காஃகாவின் உருமாற்றம். (Metamorphosis by Franz Kafka)

                                                          நடேசன்

அக்காலத்தில்  தீப்சில் வாழ்ந்த (ancient city of Thebes) புராண காலத்து  மிருகம் ஸ்பிங்ஸ் (Sphinx).  அதனது அனுமதியில்லாது நகரத்துள் எவரும் செல்லமுடியாது . அந்த வழியால் வரும் வழிப்போக்கர்களிடம்  விடுகதை சொல்லி அதை அவிழ்க்கச் செய்யும்.  அவிழ்க்காதபோது அவர்களைக் கொன்றுவிடும். அந்த  ஸ்பிங்ஸ், ஒரு  விடுகதையை அந்த வழியால் வந்த  எடிப்பஸ் (Oedipus) என்ற இளவரசனிடம்  முன்வைக்கிறது. 

 “காலையில் நான்கு  கால்களிலும், நண்பகலில் இரு கால்களிலும் , மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும் மிருகம் எது?    “ எனக் கேட்டது. விடுகதையை   அவிழ்க்க வேண்டிய கட்டாயத்திற்கு எடிப்பஸ் தள்ளப்படும்போது,   “  அது மனிதன்தான்  “  என்பதே விடையாகிறது .

மனிதன்,  குழந்தையாக நான்கு கால்களிலும்,  பின்னர்  இரண்டு கால்களிலும்,  முதுமையில் கோலூன்றி மூன்று கால்களிலும் நடக்கிறான்.

ஸ்பிங்ஸ் இரண்டாவதாக விடுகதையை  சொல்கிறது.

 “ இரு சகோதரிகள் வாழ்கிறார்கள்.  ஒரு சகோதரி மற்றையவளைப் பெற்றெடுக்கிறாள் . அப்படிப் பிறந்தவள் மீண்டும் மற்றையவளைப் பிரசவிக்கிறாள்  “ அதற்கு விடையாக இரவும் பகலும் என  எடிப்பஸ் பதிலிறுத்தபோது  தோல்வியில் மனமுடைந்த அந்த ஸ்பிங்ஸ் மலையிலிருந்து குதித்து இறந்துவிடுகிறது

எடிப்பஸ் இளவரசன் தீப்சை ஆள்கிறான்

முதலாவது விடுகதை மனித உடலின் உருமாற்றம்.

எனது கண்களில் புரை வளர்ந்து,  சிகிச்சையின் பின்பு  இரண்டு கண்ணாடி வில்லைகள்  பொருத்தப்பட்டது.  மனைவியின் இடுப்பில் ரைற்றேனியம் தொடை எலும்பு உள்ளது. பலரது முலைகள் சிலிக்கன். தற்பொழுது செயற்கை கால்கள்,  கண்கள்  எனப் பல உறுப்புகள் மாற்றப்படுகிறது . மனிதனின் பல உறுப்புகள் மாற்றப்படுகிறது. மனித உடல் செயற்கையாகவும் உருமாறுகிறது.

இரண்டாவது விடுகதையை  நமது மனதிற்கு உதாரணமாக்கலாம்

நாம் பழகுபவர்களது முகத்தை மட்டும்  அறிந்து பழகுகிறோம் . மனத்தையல்ல.  அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நினைத்திருக்கிறோம். ஆனால்,  அவர்களின்   மனம்  பின்பு மாறுகிறது. பல நல்ல மனங்கள்,  கெட்ட மனங்களாக மாறுகிறது.  அதேபோல் கெட்ட மனங்கொண்ட அங்குலிமாலாவின் மனம்,  புத்தரின் போதனையால் நல்ல மனமாகத்  திருந்துகிறது.

 பல வருடங்கள் ஒன்றாக இருந்த நண்பர்கள் பகைவர்களாகவும், காதலித்து மணம் முடித்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்பவர்களாகவும்  மாறுவதும் மாற்றமே. அப்படிப் பார்க்கும்போது  நல்ல மனங்களும் கெட்ட மனங்களும் ஒருவிதத்தில் இரவும் பகலும் போன்ற சகோதரிகளே. அவை ஒன்றையொன்று பிரசவிக்கின்றன என்ற விடுகதையில் உண்மையுள்ளது .

காஃகாவின் உருமாற்றம் (Metamorphosis)  என்ற கதையை  பல வருடங்களுக்கு முன்பாக படித்தேன். அதில் இராட்சத கரப்பான் பூச்சியாக (Gregor Samsa) உருவ மாற்றமடையும் கிரகர்,  உடல் மாற்றமடைந்தபோதும் மனித ஆன்மாவுடன் சொல்லும் கதையாக காஃகாவின் உருமாற்றம் என்ற சிறிய நாவலாக  வருகிறது .

இந்த நாவலைப்படித்த  தாக்கத்தாலேதான்  அசோகனின் வைத்தியசாலை என்ற எனது நாவலில்  கொலிங்வூட் பூனையை அந்த வைத்தியசாலையின் மனச்சாட்சியாக நடமாடவைத்தேன்.    பூனையாக உடலையும்   உள்ளே மனித ஆன்மாவையும் வைத்தபோது மனிதர்களது  ஆசை,  தேவை மற்றும் கருத்தியலை வைத்தேன் . அந்தப் பூனை மனச்சாட்சியாக  வைத்தியசாலையில் உலவியது . 

காஃகாவின் கதாபாத்திரத்தின் பெயரே சம்சார என்ற சமஸ்கிருதத்தின் காரணப் பெயரான உருமாற்றத்தைக் கொண்டது.

விற்பனைப் பயணியாக  இருக்கும் கிரகர்,  காலையில் எழும்போது  இராட்சத கரப்பான் பூச்சியாக மாறுவதாகக் கதை துவங்குகிறது . அதன்பின்பு  குடும்பத்தினரால் அவனை  மகனாக   ஏற்க முடியவில்லை.   இறுதியில்  கரப்பான் பூச்சி இறக்கிறது என்ற மிகவும் எளிமையான கதை . மிகவும் சாதாரண மொழியில் சொல்லப்படுகிறது.

சாதாரணமான இந்தக் கதையின் ஆழத்தில்  பல தத்துவ முத்துக்கள்  பொதிந்திருக்கின்றன. அவற்றை பலரும் பலவிதமாகப் புரிந்து கொள்ளமுடியும்.

கிரகர் தனது உடல் மாறிவிட்டது என்று தெரிந்தும்,  படுக்கையை விட்டு காலையில் எழுந்து செல்ல முயல்வதும்,  முடியாதபோது கதவை நோக்கிப் பாய்ந்து தனது பின் பகுதியைக் காயப்படுத்துவதையும்  எப்படி நம்மால்  புரிந்து கொள்ளமுடியும்?

சாதாரணமான மனிதர்போல் கதவைத் திறந்து வேலைக்குப் போக முயற்சிப்பது போன்ற விடயம் மனிதனது ஆன்மாவில் புகுந்துவிட்ட  யந்திரத்தன்மையை காட்டவில்லையா? பல விடயங்களை செய்ய உடலால் முடியாதபோதும்  நாம் எண்ணுவதையும்,  அதைச் செய்ய நினைப்பதையும் காட்டவில்லையா?

கைகள் இல்லாதபோதும்,  வாயால் திறக்க எத்தனித்தபோது  தாடை உடைந்து அதிலிருந்து கரிய திரவம் வழிகிறது  அதேபோல் கரப்பான் பூச்சியான போதிலும் சிந்தப்பட்ட கோப்பியின் மணம் அதன் வாயை ஊறப்பண்ணி தாடையை அசைக்கப் பண்ணுகிறது.

காஃகாவின் தந்தை நிஜவாழ்க்கையில் மிகவும் உயரமான பெரிய  மனிதர் மட்டுமல்ல,  காஃகா ஒரு எழுத்தாளராக வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.  காஃகா ஒரு மெலிந்த,  உயரம் குறைந்த சிறுவனானதால் உடல் ரீதியாகவும் உறுதியற்றவர்.   வழக்கறிஞராகப் பட்டம் பெறவேண்டும் என   தந்தையால் சிறுவயதில்  கொடுமைப்படுத்தப்படுகிறார்.

இந்த கரப்பான்பூச்சி  உருமாற்றத்தின் பின்பு தந்தையின் கால்கள் ராட்சதனின் பாதங்களாகத்   தெரிவதுடன் தந்தை போடும் சத்தம் கொடிய மிருகமொன்று  சீறுவது போல் இருக்கிறது .

இங்கே மனிதர்கள்,  மிருகங்களின் சீற்றத்தைக் கண்டு அச்சமடைவதுபோல்  கரப்பான் பூச்சியான கிரகர் மனிதர்களிடம் அச்சமடைகிறான் .

தந்தை அப்பிளால் எறிந்து கொல்ல முயலும்போது,  தாய் தனது  உட்பாவாடை அவிழ்ந்த வெறும் உடலைக் கொண்டு, கிரகரை பாதுகாப்பதும்,  தாயின் நிர்வாண நிலையை கிரகர் கரப்பான்பூச்சியாக உருமாறிய போதிலும் அந்த நிர்வாண நிலையைப் பார்க்க முடியாது மூர்ச்சையடைவது   முக்கியமானது . கரப்பானாக மாறிய கிரகரை கண்டு மயங்கும் சகோதரி  இருவருக்கும்  உணவு கொடுத்து பராமரிக்கிறாள்  ஆனால்,  கிரகரால் உண்ண முடியவில்லை .

இதுவரையிலும் கிரகர்ரின் வருமானத்தில் குடும்பம் தங்கியிருந்தபோதும்,   இந்த உருமாற்றம் நடந்தபோது  தங்கை இந்தக் கரப்பான்பூச்சி எங்கள் அண்ணனல்ல, அண்ணனாக இருந்தால் , எங்களுக்கு துன்பம் கொடுக்காது வெளியேறிவிடுவான் என வாதிடுகிறாள்.  இது குடும்ப உறவுகளில் நெருக்கடி நிலையில் தன்னலம் இலகுவாக   ஏற்படுவதை காட்டுகிறது.

குடும்பம்,  கரப்பான் பூச்சியோடு வாழ முடியாது. கிரகர் இறந்ததும்,  மிகஇலகுவாக குப்பையோடு சேர்த்து அகற்றிவிடுகிறாரகள்.

வயதான   தாய் – தந்தையரை பிரத்தியேக  பராமரிப்பு இல்லங்களில்  தள்ளுவது தன்னலமில்லையா? – அதேபோல் கரப்பான் பூச்சிக்கு பேசத் தெரியாது.  நான்தான் உன் அண்ணன் கிரகர் என்று சொல்லியிருந்தால்,  கொஞ்சமாவது அனுதாபம் கிடைத்திருக்கும் .  இது மனிதர்களுக்கு மொழியின் அவசியத்தை வலியுறுத்தவில்லையா? 

அல்சைமர், பாரிசவாதம் என  மூளையில் குருதி உறைந்தவர்களது  பேச்சுப் போனபின்பு,  அவர்களும்  ஒரு விதத்தில் கரப்பான் பூச்சியாகி விடுகிறார்கள் .

பேசமுடியாத பலர்,  ஓய்வு இல்லங்களில்  பராமரிக்கப்படுவர்களால் அடித்து துன்புறுத்தப்படுவதைப் பத்திரிகைகளில் கேட்டும் தொலைக்காட்சிகளில்   பார்த்தும்  இருக்கிறோம்.

1915  இல்  அதனை காஃகா எழுதியபோது,  பின்நவீனத்துவ வடிவமாகிய மாயா யதார்த்தம் இலக்கிய உலகில் இல்லை . எதற்காக இந்தக்கதையை அவர்  எழுதினார் எனப் பார்க்க விரும்பினால் பல  விதமாகப் பார்க்கமுடியும்.  

 காஃகா,  கிரகரை மட்டுமே அந்த குடும்பத்தை உழைத்து காப்பாற்றுபவராக காட்டியுள்ளார் . ஒரு விதத்தில் தனது நிலையை நினைத்து சுய எள்ளலில் இந்தக் கதை சொல்லப்படுகிறதோ  என எண்ணவும் இடமுண்டு .

ஏதாவது மன வியாதியின் விளைவாக உருவான  கதையாகவும் கொள்ளலாம் .  

கரப்பான் பூச்சிபோல் , விற்பனைப்பிரதி உணவுக்காக அலைந்து உழன்றதை  காட்டுகிறாரா?  

இதற்கப்பால் காஃகா மட்டுமல்ல,  குடும்பத்தில் உள்ளவர்களும் உருமாற்றமடைகிறார்கள்.  ஆரம்பத்தில் வீட்டில் வேலையற்று இருந்து தந்தையார்,  வீட்டைக் கவனிப்பதற்காக வேலைக்குச் செல்ல  புது உடையுடன் தயாராகிறார் . அதேபோல் தங்கையும் புது வாழ்வுக்குத் தயாராகிறாள். ஆக மொத்தத்தில் தனி ஒருவரது உருமாற்றமல்ல,  முழுக் குடும்பத்தின் மாற்றத்திற்காக  கிரகர் தனது வாழ்வைக்  கொடையாகக் கொடுத்த  யேசு நாதராக உயிர்விடுகிறார் என்றும்   நாம் எடுத்துக்கொள்ளமுடியும். இதைவிட பல விதமாகப் புரிந்து கொள்ளக் கூடிய கதையாகும்.  

இலக்கியம்,  உறைந்த பனிப்பாறை போன்ற  மனித  இதயங்களை  பிளக்கும் கோடாரியென்றார் காஃகா. காஃகாவின் உருமாற்றத்தில் மனித மனதை உடைக்கும் பல விடயங்கள் உள்ளன. 

நன்றி: அகநாழிகை

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: