பவளவிழா: மாவை நித்தியானந்தன்.

   

கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்

                                                                                 முருகபூபதி

( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும்,  சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து  கொண்டாடினர்.

மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின்  சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

(மலரில் இடம்பெற்ற எழுத்தாளர் முருகபூபதியின் ஆக்கம் )

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது.  அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில்  நதியாக்குவதில்தான்  அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.

தனது ஆரம்ப  பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில் சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும்,  சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன்.

இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

அந்தச்சங்கம் நுட்பம் என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.

நித்தி,  தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என  பரவலாக அறியப்பட்ட அம்பிகை பாகரின் மாணாக்கர்.

பாட நேரங்களையடுத்து வரும் இடைவேளையின்போது,   தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து, அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார்.  அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும் பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.

சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மெல்பனில் மாவை நித்தி,  பாரதி பள்ளியின் வளாகத்தை தொடக்கியபோது சிட்னியில் வதியும் அம்பி அவர்களை அழைத்து பாரதி பள்ளியை அங்குரார்ப்பணம் செய்ய வைத்தார்.

மாவை நித்தி கவிஞராகவும் நாடக எழுத்தாளராகவும் இயக்குநராகவும்  நன்கு அறியப்பட்டிருந்தாலும், சிறுகதைகளும்,  புனைவு சாரா பத்தி எழுத்துக்களும் எழுதி வந்திருப்பவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியன மல்லிகை இதழில் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதில் லண்டன்காரன் என்ற சிறுகதை அக்காலப்பகுதியில் சிலாகித்து பேசப்பட்டது.  அதேசமயம் இலங்கையில் புகழ்பூத்த சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை நேரில் சந்தித்து நித்தி எழுதிய நேர்காணல் கட்டுரை மல்லிகையில் வெளிவந்தது.  அந்த சந்திப்புக்கு இவருடன் சென்றவர்தான் மெல்பனில் வதியும் இவரது பல்கலைக்கழக நண்பர் தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட சிவசுப்பிரமணியம்.

மாவை நித்தி, கொழும்பில் கலை , இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பிலும் இணைந்திருந்தவர். அதன் ஸ்தாபக  உறுப்பினருமாவார். இக்கழகம், கொழும்பு தமிழ்ச்சங்கம் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் பல கலை, இலக்கிய சந்திப்பு கலந்துரையாடல்களையும் நடத்தியிருக்கிறது.

நித்தி,  கவிதை, சிறுகதை எழுதியவாறே நாடகப்பிரதிகளும் எழுதினார்.  அவற்றுள் ஐயா லெக்சன் கேட்கிறார் என்ற அங்கதச்சுவை கொண்ட நாடகம் இன்றளவும் பேசப்படுகிறது. இந்த நாடகப் பிரதி யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு நாடக நூலிலும் இடம்பெற்றுள்ளது.

1970 களில் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் வருடாந்த கலைவிழாவில் முதல் தடவையாக  இந்நாடகம் மேடையேறியது.  இதன் உறைபொருளும்  மறைபொருளும் சமகால அரசியலையும் சித்திரிக்கின்றமையால்,  காலத்தையும் வென்று வாழும் நாடகப் பிரதியாகவும் பேசப்படுகிறது. இந்த நாடகம் மீண்டும் மெல்பனில் 1990 களில் இரண்டு தடவைகள் மேடையேற்றப்பட்டது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் வதியும் கலைஞர்களினாலும் மேடையேற்றப்பட்டது.  நித்தியின் மற்றும் ஒரு அரசியல் அங்கதச் சுவையுள்ள தாளலய இசை நாடகம்தான் திருவிழா. இதனை வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் 1980 காலப்பகுதியில் நடந்த பாரதி விழாவில் பார்த்து ரசித்திருக்கின்றேன்.

இந்த நாடகம் தமிழ் அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும்  அங்கதச்சுவையுடன் சித்திரித்தது.

மாவை நித்தி மெல்பனுக்கு வருகை தந்தபின்னரும் நாடகப்பிரதிகளும், இசை நாடகங்களும் எழுதினார். அத்துடன் புனைவு சாரா பத்தி எழுத்துக்களிலும் ஈடுபட்டார்.

மெல்பனில் 1989 காலப்பகுதியில் வெளிவரத் தொடங்கிய மரபு இதழில், அதன் ஆசிரியர் விமல். அரவிந்தனின் வேண்டுகோளை ஏற்று தொடர்ச்சியாக சில பத்திகளை எழுதிவந்தார்.

அவையும் மெல்பனில் எம்மவரின் வாழ்வுக் கோலங்களை நகைச்சுவையுணர்வுடன் சித்திரித்தது. அவற்றில் மெல்வே, கராஜ் சேல் முதலான பதிவுகள் வாசிக்கும்போதே சிரிப்பை வரவழைக்கும்.

நித்தி,  மெல்பனில் எழுதித் தயாரித்து இயக்கி மேடையேற்றிய கொழும்பு மெயில், இசை நிகழ்ச்சி மற்றும் அம்மா அம்மா நாடகம் என்பனவும் குறிப்பிடத்தகுந்தவை.

அம்மா அம்மா, அக்காலப்பகுதியில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்திருந்த போர்ச் சூழலை சித்திரித்திருந்தது. கொழும்பு மெயில், காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் இரவு மெயில் வண்டியினுள் நடக்கும் காட்சிகளை யதார்த்தம் குன்றாமல் பதிவுசெய்திருந்தது.

அதனைப்பார்த்து ரசித்தவர்களின் வாழ்வோடு கொழும்பு நோக்கி வரும் தபால் ரயில் வண்டி நெருங்கியிருந்தமையால், அந்த நிகழ்ச்சியும் மாவை நித்தியின் வெற்றிகரமான படைப்பு எனச்சொல்லலாம்.

மாவை நித்தியிடம் மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கிறது.  படைப்பு இலக்கியத்தில் ஈடுபட்டவாறே இந்தத் துறையிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பவர். அதனால், இவரது சேவைகளை மெல்பனில் முன்னர் வெளிவந்த உதயம் பத்திரிகையும் உள்வாங்கியிருக்கிறது.

“தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச்சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.” என்று ஒரு சந்தர்ப்பத்தில்தெரிவித்திருக்கும் நித்தி,அவ்வாறு சொன்னவாறே  தனது கருத்தையும் முன்னின்று செயல்படுத்தியுமிருக்கிறார்.

அதற்கு அவர் தான் ஸ்தாபித்த பாரதி பள்ளி ஊடாக நடத்திவரும் நாடக விழாக்கள் மட்டுமன்றி, எழுதிய சிறுவர் நாடக நூல்களும் சான்றாதாரமாக விளங்குகின்றன.

அத்துடன்,  பாப்பா பாரதி என்ற மூன்று பாகங்களில் வெளிவந்திருக்கும் இறுவட்டு மாவை நித்தியின் அயராத பணிகளுக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு,

தனது 75 வருடகால வாழ்க்கையில்  மாவை நித்தி தமிழ், கலை, இலக்கியத்திற்காகவும் சமூகம் சார்ந்தும் மேற்கொண்ட பணிகள் முன்னுதாரணமானவை.

மாவை நித்தியானந்தனை அவரது பவளவிழாக் காலத்தில் மனம் திறந்து வாழ்த்துகின்றோம்.

( நன்றி: நித்தியம் சிறப்பு மலர் )

——0——–

letchumananm@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: