
யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். இங்கே ஒரு பண்ணையில் சிலகாலம் வேலைசெய்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டதே இந்த நாவல்.
இந்தியர் எல்லோருக்கும் சிறுவயதில் இருந்து கேட்ட புராணக்கதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மேலைநாட்டினருக்கு ஆச்சரியமூட்டுபவை. கீதாஞ்சலியின் Tomb of Sand இந்தியத்தனத்தினாலேயே விருதை வென்றது. இந்தியா போல Rich heritage கொண்ட நாடுகள் குறைவு. ஈழத்தமிழர்கள் சினிமா, இலக்கியம், கலை மூலம் நம்முடன் நிரந்தரத் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் ஆச்சரியமூட்டும் விசயங்கள் தமிழ்நாட்டில் உண்டு. நாவலில் மாட்டுக்கறியை சமைக்க மாட்டேன் என்று பெண்கள் சொல்வது ஒரு உதாரணம்.
குழந்தை பெற முடியவில்லை என்றால், பொத்தாம் பொதுவாகப் பெண் மேல் குறைகூறி, பையனுக்கு இரண்டாம் கல்யாணம் நடத்துவதும், ஒருவேளை இவனிடமே குறை இருந்தால், அடுத்த பெண்ணும் குழந்தை பெறாது, குடும்பத்தின் மீது யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள் என்பதும் நாம் பலமுறை கேட்டது. குழந்தை பெறுவதில் இருக்கும் தடங்கலுக்கும் (infertility) ஆண்மைக் குறைவுக்கும் (impotency) சம்பந்தமில்லை. அது போலவே ஆண் குடும்பநல சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என நம்புவது.
கிராமத்துப்பண்ணையில் நடக்கும் பல விசயங்கள் நாவலில் பதிவாகி இருக்கின்றன. தலித் பெண்கள் மட்டுமல்லாது சிறுவர்களையும் இடைஜாதியினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றனர். நாவல் நடக்கும் காலம் 1984ல் இருந்து 1988 வரை என்பதால் தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கமில்லாது விழிப்புணர்வு குறைந்த காலம். ஆணாதிக்க, ஜாதிய வெறி கொண்ட சமுதாயத்தில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பெண்கள் உடல், மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அமானுஷ்யத்தை நாவல் முழுவதுமே பயன்படுத்தி இருக்கிறார். இவரே கால்நடை மருத்துவராகையால், ஆடு, மாடுகளின் பிறப்புகள், பாலுணர்வு போன்ற விசயங்கள் தெளிவாக பதிவாகி இருக்கின்றன. தமிழில் அதிகம் பேசப்படாத விசயங்கள். இது போன்ற வித்தியாசமான அனுபவங்கள் இவர் போன்ற சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அனுபவங்களை இலக்கியமாக்குவதும் வெகுசிலருக்கே வாய்க்கும். நோயல் நடேசன் அந்த வெகுசிலரில் ஒருவர் அல்ல.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு மே 2022
விலை ரூ. 190.
மறுமொழியொன்றை இடுங்கள்