏழாற்று பிரிவூடாகச் செல்லும் போது நண்பன் குகநாதனை அணியத்தில் இருக்கச் சொல்லி விட்டார் அந்த படகோட்டி பொடியன். வள்ளம் குலுக்கம் குறைந்து விட்டது. ஆனால் நண்பர் பயணம் முடிந்ததும் மிகவும் களைத்துப் போய் நாகபூசணி அம்மனின் வாசலில் சாய்ந்து விட்டார்.

குறிப்பு :
ஏற்கனவே இலவச பிரத்தியேக வகுப்புகள் அனலைதீவு சதாசிவ வித்தியாசாலை மாணவர்களுக்கு தொடங்கி விட்டதாக எனது கனேடிய நணபர் மூலம் பின்னர் அறிந்து கொண்டேன்.
வாழ்க நல்ல உள்ளங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.