சாந்தி சிவகுமார்

பண்ணையில் ஒரு மிருகம் எனும் இந்த நாவலின் களம் சென்னையின் புறநகரான செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மாட்டுப்பண்ணை. 1980-களில் இருந்த சூழலை பிரதிபலிக்கும் கதை.
1984 ல் பண்ணையை மேற்பார்வை செய்யும் மாடுகளை கவனிக்கவும் ஒரு மிருக வைத்தியராக செல்கிறார் நடேசன். அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழலை, முற்றிலும் புதிதாக இல்லாத சூழல் என்றாலும் அதே சமயம் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் அந்த சூழல் அமைகிறது.
பண்ணையில் வேலை செய்யும் ஆட்களிடம் மேலாளர்கள் நடந்துகொள்ளும் முறை, அவர்களின் தொழில்ரீதியான சுரண்டல்கள், பெண்களின் நிலை அதுவும் குழந்தையின்மை எப்படி பெண் சார்ந்து மட்டுமே பார்க்கப்பட்டது, சிறுவர்களின் பாலியல் துன்புறுத்தல்கள் என பல விஷயங்களை பேசினாலும் இந்நாவல் பிரதானமாக பேசுவது சாதியைப்பற்றி. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை பற்றியும் அவர்களை இடைநிலை சாதியினர் நடத்தும் விதம் பற்றியும் பேசும் நாவல்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த கதை என்றாலும், அதற்கு பிறகு அம்பேத்காரியமும், பெரியாரியமும் வெகுவாக பேசப்பட்டாலும் இன்னமும் சாதிகள் புற்றீசலைப்போல் எங்கும் புரையோடியே உள்ளது. நகர்புறங்களில் சற்று இறுக்கம் தளர்ந்திருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் இறுக்கமாகவே உள்ளது. இன்னமும் ஊர் இரண்டாக உள்ளதை காணமுடியும்.
அடுத்து, நடேசன் எப்பவும் தன் கதைகளில் பெண்களை பற்றியும், அவர்களின் நிலை குறித்தும் அவர்களின் உணர்வுகளையும், தொடர்ந்து எழுதிகொண்டிருப்பவர். இந்த நாவலிலும் அதை தொடர்ந்துள்ளார்.
ஆனால் இந்த நாவலில் நான் பேச நினைப்பது, ஆண் குழந்தைகளின் பாலியல்பிரச்சனையை பற்றி .இந்த நாவலில் நடேசன் ஒரு சென்சிட்டிவான சப்ஜெக்ட் என்றாலும் கூட அதை இரண்டு அத்தியாயங்களில் பேசி இருப்பது, பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததற்கு அவரை பாராட்ட வேண்டும்.
சமீபத்தில் சற்று விரிவான தளத்தில் வாசிக்கிறேன் என்றாலும் இந்த ஆண் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலை பற்றி தமிழ் இலக்கியம் எவ்வளவு தூரம் பதிவு செய்திருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் மிக மிக குறைந்த எழுத்தாளர்களே இதை எழுதியுள்ளார்கள். சிலர் தம்முடைய சிறுகதைகளில் இந்த பிரச்சினையை தொட்டு சென்று இருந்தாலும் விரிவான வகையில் இதனை யாரும் எழுதவில்லை என்றே தோன்றுகிறது. கவிதா சொர்ணவல்லி பெருமாள்முருகன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்கள் சிறுகதைகளில் இதை தொட்டு சென்றுள்ளனர். லக்ஷ்மி சரவணக்குமார் தன்னுடைய சிறுகதைகளிலும், “கொமோரா” என்ற தன்னுடைய நாவலிலும் இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். முன்னோடியாக பார்த்தால் எழுத்தாளர் சுஜாதா இதனைப்பற்றி எழுதியுள்ளதாக தெரிகிறது. தமிழ் இலக்கிய உலகம் இந்த விடயத்தைப் பற்றி பேச வேண்டிய அளவு பேசவில்லை, பதிவு செய்யவில்லை என்பது வியப்பாகவும் சற்று வருத்தமாக உள்ளது. பெண்களின் விடயங்கள் பேசப்பட்ட அளவிற்கு ஆண் குழந்தைகளின், குறிப்பாக இந்த பாலியல் பிரச்சனை பேசப்படவில்லை என்பது கொஞ்சம் ஆழ சிந்திக்க வைக்கிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் உள்ள பெண்கள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அளவிற்குக்கூட ஆண்கள் இதை பேச தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இந்த அறிமுக உரையின் மூலம் ஆண்களின் இந்த பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஆண்கள் தயக்கத்தை விட்டு இந்தப் பிரச்சினையை பொதுவெளியில் பேசவேண்டும், அதற்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நான் கருதினேன்.
மற்றும், இந்த நாவலில் நடேசன் கால்நடை மருத்துவர் என்பதால் மிக எளிமையாக ஆங்காங்கே கால்நடைகளின் குணாதிசயங்களையும் அவற்றின் இயல்புகளையும் சொல்லி செல்வது சுவாரசியமாக இருந்தது.
நடேசனிடம் , எனக்கு இருக்கும் ஒரே ஒரு கேள்வி பண்ணையில் நடக்கும் சுரண்டல்கள், பெண்களை சமுதாயத்தில் வைத்திருக்கும் நிலை, ஆண் குழந்தைகளின் பாலியல் பிரச்சினை என்று ஒரு பெரும் நாவலுக்கான களம் இருந்தும் அவர் அதை பயன்படுத்தவில்லையோ என்று எண்ணம் ஏற்பட்டது.
விறுவிறுப்பான நடையில், சமுதாயப் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு குறுநாவல்.
நன்றி :இருவாச்சி பொங்கல் மலர்

மறுமொழியொன்றை இடுங்கள்