விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்.

விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்!
“விலங்குப் பண்ணை” மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், தமிழில் புதிய பதிப்பக முயற்சிகளை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் சிகரம் ஊடக இல்லத்தில் 16/12/2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
சிகரம் ஊடக இல்லத்தின் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களான வைத்திய கலாநிதி நோயேல் நடேசன், லெ.முருகபூபதி, பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல், கவிஞர் சோ.பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்களான தெணியான், கருணாகரன், விஷ்ணு, சித்தாந்தன், ம.நிலாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் விருந்தினர்களை வரவேற்று நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து “விலங்குப்பண்ணை” நாவல் பற்றிய அறிமுக உரையை கவிஞரும், ஆங்கில விரிவுரையாளருமான சோ.பத்மநாதன் நிகழ்த்தினார்.
சோஷலிசப் புரட்சி நடந்த ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் நிலவிய சர்வாதிகாரச் சூழலில் மக்கள் பட்ட இன்னல்களை அங்கதச் சுவையுடன் விலங்குகளின் பண்ணை ஒன்றை அடிப்படையாக வைத்து ஓவேல் சூசகமாக இந்த நாவலில் வெளிப்படுத்திய விடயங்கள் பற்றி சுவாரஸ்யமான விளக்கங்களை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார்.
“அதிகாரம் ஒருவரை அழிக்கும் என்றால், சர்வாதிகாரம் அனைத்தையும் சர்வநாசம் செய்யும். இந்தக் கருப்பொருளை வெளிப்படுத்தும் விலங்குப்பண்ணை போர்க்காலத்தில் வெளியிடப்பட்டிருந்தால் இன்னும் பயன் மிக்கதாக இருந்திருக்கும்” என்று கூறினார் அவர்.

சோ.பத்மநாதன்
ஜோர்ஜ் ஓவேல் எழுதிய ஆங்கில நாவலான Animal Farm, நல்லைக்குமரன் குமாரசாமியின் மொழிபெயர்ப்பாக “விலங்குப் பண்ணை” என்ற பெயரில் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிகரம் ஊடக இல்லத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பில் இரண்டாவது பதிப்பாக வெளிவந்த நாவலை, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் வெளியிட்டு வைக்க, டான் தொலைக்காட்சிப் பணிப்பாளர் குகநாதன் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
வைத்திய கலாநிதி நோயேல் நடேசன் வெளியிட்ட வண்ணாத்திக்குளம் என்ற நாவலும் இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

நடேசன்
பதிப்பு முயற்சிகள்
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, தமிழில் புதிய பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. புதிய பதிப்பு முயற்சிகளுக்கான தேவை, அதனை ஆரம்பித்து முன்னெடுக்கக்கூடிய வழிவகைகள், இதன்போது எழக்கூடிய சவால்கள் என்பன பற்றி பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.
1. மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய பங்கு.
2. பதிப்பிக்கும் வெளியீடுகளின் தர நிர்ணயம்.
3. வெளியீடுகளுக்கான சந்தை வாய்ப்பு மற்றும் விநியோகம்.

பா.இராஜேஸ்வரி
4. பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ளும் நூல் கொள்வனவைப் பயன்படுத்தி வெளியீடுகளுக்கான சந்தைவாய்ப்பைப் பெருக்குதல்.
5.எழுத்து முயற்சியில் ஈடுபடும் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான அவசியம்.
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இங்கு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
வெகு சீக்கிரத்தில் இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு புதிய வெளியீட்டு முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும், இதற்கு புலம்பெயர் சமூகத்தின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்றுத்தர தம்மால் ஆனதைச் செய்யத் தயாராகவிருப்பதாகவும், நிகழ்வின் இறுதியில் வைத்திய கலாநிதி நோயேல் நடேசன் கலந்துகொண்ட அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
மிகக் குறுகிய கால வேண்டுகோளை ஏற்று, செம்மையாக இத்தகையதொரு கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தியமைக்காக சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் மற்றும் மாணவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள், வாசகர்கள், சிகரம் ஊடக இல்ல மாணவர்கள் உட்பட்ட பலர் கொண்டனர்.

“விலங்குப்பண்ணை’ வெளியீடும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்.” மீது ஒரு மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.