கரும்புலி பெண்ணின் கடிதம் : கானல்தேசம்

“அன்பின் கார்த்திகா, இந்தக்கடிதம் உனக்குக் கிடைக்குமோ அல்லது கடிதம் கிடைக்கும் காலத்தில் நீ  உயிரோடு இருப்பாயோ தெரியாது. எனக்கு அடுத்து தற்கொடைப் போராளியாக உன்னைப் பாவிப்பார்கள் என்பதால் உன்னையாவது தப்பவைக்கும் நோக்கத்தில் எழுதுகிறேன். அந்த முயற்சியில் இருந்து நீ தப்பாவிட்டாலும் உனது அப்பாவுக்கு இந்தக் கடிதம் கிடைத்தால் அவர் மூலம் யாரிடமாவது இது  சென்று சேரும். அநியாயத்தை பற்றி ஒரு பதிவாக மாறும் என்பது எனது கடைசி ஆசை என்பதால்  உனக்கு இதை எழுதி உனது வீட்டிற்கு அனுப்புகிறேன்.

எனக்கு உனது சிந்தனை புரிகிறது. படபட என கவிழ்க்கப்பட்ட  கூடை நெல்லிக்காயாக வார்த்தைகளைச் சிதறும் செல்வியா இப்படி சுற்றி வளைத்து எழுதுகிறாள் என நினைக்கிறாயா? அப்படியான சூழ்நிலையில் நான் தள்ளப்பட்டிருக்கிறேன். வாழ்வதற்கு நாட்கள் அதிகமில்லாத போதும்,  விளக்கமாக எழுதவேண்டும் என நினைக்கிறேன்.

போர் நிறுத்தகாலத்தில் நாம் பார்த்திருக்க பல திருமணங்கள் வன்னி மண்ணில் நடந்தன. அவை எல்லாம் இயக்கத்தின் கட்டளையில் நடந்தன. காலிழந்தவர்கள்,  கையிழந்தவர்கள் மற்றும் கண்,  முதுகு என ஊனமடைந்தவர்கள் பலர் இந்த திருமணபந்தங்களில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இதுவரையில் தமிழ் சமூகத்தில் இருந்த யாழ்ப்பாணம், வன்னி,  மலையகம் என்ற பிரதேச வேறுபாடுகளும் மறைந்தன. போராளிகள் சாதிகள் கடந்ததுடன் சைவம், வேதம் என்ற மதரீதியான பாகுபாடுகளை மறந்து திருமண பந்தத்தில் தங்களைப் பிணைத்த ஒரு சமத்துவமான காலமது. குறிப்பிட்ட இருவரை,  ஒருவரை ஒருவர் திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவை யார்  எடுத்தார்கள் என திடமாக கூறமுடியாது. எனினும் மேல்பதவி வகித்தவர்கள் மற்றும் பிரதேசப் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். எல்லாத்  திருமணங்களும் ஆடம்பரமற்று நடந்தன. அதைப்பார்த்து சந்தோசமடைந்து போராளிகள் சமூகத்தின் முன்னுதாரணமாகத் திகழ்வதாக எமக்கிடையே பேசுவோம். அவை உனக்கு நினைவில் இருக்கும்.

அவைகளுக்கு விதிவிலக்காக எனக்கும் விக்கினேசுக்கும் வித்தியாசமான முறையில் திருமணம் நடந்தது.  புலனாய்வுத்துறையின் பொறுப்பில்,  தலைவர் முன்னிலையில் அந்தத் திருமணம் நடந்து அவருடன் உணவுண்டோம். எனது திருமணத்தின் முக்கியத்துவம் புரிந்தும்,  புரியாமல் இருந்த போதும் மனதில் மகிழ்தேன். அந்தத்  திருமணம் எக்காலத்திலும் சந்திக்காத ஒரு ஆணுடன் நடந்தது.  அவன் எப்படி நடப்பான்,  எப்படிப் பேசுவான்,  நல்லவனா,  முரடனா என்ற ஆயிரம் கேள்விகள் மனதை மொய்த்தன.  உயிருக்குப் பயமற்ற போதிலும்,  இரவில் பக்கத்தில் படுப்பவனைப் பற்றிய பயம் உள்ளே இருந்து. அந்தப் பயம் எனது வயிற்றில் தேளாக கடித்து இரத்தத்தை உறையவைத்தது. இயக்கத்தின் முக்கியமான இருவர் முன்பாக நடக்கும் திருமணம் எனது அதிர்ஸ்டம் என இனம்புரியாத மகிழ்ச்சியிருந்தது என்பதை மறைக்காமல் சொல்லவேண்டும். வன்னியில் சில நாளில் மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் இருப்பதுபோல் எனது உணர்வுகள் மாறி மாறி என்மனவானில்  தோன்றி மறைந்தன. எனது உணர்வுகள் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத மிகவும் அந்தரமானவை. தனியான தீவில் சிறை வைத்தது போன்ற நாட்கள் அவை.  எனது வாய் உனக்குத் தெரியாதா? அதை அடக்குவது எவ்வளவு கடினமானது?

அவர்களுக்கு நான் முதலாவது கரும்புலியுமல்ல கடைசியுமல்ல. அவர்கள்,  விவசாயி  மண்ணைக் கொத்தி பயிரைத் தனது தேவைக்காக பயிரிடுவது போல் இதைச் செய்தார்கள். சிந்தாமல் சிதறாமல் வீடு வரும் அறுவடையொன்றே அவர்களது நோக்கம். கொத்தும்போது மண்ணுக்கு  வலியோ வெட்டும்போது பயிருக்கு நோவோ என விவசாயி பார்ப்பானா? அவர்களில் நான் குறை கூறவில்லை. எனது உயிரையே சமூகத்திற்காக அர்ப்பணிக்க இருபது கிலோமீட்டர்கள், பல நாட்கள் நடந்து,  இரவு நேரத்தில் கிளாலி கடலில் கட்டுமரம் போன்ற ஒன்றில் ஏறி,  இனம் தெரியாதவர்களது ட்ரக்ரரில் பரந்தனிலிருந்த இயக்கத்திடம் வந்து சேர்ந்தேன். என்னை ஏதோ ஒரு சக்தி ஒன்று அப்படி செய்யத் தூண்டியது. இப்பொழுது அதை எண்ணினால் எங்கள் ஊரில் குறி சொல்லும் செண்பகம் சாமியேறியபோது ஆடிய பேயாட்டம் போன்றதாகவே தோன்றுகிறது.  நானும் இயக்கத்தின் பரப்புரையால் மூளைச் சலவை செய்யப்பட்டதாக நினைக்கிறேன். அப்படியாக உயிரைக் கொடுக்கத் துணிந்த எனக்கு இவைகள் பெரிதல்ல. ஆனால்,  இதை விரிவாக உனக்கு எழுதுவது உன்மேல் உள்ள நட்பினால்தான்.

காரணத்தை அறியத் தொடர்ந்து படி.

அந்த முல்லைத்தீவு நிலத்தின் கீழ் உள்ள சிறிய அறையில் ஒரு மழைக்கால இரவில்  இரண்டு லைட்டுகள் மட்டுமே எமது திருமணத்திற்கு சாட்சியாக இருந்தன. இருவருக்கும் மாலை மாற்றப்பட்டு,  ஒரு படம் மட்டும் எடுக்கப்பட்டு நடந்த சிக்கனமான திருமணம்.  மாப்பிளை வீட்டார்,  பொம்பிளை வீட்டாரென எவரையுயும் அழைக்காத இரகசியத்திருமணம். செலவற்றதும் கூட. அன்றிரவு இருவரும் அவர்களுடன் உணவருந்தினோம்.

எம் இருவருக்கும் வெளிநாட்டுத் தமிழர் ஒருவரால் ஆங்கிலமும்,    சிங்களவர்களால் சிங்களமும் மூன்று மாதம் புதுக்குடியிருப்பில் வைத்து பயிற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் இருவரும் விலத்தியிருக்க வேண்டுமென்பது இயக்கத்தின் கட்டளை. கொழும்புக்கு போனபின்பே நாங்கள் கணவன் மனைவியாக உடலுறவில் ஈடுபடலாமென எனக்கு விக்கினேசால் சொல்லப்பட்டது. எந்த ஆணையும் பாடசாலைக் காலத்தின் பின் நினைக்காத எனக்கு அவனில் எந்த ஈர்ப்பும்  இல்லை. அந்தக் கட்டளை எனக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது. பின்னர்  இருவரும் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டு அங்கு உள்ள கொம்மியூனிகேசன் நிலையமொன்றில் சில மாதங்கள் வேலை செய்தோம். அங்கிருந்து வத்தளைக்குச் சென்றோம்.

நாம் எதற்காக இப்படி இடம் மாறுகிறோம் என்று  விக்கினேசிடம் கேட்டால் , “இயக்க இரகசியம்”  என்பான். ஆரம்பத்தில் கேட்டு அலுத்துப்போய் பின்னர் அதை நான் கேட்பதில்லை. ஆனால்,  வத்தளையில் எங்கள் கணவன் மனைவி உறவு தொடங்கியது.

அவனது தோற்றம்,  நடைமுறை எல்லாம் எனக்கு ஆரம்பத்தில்  தண்ணீரும் எண்ணையும்போல் இருந்தாலும்  அவை போகப்போக பழகிவிட்டன. வத்தளை போகும் வரையில் அவனது நடத்தையில் குறையாக எதுவும் சொல்ல முடியவில்லை. நட்புடன் நடந்தான். தனது தந்தை தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி எனவும்  தந்தையுடன் சிறுவயதில் தோட்டம் செய்ததாகவும்  சொன்னான். அவனது நடத்தை,  பேச்சுகள் நேரடியாகவும் கொஞ்சம் முரட்டுத்தன்மையாகவும் இருக்கிறது என நினைத்தேன்.

கனடாவிற்கு செல்வதற்காக தற்காலிகமாக  குடியிருப்பதாக சொல்லி வத்தளையில் ஒரு சிங்கள வீட்டில் இருந்தோம். அங்கு ஒரு படுக்கை அறையுடன் ஒட்டியதாக சமையலறை இருந்தது. அந்த வீட்டுகாரர்கள் எனது பெற்றோர் போன்ற மத்திம வயதானவர்கள். அவர்களது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் படிப்பதாக கூறினார்கள். அந்தப் பெண்ணின் சகோதரர் இராணுவத்தில் இருப்பவர். அவரைக் கண்டு நான் ஒரு முறை பயந்து மலகூடத்தில் ஒரு நாள் முழுவதும் ஒளிந்துகொண்டேன். கணவனுக்கு அதிகமாகவும் மனைவிக்கு கொஞ்சமும் தமிழ் தெரிந்ததால் பழகுவது சுலபமாக இருந்தது. எங்களை நன்றாக கவனித்தார்கள். அவர்களுக்கும் அயலவர்களுக்கும் அதிக தொடர்பு இல்லை. உல்லாசப் பிராயாணிகளை கடலுக்கு மீன்பிடிக்க அழைத்துச் சென்றார்கள். தற்பொழுது நீர்கொழும்பில் ஆட்களை வைத்து வெளிநாட்டவர்களுக்கு ஊர் சுற்றிக்காட்டும் தொழில்  நடத்துவதாக அறிந்தேன். நடத்தைகளை வைத்து  இவர்களுக்கும் இயக்கத்திற்கும்  தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன்.

வன்னியில் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதுபோல ஒவ்வொரு  இரவுகளிலும்  உடலுறவு கொண்டோம். இறுதியில் வேர்த்துக் களைத்து அவன் குறட்டை விட்டு  உறங்கினால், நான் அந்த வீட்டின்ஓட்டுக் கூரையில் உள்ள சிலாகைகளை எண்ணியபடி பல மணிநேரம் படுத்திருப்பேன். அந்த சிலாகைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேறுபடும். அது எப்படி என்ற காரணம் இன்னமும் தெரியவில்லை.  

சமைத்தல் துணி துவைத்தல் போல் கலவியும்  சந்தோசமற்ற தினசரி கடமையாக இருந்தது. அக்காலத்தில் விக்கினேஸ் என்னை உடனே கர்ப்பமாக்க வேண்டும் எனச் சொல்லியபடி தொடர்ச்சியாக இயங்கினான். ஆழமாக உழுதால் பயிர் அதிகமாக விளையும் என்ற விவசாய  சிந்தனை அவனிடமிருந்தது. அவனில் ஆரம்பத்தில் பரிதாபப்பட்டேன். தோட்டத்தில்  கத்தரி,   தக்காளி பயிர் செய்யும் வேலையாக அவனும் நினைத்து நடந்தான்.  ஆனால், ஏதோ காரணத்தால்  அவன் நினைத்தது நடக்கவில்லை.  இதனை எதிர்கொள்ள முடியாமல் விக்கினேசின் நடத்தை மாறியது. வெறுப்பும் விரக்தியுமடைந்தான்.

“ஆறு மாதமாகிவிட்டது. இன்னும்  அப்படியே இருக்கிறாய் ! என்னடி நீ மலடா?” என ஏசத்தொடங்கினான். அத்துடன் அவனது உடலுறவுகள் மிகவும் மிருகத்தனமான வன்முறையாக மாறி எனக்கு தண்டனையாகவும் இருந்தது.  எனக்கு அதனால் வலி,  அவமானம்,  விரக்தியால் அவனிடத்தில்  ஆத்திரம் கொண்டேன்.

ஒரு நாள் என்னை குற்றம் சாட்டியபோது,  உனது சாமானில் ஏதாவது பிழை இருக்கலாம் என நான்   திருப்பிச்  சொன்னதும் ஆத்திரத்தில் அவன் இரண்டு நாட்கள் வீட்டுக்கு வரவில்லை. மூன்றாம் நாள் வந்தான். அதுவரையில் இருந்ததைவிட உடலுறவிற்கு பலவந்தப்படுத்தினான்.   காட்டுமிராண்டியாக நடந்தான். அவனது ஆண்மையை நான் கேள்வி கேட்டதால் அதை இப்படி நிரூபிக்க முனைகிறான் என நான் நினைத்து அப்படி பேசியதற்கு மன்னிப்புக்கேட்டேன். அப்போது சமாதானம் அடைந்ததுபோலத் தெரிந்தாலும் அவனது நடத்தையில்  மாற்றம் ஏற்படவில்லை. அவனது வன்முறையான நடத்தையைத் தொடர்ந்தான். கண்ணீர் விட்டு அழுதேன். அதற்கு அவன் மசியவில்லை. 

ஒரு நாள் இரவில் என்னை பலவந்தப்படுத்தினான். நான் அதை எதிர்த்தபோது  “இது இயக்கத்தின் கட்டளை. உன்னை கர்ப்பிணியாக்கி,  தற்கொடைப்போராளியாக முக்கியமான ஒருவரை இலக்கு வைப்பதே இயக்கத்தின் நோக்கம். உன்னை இன்னும் இரண்டு மாதம் பார்த்து விட்டு நீ கர்ப்பிணியாகாவிட்டால் உனது தோழி கார்த்திகாவை இந்த ஒப்பரேசனுக்குப் பாவிக்கவிருப்பதாக இயக்கம் செய்தி அனுப்பியுள்ளது”

இதைச் சொல்லும்போது அவன் உடல் விறைத்திருந்தது. இருளைப்  போர்த்த நிறத்தில் உடல் முழுவதும் மயிருடனும் முன்துருத்திய மேல்வாய்ப் பல்லுடனும் இரையை நோக்கித்தாவும் வனவிலங்காகத் தோன்றினான். வேட்டையாடும் புலியின் வன்மம் அவனது முகத்தில் தெரிந்தது. நான் அந்த வார்த்தையைக் கேட்டபோது பயந்து நடுங்கி படுக்கையில் இரண்டு கால்களுக்கிடையே எனது கையை வைத்தபடி தாயின் கர்ப்பத்தில் குழந்தைபோல் படுத்து அழுதேன். இயக்கத்தில் சேர்ந்தபின் அன்றுதான் அம்மாவைத் தேடினேன். எனது குடும்பத்தை நினைத்தேன். சிறு வயது நட்பைத் தேடினேன். உனக்காக ஏங்கினேன். முகம் தெரியாத யாருடைய  மடியிலாவது  ஒரு வினாடியாவது  தலைவைக்க இடம் கிடைக்குமா என ஏங்கினேன்.

அப்பொழுது அவன் வந்து ” நாங்கள்  என்ன சந்தோசமாக இருக்கவோ திருமணம் செய்தனாங்க?” என்றான்.

அவன் சொன்ன விடயத்தை எனக்கு ஊகிக்க முடிந்தாலும்,  அவனை நம்பிய அளவுக்கு இயக்கம் என்னை நம்பவில்லை என்பதும் நான் கர்ப்பமடையாதபோது உன்னை தற்கொடைப் போராளியாக்க காத்திருப்பதும் உடலை நடுங்க வைத்தது. அதைச் செய்ய நாம் தயாராக வந்தோம் என நினைத்து உடலையும் மனதையும் சுதாகரித்தபோது அவன் என்னை ஒரு வேலைக்காரியை விடக்கேவலமாக நடத்தினான் என்பது கோபத்தையும் மனச்சேர்வையும் கொடுத்தது. இயக்கத்திலும் அவனிலும் வந்த ஆத்திரத்தை எப்படி வெளிக்காட்டுவது எனத்தெரியவில்லை. இயக்கத்தை விட்டு ஓடமுடியாது. ஓடினாலும் எங்கு ஓடுவது?  யாரிடம் செல்ல முடியும்? அந்த வீட்டுக்காரரையும் நம்ப முடியாது. உலகத்தில் நான் மட்டும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்.

அன்று விக்கினேஸ் கொழும்புக்குச் சென்று,  இரவு  தாமதித்து வந்தபோது சுவர்ப் பக்கமாகத்  திரும்பி கட்டிலில் படுத்திருந்தேன். அவன் கட்டிலில் படுத்ததும் என்னைத் தன்பக்கம் இழுத்து முத்தம் கொடுக்க முயற்சித்தான். இரண்டு உதடுகளையும் உள்நோக்கி இறுகக் கடித்தபடி,  அவனைத் தள்ளிவிட்டு இருவருக்குமிடையில் தலையணையை எடுத்து வைத்துவிட்டேன். அவன் எழுந்து கால்பக்கம் சென்று கைகளால் எனது நைட்டியை உயர்த்தியபோது நைட்டியோடு சேர்த்து கால்கள் இரண்டையும் இறுக்கியபடி படுத்தேன். தனது முழங்காலில் நின்றுகொண்டு நைட்டியை இரண்டாக இழுத்து கிழித்தான்.  அதனையும் தடுக்கப்போராடினேன்.

ஆத்திரம் கொண்டு, என்முகத்தருகே குனிந்து “எடி வேசை. பிளக்போர்ட் மாதிரி நெஞ்சை வைத்துக்கொண்டு,  பாவனை காட்டுகிறாயா? நான் உனது பழைய காதலன்போல் இல்லையா? அவன் வெள்ளை நிறமா? இல்லை சாதியில் கூடவா? அவன்ர சாமான் எதில திறம்?” என்று சொல்லித் தனது விறைத்திருந்த ஆணுறுப்பைக் காட்டிவிட்டு கன்னத்தில் ஓங்கி அடித்தான். இதை எதிர்பார்க்காத நான் கோபத்தில் எனது காலை உயர்த்தி முழங்கால் பகுதியை வில்போல் வளைத்து முழு உடல் பலத்தையும் தேக்கி அவனது அடி வயிற்றில் உதைத்தேன்.  அந்தத் தாக்குதலை அவன் எதிர்பார்க்காததால் அடிபட்ட பந்தாக சுவரோடு போய் விழுந்தான். சில நிமிடம் அசையாமல் கிடந்தான். நான் குப்பற தலையணையில் முகம்புதைத்து அழுதபோது  மீண்டும் திரும்பி வந்து முதுகில் காலால் உதைந்தான். அதை நான் எழுந்து நின்று கைகளால் தடுத்தேன். கட்டிலில் இருந்து விழுந்து  நிலத்தில் கட்டிப்புரண்டு இருவருக்கிடையே  நடந்த மல்யுத்தத்தில்  ஓசைகள் வந்தது. அதைக்கேட்டு வீட்டுக்காரர் கதவைத் தட்டியதும் எமது சண்டை நின்றது. அதற்குப் பின்பு நாங்கள் ஒரே வீட்டில்  எலியும் பூனையுமாகினோம்  அதைக் கண்ட எங்களது வீட்டுக்கார அம்மாவும் கணவரும் நோர்வேயாகி  சமாதானப்படுத்த முயன்றார்கள்.

சம்பவம் நடந்த இரண்டு கிழமைகளில் உளவுத்துறையில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். இதுவே என்னிடம் அவர்கள் கொண்ட முதல் தொடர்பு.

  “என்ன நடந்தது? என்ன பிரச்சினை? உங்கள் பிரச்சினை தலைவருக்குத் தெரிந்துவிட்டது.”

“அவன் என்னை தகாத வார்த்தைகளால் பேசுகிறான் சாதி,  நிறம் என நான் இதுவரை நினைக்காத,  கேட்காத விடயங்களைப் பேசுகிறான்”

“தலைவர் உங்கள் மீது  நம்பிக்கைவைத்து  முக்கிய விடயத்திற்காக அனுப்பினார். எம்மைப் பொறுத்தவரை அதுவே இலக்கு. செல்வி நீர்தான் எம்மைப் பொறுத்தவரை கரும்புலியாகிறீர். நீர் விரும்பியே நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு இந்த வேலைக்கு வந்தீர். விக்கினேஸ் எங்களுக்கு பொருட்டல்ல. சந்தேகம் வராமலிருக்க ஒரு ஆண் உங்களருகே இருக்கவேண்டும். எந்த ஆணும் எங்களுக்குச் சரி. உங்களுக்கு அவனைப் பிடிக்காதபோது வேறு யாராவது ஒருவரை அனுப்பட்டுமா?”

“உங்கள் நம்பிக்கைக்கு எப்பொழுதும் பங்கம் வராது. நானாக இயக்கத்திற்கு வந்து சேர்ந்தேன். அதேபோல் நானாக கையை உயர்த்தி இந்த ஓப்பரேசனுக்கு வந்தேன். நீங்கள் எதற்காக அனுப்பினீர்களோ அது நடந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த கிழமைதான் அதற்கான அறிகுறி தெரிகிறது. இப்பொழுது நான்  கர்ப்பிணி என நினைக்கிறேன்”

“அப்படியாயின்  விக்கினேஸ் பற்றி இனிமேல் கவலைப்படத்தேவையில்லை. கொஞ்சக்காலம் அயலவர்களுக்காகவும்  டொக்டருக்காகவும் அவன் வீட்டில் இருக்கட்டும். பின்பு  நாங்களே அவனை வன்னிக்கு அழைக்கிறோம். அதன் பின்பு உங்கள் கணவர் கனடா சென்று விட்டதாக நீங்கள் கேட்பவர்களிடம்  சொல்லிக் கொள்ளலாம். தொடர்ச்சியாக உங்களை டொக்டரிடம் காண்பித்து  செக் பண்ணவும். அதற்கு உங்கள் வீட்டில் உள்ள அம்மாவையே கூட்டிச்  செல்லவும். தற்பொழுது வத்தளையில்  டொக்டரை பார்க்கவும். மூன்று மாதத்தில் கொழும்பு ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும்” என்றபோது    ‘மூன்று மாதத்தில்’ ‘ என்ற சொற்கள் மட்டும் அழுத்தமாக,    ஈரமற்ற   கட்டளையாக வந்தன.

அவர்களது திட்டத்தைக் கேட்டபின் பலமுறை தற்கொலை செய்ய நினைத்தேன். ஆரம்பத்தில்  தலைவர் முகம் நிழலாடியது. அதன்பின் நான் இல்லையென்றால் உன்னை கரும்புலியாக்குவார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது.

எனது நடவடிக்கைகள் வெற்றியாகவோ,  தோல்வியாகவோ முடியலாம். பல விடயங்கள் எனது கட்டுப்பாட்டில் இல்லை. பெரும்பாலான ஏற்பாடுகள் வன்னியிலிருந்து பணிக்கப்படுகிறது. எனது செய்கையிலே உனது உயிர் தங்கியிருக்கிறது. எமது இரண்டு வருட நட்பின் முடிவு இப்படி இருக்குமென நாம் நினைத்துப் பார்த்திருப்போமா?  நான் எப்படியும் இந்த இலக்கை  வெற்றிகரமாக அழித்தால்த்தான் நீ உயிருடன் வாழ சந்தர்ப்பம் கிடைக்கும்.ஆனால் நீ உயிர் வாழ்வதைப் பார்க்க  நான் உயிரோடு இருக்கமாட்டேன். மற்றைய ஒப்பரேசன் போல் இதில் ஊனமாகக்கூட இருக்க மாட்டேன். சிதறிவிடுவேன். நான் இந்த முயற்சியை இப்பொழுது இயக்கத்திற்காக செய்வதிலும் பார்க்க  உனக்காகவே செய்கிறேன். ஒரு நாள் ஆசையாக, எனது தோல்  நிறத்தைக் கேட்டாய்ஆனால்  நான் உனக்கு எனது உயிரைத் தருகிறேன்.

கார்த்திகா,  உனக்கு என்னைப்போலன்று ஒரு மாற்றுவழி உள்ளது. தயவு செய்து நீ உயிர் பிழைத்திருந்தால் வெளிநாட்டுக்கு உன் அண்ணனிடம் போய்விடு. அதன் பிறகு உனக்கு திருமணமாகி பெண்குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு எனது பெயரை வைப்பாயா? செல்வி என உன் வாயால்  கூப்பிடுவதை இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன். சரி ஆனாக இருந்தால் செல்வன் என பெயரை இடு.அதையே எனது கனவாக எண்ணுகிறேன்.

அன்புடன் விடைபெறும்

உன் தோழி செல்வி.

“கரும்புலி பெண்ணின் கடிதம் : கானல்தேசம்” அதற்கு 4 மறுமொழிகள்

  1. பதியப் படவேண்டிய உண்மைகள்.

  2. Shocking tragedy! Sad! We pray God for peaceful life to all Tamils in Srilanka & abroad! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!

    Sendt fra Outlook for Androidhttps://aka.ms/AAb9ysg

  3. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றில் இதுவுமொன்று. இதைவிட, மோசமான சம்பவங்கள் வன்னிப்போரின்போது நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, இந்த அவசர திருமணங்களைச் சொல்லலாம். இவை சாதாரண மக்களிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல. பொறுப்புவாய்ந்த பொறுப்பாளர்களுக்குள்ளும் சாதி, அவயமின்மை போன்ற காரணங்களால், அவர்களது குடும்பங்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக போராளிகளினூடாக பொதுமக்கள் மத்தியில் கசிந்த தகவல்கள் பல உண்டு. இதில் வரும் ‘விக்கினேஷ்’ என்பவரைப்போல், உயிர்தப்பியவர்கள் இப்போது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

  4. நன்றி உங்கள் கருத்திற்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: