ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும்

                                                             லெ. முருகபூபதி

மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா,  முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள்.   கௌரவர்கள்,  அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.

அந்த பங்காளிச் சண்டையில்  இறுதியில் துரியோதனன் தோற்றான்.  செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும்  கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான்.  கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும்.

அதனால்தான் குந்திதேவிக்கு மாத்திரமே தெரிந்த அந்தரங்க இரகசியத்தை, அவளிடமே அம்பலப்படுத்தி,  கர்ணனுக்கு தூது அனுப்பி,  அவனை தாயின் பாச வலையில் விழச்செய்து, இறுதியில் குருஷேத்திர போர்க்களத்தில்  கர்ணனை வீழ்த்தினார் கிருஷ்ண பரமாத்மா. போரிடத் தயங்கிய அருச்சுனனுக்கு கீதோபதேசம் செய்து அவனுக்கு உருவேற்றினார்.

அந்தப்போரில் கௌரவர்களை வீழ்த்துவதற்காக கிருஷ்ண பரமாத்மா மேற்கொண்ட ராஜதந்திரங்கள் அனைத்துக்கும், அவருக்கு பாண்டவர் வம்சத்திடமிருந்த ராஜவிசுவாசம்தான் பிரதான காரணம்.

அத்துடன்   பாண்டவர்களையும் கௌரவர்களையும் சோதிக்கவும் அவர் தவறவில்லை. இதனால் மகாபாரத காவியத்தில்  கிருஷ்ணர் பிரதான பாத்திரமானார். 

சமகாலத்தில்  இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த 13 ஆம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும்போது, எமக்கு மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர்தான் நினைவுக்கு வருகிறார்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை என்பதையும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர்தான் இதில் பங்கேற்றுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அநுரா குமார திஸாநாயக்காவின் தலைமையில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணியும், குமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்க்காங்கிரஸும் இடம்பெறாத சந்திப்பே இந்த சர்வகட்சி மாநாடு.

இச்சந்திப்பில்  கலந்துகொண்டவர்களில் பெரும்பாலும் அனைத்து கட்சித் தலைவர்களுமே  தத்தம் தரப்பின் கொள்கை விளக்கத்துடன்  பேசியிருக்கிறார்கள்.  எனினும் பொதுஜன பெரமுனவிலிருந்து கலந்துகொண்ட மகிந்த ராஜபக்‌ஷவும் சாகர காரியவாசமும் மௌனத்துடன் விடைபெற்றுள்ளனர்.

இது கள்ளமௌனமா..?   கபட மௌனமா..? என்பதை இனிவரவிருக்கும் தேர்தல்கள் வரையில் மக்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டியதுதான்.

தனது மேன்மை தாங்கிய அதியுர் ஜனாதிபதி பதவிக்காலத்தில் இலங்கையில் தோன்றியிருக்கும்  பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் நீண்ட காலமாக எரியும் பிரச்சினையாகத்  திகழும் தேசிய இன முரண்பாட்டுக்கும் நிரந்தரத்தீ ர்வை காணவேண்டிய கடினமான பாதையை ரணில் விக்கிரமசிங்கா கடந்துகொண்டிருக்கிறார்.

ரணில் விக்கிரம சிங்கா, சுமார் 45 வருட கால அரசியல் அனுபவம் மிக்கவர்.  இவர் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட காலத்தில் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த சஜித் பிரேமதாச தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் இருக்கிறார். இவ்வாறு ஒரு சூழ்நிலை வருவதற்கும் காரணமாக இருந்தவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.

 ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சஜித்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு ரணில் தயங்கியதன் விளைவுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் உதயத்திற்கு காரணம்.  அதன் விளைவால் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனமும் இன்றி ரணிலின் தலைமையிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி படு தோல்வி கண்டது.

வெறுமனே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் பாராளுமன்றம் வந்து முதலில் பிரதமராகி, பின்னர் ஜனாதிபதி அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கா பற்றி பொதுவான மக்கள் அபிப்பிராயம் இருக்கிறது.

அவர் ஒரு இராஜதந்திரி என்பதுதான் அந்த அபிப்பிராயம். பெரும்பாலான ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

ரணில் ராஜதந்திரி மாத்திரமல்ல, தனக்கு மேலே இருக்கும் ராஜாவுக்கும் விசுவாசமாகவும் இருந்தவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

முன்னர் அவரது மாமனார் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்தார். பின்னர் ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்காலத்தில் அவருக்கும் விசுவாசமாக இருந்தார்.

காமினி திஸாநாயக்காவும் லலித் அத்துலத் முதலியும் பிரேமதாசவிற்கு எதிராக குற்றச்சாட்டை   (  Impeachment  ) முன்வைத்தபோது, பிரேமதாசவுக்கு  சார்பான நிலையெடுத்தவர் ரணில். 

அவ்வாறு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியவர், சமகாலத்தில் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதைப்பற்றி இங்கே விளக்கவுரை வழங்கவேண்டிய அவசியம் இல்லை !

தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்தவருக்கு முதலில் பிரதமர் பதவியும் அதனையடுத்து அதியுயர் ஜனாதிபதி பதவியும் கிடைத்தமைக்கு ராஜபக்‌ஷக்களின் முழுமையான ஆசிர்வாதமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதே ரணிலைத்தான் 2004 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் வடமாகாண மக்களை வாக்களிக்க விடாமல், ரணிலை தோற்கடித்து மகிந்த ராஜபக்‌ஷ வெற்றிபெறுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்கள்.

2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு எதிரணியினரின் பொது வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவால் இல்லாமல் போனது. மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில்  அந்த வாய்ப்பு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் கிட்டாமல் போனது.

மீண்டும் 2019 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில்  தன்னைவிட வயதாலும் அரசியல் அனுபவத்தினாலும் குறைந்த சஜித் பிரேமதாசவை அதில் போட்டியிட அனுமதிக்க விரும்பாமல்,  இறுதியில் பொதுத்தேர்தலில் படுதோல்வியும் அடைந்து பின்கதவால் மீண்டும் பாராளுமன்றம் வந்திருக்கும் ரணில் தற்போது அனைத்துக் கட்சிகளையும் அழைத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்.

இனிவரவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலிலும் அவர் போட்டியிடப்போகின்றார்.  அதற்கு முன்னர் அவருக்கு முன்னால் இருக்கும் சில சவால்களை அவர் சமாளித்தாகவேண்டும்.  எனவே தனக்கு தற்போதைய பதவியை தானமாக வழங்கியிருக்கும் ராஜபக்க்ஷவினருக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய அதே சமயம், தனது அரசியல் வாழ்க்கையை  அவ்வப்போது சறுக்கச் செய்தவர்களுக்கும்  பாடம் கற்பிக்கவேண்டும்.

அதற்குத்தேவைப்பட்ட அனைத்து ராஜதந்திரங்களும் ரணிலிடம் குவிந்து கிடக்கிறது.

ஆனால், பொது நோக்கில் முழு இலங்கைக்கும் – அனைத்து இன மக்களுக்கும்  நன்மை விளைவிக்கக்கூடிய ராஜதந்திரம் அவரிடம் இருக்குமா..?

இங்குதான் எமக்கு மகா பாரதத்தில் வரும் கிருஷ்ணபரமாத்மா நினைவுக்கு வருகிறார் !

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: