
நோயல் நடேசன்
இதுவரையில் பெத்தலகேம் யூதப் பெண்ணான மேரியால் மட்டுமே கன்னி நிலையில் தாயாக முடியும் என நினைத்திருந்தேன். உங்களில் பலரும் என்னைப்போல் அந்தத்தன்மைக்கு இறையருள் தேவை என நினைத்திருந்திருப்பீர்கள். ஆனால், மிருக வைத்தியரான எனக்கே அதிர்ச்சியாக இருந்த விடயம் ஒன்று உள்ளது.
ஆதிகால விலங்காகிய கொமடோ டிரகனின் ( ஒரு வகையில் உடும்பு போன்றது ) முக்கிய விடயமாக நான் தெரிந்து கொண்டது இதுதான். அதற்கு ஆண் உயிரிகளின் தேவையில்லை . புணர்ச்சியற்று பெண் முட்டை இட்டு அதிலிருந்து குஞ்சுகளைப் பொரிக்கும்.
ஆதாரம் :
லண்டனில் உள்ள செஸ்டர் மிருகக் காட்சிசாலையில் இது நடந்தது. அப்பொழுது நான்கு ஆண் டிரகன்கள் வெளியே வந்து பலரைத் தலை சுற்ற வைத்தன. (parthenogenesis) இந்தத் தன்மை முள்ளந்தண்டு மிருகங்களில் மிகவும் அரிதானது. ஆரம்பத்தில் எப்போதோ புணர்ந்த விந்தைக் கருப்பையில் ஒளித்து வைத்து பின்னர் கருக்கட்டியது என ஆரம்பத்தில் கருதியபோதும், சரியான உண்மை தலையைப் பிய்த்துக் கொண்ட பின்பே தெளிவாகியது.
மிகவும் அரிதான இத்தகைய ஒரு இயல்பு அதற்கு எப்படி ஏற்பட்டது ? ஏன் ஏற்பட்டது?
அதற்கு இங்கே தெய்வீக விளக்கம் கொடுக்க முடியாது. அவை தனித்தீவில் பல காலமாக இருந்ததால் அவற்றின் தொடர்ச்சியான வாழ்க்கையை உறுதிப் படுத்தும்வகையில் இயற்கையின் புதிய பரிணாமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்படிப் பார்த்தால், மனிதர்களுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் இந்த இயல்பு கொள்கை ரீதியாக ஏற்படலாம் அல்லவா?
கொமடோ டிரகன் சாதாரணமாக நிலத்திலுள்ள பறவைகள் சேகரித்து அமைத்த இலைகளாலான கூட்டில் 20 முட்டைகள் இடும். காலப்போக்கில், மக்கும் இலைகளின் சூட்டில் 7-8 மாதங்களில் பொரிக்கும். அந்தக் குஞ்சுகள் பாதுகாப்பைக் கருதி மரங்களில் ஏறிவிடும். பூச்சிகள் எறும்புகள் சிறிய பறவைகளை அவை உண்டு வாழும். நிலத்திற்கு வந்தால் பெரிய கொமடோக்கள் அவற்றை உண்டு விடும். 8-9 வருடங்களில் பருவமடைந்துவிடும். 30 வருடங்கள் கொமடோ டிரகன்கள் புவியில் வாழும். தற்பொழுது இந்தோனேசிய தீவுக்கூட்டங்களில் மட்டுமே அவை வாழ்கின்றன.

அவுஸ்திரேலியா, ஏனைய நாட்டினர், அகதிகள், மாணவர்கள் என பலர் வந்து சேரும் ஒரு குடியேற்ற நாடு. ஒவ்வொரு வருடமும் இலட்சத்திற்குமேல் சட்ட பூர்வமாக வருவார்கள். அதைவிட விமானம், படகு மூலம் சட்டவிரோதமாக வருபவர்கள் பலர். ஓரு காலத்தில் பலர் இந்தோனேசியாவில் மீன்பிடிப் படகுகளை வாங்கி அதை ஓட்டியபடி வருவார்கள். அவுஸ்திரேலியாவை விட்டுவிலகி இங்கிருக்கப் பிடிக்கவில்லை, எனக்குச் சுவாத்தியம், உணவு பிடிக்கவில்லை, மாமிசம் தின்று அலுத்துவிட்டது என வெளியேறி இந்தோனேசியாவில் சில தீவுகளில் வாழும் ஒரு மிருகம் இனம் கொமடோ டிரகன்
இவ்வாறு நடந்தது சமீபகாலத்தில் அல்ல . பனிக் காலத்திற்கு முன்பாக ( Ice Age) இந்த வெளியேற்றம் நடந்துவிட்டது. இந்தோனேசியத் தீவுகள் மட்டுமல்ல, தென்கிழக்காசியா முழுவதும் ஒரே நிலமாக இருந்த காலத்தில், வடக்கு நோக்கி சென்றவை, திருவிழாவில் பிரிந்த குழந்தையாக கடல் பெருகியதால் மீண்டும் திரும்ப முடியாது அங்கு தங்கிவிட்டன.
மனிதர்கள் மட்டும் கண்டம் விட்டு கண்டம் மாறுவதில்லை . மிருகங்களும் அவ்வாறு பிரயாணிக்கின்றன. அங்கு அவை வசதியாக முக்கிய வேட்டை மிருகமாக (Apex Predator) வாழ்கின்றன. வேறு எந்த மிருகத்தினதோ அல்லது மனிதர்களதோ பயமின்றி ஜாலியான வாழ்வுதான் அவைக்கு என்பதை அங்கு போய்ப் பார்த்தபோதுதான் தெரிந்தது.
அவுஸ்திரேலிய மிருகக் காட்சி சாலையில் அவை இருந்தாலும், உலகத்தின் பல இடங்களில் அவை இல்லை . மேலும் அவற்றின் இடத்திற்கே நேரில் சென்று பார்ப்பதே அந்த டைனோசர் காலத்து பிராணிக்கு நான் கொடுக்கும் மரியாதை என நினைத்து அஸ்திரேலியாவிலிருந்து அவற்றைப் போய் பார்ப்பது எனத் தீர்மானித்தபோது அது இலகுவான விடயமல்ல என்பதும் புரிந்தது.
ஜகார்த்தாவிலிருந்து விமானத்தில் பறந்து ஃபுலோரஸ் (Flores Island) என்ற தீவுக்குச் சென்று, அங்கிருந்து கடல் மார்க்கமாகப் படகில் கொமடோத் தீவுக்கு பயணிக்கவேண்டும். இந்த ஃபுலோரசில் தான் மனித குலத்தின் கிளையான குள்ள உறவினர் ஒருவரது எலும்பை ( Homo floresiensis) கண்டெடுத்தார்கள். தீவின் அடுத்த மூலையில் உள்ள அந்த பிரதேசத்துக்கு வாகனத்தில் செல்ல 700 கிலோ மீட்டர் தொலைவு என்பதோடு, என்னோடு வந்தவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதால் கைவிட்டோம் .
உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றாக கொமடோ டிரகன் வசிக்கும் கொமடோ தேசியப்பூங்கா சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இந்து சமுத்திரத்தின் 29 தீவுகளைக் கொண்டது. அதில் மூன்று பிரதான தீவுகளில் இவை வாழ்கின்றன. அவற்றில் கொமடோக்கள் அதிகமுள்ள தீவிற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கடல் மார்க்கமாக மீன் பிடிப்படகொன்றில் பயணம் செய்ய வேண்டும்.
முதல் நாள் புலோரஸ் தீவுக்கு வந்து சேர்ந்ததும், வழிகாட்டி மூலம் நான்கு மணிநேரக் கடல் பயணம் என அறிந்தபோது எனது நண்பனின் மனைவியின் வயிற்றில் பழப் புளி கரையத் தொடங்கியது. பல தடவை புயல் அடிக்குமா? கடல் கொந்தளிக்குமா? சுனாமி வருமா? என்ற கேள்விகள் எமது வழிகாட்டியிடம் கேட்கப்பட்டது . அந்த மனிதனது உடைந்த ஆங்கிலத்தில் ஆறுதலான வார்த்தைகள் தொடர்பற்று கரைந்தபடி பதிலாக வந்தது . எல்லோருக்கும் கொஞ்சம் பயம் மனதில் குரங்காக ஏறிவிட்டது.
நியாயமான பயம்தான். ஒவ்வொரு நாளும் சிறிதும் பெரிதுமாகப் புவியின் தரைப்பகுதி (The tectonic plates) துள்ளிவிளையாடி கடலுக்குள் நில அதிர்வு ஏற்படும் பகுதியாகும். எங்களுக்கு மழை நாட்கள்போல் அங்கு புவி அதிர்வு அடிக்கடி ஏற்படும் . நாங்கள் இந்தோனேசியாவை விட்டு விலகிய அடுத்த நாளில், நில அதிர்வு இந்தோனேசியாவின் பசுபிக் சமுத்திரப் பகுதியில் கடலுக்குள் 7.6 அளவில் ஏற்பட்டது.
காலையில் எழுந்ததும் வழிகாட்டியின் தகவல் வாட்ஸப்பில் வந்தது. “அந்தப் பெரிய தீவில் கடல் கொந்தளிப்பு என்பதால் இன்று போக முடியாது. “ என கப்டன் சொன்னதாக அந்தச் செய்தி இருந்தது. மாற்றாக இரண்டு மணித்தியால ஓட்டத்தில் உள்ள தீவுக்கு நாங்கள் போகலாம் எனச் சிவப்புக் கொடியோடு பச்சைக் கொடியும் சேர்த்துக் காட்டினார் .
ஆரம்பத்தில் நாங்கள் அந்த மனிதனைப் பயங்காட்டி விட்டோம் என நினைத்தேன். ஆனால், காலையில் படகில் ஏறியபோது உண்மையைப் புரிந்து கொண்டோம்
காலை பத்து மணிக்கு சாதாரண எங்களது எழுவைதீவு மீன்பிடி படகு போன்ற ஒன்றில் ஏறிச் சென்றபோது, கடல் அலைகள் எனது ஆறு வயதுப் பேரன் நான் செய்த காகிதப்படகை தூக்கி எறிவதுபோல் பல தடவை படகைத் தூக்கி எறிந்ததுடன், ஒரு முறை எனது நண்பனையும் அவரது மனைவியையும் இருக்கையிலிருந்து படகின் தரையில் தூக்கி கூடைப்பந்தாக வீசியது. . எனது நண்பனின் கையிலிருந்த ஆப்பிள் வாட்ச்சில் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் பார்க்க முடியும். அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்தது. ‘இடுக்கண் வருங்கால் நகுக , அதனை அடுத்தூர்வது அஃதொப்ப’ என்ற வள்ளுவர் வாக்குப்படி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து நகைச்சுவையாகப் பேசிய போதிலும், பயம் இதயத்தில் நிரந்தரமாகச் சிரசாசனம் செய்துகொண்டிருந்தது. முதல் ஒரு மணிநேரம் திறந்த கடல் முடிந்து, அடுத்த ஒரு மணி நேரம் நாங்கள் போன பாதையைச் சுற்றி மற்றைய தீவுகள் இருந்ததால் கடல் அலையின் வேகம் குறைந்தபோது எங்களுக்கு இதயத்துடிப்பும் குறைந்தது.
மதியநேரத்தில் கொமடோ தீவில் இறங்கியபோது எங்களைப்போல் பலரைக் காணமுடிந்தது . இந்தோனேசியா 17000 தீவுகளைக் கொண்ட நாடு. அவர்களுக்குக் கடற் பிரயாணம் நமக்கு கார் ஓடுவதுபோல் என நினைத்தேன்.
அந்த தீவில் மனிதர்களுக்கு பாதுகாப்பாக மரத்தில் பாலம் அமைத்து மனிதர்களை அதன்மேல் நடக்க வைத்திருந்தார்கள் . கீழே அந்தத் தீவில் கொமடோக்கள் எந்தக் கவலையுமற்று தரையில் சுதந்திரமாக தங்கள் பிரிவடைந்த இரட்டை நாக்கை நீட்டியபடி உலாவிக் கொண்டிருந்தன. எங்களது இலங்கையில் காணப்படும் கபரகொய்யா போன்ற தோற்றம். ஆனால், உருவத்தில் பெரிதானவை.
மாமிச பட்சணியான கொமடோக்களுக்கு இரையாகவிருக்கும் மான்களும் எருமைகளும் கூட அமைதியாக அந்த மதிய வேளையில் இரைமீட்டியபடி நின்று கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்தவுடன் பரிதாப உணர்வு எனது மனதில் தோன்றி மறைந்தது.
இரண்டு முக்கியமான விடயங்கள்: கொமடோக்கள் உணவுக்காக மட்டுமே கொலை செய்யும். அதுவும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே அவை உணவுண்ணும் . அதாவது வருடத்தில் 12 நாட்களுக்கு மட்டுமே கொலை நடக்கும் . ஆனால், உணவுண்ணும்போது தங்களது உடல் நிறையில் 80 வீதமான நிறையுள்ள உணவை உட்கொள்ளும். இரையாகும் மிருகங்களுக்கும் எதிர்காலம் பற்றி எதுவும் தெரியாது என்பதால், மனிதர்கள்போல் பயந்து சாகத் தேவையில்லை.
மனிதர்களைத் தவிர மற்றைய உயிர்களிடம் இயற்கை ஒரு ஒழுங்கு முறையை வைத்திருக்கிறது. மனிதர்கள் மட்டும் அதை மீறுகிறார்கள்.
எப்படி கொமடோக்கள் கொலை செய்யும் ?
கொமடோக்கள் உறுதியான பற்களும் நகங்களும் கொண்டவை. முன்காலால் இரையை அமுக்கியவாறு சில நிமிடத்தில் கொலை செய்யும். இரையாகும் மிருகங்கள் தப்பித்தாலும் பரவாயில்லை. கொமடோக்களின் வாயில் உள்ள இரு சுரப்பிகளில் இரத்தத்தை உறையாமல் வைக்கும் ஒரு வித நஞ்சுண்டு. அதனால் இரத்தம் வெளியேறிவிடும் . அவ்வாறு தப்பியவைகள் கொமடோக்களின் வாயில் உள்ள பக்டீரியா மற்றும் பங்கஸ் போன்றவற்றால் நோயுற்று சில நாட்களில் இறக்கும். அதன் பின்பு கொமடோக்கள் தமது குடும்ப சமேதராய் விருந்துண்ணமுடியும்.
ஐந்து கொமடோக்களை நாங்கள் பார்த்தோம். அவையெல்லாம் பத்து வயதிற்கு உட்பட்ட சிறியவை. கிட்டத்தட்ட 30 கிலோ எடை கொண்டவை. ஆனால், 70 -80 கிலோவிலும் இருக்குமென்றார்கள். குட்டிகளாக மரத்தில் பாதுகாப்பாக சீவித்தாலும், பருவமடைந்த பின்பு அவைகளால் மரமேறமுடியாது.
எங்களுக்கு மிக அருகில் வந்து, தனது இரண்டாகப் பிளந்த நாக்கால் அவை சூழ்நிலை மற்றும் உணவை அறிய முயல்வதை பார்க்க முடிந்தது. பாம்பு மற்றும் பல்லிக்கு இரண்டு ஆண்குறிகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், கொமடோ டிராகனுக்கு எப்படி என அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, எனது மனைவி “ இனி போவம் இது முக்கியமா? “ என்று கையைப்பற்றி இழுத்ததால் , அந்த இடத்தை விட்டு விலகினேன். பின்பு அவைபற்றி வாசித்தபோது அவையும் இரண்டு ஆண்குறி கொண்டவை. அவை காரின் ஸ்ரெப்பனி ராயர்போல் பாவிக்கப்படும் எனத் தெரிந்துகொள்ள முடிந்தது.
இந்தோனேசியாவில் தற்பொழுது 3500 வரையிலான கொமடோ டிரகன்கள் உள்ளன . இந்த கொமடோ தேசிய வனத்திற்கு உல்லாசப் பிரயாணிகளால் அதிக வருமானமும் கிடைக்கிறது. அத்துடன் உல்லாசப் பிரயாணிகள் அதிகம் வந்து பாதிப்பு அடையாது தேசிய சொத்தாகப் பாதுகாக்கிறார்கள். இந்தியாவில் காசிரங்ககா வனம், கீர் வனம், மற்றும் பெரியார் வனம் அதைவிட தென் ஆபிரிக்காவில் குருகர் தேசிய பூங்கா முதலானவற்றுக்கெல்லாம் சென்று பார்த்தேன் .
ஆனால், இந்த கொமடோ தேசிய பூங்காவின் மேலாண்மைத் தன்மை எனக்குப் பிடித்தது . கடலின் மத்தியில் உள்ளதால் எதிர்காலத்தில் அதிகமாக உல்லாச பிரயாணிகளை அனுமதிக்காது பாதுகாக்க முடியும் . இந்த வருடத்திலிருந்து அனுமதி கட்டணம் பல மடங்காகிறது எனவும் அறிந்தேன்.
நன்றி wowtam.com
———–0—-
மறுமொழியொன்றை இடுங்கள்