– நடேசன் .
எம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது, அடிவாங்கினாலோ எமது கோபத்தை அருகில் உள்ளவர்கள் மீது காட்டுவது பாமரத்தனமானது. இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள்.
இப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும். அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படி இல்லாத பட்சத்தில் மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள். இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும்.
ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பாமரத்தன்மையை அறிவுஜீவிகள் புறக்கணித்தாலும், அதன்பின்பு மட்டரக அரசியல்வாதிகள் சாமானிய மக்களின் மனதில் அதை நஞ்சாக மாற்றியதால் அந்த நஞ்சு ஒரு சமூகத்தையே அழித்துவிடுவதை நாம் இன்னமும் அறிந்து கொள்ளதவறிவிடுகிறோம்.
இயற்கை அனர்த்தங்கள் வர்க்கவேறுபாடு பார்பதில்லை. எனினும் பாதிப்பு அடிமட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது. சுனாமியில் அதிகம் அழிந்தவர்கள் அன்றாடக்காச்சிகளான மீனவர்களே. மழை வெள்ளத்தில மிதந்து போவது குப்பத்து குடிசைகளே. இதேபோல் போர் அனர்த்தத்தில் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய தமிழர்கள் மட்டுமல்ல சாமானிய சிங்கள வர்கத்தினரும்தான். இவர்களில் இருந்துதான் இறந்த, முடமான இராணுவத்தினர் வந்தார்கள்.
ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் அறிவாளிகள் என்ற ஒரு விடயம் காலம் காலமாக இலங்கை இந்தியா போன்ற பிரித்தானியாவால் ஆளப்பட்ட நாடுகளில் சுதந்திரத்துக்கு பின்னும் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வலியுறுத்துவது போல் மக்கள் மத்தியில் செல்லும் கலாச்சார ஊடகங்களான சினிமாப் படங்களில் பட்டிக்காட்டு கதாநாயகன் பணக்கார கதாநாயகியால் புறக்கணிக்கப்பட்டுவந்தாலும் கடைசியில் ஆங்கிலம் பேசும்போது அவன் படித்த புத்திசாலியாக கருதப்பட்டு அந்தக் கதாநாயகியால் காதலிக்கப்படுவான்.
தர்க்க ரீதியாக ஏற்றறுக்கொள்ளாத விடயங்கள் கூட ஊடகங்களால்; சமூகத்தில் பரப்பப்படும் போது சாதாரண மக்கள் மத்தியில் அந்த விடயங்கள் கருத்தியலாக மாறுகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தாய் மொழி விருத்தியடையாமல் ஆங்கிலம் சகல மேல்தட்டு மக்களாலும் அத்துடன் மேல்;தட்டை அடைய விரும்பும் கீழ்த்தட்டு மக்களாலும் மோகிக்கப்;படும் போது எப்படி தாய் மொழி அபிவிருத்தி அடையும்?
முக்கியமாக ஒரு மொழி தொடர்ந்து இருப்பதற்கு தேவையான விடயங்கள்.
1)மொழிக்குரிய கௌரவம் அந்த மொழி பேசும் சமூகத்தவரால் கொடுக்கப்படல் வேண்டும்
2) அறிவான விடயங்கள் அந்த மொழியில் உருவாக்கப்படல்வேண்டும்
3)மொழிக்கு அதிகாரம் கொடுக்கப்படவேண்டும்
4)கல்வித்திட்டத்தில் அம்மொழி உள்ளடக்கப்படல்வேண்டும்
5) எழுத்து மூலம் உருவாக்கப்படவேண்டும்
6) தற்காலத்தில் இலத்திரன் ஊடகங்களில் உள்ளடக்கப்படல்வேண்டும்.
முக்கியமாக முதலாவது விடயமான கௌரவம் எப்பொழுது கொடுக்கப்படல் வேண்டும்?
அரசியல்வாதிகள் மொழியை போற்றிப் பேசியோ மகாநாடு வைத்தோ மொழியை வளர்க்க முடியாது. மொழியியலாளர் ஆராய்ச்சியின்படி குழந்தைகள் ஐந்து ஆல்லது ஆறு வயதில் மொழிபேசுத் தொடங்கும் போது அந்த மொழிக்கு கௌரவம் கொடுக்கவேண்டும். ஆனால் அந்த வயதில் நாம் எந்த மொழிக்கு கௌரவம் கொடுத்தோம். இலங்கையிலும் தமிழ்நாட்டில் ஆங்கிலம் கற்பிக்க கொன்வென்றுகளுக்கும் ரீயூசன்களுக்கும் அனுப்பி, ஆங்கிலத்துக்கு மரியாதை கொடுத்துவிட்டு இந்திமீதும் சிங்களத்தின் மீதும் கசப்பை உருவாக்க முயற்சித்தோம்
இரண்டாவது, எந்த மொழியில் அறிவுசார் விடயங்கள் இல்லையோ அந்த மொழி கற்றவர்கள் மத்தியில் கௌரவம் வளராது. ஒரு மொழியில் விஞ்ஞானம, பொருளாதாரம் , தொழில் நுட்பம் போன்ற அறிவுசார் விடயங்ளை படிக்க முடியாத போது அந்த மொழி இந்தத் துறை சார்ந்த வர்க்கத்தினரிடம் தாய்மொழியாக இருந்தாலும் சென்றடையாது. இதை விட சமூகத்தில் பொருளாதாரத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆங்கிலத்தை பிரதானமாக படித்தால் அவர்களுக்கு தாய்மொழியில் சிறந்த தேர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. இப்படி சமூகத்தில் அறிவு கூர்ந்தவர்களையும் படித்த மட்டத்தவர்களையும் இழந்து விட்டபடியால் இந்த மொழியால் காத்திரமான இலக்கியமும் படைக்க முடியாது போய்விடலாம். இப்படியான சமூகத்தில் பேசப்படும் மொழி ஏழ்மையடைந்து விடுகிறது. ஏழைத்தாயாக கந்தலுடன் வலம்வருகிறது. பண்டைக்காலத்தின் பின் யப்பானை தவிர்ந்த பல ஆசிய மொழிகளில் சிறந்த இலக்கியங்கள் வராமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
எனது தாய்மொழியான தமிழில் இந்த வறுமை தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இருந்த காலனி கல்வி முறையில் தொழில் நுட்பம் மருத்துவம் சட்டம் பொருளாதாரம் படித்தவர்கள்தான் கற்றவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் இந்த கற்கை நெறிமூலம் பல்கலைக்கழகம் செல்லவும், பின்பு சமூகத்தில் நல்ல உத்தியோகம் பார்க்கவும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. இதனால் இவர்களது சிந்தனையில் ஆங்கிலம் செல்வத்தை தேடுவதற்கான ஒரு மொழியாக கருதப்படுகிறது. இவர்களால் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. வசதி குறைந்தவர்களும் பாமரர்களும் மட்டும் பேசும் மொழியாக தாய் மொழி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் எமது தாய் மொழி படித்தவர்களாலும் அறிவாளிகளாலும் புறக்கணிக்கப்பட்டு அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கிவிடுகிறது. ஜனநாயக மக்கள் ஆட்சியில் பாமரர்கள் பெருமளவில் இருப்பார்கள். இதனால் அவர்கள் பேசும் மொழியில் அவர்களுக்கு புரியும் வகையில் உணர்வுகளைத் தூண்டும் கோசங்கள் இந்த அரசியல் வாதிகளால் உருவாக்கப்படுகிறது
வார்த்தைகள் காலங்காலமாக உணர்வுகளை உருவாக்கும் என்பது வரலாறு காட்டும் பாடம். காதல் காமம் பாசம் கோபம் என்ற அடிப்படை உணர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த உருவாக்கிய கருவியான மொழி மற்ற இனத்தவர்களின் மீது வெறுப்புகளை வளர்ப்பதற்கான கருவியாக உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் திராவிட இயக்கத்தினர் இதை அழகாகச் செய்தனர். சங்ககால இலக்கியத்தின் செழுமையை பேசிக்கொண்டு தமிழை ஆங்கில மொழி ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுப்பதைச் செய்யாமல் சகோதர மொழியான இந்திக்கெதிராக வெறுப்பினை பாமர மக்கள் மத்தியில் வளர்த்தார்கள். இவர்கள் இப்படி செய்ததன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு வழிமுறையாக இருந்தது. அரை நுற்றாண்டுகாலமாக அரசுக்கட்டிலில் இருந்தும் இன்று வரையும் இவர்கள் தமிழ் நாட்டில் ஆரம்பக் கல்வியை தமிழில் சகலருக்கும் கட்டாய பாடமாக்கவில்லை. இவர்கள் செய்த தமிழ்த்தொண்டு- எப்படி ஒரு தெருச் சண்டியனுக்கு துஷணவார்த்தைகள் அல்லது கையில் இருக்கும் மரக்கட்டை சாதாரண அப்பாவிகளைப் பயமுறுத்த பயன் படுமோ அதே அளவு இவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்கப் பயன் பட்டது.
அது அங்குள்ள நிலை எனில் எம் நாட்டில் முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் தாய்மொழிக்கல்வியால் எம்போன்றவர்கள் 12 ஆம் வகுப்புவரையும் விஞ்ஞானம், பொருளாதாரம், தொழில் நுட்பம் ஆகியனவற்றை தாய்மொழியில் கற்கக் கூடிய நிலைமை இருந்தது. பல்கலைகழகத்திலும் முதல் இரண்டு வருடங்கள் தமிழில் மருத்துவம் பல்வைத்தியம் மிருகவைத்தியம் கற்கும் நிலைமை இருந்தது. இந்த நிலைமைக்கு தமிழகத் தமிழர்கள் எக்காலத்திலும் வருவார்களா என்பது கேள்விக் குறி.
தமிழக அரசியலின் தாக்கத்தால் இங்கேயும் அரசியல்வாதிகள் மொழிக்காவலர்களாக தங்களை நிலைநாட்டும் கோசத்தை தொடக்கினார்கள். சிங்கள ஸ்ரீpயை எதிர்த்து போராடியதும் பின்பு தமிழ் ஆராய்ச்சி மகாநாடு என்ற பேரில் உணர்வுகளை பற்றவைத்தார்கள். இந்த விடயத்தில் இவர்கள் எதிர்பார்த்தது போலவே இலங்கைச் சிங்கள அரசியல்வாதிகளும்; நிலைமையை மோசமாக்கினர்கள்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் இந்திய தமிழ் அரசியல் வாதிகளைப் பின்பற்றி தமிழ் மொழி வளர்வதற்கு எதுவித உதவிசெய்யாதுவிடினும் தமிழ் நாட்டில் இந்திய எதிர்ப்;பு கோசத்தை நிறுத்தி இந்தி எதிர்ப்பு கோசத்தை குறைத்துக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். எமது அரசியல்வாதிகளால் ஊதிய நெருப்பை அணைக்க முடியவில்லை. தமிழர்களை அந்த நெருப்பு எரித்து விட்டது.
இப்பொழுது நாம் அந்த சாம்பலின் மேல் நிற்கிறேம்
இப்பொழுது தமிழ்மொழிக்கு நாம் செய்யவேண்டியது என்ன ?
நான் மொழியியலாளர் இல்லாததால் ஆழமாக செல்லாமல் சிலகோடுகளை மட்டும் காட்டமுயற்சிக்கின்றேன். போரால் அழிந்த சமூகங்கள் பல உண்டு ஐரேப்பாவில் போரல் இரண்டாயிரம் வருடங்களாக அழிந்த பல சமூகங்கள் எழுந்து வந்திருக்கின்றன். இதற்கான வழிவகைகளை நாம் செய்து கொள்ளவேண்டும். பொருளாதாரத்துறையில் வளம் பெற சரியான திட்டங்களை உருவாக்க முயற்சிக்கும் போது எமது கலாச்சார வடிவங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். இந்த கலாச்சாரத்தில் பல வடிவங்கள் அகதியாக்கத்தால் அழிந்தாலும் இலக்கிய வடிவங்கள் அழிந்து போய் விடவில்லை . எமது ஆன்மாவின் தேவையை கடந்த முப்பது வருடங்கள் ஆயுதங்களுக்கு அடைவு வைத்து விட்டோம். இப்பொழுது எழுத்தாளர்களும் கவிஞர்களும் அம்பின் கூர்முனையாக செயல்படும் காலம் வந்துவிட்டது.
தென்னிந்திய கலை இலக்கிய வடிவங்கள் அவர்களின் சமூக வடிவத்துக்கேற்ப உருவாகி வர்த்கமயமாக்கப்பட்டுள்ளன. அவை தமிழ்மொழியில் இருந்தாலும் நமக்குரியவை அல்ல. ஆங்கில மொழியில் இருந்தாலும் பிரித்தானிய கலைவடிங்களுக்கும் அமெரிக்க கலைவடிவங்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இதே போல் தமிழகத்தின் தொங்கு தசையாக இல்லாமல் நாம் தனி இலக்கணம் படைக்கவேண்டும்.
இலங்கையில் எமது சகோதர இனமான சிங்களவர்களிடம் இருந்து பல பாடங்களை கற்க வேண்டும். தனியான இலக்கியம், நாடகம் ,மற்றும் கவி வடிவங்கள் அவர்களுக்கு உண்டு. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற தனிமனிதர் சிங்கள சினிமாவை இந்திய மசாலாத்தன்மையில் இருந்து வேறுபடுத்தி சிங்கள சினிமாவுக்கு தனிவடிவம் கொடுத்தவர்.
இலங்கை என்ற அரசியல் கட்டமைப்பில் நாம் வாழும்போது நமக்கென தனியான வடிவங்களை உருவாக்கவேண்டிய காலம் வந்துள்ளது. தொப்புள் கொடி உறவு என அரசியல்வாதிகளின் பாசாங்கு வார்த்தையில் நாம் பட்ட துன்பம் போதும். தாயும் பிள்ளையும். ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். உணர்வுகளையும் அரசியல் கோசங்களையும சிலகாலம் ஓரத்தில் வைத்துவிட்டு நம் கலாச்சார வடிவங்களை உருவாக்குவதற்காக நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்கு இந்த அறிஞர்கள் கூடும் அவை முதற்படியாக இருக்கட்டும்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு –கொழும்பு 2011
பின்னூட்டமொன்றை இடுக