நாவல் அறிமுகம் : முத்துப்பாடி சனங்களின் கதை.

நோயல் நடேசன்

போல்வார் மஹமது குன்ஹி  கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது

நாவல், இந்தியா- பாக்கிஸ்தான்  பிரிவினை காலத்தில்  நடந்த இந்து – முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி,   ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப்  பயணிக்கிறது.

பிரிவினை நடந்தபோது லாகூரில் இருபது வயதான முஸ்லீம் இளைஞன் சாந்த் அலி  வேலை செய்யும் இடத்தில், இரண்டு பஞ்சாபி இளம் பெண்களைப் பாதுகாத்து,  அவர்களை  டில்லிக்கு அழைத்துவந்து  விட்டு விட்டு,  மீண்டும் லாகூர் திரும்ப எண்ணுகிறான். லாகூரில் அவன் தனது  சித்தப்பா வீட்டில் எப்படியும் ஒரு அறை தனக்காக இருக்கும் என்ற எண்ணத்தில்,  மற்றைய இந்து அகதிகளோடு லொறியில் ஏறுகிறான்.  அந்த இரு பெண்களுடன் ரயில்வே நிலையத்தை அடைந்தபோது அவர்களைப் பிரிந்து விடுகிறான். 

அப்பொழுது அவர்களது நகையும் பணமும் இவனிடம் இருந்தது.  டில்லியில் சிறிது காலம் ஒரு  பாவாவுடன்   பள்ளிவாசலோரங்களில்  அலையும் போது,   பிர்லா மாளிகையில் உள்ள ஒருவர்,     உன்னை இந்தியாவிலிருந்து மீண்டும் லாகூருக்கு அனுப்பும் வல்லமை கொண்டவர் எனக் கூறியதால்  அவன் அங்கு செல்கிறான். அங்கு சென்ற நேரத்தில் மகாத்மா காந்தி சுடப்படுவதைக் காண்கிறான். அதன்பின் பாவாவுடன்  அவரது தந்தை வசிக்கும் கர்நாடகக் கிராமமான முத்துப்பாடியில் வந்து,  பாவாவின்   தந்தையோடு தங்கிக் கொள்கிறான். இறுதியில் தந்தை இறக்கும்போது   மகனாகவும்   முத்துப்பாடியில் வசிக்கத் தொடங்கிகுறான்.

இருபது வயதிலிருந்து,  ஐம்பது வருடங்களாக லாகூருக்குத் திரும்பிப்  போகவேண்டுமென்ற  அவனது மன அலைக்கழிப்பிலேயே  கதை 1150 பக்கங்கள் நகர்கிறது.  ரயில் பயணத்தில்,   இடையிடையே  ரயில்வே நிலையங்கள் வருவதுபோல் இந்திய அரசியல்,  கர்நாடக அரசியல் அத்துடன்  இந்து- முஸ்லீம் கலவரங்கள்,  பாபர் மசூதி தாக்குதல் எல்லாவற்றிலும் நாம் இறங்கி ஆசுவாசமாக  ஏறமுடிகிறது .

சமீபத்தில் மொழி பெயர்ப்பு நாவலாக இவ்வளவு பெரிதான ஒரு படைப்பை வாசித்து முடித்தது எனக்குச் சாதனையே.

பிரான்சிய நாவலான மேடம் பவாரியை  ஆங்கிலத்தில் வாசித்தபோது,  அங்கு பிரான்சிய மொழி  கவித்துவமாக இருந்தது. இங்கு கவித்துவம் இல்லை.  காட்சி மொழியே  இருந்தது.  தமிழில் இறையடியானின் அழகான மொழி பெயர்ப்பு , என்னையும்  முத்துப்பாடி கிராமத்தில் ஒருவனாக   (Evocation ) நினைக்க வைத்ததது

ஆங்கில நாவல்கள் மாதிரி  இந்த நாவலின் ஆரம்பம்,  முரண்பாடாகத் தொடர்ந்து,  ஐம்பது பக்கங்கள் செல்வதால்,  நமது கண்களை நாவலில் பசைகொண்டு கொண்டு  ஓட்ட வைக்க நேர்கிறது.

முத்துப்பாடி சனங்களின் கதை – இந்த  நாவலில்  கதைகள்,  மரம் , கிளை,  இலை என ( Fractal Pattern) தொடர்வதுபோல்,   மூன்று சந்ததிகள் தொடர்கிறது. ஒரு விதத்தில் மகாபாரத இதிகாசத்தின் அமைப்பையே கொண்டுள்ளது.

ஒவ்வொரு கிளைக் கதையிலும் ஆரம்பம் அதன் பின்பு முரண்பாடுகள் வைக்கப்பட்டு  அவை பல பக்கங்களை கடக்கிறது

பெரும்பாலான  இஸ்லாமிய குடும்பங்களில்,  ஆண் ஆதிக்க சமூகம் திருக்குர் – ஆனைக் கைத்தடியாக வைத்து  பெண்களை நோக்கி வீசும்போது,  அந்தப் பெண்களது சவால்கள் கிளைகளாக , இலைகளாக நெடிது  வளர்ந்து  சித்திரை மாத  வேப்ப மரமாகத் தெரிகிறது. ஆண்கள்,  குர் – ஆனுக்கும் தங்கள் மனசாட்சிக்கும் இடையில் தடுமாறும் வேளையில்,  பல பெண்கள் கதையில் ஒளி உமிழும் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்.

உதாரணங்கள் :

  1. உன்னிஷாவுக்கு ஆறு வருடங்களாகப் பிள்ளை வரத்தை  அவள் வணங்கும் அல்லா கொடுக்கவில்லை.   ஆனால்,  அவளுக்குச் சக்களத்தி வருவது விருப்பமில்லை.

  ‘  குர் – ஆனில் அது ஏற்கப்பட்டிருக்கிறது.  பாவமில்லை . நான்கு  அல்லது ஆறு திருமணங்கள்  ஏற்கப்பட்டிருக்கிறது. ’

அப்போது உன்னிஷாவுக்கு  சைத்தான் பிடிக்கிறது.  

 ‘ உங்களுக்குத் தெரியாது மாஸ்டரே,  எங்கள் சாதி சைத்தான் இருக்கிறதல்லவா  அதுக்கு ரொம்ப பவர். ‘ 

அதற்கு மாஸ்டர்,  ‘ நீங்கள் கோவூரைக் கேள்விப்பட்டதுண்டா – அவர் சிங்களக்காரர்   இதுபற்றி பல விடயங்கள் எழுதியுள்ளார்.   விருப்பமென்றால் அவருக்கு எழுதுகிறேன்  ‘

2)  ரோஷன் அலி  அப்பா ,  போட்டோவை பேப்பரில் பிரிண்ட் போட்டதற்காக மம்மது குஞ்சுவை ஜமாத்திலிருந்து தள்ளி வெச்சிட்டார்கள் ‘

3) திருமண வீட்டில் மணமகனின் சித்தப்பாவை,  மணமக்களின் பக்கத்தார்கள் அடித்து விட்டார்கள்.  சித்தப்பா உடனே மணமகளுக்கு  தலாக் சொல்லும்படி ஒற்றைக்காலில் நிற்க,   காதலித்த மணமகளுக்கு தலாக்கு சொல்கிறான் மணமகன்.  அவர்களது தலாக் பல காலத்தின் பின் பலரது தலையீட்டால் முடிவுக்கு வருகிறது.

நான் ரசித்த பல வசனங்கள் ,  அவை வசனங்களாக மட்டுமல்லாமல்  கதையையும் காட்சிப்படுத்துகிறது.   நான் புத்தகத்தில் குறிப்பு வைத்து வாசித்த முதல் நாவலிது.

சுகமான செய்தி முட்டை இட்டிருந்தது.

கடவுளுக்கு காத்திருக்கும் இன்பம் கிடைத்ததும் இருப்பதில்லை.

இலைகளின் முந்தானையிலிருந்து பிறைச்சந்திரன் எட்டிப்பார்த்தான்.

நாவலில் கதை யதார்த்தமாகச் சொல்லப்பட்ட போதும் பாத்திரங்களின் மனவோடையில் எண்ணங்கள் முன்னும் பின்னுமாக நவீன நாவலாக நகருகிறது.

மதநம்பிக்கையுள்ள முதல் சந்ததியினர் வெளிநாடு சென்று வளர்ந்து மற்றைய மதத்தினரை திருமணம் செய்து,  மீண்டும் ஊர் வரும்போது ஊரில் என்ன பேசப்படும் என்பதே நாவலின்  இறுதியில் முரணாகிறது . அந்த அகமுரண்பாட்டில்  பாசம், மதக் கட்டுப்பாட்டைத் தோற்கடிக்கிறது.  

இந்த நாவலில் இன்னுமொரு பகுதியாக அவதானிக்க முடிவது : சிறிய கிராமம் பெரிதாக வளர்ந்து நகரமாவதும் கிராமத்திலுள்ளவர்கள் முக்கியமாக ஆரம்பத்தில் படிப்பதற்கு மறுத்த சமூகம்,  பின்பு படித்து மற்றைய இந்து சமூகத்துடன் சேர்ந்து வேலைசெய்வது மட்டுமல்ல வெளிநாடுகளுக்குச் செல்வதும் எனப் படிமமாக வளர்கிறது.

ஆரம்பத்தில் திறந்துவிடப்பட்ட குருவி மீண்டும்  50 வருடங்கள் பின்பாக கிட்டத்தட்ட அதே இடத்தில் மீண்டும் கூட்டுக்குள் செல்வதான உணர்வு இறுதிப்பக்கங்களை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்டது

எங்கு இந்து – முஸ்லீம் கலவரம் நடந்தாலும் அது முத்துப்பாடியில்நடக்கக்கூடாது என்ற வைராக்கியத்தில் இரு சமூகத்தினரும் செயல்படுவது முக்கிய விடயமாக  சொல்லப்படுகிறது. இந்துக்களாக வரும் பாத்திரங்கள் கண்ணியமாகத் தெரிகிறார்கள் -ஆசிரியர்கள்  வைத்தியர்கள் முத்துப்பாடியில் இந்துக்களாகவும் காட்டப்படுகிறார்கள்.

அரசியலில் காங்கிரஸ் சார்பான நிலை எடுத்து,  ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் அரசியலில் எதிர்வெளிச்சததில் காட்டப்பட்டபோதும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் முஸ்லீம்களின் நண்பர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

இந்த நாவல் சாமானியர்களின் கதை. அவர்களது அன்றாட வாழ்வையும்  அதற்கான போராட்டங்களையும் பேசிக் கொண்டு இயல்பான சமூக நல்லிணக்கம் நடப்பதாக  நகர்கிறது  .

கோவூர் சிங்களவரல்ல  இலங்கையில் வாழ்ந்த மலையாளி என்பதை குறிப்பிடுகிறேன்

சிறந்த  நாவல்.  சிறந்த மொழிபெயர்ப்பு.

நன்றி – திண்ணை .கொம்

—0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: