வியட்நாம் முத்துகள்

நோயல் நடேசன்

Pearl

வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay)  என்ற இடம்,  கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி  அழைத்துச்   சென்றபோது  ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘  என சியாமளாவிற்குச் சொன்னபோது,   ‘அவைகள் பாவம் ஒன்றின்மேல் ஒன்று எப்படி ஒற்றுமையாக இருக்கும்’  என்றார்.

‘மனிதர்களில் ஆணும் பெண்ணும்  ஒற்றுமையாகவா இருக்கிறார்கள்?  இயற்கை    இவைகளைப் பற்றி  கவலைப்படுவதில்லை: பரிதாபம் பார்ப்பதில்லை:  அனுதாபத்துடன் நோக்குவதில்லை.  அந்த உயிர்கள் தொடர்ச்சியாக புவியில் வாழ ஏதோ ஒரு வகையை தேர்ந்தெடுத்துள்ளது . ‘

மாறாக மனிதர்கள் தங்கள் விருப்பங்களை மற்றைய உயிரினங்களில் திணிப்பது காலம் காலமாக நடக்கிறது. வாழைப்பழத்தில் கொட்டையை நீங்கினோம். பெரிய மரத்தை பொன்சோயாக வெட்டுகிறோம் . வேதாகமத்தில் வெள்ளப்பெருக்கின்போது நோவா ஒவ்வொரு உயிரிலும் ஆணையும் பெண்ணையும்  வள்ளத்தில் ஏத்திப் பாதுகாத்ததாக நம்புகிறோம். அப்பொழுது நத்தைகளுக்கு என்ன நடந்தது என யாரும் கேட்கவில்லை. நோவாவுக்கு நத்தையின் இனப்பெருக்கம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புண்டா?

 “சிலப்பதிகாரம்)

 நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே “

கண்ணகியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து மாணிக்கக் கற்கள் தெறித்தன. அரசன் தன் மனைவியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து முத்துகள் தெறித்தன.  கண்ணகி,  மாணிக்கத்தைப் பாண்டியனது முத்தைவிட உயர்ந்ததாக இங்கு சொல்லியபோதிலும் முத்திற்கு பெருமதிப்பிருந்தது. 

யப்பானிய விஞ்ஞானி கொகிசி மிகிமோட்டோ(Kokichi Mikimoto) 1893 முத்து வளர்ப்பைக் கண்டுபிடித்தார்  அது வரையும் ஆழ்கடலில் மூழ்கியே முத்தெடுக்கவேண்டும்.

 நீர் மூழ்கும் உபகரணங்கள் அற்ற அக்காலத்தில்  முத்தெடுப்பது இலகுவானதல்ல. அப்படி எடுக்கும் சிற்பிகளில் அபூர்வமாகவே முத்துக்கள் கிடைக்கும். அப்படியான முத்துகள் கிடைக்குமிடங்கள் வணிகப் பிரதேசமாகும். முத்துகள் எடுத்த இடங்களான  கொற்கை மன்னார் என்பன வரலாற்றில் முக்கிய வணிக பிரதேசங்களாக உருவாகின. முத்துகள் அரச குடும்பத்தினருக்கும் வணிகருக்கும் மட்டுமே உரியது என்ற நிலையை அக்காலத்திலிருந்தது.

புராதன வரலாற்றில் முத்துக்கு எல்லா சமூகமும் தங்களது கற்பனைக்கும் நம்பிக்கைக்கும்  ஏற்ப அதிக மதிப்பை கொடுத்திருந்தார்கள்.  கிரீக்கர்கள்  கடலிலிருந்து பிறந்த அவ்ரடைற் ( Aphhrodite நமது ரதி போன்றவள் ) –  தங்களது காதல் தெய்வம் மகிழ்வடையும்போது உருவாகிய கண்ணீர்த் துளிகள் என்றார்கள்.  பாரசீகர்களும் கடினமான தேவதைகளின் கண்ணீர்த்துளிகள் முத்தாகியதென நம்பினார்கள். நமது இந்துக்கள்,  கடலுக்கும் மின்னலுக்கும் இடையே நடந்த உடலுறவின் குழந்தைகள் முத்துக்கள் என கூறினார்கள் .  அத்துடன் சந்திரனின் குழந்தைகள் என்றார்கள்.  அரேபியர்கள், சிப்பிகள் நீரின் மேல் வந்து  மிதந்து,  புனித நீரை உள்ளே வாங்கி  முத்தாகியதாக நம்பினார்கள். மொத்தத்தில் எல்லோரும்  முத்துகள்  தெய்வங்களோடு தொடர்புடையது என்று நம்பினார்கள்.

 புரியாதது, தெரியாததற்கு அக்கால விளக்கம் -இறைவனோடு தொடர்புபடுத்துவது – அதன்மேல் கேள்வி இருக்காது. நமது ஊரில் ஒரு மரத்தை பாதுகாக்க வேண்டுமானால் சூலத்தை நாட்டி சிவப்பு சீலையை கட்டிவிட்டால் யாருக்கு அந்த மரத்தை வெட்ட துணிவு வரும்?

விஞ்ஞானத்தில்படி :  ஏதாவது கடினமான மண்போன்ற துகள் ஒன்று சிப்பியின் உள்ளே சென்றதும் அந்த பொருளின் மேல் சுண்ணாம்பு பதார்த்தத்தை சுரந்து சிப்பி தன்னை பாதுகாத்து உயிர் வாழ்கிறது.

எகிப்திய நாட்டின் கடைசி அரசியான  கிளியோபாட்ரா முத்துக்களை வைனில் கரைத்துக் குடித்ததாகச் சிறுவயதில் படித்தபோது  எப்படி வைனில் முத்து கரையும் என்பது எனது கேள்வியாக இருந்தது. பிற்காலத்தில் முத்துகள் கல்சியம் என்ற சுண்ணாம்பு  என்றபோது  ஆச்சி  , வெற்றிலையோடு தடவி வாயில் போட்ட சுண்ணாம்பே  நினைவிற்கு வந்தது .

சீனா போகுவரையும் முத்துக்களை அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  அங்கு யாங்சி ஆற்று நீரில் அதாவது  நன்னீரில் முத்துக்களை விளைவிக்கிறார்கள்.  ஒரு சிப்பிகள் பல முத்துக்கள் விளைந்திருந்தன.கடலில் இயற்கையாக விளைவதற்குப் பல காலமாகும் ஆனால் வளர்க்கும் போது விரைவில் உருவாகிறது. வளர்த்தெடுத்த முத்துக்கும்,  கடலில் மூழ்கி எடுத்த முத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

நான் அதிக அளவு நகை கடைகளுக்குப் போனதில்லை. இளமைக் காலத்தில்  தாலி மற்றும் மோதிரம் வாங்க யாழ்ப்பாணம் கடைவீதியில் சென்றிருந்தேன்.   சியாமளாவிற்கு தங்க ஆபரணங்களில் இயற்கையாகவே அதிக அளவில் விருப்பமில்லை.  ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் குடிபெயர்ந்த புதிதில் யாரோ சீன முகத்தோடு ஒருவன்  சியாமளாவை  வீதியில் வைத்து கத்தியைக் காட்டி கழுத்தில் உள்ள சிறிய தங்கசங்கிலியை அபகரித்ததிலிருந்து கொஞ்சமிருந்த ஆசையும் போனது. எந்தக் காலத்திலும் நகை வாங்கித்தா என்ற கேள்வியில்லாது  எமது சம்சார வாழ்வு  இலகுவானது. கழுத்தில் காதில்  போடுவது எல்லாம் கவரிங் நகைகள் மட்டுமே.  நாங்கள் அமரிக்கா சென்றிருந்தபோது,  எங்கள் வீட்டில் 2004 மார்கழி 26; திகதி : சுனாமி  இரவு எங்களது மெல்பேன் வீட்டில் புகுந்த கள்ளன் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கவரிங் நகைகளை அறை எங்கும் இறைத்துவிட்டு சென்றிருந்தான். அவன் எறிந்த வித்தில் அவனது மூலக் கொதியை புரிந்து கொள்ளமுடியும்.

நாங்கள் சென்ற முத்துகள் வளர்க்கும்  இடத்தில் லாவா(Larva) குட்டிகளை வளர்த்தெடுத்து,  அவைகளின் சிப்பிகளைப்  பிளந்து,  சிறிய மண்சிப்பித் துகள் அல்லது பிளாஸ்டிக் )போன்ற ஒன்றை வைத்து  அத்துடன் அன்ரிபயரிக் பசையும் வைத்து மூடிவிடுகிறார்கள்.  மீண்டும் கூட்டிலிட்டு கடல் நீரில்  வளர்கிறார்கள்.

அந்த வியட்நாமியப் பெண்கள் கதிரையில் அமர்ந்தபடி, மஞ்சள்  விரல்களால் சிறிய வெள்ளி   பொசெபஸ் ( Forceps) ஒன்றால் அப்படியும் இப்படியும் செய்வதைப் பார்த்தால் மிகவும் இலகுவான வழிமுறையாக தெரிந்தது.

மூன்று விதமான  முத்துச்சிப்பிகள் அவைகள் தன்மைக்கேற்ற ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடத்தில் முத்துக்களை உருவாக்குகின்றன என எமக்குச் சொன்னார்கள் .

இப்படிச் செய்யும் பெண்களைக் கடந்து சென்றால் பெரிய கண்காட்சி கூடம்  உள்ளது  பல வகையான முத்தாபரணங்கள்  அதைவிட முத்தின் சிப்பிகளால் ஆன ஆபரணஙங்களும் இருந்தன.

இதை ஏன் நமது நாட்டில் செய்யவில்லை என்ற கேள்வியோடு ஹா லுங் பே சென்றேன்

ஹா லுங் பே உலகத்தில் இயற்கையில்  அழகான  ஐம்பது இடங்களில் ஒன்று என்பார்கள்.  ஆயிரக்கணக்கான பாறைத்தீவுகள் பலவிதமான அளவில்  தென்சீனக் கடலில் முளைத்திருந்தன. இங்கு இயற்கையின் கடாட்சத்தால் நீளமான குகைகள்  பெரிய தீவுகள் எல்லாமிருந்தன. உல்லாசப்பிரயாணிகள்,  தேனிகளாக மொய்க்கும் இடம்.  இங்கு ஒரு தீவில் அக்கால சோவியத் நாட்டை  சேர்ந்த  ஒருவருக்குச் சிலையிருந்தது. ரஸ்சியர்கள் மீது அதிகம் அன்பு கொண்ட ஒரே நாடாக இக்காலத்தில் வியட்நாமே இருக்கும் என நம்புகிறேன்.

 அந்த தீவில் உள்ள 750 படிகளில் ஏறி  உச்சியிலிருந்து  பார்த்தால் அந்த ஹாலுங்பே முழுவதும் தெரிந்தது.   

ஒரு நாள் இரவு பகலாக கப்பலில் ஹா லுங் பே யிலிருந்தோம்

இந்த பகுதி வியட்நாமின் கடற்படைத்தளம் உள்ளது. இதனது கேந்திர முக்கியத்துவத்தால்,    அமரிக்கா சீனா போன்ற நாடுகள் கண் வைத்துள்ளன. 

அங்கிருந்து மீண்டும் வரும்போது ஒரு கடற்கரை ஓரத்து சிறிய கடையில் இறங்கியதும்,  ஒரு வியட்நாமிய ஆண் என் முன்னால்,  ஒரு டசின் ஓய்ஸ்ரர்கள் உங்களுக்கு இலவசம்  என்றார். இலவசம் வேண்டாம் நான் காசு தாறேன் என்றதும் உடனே ஒரு டசின் ஒய்ஸ்ரர்கள் வந்தன. 

சியாமளாவும் , எனது நண்பனது மனைவியும் கடையின் உள்ளே சென்றதும், நானும்  உள்ளே பார்த்தேன். அது  ஒரு முத்துகள் விற்கும் கடை

ஏற்கனவே பெரிய கடையில்போய் எதுவும் வாங்காதவர்கள் இந்தப் பெட்டிக்கடையுள் செல்கிறார்களே ! இவை உண்மையான முத்துகளாக இருக்குமா? இல்லை முத்துகளின் மாதிரிகளா என்ற சந்தேகத்துடன்  அங்கு முத்துக்களை எடுத்துக்  காட்டியபடி இருந்த பெண்ணிடம் இவை உண்மையானவை என எப்படி தெரியும் என பெரிய அறிவாளியாக கேட்டபோது ஒரு முத்தை எடுத்து சிகரட் லைட்டரால் கொழுத்தினாள். 30 விநாடிகள் எதுவும் நடக்கவில்லை

 ‘பிளாஸ்டிக்  எரிந்து உருகும் ,   உண்மையான முத்து எரியாது’  என்றாள் சிரித்தபடி

மெல்பேனில் உள்ள வியட்நாமிய மரக்கறிகடையில்   ஒவ்வொரு வெண்டிக்காயின் வாலை முறித்து வாங்குவதுபோல் ஒவ்வொரு முத்தையும் எரித்து வாங்க முடியாது.உண்மையான முத்துக்கள் என இனிமேல் நம்பியே ஆகவேண்டும்

அதன்பின் எல்லோரும் முத்துமாலைக்குப் பேரம் நடந்தது.

இந்த முத்துக்கள் எங்கிருந்து வந்தன என்றபோது எதிரில் இருந்த வாவியைக் காட்டினார்கள்

யாழ்ப்பாணத்துப் பண்ணை பரவைக் கடல் பிரதேசமாக இருந்தது . அங்கு வள்ளங்கள் நின்றன.

கடலில் முட்டையும் ஆண் விந்தும்  வெளியே பிதுக்கப்பட்டுக் கருக்கட்டல் நடப்பதாலும்,  ஆரம்பத்தில் லாவாக்கள் சிப்பியின் வெளியில் ஒட்டி வளர்வதால கடல் இரசாயன மாசுகளற்று சுத்தமாகவும் பாசிகள் அதிகம் கொண்ட இடமாக இருக்கவேண்டும்.கடலில் ஏற்படும் பெற்றோலிய மாசுகள் முத்துச் சிப்பிகளின் இனப்பெருக்கத்தை மிகவும் பாதிக்கும். 

முத்துக்கள் வாங்கியதால் மீண்டும் ஓய்ஸ்ரர் பரிமாறப்பட்டது.

இலங்கை போன்ற நாடுகளில் இந்த முத்து வளர்ப்பை ஏன் ஈடுபடக்கூடாது என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டபடி வந்தேன்.

நன்றி :திண்ணை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: