என்னுரை

நாடுகள், இனக்குழுக்கள் மத்தியில் நடக்கும் மோதல்கள் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வரும். அந்த மோதல்கள் உச்சமடைந்து பிரபலமாகி மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு உட்படும்போது சமாதான ஒப்பந்தங்கள் மூலம் அமைதியும் ஏற்படும். போரின் விளைவுகள், அழிவுகள் கண்களுக்குத் தெரியும் என்பதால் அவைகளை நிவர்த்திக்க பலரும் பாடுபடுவார்கள்.
முப்பது வருடங்கள் போர் நடந்த இலங்கையில் பிறந்து வளர்ந்து, பின்பு புலம் பெயர்ந்த வாழ்க்கையிலிருந்து போர் கடந்த எனது தாயக பூமியை புறக்கண்ணால் பார்த்தேன். அதனையடுத்து அங்கு நடந்த நிவாரணம் – மீள் கட்டமைப்பு முதலானவற்றையும் என்னால் காணமுடிந்தது.
போரையும் அதன் விளைவுகளையும் பற்றிய கட்டுரைகள், நாவல், சிறுகதைகள் என பலவற்றை எழுதிவிட்டேன். இனி அதிலிருந்து விலகிவிட விரும்புகிறேன். எனினும் எனது இந்த புதிய நாவல் பேசுவதும் வன்முறையே. இந்த வன்முறை காலம் காலமாக நடப்பது -குடும்பம் என்ற கட்டமைப்பு உருவாகிய காலத்திலிருந்தே நிழலாகத் தொடருவது.
மனிதனது பயிற்செய்கை நதிக்கரைகளில் தொடங்கிய காலத்தில் உருவாகிய சமமற்ற ஆண் -பெண் உறவு முறையுடன் ஆணின் ஹோ மோன் – ரெஸ்தஸ்ரோனும் (Testosterone)சேர்ந்து உருவாகிய வன்முறை எல்லா குடும்பங்களிலும் சிறிதும் பெரிதுமாகத் தொடர்கிறது.
பல குடும்பங்களில் குடும்ப உறவு நிலைப்பதற்காக இவை மறைக்கப்பட்டு பேசாப்பொருளாகிறது. இந்த வன்முறைகள் பெரும்பாலும் நான்கு சுவர்களிடையே நடப்பதால் வெளியே தெரிவதில்லை. தெரிந்தாலும், ‘அது குடும்பப் பிரச்சினை- நாம் எதுவும் செய்வதற்கில்லை’ எனத் தலையிடாது ஒதுங்குகிறார்கள். ஆனால், குடும்ப வன்முறை. பூமியின் உள்ளே கொதித்தபடி இருக்கும் எரிமலைபோன்று குமுறிக்கொண்டிருந்து சந்தர்ப்பங்களில் வெடித்துச் சிதறுகிறது.
மதங்களும் கலாச்சாரமும் இவற்றைக் கம்பளிப் போர்வை போட்டு மூடுகின்றன. ஆனால் அவற்றால் இதை அணைக்க முடியாது.
ஒரு விதத்தில், இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடர்ந்து போரைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு உருவானதோ அதைப்போன்று இந்த மதங்கள்கூட பெண்களை அடக்கி, குடும்பத்தில் உங்களது கடமை இனப்பெருக்கம் மாத்திரமே எனச் சொல்லி அமைதியாக வைத்திருப்பதற்கான கருவிகளோ என நான் சில தடவைகள் நினைப்பதுண்டு.
பொருளாதார பலம் இல்லாத பெண்ணாக இருந்தால் வன்முறையைச் சகித்துப்போக வேண்டியுள்ளது . மேலும் பிள்ளைகள் நலம் பாதிக்கும் என வன்முறை பொறுக்கப்படுகிறது. ஆனால், விளைவுகள் உண்மையில் எதிர்மாறானவை.
குடும்ப வன்முறையில் பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை . குழந்தைகளும் பெரிதும் பாதிப்படைகிறார்கள். அவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. குழந்தைகளது மனங்களில் ஏற்படும் பாதிப்பு நமக்கு வெளியே தெரிவதில்லை. மூன்றாம் உலக நாடுகளில் அவைகளை எவரும் கணக்கெடுப்பதில்லை . பிற்காலத்தில் பலர் சமூக விரோதிகளாகவும் வன்முறையாளர்களாகவும் குற்றவாளிகளாகவும் உருவாகிறார்கள். பலரது குடும்பப் பின்னணியை பார்க்கும்போது, அத்தகைய குடும்பங்களில் வளர்ந்தவர்களாக இருப்பார்களோ என நான் சிந்தித்திருக்கின்றேன்.
மேற்கு நாடுகளில் இவற்றை ஆரம்பத்திலேயே ஓரளவு கண்டறிவதற்கு பாடசாலைகளுடன் மருத்துவர்கள், குழந்தை நல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்குத் தெரிய அவுஸ்திரேலியாவில் மூன்று பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஒருவர் எந்த நிலையிலும் கண்டுகொள்ளப்படாது அமைதியாகத் தூக்கத்தில் மரணத்தைத் தழுவினார்.
“தாத்தாவின் வீடு” என்ற இந்த நாவல் எனது இளவயதின் சில சம்பவங்களை வைத்துப் பின்னப்பட்டது. இந்த நாவலின் காலம் 1965 -1970 வரையிலான போரற்ற காலத்தை பின்னணியாக்கியிருந்தபோதிலும் போருக்கு முன்பு சமூகம் முற்றிலும் சமாதானமானதல்ல . குடும்ப வன்முறை, சாதிய அடக்குமுறை உறைந்து உரமாகிக் கிடந்த இடத்தில் பிற்கால இன வன்முறை இலகுவாக வேர்விட்டது என்பதையே இங்கு நான் காண்பிக்க விரும்பியது.
நாவல் ஒன்று உண்மையை மட்டும் பேசும்போது அங்கு அழகியல் இல்லை . ஒருவித கண்காணிப்பு கெமரா போலாகிறது . அதற்கப்பால் நான் எடுத்த பொருளோடு அழகியலும் கலந்து வரும்போது நல்ல நாவலாகிறது. அத்துடன் சில உண்மைகள் தத்துவரீதியாக மனித மனதின் உள்ளே எட்டிப் பார்க்கும்போது சிறப்பான நாவலாகிறது. தாத்தாவின் வீடு என்ற புனைவு நாவலுக்குரிய கட்டுக்கோப்போடு செல்கிறதா என்ற கேள்வியை வாசகர்களே தீர்மானிப்பார்கள் .
தமிழே அதிகம் எழுதத் தெரியாத எனக்கு இதுவரை கைபிடித்து உதவியவர்கள் எழுத்தாளர்கள். எஸ். பொ, மாவை நித்தியானந்தன், முருகபூபதி, கருணாகரன் ஆகியோருக்கு நான் எழுதிய நாவல்கள் சிறுகதைத் தொகுப்புகளை சமர்ப்பணமாக்கினேன்.
ஆங்கிலத்தில் ஓரளவு இலக்கியம் படித்த நான் அதன் பிறகு தொடர்ந்து பல காலம் படித்து வந்தது ஜெயமோகனது இணையத்தளம். இங்கிருந்து தமிழ் மற்றும் தென் இந்திய இலக்கியங்களை கற்கமுடிந்தது. அதற்கப்பால் எனது நாவலான அசோகனின் வைத்தியசாலைக்கு முன்னுரை எழுதியதுடன் எனது பல கட்டுரைகளைத் தனது தளத்தில் பிரசுரித்து தமிழக வாசகர்களிடையே அறிமுகப்படுத்திய நண்பர், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த நாவல் சமர்ப்பணமாகிறது.
வாசகர்களே, இந்த நாவலில் வரும் பாத்திரங்கள், எனது மற்றைய நாவல்களில் வருவதுபோல் மற்றைய நாடு, வேறு இனம் அல்லது புலம்பெயர்ந்தவர்களோ அல்ல. இவர்கள் இரத்தமும் தசையுமாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள். குறிப்பாக தீவுப்பகுதியினர் என்பதால் உங்களுக்கு அன்னியமாகத் தெரியாது. இவர்கள் உங்கள் வாழ்விலும் நீங்கள் சந்தித்தவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எனது இந்த ஆறாவது நாவல் வெளிவருகிறது.
இதனைப் படிக்கும் வாசகர்களுக்கும்இ இதனை வெளியிடும்……அவர்களுக்கும் எனது நன்றி.
அன்புடன்
நோயல் நடேசன்
மறுமொழியொன்றை இடுங்கள்