தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

நடேசன்

இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை.  இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்.

2009 ஆண்டிலே   எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது.  அவர்  மெல்பனில்  நண்பர் முருகபூபதியின் வீட்டில் தங்கியிருந்தார்.

அங்குதான்  அவரை முதல் முதலில்  சந்தித்தேன். அவர் மெல்பன் வருவதற்கு முதல்நாள்  இரவு ஜெயமோகனும் அவரது மனைவி அருண்மொழியும் மெல்பனுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களும் முருகபூபதியின் வீட்டில் நின்றனர்.

எமது சந்திப்பு அங்கு நடந்தது.  அந்த முதல் சந்திப்பிலேயே தெளிவத்தையின் இதமான பேச்சும் சிரிப்பும் என்னைக் கவர்ந்துவிட்டது.

 அன்று முதல் அவர் எனது மனதில் நிலைத்துவிட்டார். அந்த சந்திப்பிற்குப்பின்னர்,  நான் இலங்கை சென்றபோது அவரது ஊரான வத்தளையில் அவரைத்  தேடிப்போனேன். அவரது வீட்டைத் தேடி   வாகனத்தில் அலைந்தபோது  அந்த ஊரை  முடிந்தவரையில்  என்னால்  சுற்றிப் பார்க்க முடிந்தது .

அங்கு  கண்ட  காட்சிகள்,  பஸ் நிலையம்,  ஓடும்   கால்வாய் என்பன எனது கானல் தேசம் நாவலில் வருகிறது.  அந்த நிலக்காட்சிகளை எனக்களித்ததற்காக அவருக்கு நான் நன்றி கூறவேண்டும்.

 அவருக்கு  இதயத்தில் சத்திர சிகிச்சை  நடந்த பின்னரும்  அவரைப் பார்க்கச்சென்றேன் . 

கிழக்கு மாகாண நண்பர்கள் அவரோடு சேர்த்து எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் விருதளித்தார்கள். அவரோடு  நானும்  விருது பெற்றது   எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

தெளிவத்தை ஜோசப்  சந்தோசமாக உரையாடக்கூடிய மனிதர். பல எழுத்தாளர்களைப் போல் மற்றவர்களைப்பற்றி குறை கூறாதவர்.    தொடர்ந்து தான் மட்டும் பேசாமல்  மற்றவர்களின் கருத்துகளையும்  செவிமடுப்பார்.

அதன்பிறகு அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது ஜெயமோகனிடம் பேசினேன்.  அப்பொழுது  அவர்,   “தெளிவத்தை  இலங்கை மலையக  மக்களுக்கு ஒரு குலப்பாடகர் . அக்காலத்துப் பாணர்கள் போன்றவர் ”   எனச் சொன்னார்.

அப்பொழுது எனக்கு  ஜெயமோகனின் அந்தக்கருத்து  உறைத்தது. ஒரு சமூகத்தின் துன்பங்களைப் பாடுபவன் எவ்வளவு முக்கியமானவன். அதேபோல் அந்த சமூகத்தின் தவறுகளை விமர்சிப்பவனும் முக்கியமானவன் என்று என்னை ஆற்றுப்படுத்திக்கொண்டேன்.

கடைசியாக தெளிவத்தைய  சந்தித்தபோது எனக்கு சில புத்தகங்களைத் தந்தார்.  “  அவை  இலங்கையில் பேசப்படாதவை படியுங்கள்.  “  எனக்கூறினார்.  அவற்றில்  ஒன்று உதயனின் UP 83 (உத்தரப்பிதேசம்)  .  மற்றையது . சங்கிலியன் தரை – மு பொ.  வின் நாவல். 

அன்று அவருடன் சில  மணி நேரம் பேசிவிட்டு எனது பையிலிருந்த விட்டமின்  மாத்திரை குப்பியை அவரிடம் கொடுத்து விட்டேன் . அவர் கூறியவாறே  அந்த இரண்டு புத்தகங்களையும் படித்து , அவற்றை அறிமுகப்படுத்தினேன்.

நான் நினைக்கிறேன்,  அவற்றைப்பற்றி எழுதிய முதலாவது நபர் நானாகத்தான் இருப்பேன். அவை இரண்டும் சமகாலத்தில் இலங்கையில்  நீடித்த  போரைப்பற்றி  வெளிவந்த முக்கிய நாவல்கள்.  இலங்கையில் பிரசுரித்ததால்  தென்னிந்திய தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. வழக்கம்போல் இங்கையில் பேசப்படவில்லை.    

அவரோடு எனக்கிருந்த  தொடர்பை  இங்கு நான் எழுதுவது அவரது மரணத்திற்கான  இரங்கலுரையல்ல. அவரது வயதில் இறப்பது கொடையாகும்.  அதுவும் நீடித்த யுத்தம்,  கொரோனோ பெருந்தொற்று  என்பன சமூகத்தை வாட்டிய நாட்டில்  பிறந்தவர்கள் இறப்பது விதியே.  தனது சமூகம், குடும்பம் எனத் தனது  கடமைகளை முடித்தது மட்டுமல்லாது நமக்கெல்லாம்  முன்னுதாரணமாக எப்படி வாழ்வது எனவும்  வாழ்ந்து காட்டிவிட்டு  போய்விட்டார்.

அவரது வாழ்வு – புகழ் பல சந்ததிக்கும்  நிலைத்திருக்கும்.   ஆனால்,  நான் விரும்புவது  இதுதான். அவரை மலையக எழுத்தாளர் என்ற  சிமிழுக்குள் மாத்திரம் அடைக்காமல்,  தமிழ் எழுத்தாளர் என்ற திறந்தவெளியில்  நாம் அவரை  நினைவு கூறவேண்டும்.

எப்படி..?

அவருக்குப்பின்னர் வந்த  அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான எம் போன்றவர்கள்  அவரை,  அவரது குணத்தாலும் எழுத்தாலும்  நினைவு கூரவேண்டும். அவரது எழுத்தைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். 

 இந்த விடயத்தில் அவரை அடையாளம் கண்டு ஜெயமோகன்  விஷ்ணுபுரம் விருது கொடுத்துப் பாராட்டியதும்,  எழுத்தாளர் முருகபூபதியின் ஏற்பாட்டில்  அவரை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அழைத்து கவுரவித்ததும்  முக்கியமானது.  அந்த விதத்தில் மற்றையவர்கள் போலல்லாது ஏற்கனவே இனங்காணப்பட்டு,  இறப்பதற்கு  முன்பாக கவுரவிக்கப்பட்ட எழுத்தாளர்தான் அவர்  என்பதும் நிறைவானதாகும். 

அவரது இடம் நிரப்பப்படவேண்டும்.  எழுத்தால் மட்டுமல்ல,  குணத்தாலும்.

கீழே உள்ளது அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அவரது கதையொன்றைப்பற்றி எழுதியது.

தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்” மீது ஒரு மறுமொழி

  1. தெளிவத்தை ஜோசெப்பு அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவரை ஒருபோதும் எனக்குக்காண நேர்ந்ததில்லை. அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்ததையும் உங்கள் பதிவின் மூலமே அறிகிறேன். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, அவர் அறியாமல் என்னால் முடிந்த அளவில் நிதியுதவி செய்ய முடிந்ததில் இப்போது திருப்தியடைகிறேன். நான் விரும்பியும் காணமுடியாமல்போன ஒரு எளிய மனிதர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: