வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

நடேசன்

தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை   நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன்  தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு.  பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால்,  இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது  பாவைக்கூத்து அழிந்து வருகிறது.

 இந்தப்பாவைக் கூத்துக் கலை,  குடும்பங்களின்   பாரம்பரியமாக,  தலைமுறை தலைமுறையாக  கடத்தப்பட்டு வந்தது.  அப்படியான கலைக்குடும்பத்து  இளைஞர்கள் நகரை நோக்கி  கல்விக்காகவும் மற்றைய வேலைகளுக்காகவும் இடம்பெயர்வதால்  இந்தக் கலைஞர்கள் அற்று  அழிந்துவிடுகிறது. கிராம விவசாயப் பொருளாதாரத்தின்  பகுதியான பல கிராமியக் கலைகள்  நகரமயமாக்கத்தால்    நலிந்து வருகின்றன.  ஆனாலும் ஆங்காங்கு சில தனியார்களும் தொண்டு நிறுவனங்களும்   இக்கலை வடிவத்தைப் பாதுகாக்க முயற்சிகள் எடுப்பதாக அறிந்தேன்.

நான் வியட்நாமில் பார்த்தது நீர் பாவைக்கூத்து( Water puppetry). இது வட வியட்நாமில்  நெல் விவசாயத்தை ஒட்டி உருவாகிய கிராமியக்கலை   இதனது தொடக்கம்  நெல் வயல் பிரதேசங்கள் நிறைந்த ரெட் (Red River) ஆற்றை அண்டிய பகுதி.

மழை பெய்து வயல்கள் நீரில் நிறைந்தபோது,  விவசாய மக்கள் வேறு  எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாதபோது,   அக்காலத்தில் அவர்களின்  மனமகிழ்விற்காக உருவாகிய கலை வடிவமாகும்.   11 ஆம் நூற்றாண்டுகளில் மரப்பாவைகளையும் மூங்கில் கழிகளையும் வைத்துத்   தொடங்கிய கலை வடிவம், தற்பொழுது வியட்நாமிற்கு தனித்தன்மையாக உள்ளது.

கலை வடிவங்கள் கலாசாரத்தின் பகுதியாக  இருந்தாலும்,  சமூகத்தின் பொருளாதார மையத்தை வைத்தே வண்டிச் சக்கரமாக  ஓடுகிறது . பொருளாதாரக் கட்டுமானங்கள் விவசாயத்திலிருந்து,  தொழில்துறைக்கு   மாறும்போது கலாச்சாரம் மாறுகிறது. அதைத் தொடர்ந்து கலை வடிவங்களும் மாறுகிறது.

நீர்ப்பாவைக்கூத்து கலையைப் பாவித்து  கலைஞர்கள் விவசாயம் தழுவிய  கிராமியக் கதைகள் மற்றும் நீதிக் கதைகளைச் சொல்லுவார்கள் . நீர் நிரம்பிய வயல்களில்,  மூங்கில் கழிகளில் பாவைகளை வைத்து அசைத்துக் கதை சொல்லுவார்கள்.  கதை சொல்வதற்கு இரு கைகளையும் பாவித்து வயல்களில் முழங்காலளவு நீரில் சில மணிநேரம்  நிற்கவேண்டும் . சிறந்த கலைஞராகத் தேர்ச்சி அடைந்து வருவதற்கு வருடங்கள் ஆகும்.

முதல் முறை நான் வியட்நாம் சென்றபோது இதை ஒரு பெரிய  மூடிய அரங்கத்தில் குளம் மாதிரி அமைத்த அழகான அரங்கில்  அவர்கள் நடத்தியதைப் பார்த்தேன்.  பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது.  ஆனால்,  ஒரு திரைப்பட அரங்கத்திலிருந்துவிட்டு எழுந்தது போன்ற உணர்வு இருந்தது.  எப்படி நீர்ப்பாவைக்கூத்து நடத்தினார்கள்?  அதனது தோற்றம் , பின்னணி  என்பன புரியவில்லை.

இம்முறை  சென்றபோது,  நான்கு தலைமுறைகளாக இந்த கலையைச் செய்பவரும்,  தற்போது வியட்னாமிய அரசால் விசேட கலைஞராக           ( நமது அரசவைக்குக் கலைஞர்போல்) அங்கீகரிக்கப்பட்ட ஒருவரது வீட்டிற்குப் போக முடிந்தது.  அவரும் மனைவியும்  விசேடமாக ஒரு மணி நேரம் நீர்ப்பாவைக் கூத்தை எங்களுக்காகச் செய்தார்கள்.

நகரத்தருகே அவரது வீடு மிகவும் நெருக்கமான குடியிருப்பிலிருந்தது.   வீட்டில் நான்கு தளங்கள்.   கீழே சமையலறை.  முதலாவது தளத்தில் அவர்களது மரப்பாவைகள்  செய்யும் இடம்,  இரண்டாவது தளம் அவர்கள் குடும்பமாகத் தங்கும்  பகுதி.   இறுதியான நான்காவது தளத்தில் ஒரு சிறிய குளத்துடன் இந்த பாவைக் கூத்தைக் காட்டும் அரங்கமிருந்தது .

தற்பொழுது புதிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவாறு   அங்கு வரும்  உல்லாசப் பயணிகளுக்கு இந்த நீர் பாவைக்கூத்தை காண்பிக்கும் வேலையை   செய்வதாகவும்  அவர் கூறினார். இந்தக் கலையில் அவர்  மூன்றாவது தலைமுறையாக தொடருகிறார். அத்துடன்  இக்கலை அழிந்து போகாதிருக்க புதிய கலைஞர்களை உருவாக்குவதாகவும்  எங்களிடம் கூறினார்

நாங்கள் அங்கே அமர்ந்ததும்,  நீர்ப்பாவைக் கூத்தின் மூலம் உழவு,  கதிர் நடுதல்,  அறுவடை  என்பவற்றையும் காண்பித்து, மிருகங்களைப் பாவித்து ஒரு கிராம அமைப்பில் பல  கதைகளைக்  கூறியதுடன்,   தற்காலத்து  வீதி விபத்துகள், போதை வஸ்து மற்றும்  குற்றச் செயல்கள் என நகரத்தின் கதைகளையும் கூறினார் .

மேடையின் மறைவிலிருந்து தண்ணீர் மீது  பாவைகளை அசையவைத்து இசைக்கேற்றவாறு  கிட்டத்தட்ட  ஒரு மணி நேரம் அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.  இந்த நிகழ்வு நமது பாவைக்கூத்துபோல்  இருந்தது.  ஆனால், இங்கே  தண்ணீரின் மீது கதைகள் சொல்லப்பட்டது . ஒரு மணிநேரத்தின் பின்பு அவரும் மனைவியும் வெளியே வந்து மேலும் பல விடயங்களை எமக்குச் சொன்னார்கள்.

  தற்பொழுது மூங்கில்களுக்குப் பதிலாக மரங்களில் வைத்து பாவைகளைப் பொருத்தியுள்ளதாகக் காட்டினார்கள்.    வயல்களுக்குப் பதிலாகச் சிறிய நீச்சல் குளம்  அமைத்து மறைவிலிருந்து அசைப்பதாக அவரது பாவைகளை கட்டினார்கள் . அத்துடன் எவ்வாறு  மரத்தில் பாரமற்ற பாவைகளைச்  செய்வது என்பதையும்   காட்டினார்கள் . பெரும்பாலான மரப்பாவைகளில் நடுப்பகுதி கோறையாக இருந்தது . வெளிப்பகுதியில் களிம்பு (lacquered ) பூசி இருந்தார்கள்

அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடைகளில் நடத்தும்போது,  எட்டுக் கலைஞர்கள்வரை பல விதமான சங்கீத உபகரணங்களோடு பாட்டிசைத்து நாடகமாக நடத்துவார்கள்.  இடைக்கிடையே நகைச்சுவைக்  கலைஞர்கள் வந்து மேலும் இதைச் சுவையூட்டுவார்கள்.  இந்த நீர்ப்பாவைக் கூத்தில் சாதாரண கதைகளுக்கப்பால் அவர்களது புராதன இலக்கிய கதை வடிவங்களையும் கொண்டுவருவார்கள் .

வியட்நாமியர்களின் பிரதான உழைப்பான நெல் விவசாயத்தில் ஈடுபடும்  விவசாயிகளுடன் பின்னிப்பிணைந்ததே இந்த  நீர் பாவைக்கூத்து கலை வடிவம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்கள் எமக்கு  தேநீர் தந்து உபசரித்தும்  வழியனுப்பினார்கள். வழக்கமாக நகரங்களை மட்டும் பார்த்துவிட்டு வரும் பயணங்களே  முன்பிருந்தது.  ஆனால், இம்முறை வியட்நாம் பயணத்தில்  ஒரு கிராமியக்கலையை புரிந்து கொண்டேன் என்ற தன்னிறைவுடன் வெளியே வந்தேன்.  

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: