By: சிங்கை நிலா
ஆசிரியர்: Dr. நோயல் நடேசன்

காலச்சுவடு பதிப்பக வெளியீடாக மே 2022 வெளிவந்த நாவல்.
யதார்த்தத்தையும் மாயவாதத்தையும் இணைத்து தன்மையில் சொல்லப்பட்ட கதை என்பதால் சாதாரண கதைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சிடுக்குகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பிறப்பால் வரும் சமூக ஏற்றத்தாழ்வு எப்போதும் வித்தியாசம் இல்லாமல் புரையோடி சீழ் பிடித்திருப்பதை காட்டும் புதினம். அதனால் கதையின் அடிப்படையில் வித்தியாசம் இல்லை. நிகழ்காலத்தின் கண்ணாடியாகவே தெரிகிறது. தமிழர் செறிந்து வாழும் தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகம் மட்டும் இல்லாமல் குறிப்பிடட எண்ணிக்கையில் வாழும் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டத்திலும் இருப்பதை ஆசிரியர் எங்கோ தமிழநாட்டில் உள்ள பண்ணையை மையப்படுத்தி மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறார். பணமும் அதனுடன் இணைந்த அதிகாரமும் சாதியத்தின் அடிப்படைக் கட்டுமானம். சமுகம், நிறுவனம், குடும்பம், தனிமனிதன் என்ற அடுக்குகளில் அது அவ்வாறு நிலைபெற்றுவிட்டது. ஒவ்வொரு அடுக்கிலும் அந்த மிருகம் வாழ்கிறது. அந்தந்த அடுக்கில் இருக்கும் சில மனிதர்களின் மூலமாக மிருகம் வெளிப்படுகிறது. எல்லா மிருகங்களும் இரத்தத்தின் நெடியை விரும்புவதில்லை. சில மிருகங்கள் இலைகளையும் செடிகளையும் உண்ணுகின்றன. இரத்த வெறி கொண்ட மிருகம் தனது இனத்தில் உள்ள சாதுவான மிருகத்தையுமே வேட்டையாட தயங்காது. பல பாத்திரப்படைப்புகளை வேறுபட்ட சமூதாய மற்றும் தகுதிகள் அடிப்படையில் முன்னிறுத்தும் போது அவர்களின் இடையில் உண்டாகும் கசப்புகளை காட்டுகிறது.
விறுவிறுப்பாக நகர்வதால் கதையுடன் ஒன்றிப்போக முடிகிறது. அமானுசம் நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது என்ற சந்தேகம் வாசகனுக்கும் கதை சொல்லிக்கும் ஏற்படுகிறது.
ஆசிரியரின் மிருக வைத்திய அனுபவம் பல இடங்களில் கூறப்படுகிது. இது கூட எனக்குத்தெரிந்து தமிழில் யாரும் பெரிதாக சொல்வதில்லை அல்லது எழுதுவோர் பலருக்கு தெரியாத களமாக இருக்கலாம்.
கதையில் வரும் மிருக வைத்தியர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த பண்ணையில் வேலை செய்கிறார். அந்த காலப்பகுதியில் பண்ணையிலும் அதன் சூழலிலும் நிகழ்ந்த துன்பியல் சம்பவங்களை கதையில் கோர்த்து புனைவை கட்டமைத்துள்ளார். ஆணவப்படுகொலை, சிறுவர் துஷ்பிரயோகம், சாதிய அடக்குமுறை, கொலையும் அதற்கு துணைபோதல் அல்லது மறைத்தல், தொழிலாளர் மீதான அடக்குமுறை இவ்வாறு பலவற்றை உள்வாங்கிய கதையில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக இன்னும் ஆழமாக எடுத்து சொல்லியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. அவரவர் நியாயங்கள் வேறாக இருந்தாலும் இவற்றை ஒட்டுமொத்த மனித சமூதாயத்தின் தலைகுனிவுக்கு இட்டுச்செல்லும் வன்முறைகளாகவே பார்க்கிறேன்.
போகிற போக்கில் இலங்கையில் நடந்த யுத்தத்தின் வடுவை கருப்பையா பேசியதை கணக்கெடுக்காதீர்கள் என்று துரைநாயக்கர் சொல்லும் ஒரு இடத்தில் வைத்தியர் இப்படி பதில் கூறுவார் “அவரை நான் நேற்றே மறந்து விட்டேன். இலங்கையில் நாங்கள் துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் இடையில் வாழ்ந்தவர்கள். வார்த்தைகள் இலகுவில் காயப்படுத்தாது” என்று.
தெறிப்புகளாக பல இடங்களில் நின்று நிதானிக்க கூடிய கருத்துக்கள் நாவல் முழுவதும் இருக்கின்றது. குறிப்பாக புதிதாக உண்ட கொக்குக்கறியை குமட்டி வாந்தி எடுத்த கதைசொல்லி அடுத்தநாள் மாட்டிறைச்சி வாங்கி வருகிறார். அதை பண்ணையில் இருக்கும் பெண்களிடம் கொடுத்து சமைக்க சொல்கிறார். அவர்கள் மறுத்துவிட தானே சமைத்து உண்டவர் அந்த கறி எதுவும் செய்யவில்லை. எல்லாம் பழக்கம்தான் என்று சொல்லும் இடத்தை குறிப்பிடலாம். கட்டமைப்பின் பல அருவருப்பான பக்கங்களை காட்டும் நாவல் எம்மை மறுபரிசீலனை செய்ய தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்