பேராசிரியர் ராமசாமி

இலங்கையெனும் சிறு நாட்டுக்குள் நடந்த, தனி ஈழத்துக்கான போராட்டங்களையும் கொரில்லாத் தாக்குதல்களையும் நடத்திய அனைத்துத் தமிழ்ப் போராளிகளையும் தனது புனைவு எழுத்துகளிலும் புனைவல்லா எழுத்துகளிலும் தொடர்ந்து விமரிசித்து எழுதிவருபவர் நோயல் நடேசன்; ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் எழுத்தாளர்; விலங்குகளுக்கான மருத்துவர். அவரது பெரும்பாலான நாவல்களின் கதை சொல்லும் முறை தன்மைக்கூற்று. தானே கதைசொல்லியாக இருந்து எழுதும் புனைவுகள் வழியாகத் தனது நாவல்களுக்கு வரலாற்றுத் தன்மையை உருவாக்க நினைப்பது அவரது புனைவாக்க முறைமை.
அவரது பெரும்பாலான நாவல்களிலும் ஈழப்போரே பின்னணிக்காலம். ஆனால் புனைவு வெளிகள் ஈழத்தைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பா, ஆஸ்திரேலியா என அவர் பயணப்பட்ட நாடுகளாக இருக்கும். அங்கெல்லாம் வந்து சேர்ந்துள்ள ஈழத்தமிழர்களின் மனச் சிக்கல்களையும் போர் மீது கொண்ட விருப்பத்தையும் அதற்குள் செயல்படும் அறியாமையையும் போலித்தனத்தையும் நிகழ்வுகளாக்கித் தொடர்ந்து விமரிசனம் செய்யும் நோக்கம் அவருக்கு உண்டு. நோயல் நடேசனின் எழுத்துகளில் வெளிப்பட்ட மொத்தமான இந்தப் போக்கிலிருந்து விலகிய ஒரு புனைவாக வந்துள்ளது “பண்ணையில் ஒரு மிருகம்” என்னும் சிறிய நாவல்.
இந்த நாவலிலும் அவரே- ஆசிரியரே கதைசொல்லி. ஆனால் ஆக்கப்பட்டுள்ள புனைவு வழியாக அவர் விமரிசிக்கும் பொருண்மை இந்தியச் சாதி அமைப்பு. தனது புலம்பெயர் வாழ்க்கையில் இந்தியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் ஓராண்டு மட்டும் செங்கல்பட்டுக்கருகில் உள்ள ஒரு பண்ணையில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் அந்த விவசாயப் பண்ணையில் வேலை பார்த்த மனிதர்களுக்குள் இருந்த சாதீய முரண்பாடுகளையும், பெண்களின் மீது பாலியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்குள் செயல்பட்ட வன்முறையான நடவடிக்கைகளையும், அத்துமீறல்களையும் விவாதிப்பதே நாவலாக எழுதப் பெற்றுள்ளது. எப்போதும் நாவலின் கதைசொல்லியாகவும் நிகழ்வுகளின் மீது விமரிசனப் பார்வையை முன்வைக்கும் பாத்திரமாகவும் வரும் நோயல் நடேசன் இந்நாவலிலும் அதே தன்மையில் வருகிறார். ஆனால் முக்கியமான வேறுபாடொன்றை இதில் காட்டுகிறார்.
இந்தியச் சாதியம்: அந்நியப்பார்வை
பண்ணையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கொஞ்சம் ஒதுங்கி நின்று பார்த்து முழுமையாக அதில் ஈடுபாடு காட்டாத ஓர் அந்நியனாகத் தன்னை வைத்துக்கொண்டு நாவலின் நிகழ்வுகளை வாசிப்பவர்களுக்கு விவரித்துக்கொண்டே போகிறார். இந்தத் தன்மை காரணமாகவே இலங்கைத் தமிழர்களின் சாதிய இறுக்கத்தைக் காட்டிலும் குரூரமானது இந்தியச் சாதியப்படிநிலைகள் என்ற பார்வையைத் தரமுடிந்திருக்கிறது. நடப்பியல் நிகழ்வுகளுக்கு ஆவியுருவில் வரும் கற்பகம் என்ற பாத்திரம் ஏற்படுத்தும் எதிர்வினைகள் வழியாக உருவாக்கப்பட்டுள்ள மாயநடப்புத்தன்மை நாவல் வாசிப்பைத் தீவிர நிலைக்குக் கொண்டு செல்கிறது.
செங்கல்பட்டிற்கு அருகில் இருக்கும் அப்பண்ணையில் முதலாளிகள் எப்போதாவது வந்து செல்பவர்கள் (இசுலாமியக்குடும்பம்). அங்கு அதிகாரம் செலுத்தும் நிலையில் இருப்பவன் மேல்பார்வைப் பொறுப்பில் இருக்கும் கருப்பையா (இடைநிலைச்சாதி). அவனது பாலியல் விருப்பங்கள் இயல்பானவை அல்ல. பண்ணையில் வேலைசெய்யும் இளம்வயதினரைத் தனது பாலியல் இச்சைக்கான தீனியாக நினைப்பது அவனுக்குள் இருக்கும் மிருகவெறி. பாலின வேறுபாடின்றி உறவுகொள்ளும் அவனுக்குள் தானொரு உயர்சாதி ஆண் என்ற ஆதிக்க எண்ணமும் இருக்கிறது. அந்த எண்ணத்தைக் கூடுதலாக்குவதாக அப்பண்ணையில் அவனுக்குக் கிடைத்த கங்காணி பதவியும் அமைந்துவிடுகிறது. இந்த எண்ணத்தின் விளைவுகளால் உண்டாகும் நிகழ்வுகளும் முரண்களும் நடவடிக்கைகளும் என நாவலுக்கான கதைமுடிச்சாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆணாகவும் ஆதிக்க சாதி மனிதனாகவும் கருதிக்கொண்ட மிருகவெறி மனிதனை எதிர்த்து நிற்க இயலாத நிலையில் மரணத்தைத் தழுவிய பெண்ணின் நிழலுருவச் செயல்கள் – ஆவி நடமாட்டம் என்னும் கற்பிதம் நாவலுக்குப் புனைவும் நடப்புமான இரட்டை நிலையை உருவாக்கித்தந்துள்ளது.
இறந்து ஆவியாக வரும் பெண்ணின் சாதிய அடையாளமாகத் தலித் அடையாளத்தைத் தருவதின் மூலம் இந்தியச் சாதியின் மீதான விமரிசனத்தை உருவாக்கியுள்ளார் நாவலாசிரியர். ஓராண்டுக் கால அளவு என்பதைத் தீர்மானித்துக் கொண்டு பண்ணைக்குள் நடக்கும் அத்துமீறல்களையும் அப்பண்ணைக்கு வேலைக்காக வரும் பக்கத்துக் கிராமத்து மனிதர்களின் வறுமை, சாதியப்பாகுபாடுகள், அறியாமை, சுகாதாரமற்ற வாழ்க்கை என ஒவ்வொன்றையும் விமரிசிப்பதற்கான காட்சிகளுக்குள் –நிகழ்வுகளுக்குள் விலங்கு மருத்துவரின் நுழைவு உருவாக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கான மருத்துவராக இருந்தபோதிலும் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ உதவிகளைச் செய்யும்போது ஏழ்மையான வாழ்க்கைக்குள் இருக்கும் கிராமத்து மனிதர்களின் அன்பான உறவுகளையும் நேசிப்பையும் பெற்றுக் கொண்டு திரும்பியதை நாவல் விவரித்துள்ளது.
இந்திய மனிதர்களைத் தனித்தனிக் கூட்டமாக உருவாக்கி அவற்றுக்கிடையே மேல் – கீழ் அடுக்குகளை உருவாக்கி வைத்துள்ளன சமய நம்பிக்கைகளும் அவற்றுக்குக் கோட்பாட்டாக்கம் செய்த ஸ்மிருதிகளும். கோட்பாட்டாக்கத்தில் செயல்பட்ட ஓரம்சம் தீண்டாமை. ஒதுக்குதலும் ஒதுங்குதலும் என்னும் அடிப்படை காரணமாக விலகலை மேற்கொள்ளும் சாதிய குழுக்களுக்கிடையே பொருளாதார நிலையிலும் வாழ்வியல் சூழலிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாத போதிலும் ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவை எதிர்மையாகப் பார்க்கும் நிலையைக் கொண்டிருக்கின்றன. பஞ்சமர்களாக வகைப்படுத்தப்பட்ட தலித்துகளைவிட மேலானவர்கள் எனச் சூத்திர இடைநிலைச் சாதி மனிதர்கள் (நான்காம் வருணத்தினர்) நினைக்கிறார்கள். அதேபோலான நினைப்பு வணிகக்குழுக்களுக்கும் (மூன்றாம் வர்ணம்) சத்திரியக்குழுக்களுக்கும் (இரண்டாம் வர்ணம்) இருக்கின்றன. இவர்கள் அனைவரிலும் உயர்வானவர்கள் என்ற எண்ணம் பிராமணர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணங்களே இந்தியச் சாதியமைப்பின் குரூரமான உண்மைகள்.
ஒரு விவசாயப்பண்ணை என்னும் சிறிய வெளியை வைத்துக்கொண்டு தீண்டாமையின் இயக்கம் மற்றும் நடைமுறை உண்மை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது நோயல் நடேசனின் எழுத்து. அதன் வழியாக இந்தியச் சாதியத்தின் மீது குறுக்குவெட்டான தோற்றத்தை – ஒரு வெளியாளின் பார்வையில் முன்வைத்துள்ளது. இந்தியாவில் பிறந்த ஒருவரால் இப்படியான வெளியாள் பார்வையைத் தருவதி இயலாது. இயல்பாகவே நாவலை எழுதுபவரின் தன்னிலை ஆதிக்க சாதிகளின் தன்னிலைக்குள்ளோ, அடக்கப்படும் சாதிகளின் இயலாமைக்குள்ளோ நுழைந்துவிடும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும். இந்தியாவைப் போன்றதொரு சாதிய வேறுபாடுகள் கொண்ட இலங்கை தேசத்து மனிதராக இருந்தபோதிலும் தன்னை அதற்குள் நிறுத்திக்கொள்ளவில்லை. அதிலிருந்து விலகி அயலாளின் பார்வைக்கோணத்தைத் தந்துள்ளார். அந்த மாற்றம், அவரது மற்றைய எழுத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது பண்ணையில் ஒரு மிருகம் என்று காட்டியுள்ளது. இந்தக் கோணத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய எழுத்து.
நன்றி -தீராநதி
மறுமொழியொன்றை இடுங்கள்