நினைவற்று வாழ்தல்

நடேசன்

மெல்பனில்   பரவிய கொவிட்  பெருந் தொற்றின்  காரணமாக  நடைமுறைக்கு வந்த  ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்து   சில மாதங்களின் பின்பாக எனக்கு அறிமுகமான தந்த நாராயண என்பவர் எனது  மிருக வைத்திய நிலயத்திற்கு  வந்தார்.

உள்ளே வந்தவர்  என்னை அடையாளம் கண்டதாகக் தெரியவில்லை. வாயில் வார்த்தையில்லை . உதட்டில்  சிரிப்பில்லை. வந்தவுடன் அங்கிருந்த  வரவேற்பறையின்  கதிரையில் அமர்ந்தார். ஆனால்,  அவர் சாவகாசமாக அமரவில்லை. கதிரையின் விளிம்பில் – ஒரு பறவை, கிளையில் இருப்பதுபோல் அமர்ந்து,  கிளினிக்கின் கூரையிலிருந்த சோலர் லைட்டைப்  பார்த்தார்.

 அவரது கண்கள் மேல் நோக்கி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது  இரு கை விரல்களை ஒன்றோடு ஒன்று  தட்டி மிருதங்கம் வாசித்தபடியிருந்தார்.  ஏதாவது பேசுவார் என்ற ஆவலுடன் ஒரு  நிமிடம் வளர்த்த நாய் போல் அவர் முகத்தைப் பார்த்தேன். ஆனால் அவர் பேசவில்லை. அவரது  அமைதி என்னை அம்பாகத் துளைத்தது.   “ நீங்கள் எப்படி?  “ என ஆங்கிலத்தில் கேட்டேன். கிணற்றில் போட்ட கல்லாக வார்த்தை மட்டுமல்ல முகத்திலோ   உடல் மொழியிலோ  எந்த மாற்றமும் இல்லை. 

இவருக்கு என்ன நடந்தது? காது கேட்கவில்லையா ? அல்லது என்னை மறந்து விட்டாரா? எனது முகத்தில் தாடி மீசை புதிதாக இருந்தது . அதுதான் அடையாளம் காணவில்லையா?

எனது அங்கலாய்ப்பு நீடித்தது.

அவரது வழமையான புன்சிரிப்பு . தெளிவான பார்வை,  முக வசீகரம் எல்லாம் தொலைந்து போயிருந்தது. அவரது காலை பார்த்தேன். கறுப்புத் தோல் சப்பாத்து அணிந்திருந்தாலும் அதற்குப் பொருத்தமற்ற விளையாட்டுக் காலணிக்குப் போடும் வெள்ளைப் பருத்தி காலுறை அணிந்திருந்தார்  அவர் தனது உடையில் கவனமெடுக்கவில்லை என நினைத்தேன்.

பல   எண்ணங்கள்  குமிழிகளாக மனதின் மேற்தளத்தில்  வந்து சிதறின.

காரை நிறுத்திவிட்டு , தனது கையில் சிறிய நாயுடனும் , உதட்டில் நிறைந்த புன்முறுவலுடனும்  கணவனுக்கு மாறாக   அவரது  மனைவி வந்தார். அவருக்கு அறுபத்தைந்து  வயதிருக்கலாம்.   அந்த வயதிலும்   திடகாத்திரமாகத் தெரிந்தார். ஆனால்,  அவர் எனக்கு அறிமுகமானவர் என்றபோதும்   முதன்முறையாக இன்று  நாயுடன்   வருகிறார்.

அவருக்கு வணக்கம் சொன்னேன்.

 அவரே பேச்சைத் தொடக்கினார்.

 “ நீங்கள் ஏற்கனவே சேர்ஜரி செய்த  “மொகி”  இப்பொழுது நடக்க முடியமால் சிரமப்படுகிறது  “ என்று சொல்லியவாறு தரையில்  அந்த நாயை அவர் விட்டபோது,    பின்னங்கால்களில் ஊன்றி நிற்காது படுத்திருந்த மொகியை  பார்த்தேன்.

நான் அதற்கு  சேர்ஜரி செய்து ஏழு வருடங்கள் இருக்கும். அந்த  சேர்ஜரியின் பின்பு பல தடவை  “மொகி”யைப்பார்த்திருக்கிறேன்.  ஏழு வருடங்கள் நாய்கள் உயிர் வாழ்ந்தால்,  மனித வாழ்க்கையில்  அது 49 வருடங்களுக்குச் சமமாகும்.    நிச்சயமாக பழைய  சேர்ஜரிக்கும்  தற்போதைய நிலைக்கும்  எந்தத்  தொடர்புமில்லை.

“மொகி” யை மீண்டும் பார்த்தேன்.  பின் கால்களை  மடக்கி,    வயிறு பிட்டம் எல்லாம் நிலத்தில்  இருக்க படுத்திருந்தது . எடையும் இரண்டு மடங்காகக் கூடியிருந்தது.  அதனது கண்களும் அப்பொழுது வலியில் சோர்ந்து இருப்பது போலத் தெரிந்தது. முதுகுத் தண்டில் பிரச்சினையோ  எனப் பார்த்தபோதே தெரிந்த போதும்,    “ உங்களையோ மிஸ்டர் தந்த நாரயணனையோ பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது  “ எனச் சொன்னேன்.

 “ கொரோனா காலமல்லவா? எல்லோரும் வீட்டிலிருந்தோம்  “ என்றார்  அவர் சிரித்தபடி.

  “ அதுதான் “மொகி”  இவ்வளவு எடை கூடியிருக்கிறது போலத் தெரிகிறது  “   என்றேன்.

எனது நகைச்சுவையை  அவர் புரிந்ததால் சிரித்தவாறு    “ நான் வேலைக்குப் போகிறேன்.  இவரே பகலில்  இதற்கு  உணவளிப்பது. அவருக்கு நான் சொல்லிக் கொடுத்தாலும் கேட்கமாட்டார்  “  என்றார் தந்த நாராயணனின் மனைவி.

செல்லப் பிராணிகளின் உடல் நிறை கூடிவிட்டது என்றால் கணவன்,  மனைவியையும் மனைவி, கணவனையும் அல்லது பெற்றோரையும்  குற்றம் சாட்டுவது வழக்கமானது.

இப்பொழுதும்கூட  தந்தநாரயண  என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாது மேலே கூரையையே   வெறித்துப்பார்த்தவாறு  இருந்தார்.  குறைந்த பட்சமான சிரிப்பையோ   அல்லது கண்ணசைவையோ அவரிடம் காணவில்லை.  அவரது கைவிரல்  மாத்திரம்  அசைந்தது.  இல்லையேல்  சிலையாக இருந்தார் எனச் சொல்ல முடியும்.

மனைவியை மட்டும்  உள்ளே அழைத்து விசாரித்தவிட்டு ,  “மொகி”யின் உடலை பரிசோதித்தேன்.  அதன் இரு கால்களையும்  இழுத்துப்பார்த்தேன். மற்றைய உறுப்புகளையும்  சோதனை செய்துவிட்டு,     அது  நடக்கமுடியாதிருப்பதன்  காரணம்  அதன் இடுப்பில் உள்ள முள்ளந்தண்டில்  பிரச்சினையுள்ளது. பதினைந்து வயதான மொகியை வீணாக எக்ஸ்ரே எடுத்து உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை.   வலி போக்கும்  மருந்து தருகிறேன். மருந்து வேலை செய்கிறதா                                   எனப்பார்க்கிறேன்.  “என்றேன்.

இதைக்கேட்டவுடன்,    “ மொகி,  அத்தோடு வழமைக்கு  அதிகமாக தண்ணீர்  குடிக்கிறது   “  என்றார்  திருமதி தந்த நாராயண.

 “ எதற்கும் இரத்தத்தையும் பரிசோதித்துப் பார்ப்போம்  “  எனச் சொல்லிவிட்டு,    பரிசோதனைக்காக இரத்தத்தை எடுத்தேன் . இரு நாட்களில்  கல்லீரலில் பாதிப்பு  என பரிசோதனை முடிவு வந்தபோது,    “ பெரிதாக ஒன்றும்   செய்யமுடியாது  “ எனத் தொலைபேசியில் அவரிடம் விளக்கமாகக்  கூறினேன்.

 “ இப்பொழுது மொகி நடக்கிறது  “  எனச் சந்தோசமாகப் பதில் தந்தார்.

 “ மீண்டும் வாருங்கள்.  கல்லீரலைப் பாதிக்காத வலி நிவாரண மருந்து தருகிறேன்   “  என்றேன். அடுத்த கிழமை வந்தபோது வலி அகற்றும் வேறு ஒரு மருந்தையும்  கொடுத்துவிட்டு,    “ எடையைக் குறைக்க வேண்டும். எடை குறையும்போது மேலும் மொகி சந்தோசமாக ஓடித்திரியும்  “  என உற்சாகமூட்டும்  விதமாக  சொன்னேன். 

  “ நான் என்ன செய்வது?  அவரால் எதனையும்   நினைவு வைத்திருக்க  முடியவில்லை?  “  எனக் கவலையுடன் சொன்னார்.

தனிப்பட்ட விடயங்களைத் துருவ விரும்பாதபோதும்,  தந்த நாரயண   எனக்கு  மிகவும் அறிமுகமானவர்  என்பதால்  சொல்ல விரும்பிய விடயத்தை சிறிது சுரண்ட விரும்பினேன்

 “ என்ன நடந்தது ?  “  

  “ அவருக்கு மறதி .  “

 “ என்ன நடந்தது?   அல்சைமரா ?  “

  “ ஆம்,  இந்தக் கொரோனா காலத்தில்  அவர்  எந்த வேலையும் செய்யவில்லை.  வீட்டுக்குள்ளேயே  இருந்தார்.  “

“  அவருக்கும்  கொரோனா  வந்ததா?  “  

  “  வந்தது,  ஆனால்,  இது கொரோனாவோடு தொடர்பானது எனச்  சரியாகச்  சொல்லமுடியாது  “   என  மருத்துவர் சொன்னார். “

 “  பலருக்கும்  இப்படி நடந்திருப்பதாகக்   கேள்விப்பட்டுள்ளேன். வீட்டுக்காவல் நிலையில் இருப்பதே பலரை மன அழுத்தத்திற்கு  ஆளாக்குகிறது.  வாழ்க்கையில்   தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென  சிறை வைக்கப்பட்ட  நிலைக்குத் தள்ளப்படும்போது,  இந்நிலை வரக்கூடும்  “

கொரோனோவினால்  ஏற்படும்  உயிர்ச்சேதம்,  பொருளாதார சீர் குலைவு  என கணக்கெடுப்பவர்கள்,  இத்தகைய  தனிமனித  தாக்கங்களை கணக்கெடுப்பதில்லை .  ஒவ்வொருவரும் பாதிப்பின் சுமையை  தனியாகச்  சுமக்கிறார்கள்.  “  என்றேன்.  

 “  உண்மைதான்,  நான் இந்த வருடத்தோடு வேலையை விடுகிறன். வீட்டில் அவரைப் பராமரிப்பதன்  மூலம் உதவமுடியும் என நினைக்கிறேன்  “ என்றார் திருமதி தந்த நாராயணன்.

—–

தந்த நாராயணவை  சுமார் எட்டு வருடங்களுக்கு  முன்பு சந்தித்ததாக  எனக்கு நினைவுள்ளது.  மெல்பனின் வசந்த காலத்தில் ஒரு நாள்  நான் வரவேற்பறையில் நின்றபோது, எனக்குத் தெரிந்த இலங்கையர் ஒருவர்,   பருமனாக உயரம் குறைந்து,  ஐம்பது வயது மதிக்கத்தக்கவர்  கோட் , சூட்  அத்துடன் கழுத்துப்பட்டி என மிகவும்  நேர்த்தியாக உடையணிந்து  ,  தனது   நாயை இழுத்தபடி வேகமாக கால்களை  எட்டவைத்து  நடந்தவாறு  எனது கிளினிக் வாசலருகே வந்தது யன்னல் கண்ணாடியூடாகத் தெரிந்தது . அவருக்காக  நானே வாசல் கதவைத் திறந்தேன். 

வாசலூடாக  அவசரமாக உள்ளே வந்தவர்,    “ நீங்கள்தான் உதவவேண்டும்  “   எனச்  சொன்னார்.

 அவருடன்  அந்த சின்ன கலப்பு இன நாய்  மூன்று கால்களில்  வந்தது  .  அதனது  இடது காலுக்குப் பிரச்சினை  என்று புரிந்தது .

மிருக மருத்துவரான  என்னைத்தேடி வேறு யார் வருவார்?

இவர் இன்று புதிதாக வருகிறார்.

இதுவரை எனது கிளினிக்குக்கு அவர்  வந்திராதபோதிலும் பல  பொது நிகழ்வுகளில்   சந்தித்துப்  பேசியும் சிரித்தும் அறிந்தவர் . இலங்கையிலிருந்து வந்த ஒரு கட்டிட  கலைஞர் (Architect) பௌத்த சிங்களவர் .  தந்த நாராயண  என்பது அவரது பெயர்.

 “ என்ன விடயம்.?  “  எனக் கேட்டதும்,  தனது சிறிய நாயான  ‘மொகி ‘ யின் தூக்கிய காலைக் காட்டினார்.

அறைக்குள் அழைத்து விசாரித்தேன்.

 “  தனது  வீட்டிற்கு  அண்டையிலுள்ள மிருக மருத்துவர்  அதன் முழங்கால் பட்டை விலகுவதாகச் சொல்லி  செய்த சேர்ஜரி.  ஆறு மதங்கள் ஆகியும் குணமாகவில்லை.    ‘ மொகி ‘ இன்னமும் காலை நிலத்தில் வைக்கவில்லை.  “ என்றார் கடுப்புடன்.

  “ எக்ஸ்ரே எடுத்துப்  பார்க்கவேண்டும்.  உணவு கொடுக்காது நாளை கொண்டு வாருங்கள்  “  எனச் சொல்லி அனுப்பினேன்  .

அடுத்த நாள்  எக்ஸ்ரே எடுத்துப்  பார்த்தபோது , அந்த மருத்துவர் முழங்கால் எலும்பில் வைத்த சிறிய  இரும்புக் கம்பியின் முனை  சிறிதளவு தசைக்குள் நீட்டியபடி இருந்தது . அந்தக் கம்பியின் கூரானபகுதி எலும்பின் உள்ளே இருந்திருக்கவேண்டும்.

இதுபற்றி அவருக்குச் சொன்னேன்.    “ இது ஆணி மாதிரி,  காலை நிலத்தில் வைத்தால் காலின் தசையில் குத்தும். அதுதான்  மொகி காலை  நிலத்தில்  வைக்கவில்லை  “

 “ என்ன செய்யலாம்?   “   எனக் கேட்டார்  கவலையுடன்.

  “அந்தக்  கம்பியை எடுத்து விட்டு,  வேறு விதமாகச் சேர்ஜரி செய்யலாம் . அது பெரிய வேலை இல்லை  “ என்றேன்.

“ ஏற்கனவே இரண்டாயிரம்  டொலர்கள் கொடுத்துச் செய்த சேர்ஜரி  “  என்றார்.

  “ நீங்கள் அவர்களிடம் பிரச்சினையைச் சொல்லுங்கள்.  நான் எடுத்த எக்ஸ்ரேயைத் தருகிறேன்.  அவர்கள் செய்த சேர்ஜரியில் உருவாகிய பிரச்சினை என்பதால்  அவர்களுக்கு இதைச் சரி செய்யவேண்டிய கடமைப்பாடு உள்ளது.  “

  “ எனக்கு அங்கே  மீண்டும் போக விருப்பமில்லை. நீங்கள் செய்யுங்கோ.  “  என்றார் வேண்டுகோளாக .

நான்  மீண்டும் சேர்ஜரி  செய்து கம்பியை அகற்றினேன்.  அத்துடன் எனது கடிதத்தையும் எக்ஸ்ரேயையும் கொடுத்தேன்.   அவர் முன்பு சேர்ஜரி செய்தவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கிவிட்டார். அதன் பின்பாக பல தடவைகள் வருவார்.  ஒரு விதத்தில் எனது நிரந்தரமான  வாடிக்கையாளராக மாறிவிட்டார்.

இலங்கையில் போர் நடந்த காலத்தில்,  அங்கிருந்த ஒரு பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் இங்கே  வந்து,  முற்றிலும் சிங்களம் பேசுபவர்கள் இருந்த கூட்டத்தில் இலங்கை விடயத்தைச் சிங்களத்தில் பேசிய படியிருந்தார்.  எனக்குச் சிங்களம் புரியும் என்பதால் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.

என்னைக் கண்டதும்,  தந்த நாராயண  எழுந்து   “ நாங்கள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் . இங்கு தமிழரான டாக்டர் நடேசன்  வந்துள்ளார்.   “ என்றார்.

 அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. கூடியிருந்தவர்களுக்கு  அதிர்ச்சி வைத்தியமாக  இருந்தது  அவர்கள் முகங்களில் தெரிந்தது. பேசிய வழக்கறிஞரும்  பின்னர் தன்னை சமாளித்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசினார் . இறுதியில் கேள்வி பதிலும் ஆங்கிலத்திலேயே  நடந்தது.

பல பொது விழாக்கள்  விருந்துகளுக்கு  என்னை அழைப்பார் . நான் என்னால் முடிந்தவற்றிற்குப் போவேன். எங்கள் தொடர்பு பல வருடங்களாக  நீடித்தது.

இப்படியான தந்தநாராயண,  தனது கல்வி , நினைவு,  மொழியை இழந்து உயிரற்ற உடலாக எனது வரவேற்பறையிலிருந்தார்.   அவரது தற்போதைய நிலை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை  நினைக்க வைத்தது.

உலகெங்கும் உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கையாகப் பதிவிலிருப்பார்கள்.   ஆனால்,  பதிவில்லாதவர்கள் பலரும் இருக்கிறார்கள்.   

கொரோனா காலம் பலரைப் பலவிதமாகப் பாதித்துள்ளது . இரவும் பகலும்  சிறிய இடத்தில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி  இருப்பதால் பல இளம் தம்பதிகளிடம் மணமுறிவும்  ஏற்பட்டுள்ளது. இளையவர்கள் தங்களது துணையைத்  தேடி ஓடுவது தடைப்பட்டுள்ளது.  அதன் விளைவுகள் தாக்கங்களை  எனது இளமைக் காலத்தில் நான்கு மைல்கள் தினமும் சைக்கிளில் காதலியைத் தேடிப் போகும் என்னால் புரிந்து கொள்ளமுடியும் .

எனது பேரனது முதல் இரண்டு பிறந்த தினங்களும்  குடும்பத்தினருடன் மட்டும் கொண்டாடப்பட்டது  . வயதானவர்கள்,  முதியோர் இல்லத்தில் வாழ்ந்தவர்கள் இரண்டு  வருடங்களுக்கும்   மேலாக உறவுகளின்  முகங்களைக் காணமுடியவில்லை. முகத்கவசம் அல்லது பேஸ் ரைம் ஊடாகப் பார்த்தாலும் நெஞ்சார அணைக்க முடிவதில்லை.

புவியில் மனிதர்கள் தோன்றிய பின்பு உருவான மனித வரலாற்றுக் காலம் தொட்டு எல்லா இன மனிதர்களுக்கும் பொதுவானது ஒன்று இருக்கிறது.  அதுதான்   உறவின் இறப்புகளை  ஒன்று கூடி துக்கம் பகிர்வதும் , அவர்கள் வாழ்வைக் கொண்டாடுவதுமாகும்.  ஆனால்,  பல அன்புக்குரியவர்களது உடலைக் கடந்த இரு வருடங்களாக  கைத்தொலைபேசியில் மட்டுமே பார்த்து விடை கொடுத்தார்கள். 60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்களுக்கு இது எப்படியான துயரமான விடயம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இளையவர்கள்  இந்தத் தாக்கத்திலிருந்து காலமென்ற மருந்தால் குணமடைந்து  வெளியே வரும்போது,  முதியவர்களால் அவ்வாறு முடிவதில்லை.  தங்கள் வாழ்வின் சில வருடங்களைச்  சிறையில் அடைபடுவது போன்று,  காலங்களைத் தொலைக்கும்போது,   அது பெரிய இழப்பாகிறது. அப்படியான   மனரீதியான தாக்கத்திற்கு தடைமருந்தோ மருத்துவமோ கிடைப்பதில்லை.   

தந்தநாரயணனைப் பொறுத்தவரையில்  அவரது மனைவி அவரை பராமரிக்க இருக்கிறார் என்பது ஆறுதலான விடயம் . பலருக்கு அந்த வாய்ப்பில்லை என்பதையும் நினைத்துப்  பார்த்தேன் .

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: