– நடேசன்
“நாளைக்கு நான் செத்தாலும் சந்தோசமாக சாவேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை வழக்கமாக யாழப்பாணத்தவர்தான் நடத்தி முடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு நீரகொழும்பான் (லெ. முருகபூபதி) நடத்திவிட்டது எனக்கு மனச்சந்தோசமாக இருக்கு” என்று கண்களில் கண்ணீpர் திரையிட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா என்னிடம் கூறினார்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதிநாள் மாலை கலை நிகழ்ச்;சி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்தபோது, மண்டபத்திற்கு வெளியில் நான் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு நின்ற போதுதான் அவர் அப்படிச்சொன்னார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நாலு நாள் நிகழ்வை விளக்கி கூறுவதற்கு வேறு வார்த்தைகளை நான் தேடத் தேவையில்லை.
அப்பொழுது பக்கத்தில் நின்ற ஞானம் மாதஇதழின் ஆசிரியரும் மாநாட்டின் இலங்கை இணைப்பாளருமான் டொக்டர் ஞானசேகரன், “இலங்கைத் தமிழர்கள் நடத்தி முடித்தார்கள்” எனச் சொல்லுங்கள் என்ற போது, அதை நான் ஆமோதித்தேன். உணர்வுகளின் போதையில்; நான்கு நாட்களும் கால்கள் நிலத்தில் பாவாமல் சஞ்சரித்த டொமினிக் ஜீவாவிடம் எங்கள் வாதம் எடுபடவில்லை.மீண்டும் ஞானசேகரன் சொன்னார் “ ஜீவா உங்கள் பலநாள் கனவு நனவாகி உள்ளது.”
தமிழ் இலக்கியத்தை மட்டுமே வாழ்க்கை என சீவிக்கும் அந்த மனிதரிடம் மௌனமே பதிலாக வந்தாலும் அந்த ஆன்மாவின் அலைமோதும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.. மழையிலும் வெய்யிலிலும் போர்க்காலத்திலும் சமாதான சூழலிலும்; நாட்டைவிட்டு ஓடாமல், அதேவேளையில்- விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் அனுப்பிய பிடி விறாந்தையும் சட்டைசெய்யாமல் அரை நுற்றாண்டுகளாக தமிழ் இலக்கியம் வளர்த்த இந்த ஒரு மனிதனின் சந்தோசம் மட்டுமே இந்ந மாநாட்டின் சன்மானமாக எனக்குப் போதுமானதாக இருந்தது.
மாநாட்டுக்கு எதிர்ப்பாக வெளிநாட்டில் பொய் சொல்லி அகதியாகியவர்களின் கூச்சலை நான் அந்த காலத்தில் புகைத்த சிகரட்டு புகையாக ஊதித்தள்ள இதுவே போதுமானது. இதற்கு அப்பால் ஒரு உச்சமும் இந்த மாநாட்டிற்கு தேவையில்லை.
தமிழ்த்தேசியமென்ற வெற்று கோசத்தால் பிரிக்கப்பட்ட மலையக எழுத்தாளர்கள் இஸ்லாமிய எழுத்தாளர்கள் அந்த நான்கு நாட்களும் தமிழுக்காக தேனீக்களாக உழைத்தார்கள். சந்தோசத்தை அளித்த இருவிடயங்கள் பற்றி இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
1. அறுபது வருடகாலமாக தமிழரை மூன்றாகப் பிரித்த எந்தவொரு அரசியல்வாதிகளும்; இம்மாநாட்டிற்கு அழைக்கப்படாதது இனிமையான பழி வாங்கலாக இருந்தது.
2. மாலைகள் பொன்னாடைகள் மாநாட்டுக்குள் வரவேயில்லை.
மாலைகள் இல்லாமலும் மாநாடு நடத்தமுடியும் என்று கொழும்பில் ஒரு பிரபல தமிழ் ஊடகம் எழுதியிருந்தது.
கடந்த வருடம் (2010) ஜுன் மாதத்தில் உலக மிருகவைத்தியர்கள் மாநாடு ஜெனிவாவில் நடந்தபோது அதில் பங்குபற்றியதால், ஒரு மாநாட்டை சர்வதேச மட்டத்தில் எப்படி நடத்த முடியும் என்ற அனுபவத்தை அளவு கோலாக வைத்து எனது கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறது.
ஆரம்ப நாளான ஜனவரி 6 ஆம் திகதியன்று கொழும்பு தமிழ்ச்;சங்கத்தில் சுமார் ஐநூறு பேர்; பங்கு பற்றிய போது இடம் போதாமல் இருந்தாலும் அது ஒரு குறையாகத் தென்படவில்லை. அதைத் தொடர்ந்த நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரேசமயத்தில் மூன்று மண்டபங்களில் நடந்ததால் இடநெருக்கடி தவிர்க்கப்பட்டது. மேலும் பலரது ரசனைக்கேற்ப அரங்கங்களில் பங்குபற்றமுடிந்தது .கடைசிநாள் மாலையில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த கலைநிகழ்ச்சிகள் மிகத்தரமாக இருந்தன..
முக்கியமாக நாட்டிய நாடகம் பலரால் பாராட்டப்பட்டது. அன்றையதினம் ஜோர்ஜ் ஓவலின் விலங்குப் பண்ணை நாவலின் தமிழாக்கத்தை மாநாட்டுக்கு வந்த இளஞர்களிடம் விநியோகித்துக்கொண்டிருந்தேன்.
இந்த மகாநாட்டினை முருகபூபதி ஒழுங்கமைத்த போதிலும் நடத்திய முறையில் பாராட்டுகள் சேரவேண்டியது ஞனம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன் அவர்களின் தலைமையில் இயங்கிய குழுவினருக்கே. அவரது குடும்பத்தினர் மிகவும் கடுமையாக உழைத்திருந்தனர். இவர்களை நான் குறிப்பிடும்போது மற்றவர்களின் உழைப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
பலர் நினைத்துப் புழுங்குவதுபோல் முக்கியமாக தமிழ் நாட்டைச்சேர்ந்த ப ஜெயப்பிரகாசம் என்பவர் முட்டாள்தனமாக கற்பனை செய்தது போலன்றி எந்த ஒரு அரசாங்கத்தினதும் உதவியில்லாமல் வெறும் இருபதினாயிரம் அமெரிக்க டொலர் மட்டுமே இந்த மாநாட்டிற்கு செலவு செய்யப்பட்டது. நாலாயிரம் அமெரிக்க டொலர்கள் துண்டுவிழுந்ததாக அறிகின்றேன்.. இங்கு செலவாகிய ஒவ்வொரு சதமும் தனிப்;பட்ட மனிதர்களால் கொடுக்கப்பட்டது. கனடா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் அன்பர்கள் சிலரும் இலங்கை அன்பர்கள் பலரும் இம்மாநாட்டிற்காக நிதியுதவி வழங்கியிருந்தார்கள். இங்கே உடல் உழைப்பும் சிறந்த ஒருங்கிணைப்பும் பொருள்விரயத்தை தவிர்த்திருக்கிறது.
மாநாட்டின் கனதியை ஒருவரும் குறை நிறை முற்றாக சொல்லமுடியாது. நான் பங்கு பற்றிய நாலு நாட்களிலும் நான் விரும்பிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டேன். இலங்கையில் இலக்கியகர்த்தாக்கள் மற்றும் தமிழ்க்கல்விமான்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களின் உச்சத்தை வெளிப்படுத்த அரங்கமைத்ததுதான் இந்த மாநாடு. இதனை மாநாட்டு ஒருங்கமைப்பாளர்கள் திறம்பட செய்திருந்;தார்கள்.
இதே வேளையில் இந்த மாநாடு இலங்கையின் தமிழ் மொழியியலாளர்களின் பலவீனங்களையும் வெளிக்காட்டியது. சிங்கள ஆங்கில படைப்புகளை படைத்த இலக்கிய அல்லது கல்விமான்கள் அழைக்கப்பட்டிருக்கலாம். இலங்கையில் தமிழ் மொழி வளர்வதானல் அது தனித்து பரிசோதனைக்குழாயில் வளர்வதுபோல் வளரமுடியாது. இலங்கையில் பேசப்படும் சிங்களம் மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் இலக்கியம் படைப்பவர்களிடம் இருந்தும் படித்துக்கொள்ள ஏராளம் உள்ளது.
அறிந்தவற்றை பகிர்தல் தமிழர்கள் இடையில் மட்டும் நடப்பது இல்லை. மேல் சட்டைபோட தமிழன் கற்றுக்கொண்டது ஐரோப்பியரிடம் இருந்துதான். கோவணம் கட்டிய தமிழன் கெல்வின் கிளான் அண்டவெயர் போடுவதற்கு பழகியதும் மேற்கில் இருந்துதான்.
ஈழத்து தமிழ் இலக்கியவாதிகளின்மேல் மேலாதிக்கம் செலுத்தும் தமிழ்க்கல்விமான்கள் முக்கியமாக மறைந்த பேராசிரியர் கைலாசபதி பின்பு பேராசிரியர் சிவத்தம்பி என ஒருவித பயங்கரவாத மனப்பான்மை இன்னும் தொடர்கிறது. மாநாட்டை எதிர்த்த பேராசிரியர் சிவத்தம்பி வந்து மாநாட்டை ஆசீர்வதிக்க வேண்டிய நிலையில் இருந்தது. இதில் கலந்துகொண்ட அந்தப் பேராசிரியர் மகாநாட்டுக்கு என புதிதாக ஒரு பேச்சை தயாரிக்காமல் வந்து 2010 ஆண்டு ஜனவரியில் நடந்த மாநாட்டு ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய புலம் பெயர்ந்தவர் இலக்கியம் என்ற அதே தலைப்பில் மீண்டும் பேசிவிட்டுச் சென்றார். அரசியல்வாதி ஒருவர் அப்படிச்செய்தால் மன்னிக்க முடியும். ஓரு பேராசிரியர்; இப்படிச் செய்வது …………
இதை விட நான் அவதானித்த முக்கியமான விடயம் இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒரு புறம் வைத்துவிட்டுப்பேசினாலும் முற்போக்குவாதம் என்பது இன்னமும் அட்டையாக ஒட்டிக்கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் காணாமல்போன பொருள்முதல்வாத கருத்துக்களை வைத்து இலங்கை இலக்கியத்துக்கு சிவப்பு விளக்கை காட்டுவதற்கு சில கல்விமான்கள் இன்னும் தயாராக இருப்பதாக தெரிந்தது. ஈழத்து இலக்கியம், முற்போக்கு என முப்பது வருடங்களும் தமிழ்த்தேசியம் அடுத்த முப்பது வருடங்களும் போட்ட விலங்கை உடைத்துக்கொண்டு வெளியில்வர ஈழத்து இலக்கியம் தயாரில்லாத தன்மை தெரிந்தது.
இதேமாதிரி ஈழத் தமிழ் ஊடகங்கள் தமிழ்த்;தேசியம் என்ற இரும்புக் கோவணத்தை கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் உலாவுவதும் தெரிந்தது.
தமிழ் இலக்கியப் பரப்பில் செவ்விதாக்கம் இந்த மாநாட்டு மேடையில் பேசப்பட்டது நல்ல விடயம். இலங்கையில் பத்திரிகை வானொலி மற்றும் ஊடகங்களில் படைப்பு இலக்கியத்திற்கு தேவையான இந்த விடயத்தை இலங்கை தமிழ் ஊடகங்களோடு சம்பந்தப்படாத ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்;கும். நோயாளிகள் பலர் என்ன மருந்து தேவை என்பது பற்றி பேசுவது நல்லது. ஆனால் நல்ல டொக்டரும் அவர்களுடன் இருந்திருக்கவேண்டும்.
தமிழகத்தில் இருந்து வந்த எழுத்தாளரில் தோப்பில் முகம்மது மீரானின் பேச்சு கேட்க சுவையாக இருந்தது. அவரை சிறப்பு பேச்சாளராக்கி மேலும் ஆழமாக பேசும்படி கேட்டிருக்கலாம்.
பல தமிழ் நூல்களை மொழிபெயர்த்த மடுள்கிரியே விஜயரத்தின, மொழிபெயர்த்தலை பாட நெறியாக்கி அதில் புலமை பெற்றவர் அவரது உரையில் பலவிடயங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
நான் சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அப்பால் இந்த மாநாடு சாதித்தவைகள் ஆத்மா சம்பந்தமானவை.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோல்வியடைந்ததும் இலங்கைத்தமிழன் சரித்திரம் முடிந்துவிட்டது எனக்காட்ட சகல விடுதலைப்புலி ஆதரவாளர்களும் முயற்சித்தார்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் தமிழ்மொழி பேசுபவர்கள் இலங்கையின் நாலாபக்கத்திலும் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தவேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்த மாநாட்டை நடத்த வேண்டாம் என எத்தனைபேர் கூக்குரல் போட்டபோதிலும், எதை இலங்கையில் நடத்துவது அல்லது நடத்தாமல் விடுவது என்பதை தீர்மானிக்கும் தனித் தன்மையை நிலை நிறுத்தியது இந்த மாநாடு.
ஆயுதத்திற்குப் பயந்து முப்பது வருடமாக இருந்த பல எழுத்தாளர்களை தட்டி எழுப்ப உதவியது. பல இளைஞர்கள் யுவதிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருந்தது நாளைய ஈழத் தமிழ் இலக்கிய உலகத்தில் நம்பிக்கை கொள்ள வைத்தது.
இந்த மாநாட்டுக்காக வெளிவந்த புலம் பெயர்ந்த எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பான முகங்கள் டென்மார்க் ஜீவகுமாரனால் தொகுக்கப்பட்டது. இது பல தரமான கதைகளை கொண்டது.; புலம்பெயர்ந்த வாழ்வின் குறுக்கு வெட்டாக சிறுகதைகள் இருந்தன. முக்கியமாக ஆங்கிலம் பேசும் நாடுகளான கனடா பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்;களுக்கும்; ஐரோப்பிய நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் முறையிலும் அனுபவத்திலும் பல வித்தியாசங்கள் இருப்பதை இத்தொகுப்பின் கதைகளில் புரிந்து கொள்ளமுடிந்தது.
மாநாட்டு மலரிலும் கட்டுரைக்கோவையிலும் பல படைப்புகள் தரமாக இருந்தன. மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்ட Being Alive நூலில் அவுஸ்திரேலிய தமிழ்ப்படைப்பாளிகளினால் எழுதப்பட்ட சில கதைகளை சியாமளா நவம் (கனடா) நவீனன் ராஜதுரை (அவுஸ்திரேலியா) ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்கள். இம்மாநாட்டில் பல குடும்பத்தினரது கடும் உழைப்பை நேரில் பார்த்தேன். அப்பொழுது ஒரு உண்மையையும் புரிந்துகொண்டேன்;.
தமிழர் பலரிடம் இருக்கும் ஒரு குணம் வைக்கோல்பட்டறையில் உள்ள நாயின் இயல்புக்கு ஒத்ததானது. தமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிநின்று மற்றவர்கள் செய்வதை பார்க்கும் ஜனநாயகப் பண்பை இலங்கையில் உள்ள கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்களிடம் பார்க்க முடிந்தது. ஆனால் பா ஜெயப்பிரகாசம், காலம் செல்வம், பத்மநாப ஐயர் போன்ற பெரியமனிதர்கள் இவர்களைப் பின்பற்றி வயதுக்கு வரவேண்டும்;.
சிறியதொரு விடயத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் கொழுத்தி நெருப்பாக்கி எரியவிட்ட எஸ்.பொ வுக்கும், தான் செய்தது ஒரு விழல் விளையாட்டு என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஈழத்தில் ஒரு தனி இலக்கிய சமூகம் வளர்வதற்கான அத்திவாரம் இந்த மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மீது தொடர்ந்து நிருமாணிப்பது வருங்காலத்தினரை பொறுத்தது.
Uthayam@optusnet.com.au
பின்னூட்டமொன்றை இடுக