முதுகன்னியின் இராமன்- நடேசன்.

நடேசன்.

திருவாளர் மகாலிங்கத்தின் உடல் அந்த இறுதிச்சடங்கு  மண்டபத்தின் முன்பகுதியில் வெள்ளை நிற சவப்பெட்டியில்,   இடுப்பளவு உயரத்தில் மேசைபோன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த பிறகும் மகாலிங்கத்தின் முகம் சிரித்தபடியே தெரிகிறது. கறுத்த பிரேம் போட்ட மூக்குக்  கண்ணாடி முகத்திற்கு  மேலும் அழகையூட்டியது. எந்தக் கவலையுமில்லாது வாழ்ந்த மனிதன்,  இறுதியில் இந்த உலகத்திற்கு சந்தோசமாக விடைகொடுத்துச்  சென்றது போன்ற தோற்றத்தைக் காண்பித்தது. கொடுத்து வைத்த சாவு எனலாம்.

பெட்டியின் இடது பக்கத்தில் தரையில்  விரிக்கப்பட்டிருந்த சிவப்பு ஜமுக்காளத்தில்  மூவர்  அமர்ந்திருந்தனர். அவர்களில் இருவர் வெள்ளை வேட்டி,  சட்டை அணிந்து  சிவபுராணம் படித்தனர்.  மூன்றாவது நபர் படிப்பவர்களின்  வாயைப்  பார்த்தபடியிருந்தார்.  அவர்கள் முன்பாக  பலவிதமான பழங்கள்,  விபூதி, குங்குமம்,  சந்தனம்  தட்டுகளிலிருந்தன.  அத்துடன் ஊதுவத்திகளும்  புகைந்து,  இறுதி நிகழ்வின்  மணத்தைத்  அங்கு வந்தவர்களுக்குக் கொடுத்தன.

கிட்டதட்ட  நூறு பேர் அங்குள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.  வெள்ளிக்கிழமை,   வேலை நாள் என்பதால்,  அந்த மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் குறைவெனவே சொல்லவேண்டும். பெரும்பாலானவர்கள் தலை நரைத்தவர்கள் . அல்லது இனித் தலைச் சாயம் பூசத்தேவையில்லை என  கருதியவர்கள். இடைவெளி விட்டு  நெருக்கமற்று எல்லோரும் உட்கார இடமிருந்தது. கொரோனோ  காலமானதால் பலர் முகக் கவசம் அணிந்திருந்தார்கள்.

வலது பக்கத்தில்  பூதவுடலுக்கு  எதிரில்  வசந்தி,  இறந்தவரது சகோதரியின் அருகிலிருந்தார். அந்த நீளமான ஆசனத்தில் அவர்கள்  இருவரைத் தவிர வேறு எவருமில்லை. மற்றைய உறவினர்கள் வலது பக்க  நீண்ட ஆசனத்தில்   இருந்தனர். மற்றையவர்கள் இரண்டு பக்கத்திலும் கலந்து இருந்தனர். நடுவே மண்டபத்தின் பாதை இருந்தது.

அறுபத்தொரு வயதில் இறந்தவருக்குக் குழந்தைகளில்லை

எப்படி இருக்கும்?

நாற்பது வயதிற்குப் பின்பாக  மணம் முடித்த முதுகன்னியின்  திருமணம். அதையிட்டு எவரும் கவலைப்படவில்லை.

ஆனால்,  வசந்தியின் மனதில் ஏதாவது நினைவுகள் இல்லாது இருக்குமா?  மன ஓட்டம் எப்படி இருக்கும்?

நாம் அதில் சஞ்சரிப்போம்.

திருமணமானபோது, அன்றுவரையும் எந்த ஆணையும் உடல்ரீதியாக நெருங்காத  வசந்திக்கு சட்டப்படி பதிவுசெய்து இந்து முறைப்படி  கோவிலில் மாலை மாற்றி,  தாலி கட்டி , மேளம் நாதஸ்வரம் முழங்கத்  திருமணம் நடந்தது.  ஆரவாரங்கள்,  வாழ்த்துகள்,  உணவு பரிமாறல் எல்லாம் முடிந்து  வீடு வந்த போதே வசந்திக்குப் பயம் தொடங்கிவிட்டது. இன்றும் அது நினைவிருக்கிறது. அவளால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

நாற்பது வயதிற்குப் பின்னர்  திருமணம் முடித்த ஆண் எப்படியிருப்பான்?  கட்டிவைத்த முரட்டுக்காளையாக அவன்  தேக்கி வைத்த காமமும்  முரட்டுத்தனமாக இருக்குமா?  எல்லை மீறிப் பாயுமோ ? என்னால் தாங்க முடியுமா?

இதுவரை காலமும் வெளிநாட்டில் வாழ்ந்தவன்.   எப்படியாக வாழ்ந்தானோ!  அமெரிக்கா – இங்கிலாந்து என்று வெள்ளைக்காரிகள்,  ஆபிரிக்காகாரிகள் , சீனாக்காரிகள் என ஏதாவது பழக்கமிருக்குமா?

முகத்தைப் பார்த்தால் அப்பாவியாகத் தெரிகிறது. முகத்தில் என்ன தெரியும்? அப்படியிருக்காது. தலையில்  முன்மொட்டையானவர்கள் காமம் அதிகமானவர்கள் என அம்மா சொல்லுவார்!

சாதுக்களாக தெரிபவர்களை நம்பமுடியுமா? வெளியால் இப்படி இருப்பவர்கள் உள்ளே கள்ளராக இருக்கலாம்.  யார் கண்டது? சமீபத்தில் ஒருவன் மணம் முடித்த பெண்ணை,  நீலப் படத்து நாயகிபோல், அப்படி இப்படி  நடக்கச் சொன்னதாகவும் பின்பு அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் பேசினார்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!

நான் ஏன் புற்றில் கைவிட்டு பரீட்சிக்க வேண்டும் ? இந்த வயதில் இது தேவையா?

கோவிலிலிருந்து வீடு வரும்போது அதே யோசனையாக இருந்தது. நாற்பது வயதின் பின் திருமணம் தேவையில்லை எனப்  பேசாமல் அப்படியே இருந்துவிடலாம் என்றிருந்த என்னை சகோதரிகள்  விட்டார்களா? அவர்களுக்குக் குற்ற உணர்வு  தாங்கள் குழந்தை குட்டியோடு இருக்க அக்கா மட்டும் தனியாக இருப்பதா? அதுவும் அம்மா,  நான் இறந்தால் என்ன செய்வாய் எனப் பல தடவை கேட்டு  இந்த திருமணத்தை நடத்தினார்.

மிகவும் எளிமையான திருமணம் கோவிலில் நடந்தது. உறவினர்கள் என ஐம்பது பேர் . அந்தவகையில் திருப்தியாக இருந்தது.

அன்று இரவு பத்து மணிவரையும் உடுத்த கூறை சேலையை அவிழ்க்கவில்லை. மனதில் இருள் சூழ்ந்திருந்தது .   வீட்டுக்கு வந்தவர்கள் போனபின்பு இருட்டான அறைக்குள் லைட் போடாது தயங்கியபடி தடவித் தடவிப் பார்த்து புதிய  நைட் கவுனை போட்டுக்கொண்டேன். ஆனால்,  மகாலிங்கம் அதுதான் அவர் பெயர் தனது பட்டு வேட்டியைக் கழற்றவில்லை.

அம்மா,   “ தம்பி நீங்கள் போய் உடுப்பு மாத்துக்கோ.  பத்து மணியாகிவிட்டது.  தங்கச்சி அவருக்கு ஏதாவது உடுப்பு கொடு  “  என்றபோது தயக்கத்துடன் முகத்தைக் கீழ் நோக்கியபடி அவரிடம் புதிய வேட்டியைக் கொடுத்துவிட்டு கால்கள் பரதம் பயில வெளியே வந்தேன்

அறைக்குள் சென்று மீண்டும் வந்த பின்னர் பார்த்தபோது, அவர் இப்பொழுது கறுப்புக்கரை நாலு முழம் பருத்தி வேட்டி உடுத்திருந்தார்

புது மணத்தம்பதிகளாக பால் பழம் தரும் சடங்கு எங்களுக்கு நடக்கவில்லை. முதலிரவுக்கு அலங்காரம் செய்ய எவருமில்லை. நாற்பது  வயதானவர்கள் என்றதால் எவரும் முன்வரவில்லை.  உறவினர்களது அலட்சியம்  அம்மாவிடமும் தொற்றிக்கொண்டது. மருத்துவத்தாதி வேலை பதினைந்து வருடங்களாக இலங்கை,   இங்கிலாந்து, அவுஸ்திரேலியா எனப் பல வைத்தியசாலைகளில் வேலை செய்பவள்  என்பதால் இவளுக்கு எல்லாம் தெரியும் என்ற அலட்சியமாகவும் இருக்கலாம்.  அது அவரகள் நினைப்பு.  என்னைப் பொறுத்தவரை உடலுறுப்புகளின் தன்மை,  அவற்றின்  செயல்பாடுகளைத் தெரிந்த அறிவு எனக்குக் கை கொடுக்கவில்லை.  வெட்கம் வந்து பூட்டிய கதவாகத் திறக்க மறுத்தது.  இளம் பெண்ணில்லாத போதிலும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் பொங்கி வழியும் முதுகன்னி நான்.

இன்று இரவு  எப்படியும் இருவரும் ஒன்றாகப் படுக்கவேண்டும். ஏற்கனவே புதிதாக இரட்டைக் கட்டில் வந்துள்ளது. அறை அலங்கரிக்கப்படாத போதிலும் புதிதாகப் படுக்கை விரிப்புகள் பூப்போட்ட உறைகள் போட்ட  தலையணைகளாக இருந்தது. பூக்கள் இல்லாதபோதிலும் சுகந்த மணம் அறையிலும் அடுத்திருந்த சுத்தப்படுத்திய  குளியலறையிலிருந்தும் வந்தது.

அம்மா இரவு பத்துமணியளவில்  அவரை விட்டு,  தனது அறைக்கு படுக்கச் சென்றதும் கதவருகே வந்து நின்றவரிடம்  ‘படுங்கோ’  என்றதும் வேட்டியைத் தனது கறுத்த தோல்ப்பட்டியால் இறுக்கமாக வயிற்றில்  கட்டிவிட்டு சுவரோரமாமாக ஒதுங்கி பல்லிபோல் படுத்தார்

 “லைட்டை அணைக்கவா? “ என்றபோது சுருக்கமாக  “ உங்கள் விருப்பம்  “என்றார்.

என்ன இந்த மனுசன் வார்த்தைகளை  மிகவும் உலோபித்தனமாக உபயோகிக்கிறார்.  ஏனென்று தெரியவில்லை? புதிதாக ஒரு ஆணுடன் படுக்கும் முதலிரவு.  பயத்தில் மெதுவாக லைட்டை அணைத்துவிட்டு கட்டிலின் விளிம்பில் குந்தியிருந்தேன்.  இருட்டில் ஒருவர் முகத்தை  ஒருவர் பார்க்க முடியாது. பெரிய கட்டிலில் சுவரோரத்தில் அவர் படுத்திருந்ததால் எனக்கு அருகில் அவர் இல்லை என்பது சிறிய ஆறுதலாக இருந்தது.

ஏன் இவர் கதைக்கவில்லை? தன்னைப்பற்றிச் சொல்லவில்லை எனக் கேட்டுவிடுவோம்.   துணிந்து  “ நீங்கள் ஏன் பேசவில்லை  “ என்றேன்.

 “ என்னத்தை பேசுவது? இதுதான் முதல் தடவையாக நான் பெண்ணோடு ஒன்றாகப் படுப்பது  “ வார்த்தைகள் அதிகமாக வரவில்லை’

அப்பொழுது எனது நெஞ்சில் சிறுவயதில் புரைக்கேறும்போது அம்மா தடவிக் கொடுத்த உணர்வு. உடலில் புதிதாக சூடான இரத்தம் குபு குபு எனப்  பாய்ந்தது.

இவரும்  நம்மைப்போல்த்தானா? நம்பலாமா?

 “ உண்மையாகவா ? உலகமெல்லாம் சுற்றிவிட்டு  வந்தவர் நீங்கள் எனக் கேள்விப்பட்டேன்.  நம்பமுடியாது இருக்கிறதே?  “

 “ நான் ஏன் பொய் சொல்கிறேன்?  “

 “ நீங்கள் ஏன் இதுவரையும் எவரையும் திருமணம் செய்யவில்லை?  “ என அவரை நோக்கியபடி படுத்தேன். ஆனாலும் ஒரு அடி இடைவெளியை வைத்து எனது தொடைகள் இரண்டையும் இறுக்கமாக ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கொண்டு பாதங்கள்வரையும் நைட்டியை இழுத்துக் கொண்டேன்.

 “ அது ஒரு பெரிய கதை.  பல காலமாக நான் கல்யாணம் எதுவும் வேண்டாம் எனமுடிவு செய்தேன். அதற்குப் பல காரணங்கள்.  தொடர்ந்து ஒரு இடத்தில் தொழில் பார்க்கவில்லை. பல இடங்கள் திரிந்தேன்.  வியாபாரம்,  செகியூரிட்டி வேலை எனப் பல செய்தேன் ஆனால்,  பணம் சேமிக்கவில்லை.  “

 “ இது மட்டுமா?  ஆனால் குழந்தை குட்டி எனப் பலர் இப்படி இருக்கிறார்கள்.  ,’

 “ உண்மைதான் நான் ஆரம்பத்தில் நேர்சாக படிக்க இங்கிலாந்து சென்றேன். ஆறு மாதங்கள் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் என்னை படிப்பை விட்டு விலகவைத்தது. அதன்பின் என்னால் மீண்டும் படிக்க முடியும்  என நினைக்க முடியவில்லை. “

 “ அப்படி என்ன சம்பவம் ?  “

  “ கேட்டால் சிரிப்பீர்கள்.. “

 “ நான் ஏன் சிரிகிறேன் ? நானும் நேர்சுதானே? அறியும்  ஆவலில் கேட்கிறேன்.  “

  “ செய்முறைப் பயிற்சியின்போது, வைத்தியசாலையின் கட்டிலில் படுத்திருந்த மிகப் பருமனான  வெள்ளைக்கார பெண்ணின் மலவாசலை பரிசோதிக்கச் சொன்ன போது,  அந்தப் பெண்ணின் பின்பகுதியை விரல்களால் பரிசோதிக்கவும்,  அந்தப்பெண் ‘என்னை பாஸ்ரட்’ எனக்கூவி இடது காலால் உதைத்தாள். நான் நிலத்தில்  விழுந்து எழும்பியபோது,  அவளது பிரத்தியேக பகுதிக்குள் நான் விரலை வைத்ததாக அவள் எழுந்து ஆசிரியரிடம் முறையிட்டதால் நான் அந்த இடத்திலிருந்து விரட்டப்பட்டேன்.  பின்பு அவர்கள்  விசாரித்தபோது நான் முதல் முறையாகப் பெண்ணின் அந்தரங்கத்தைப் பார்த்ததாகச் சொல்லியதை அவர்கள் நம்பினார்களோ நம்பவில்லையே தெரியாது.  என்னில் எந்த விசாரணையும்  நடக்கவில்லை,  ஆனால் நான் அதன்பின்பு படிப்பைத் தொடரவில்லை.

 “ என்னால் நம்ப முடியவில்லை.  இப்படியான சாத்தியம் இருக்குமென, ஆனால்,  மிகப்பருமனான பெண்ணாக இருந்தால் எங்களுக்கே மிகவும் கஸ்டமாக இருக்கும் என்பது உண்மைதான்.  “

 “ அதன் பின்பு வேறு வைத்தியசாலையில் இரவு செகியூரிட்டியாக வேலையில் சேர்ந்தேன். அந்த வேலையும் ஆறுமாதத்தின் பின் நீடிக்கவில்லை.  “

 “ ஏன்?  “

 “ அங்கு வேலை செய்யும் பெண் நேர்சுகளுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பாக அவர்களின்  கார்கள் நிறுத்திய   இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். அதில் ஒரு பெண் நேர்ஸ் என்னைத் தொடர்ந்து  அழைப்பதும் அணைப்பதுமாக இருந்தாள். அவளது செயல்  எல்லை மீறுவதாக நினைத்து அங்கிருந்தும்  வேலையை விட்டு வெளியேறினேன். அதன்பின்பு பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்தேன்.  “

குறட்டைச்  சத்தம் மெதுவாகக் கேட்டது.

எனது அன்றைய இரவு,  என்னைத் தொடுவாரா என்ற ஏக்க நினைப்பிலேயே  கரைந்தது.

அன்றைய இரவு மட்டுமல்ல,  மற்றைய இரவுகளும் மாற்றமின்றித் தொடர்ந்தன. சில மாதங்களில் எனக்கு மாதவிடாய் ஒழுங்கற்று வந்ததுடன்,  இரவில் வியர்வை,  பகலில் உடல் சூடு என மாறிமாறி வந்தது. பாதங்களில் விறைப்பு,   முகத்தில் வெக்கை என   எனது நடத்தையில் மாற்றம் வந்தது. படுக்கையில் உடுப்பை கழற்றுவதும் போடுவதுமாக பாம்புபோல் உழன்றேன்.  வேலையிடத்தில் ஒழுங்காக வேலை செய்யமுடியாது விடுமுறை எடுத்தேன்  .  வீட்டில் அம்மாவில் சீறிவிழுந்தேன். அக்காலத்தில் என்னை முகங்கோணாது கவனித்தவர் மகாலிங்கமே.  எனது  இனப்பெருக்கத்திற்கான உடற்கடிகாரத்தின் முட்கள், சில மாதங்கள் என்னை அலைக்கழித்துவிட்டு அதன்பின்பாக   அமைதியாகிவிட்டது.

ஆண் துணையாக என்னைக் கவனிக்கவும்,  எனது சொல் தட்டாத ஒரு ஆண்மகன் எனக்குக் கிடைத்துவிட்டான் என்பதால் எங்கள் வாழ்வு மிகவும் மகிழ்வாக நேர் பாதையில் ஓடியது. அம்மாவும் அந்த நிம்மதியில் இறந்துவிட்டார் . மகாலிங்கம்  இடைக்கிடையே வேலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு நிரந்தர வேலை. வீடு வாங்கியதுடன் வார இறுதியில் கோவில்,  சத்தியசாயிபாபா பூசை, உறவினர்  என மகிழ்வாக இருந்தோம்.

எங்களது திருமணம் நடந்து பதினைந்து வருடத்தில் அவருக்குப் பாரிச வாதம்  வந்தது. மூளையில் இரத்தபோக்கு.  கிட்டத்தட்ட ஒரு மாதமளவில்  வைத்தியசாலையிலிருந்து குணமாகியபோது அவரது இடது காலும் வலது கையும் செயலிழந்தன . முற்றாக செயலிழப்பு அல்ல.  வலது கையால் எதையும் தூக்க முடியாது. அதேபோல்  இடதுகால்  பலம் குறைந்து விட்டது. நடக்கும்போது கைத்தடி வேண்டும்.

அவரைப் பராமரிக்க நான் எனது வேலையைத் துறந்தேன்.   ஏழு நாளும் அவரது நேர்சாக மாறினேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தபோதிலும் எனக்குப் பிற்காலத்தில் மகிழ்வைக் கொடுக்கும் செயலாக இருந்து.

இது வரையும் தூங்கியபடியிருந்த அவரது ஆண்மை,  நான் அவரது கால்களுக்கு மாசாஜ் செய்யும்போதும் சோப்போட்டு  குளிக்க வார்த்தபோதும் விழித்துக்கொண்டது. இதுவரை அவரிடமிருந்த தயக்கம் வெட்கம் எல்லாம் அதிகாலையில் உணவுதேடி கூவியபடி  கூட்டிலிருந்து பறக்கும் சிட்டுக் குருவியாக மாறிவிட்டது .வாழ்வின் அந்திமகாலமென நினைத்த எனக்கு அவர் பெற்ற  புத்துணர்வு வைகறையாக உடலையும் மனதையும் ஈரலிப்பில் சிலிர்க்க வைத்தது. பல இரவுகள் எங்களால் ஒருவரை ஒருவர் புணர முடிந்தது.  மற்றைய இரவுகளில் காற்றே கள்வனாக  எம்மிடையே நுழையாதபடி நெருங்கிப் படுப்போம்.  இப்பொழுது அவர் கட்டிலின்  ஓரத்தில் உறங்குவதில்லை.  என் மடியிலே உறங்கினர். பல இரவுகள் விழித்திருந்தோம்.  பகல் நேரம் கூட எங்களுக்கு எந்த தடையுமில்லை. எங்களுக்காக வாழ்ந்தோம்.

நல்ல விடயங்கள் தொடர்வதில்லை

ஐந்து வருடங்கள் பொங்கிய பாலாகிய  எங்கள் வாழ்வு  கடந்த      திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது . இரவு, அவரது உடலின் வெம்மையைத் தழுவியபடி படுத்த எனக்கு,   விழித்தபோது அவர் ஐஸ் பெட்டியிலிருந்து எடுத்த பழம்போல் குளிர்ந்திருப்பது தெரிந்தும் அவசரத்தில் எழுந்து பார்த்தேன்,  அமைதியாக மரணத்தைத் தழுவியிருந்தார்.

எனக்குக் கவலையில்லை.  மற்றவர்கள் அறுபது வருடங்கள் அடைந்த மகிழ்வை நாங்கள் ஐந்து வருடங்களில் அடைந்தோம்.

வசந்தி இறுதியில் வந்து கவலை தெரிவித்தவர்களிடம்,  வாழ்ந்த காலத்தில் நாம்  சந்தோசமாக வாழ்ந்தோம் என சொல்லியபடியிருந்தாள்.

வாழ்வின் தொடர்ச்சிக்கு  இலட்சியங்கள் இருக்க வேண்டுமென்பதற்கிணங்க ஏற்கனவே கொரோனா காலத்தில் வேலையால்  இளைப்பாறிய நார்சுகளை மீண்டும் வரமுடியுமா என்பதற்கிணங்க வேலைக்குத் தயாராகிவிட்டாள் வசந்தி.

பிள்ளை குட்டியில்லை . புருசனுமில்லை,  எப்படி சீவிக்கப்போறாள் என மற்றவர்கள் செயற்கையான சோகத்தில் தோய்த்தெடுத்த கண்களுடன் மூடிய முகக்கவசங்களுடன் வசந்தியை திரும்பிப் பார்த்தபடி சென்றனர்.

சொன்னதை விவிலியமாக கேட்டு ,   குடி- சிகரட் இல்லாத ராமனிலும் சிறந்த  மனிதனுடன் இருபது வருடங்கள் வாழ்ந்தேன் என்ற இறுமாப்புடன் அவர்களைப்  பார்த்து வசந்தி சிரித்தபடி  கரம் குவித்தாள்.  

“முதுகன்னியின் இராமன்- நடேசன்.” மீது ஒரு மறுமொழி

  1. செத்துட்டார்ன்னு கதையை சோகமா ஆரம்பிச்சு….பிறகு வெடி சிரிப்பில் தொடர்ந்து ….பிறகு இலகுவாக கதை முடிந்தது.

    முது கன்னியின் காமம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: