பிரித்தானியாவில் தமிழ் பெண் எழுத்தாளர்கள்


நவஜோதி ஜோகரட்னம்
லண்டன்
இங்கிலாந்தில் இலக்கியத்துறையில் பிரகாசித்த பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஓர் ஆய்வு முயற்சி இது. இலங்கையிலேயே தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்திப் பின்னர் எழுதாவிட்டாலும் இங்கிலாந்தில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களிலிருந்து இந்த ஆய்வு ஆரம்பமாகிறது. இவர்களில் பவானி ஆழ்வாப்பிள்ளை இலங்கையிலேயே தனது எழுத்தின் முத்திரையைப் பதித்தவர் ஆவார். அவரது எழுத்துப்; பயணத்தை தொடர்ந்து லண்டனிலே குடியேறிய பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லையாயினும் அவரை முதன்மையான எழுத்தாளராக இங்கு முன்னிறுத்துவது பொருந்தும் என நினைக்கிறேன். அதே போன்று ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் இலங்கையிலேயே தனது எழுத்தைத் தொடங்கி இங்கிலாந்துக்கு வந்த பின்னரும் தனது எழுத்துப் பயணத்தை அவர் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.


இந்தப் பெண் எழுத்தாளர்களில் பலர் தங்களது எழுத்துக்களை நூல்வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள் ஆயினும் பலர் தமது ஆக்கங்களைத் தொகுத்து நூலாக வெளியிடவில்லை என்பதனையும் கருத்தில்கொள்ள வேண்டும். உதிரிகளாக இவர்கள் எழுதிய கட்டுரைகளையும், விமர்சனங்களையும், பல்வேறு கருத்தரங்குகளில் இவர்கள் ஆற்றிய உரைகளையும் எழுத்துவடிவில் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் இவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகளை மிகச் சிரமங்களிடையே மேற்கொள்ளவேண்டியதாயிற்று. ஆயினும் பெரும்பாலான இப் பெண்மணிகளின் உரைகளை லண்டன் மேடைகளில் நான் தொடர்ந்து கேட்டு வருகின்ற காரணத்தால், இந்த இலக்கியப் பதிவுகளை திடப்படுத்தி எழுத முடிந்தது என்பதனையும் நான் கூறியாக வேண்டும். தனிப்பட்ட முறையில் இந்தப் பெண் எழுத்தாளர்கள் அனைவரையும் நான் அறிவேன் என்பதும் இப்பதிவுக்கு ஒரு வலிமையைச் சேர்க்கிறது.
பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி ஆழ்வாப்பிள்ளை 1960 களிலேயே ஈழத்து வரலாற்றில் பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். கற்பு. ஒழுக்கம் போன்ற கருத்தியல்களை புரட்சிகரமாக அணுகிய பவானி ஆழ்வாப்பிள்ளையின் சிறுகதைகள் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பவானி ஆழ்வாப்பிள்ளை, தனது எழுத்துக்களை தன்னை அறிதலான சுயநிர்ணயம் என்று கூறுகின்றார். கலைச்செல்வியில் அவர் எழுதிய ‘மன்னிப்பாரா ; என்ற சிறுகதை சர்ச்சைக்குள்ளான பெண்ணியல்வாதக் கதையாகும்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் மட்டக்களப்பில் கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1970 ஆம் ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்தவர். ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல் அது வெளியான காலத்தில் அரசியல் கவனத்தை ஈர்த்த நாவலாகும். அதன்பின் ‘தேம்ஸ் நதிக்கரையில’;, ‘தில்லை ஆற்றங்கரை’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள’;, ‘அவனும் சில வருடங்களும்’, ‘பனி பெய்யும்
இரவுகள’;, ‘வசந்தம் வந்து போய்விட்டது’, ‘நாளைய மனிதர்கள்’ ஆகிய எட்டு நாவல்களைப் படைத்ததின் மூலம் லண்டனில் மிகப் பெரும் நாவல் ஆசிரியராக அவர் பரிணமித்துள்ளார்.
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் சிறுகதைகள்; ‘இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம்’;, ‘அரைகுறையடிமைகள்’, ‘ஏக்;கம்’, ‘நாளைக்கு இன்னொருத்தன்’, ‘அம்மா என்றொரு பெண்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘லண்டன் 1995’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் 2019 ஆம் வெளியிட்டவர். லண்டனில் நீண்டகாலமாக குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ‘உங்கள் உடல் உள பாலியல் நலம்’, ‘தாயும் சேயும்’ என்ற இரு மருத்துவ நூல்களைச் சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த மருத்துவ நூல்களில் இந்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனைவிட ‘தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்’ என்ற இவரது ஆய்வு நூலும் தமிழகத்தில் பாராட்டைப் பெற்ற நூலாகும்.

திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் ஏழாலையைச் சேர்ந்த தனபாக்கியம் குணபாலசிங்கம் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்றவர். ஈழத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்’ என்னும் நூல் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நூலாகும். இதனைத் தொடர்ந்து ‘தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்’ என்ற நூலை வெளியிட்டார். இதனையடுத்து ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றை பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ‘வங்க இளவரசர் விஜயன் வரலாறும்; இலங்கையில் சிங்கள இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும்’ என்ற இவரது நூல் பெருங்கற்பண்பாட்டுத் தொல்லியல் களங்களிலிருந்து கிடைத்த தடையங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த ஆய்வு நூலாகும்.
இவர் எழுதிய ‘சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்’ என்ற நூலும் ‘பின்பற்றப்பட வேண்டிய சைவ தத்துவங்கள்’ என்ற நூலும் ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றைத் தொகுக்கும் சிறந்த முயற்சிகளாகும். ‘மானிட வரலாறு’ என்ற இவரின் நூல் தனித்துவமானது. ‘குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு’ என்ற அவரது மற்றுமொரு நூல் விவிலிய வேதத்தோடு தமிழர்களைத் தொடர்புபடுத்தி ஆராயும் நூலாக முகிழ்த்;துள்ளது. இவரது ‘பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்’ என்னும் நூலும் ‘வுhந ளவழசநைள ழக ஆழசயட வுநயஉhiபௌ’ என்ற நூலும் முக்கிய நூல்களாகும்.

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்; ஈழத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். இவரது பதினைந்தாவது வயதில் ‘திருவாசகத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஈழத்து அறிஞர்களால் அன்று பாராட்டப்பட்டது. உலகநாடுகளில் வெளிவரும் இதழ்களில் பல புனைபெயர்களில் எழுதிவரும் தமிழரசி சங்கத்தமிழ், ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாயகப் பற்றும், மொழிப்பற்றுமிக்க தமிழ்ப்பண்டிதையான இவர் 2007 இல் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதி
வெளியிட்டவர். கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், பக்திப்பாடல்கள், நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
அங்கயற்கண்ணி காங்கேசன்துறையைச் சேர்ந்த அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட பெண்மணியாகத் திகழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் நன்கு அறியப்பட்ட அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் ‘ஈழத்துப் போராட்டம்’ என்ற தலைப்பில் தொகுப்பாக ‘கயல்விழி’ என்ற புனைபெயரில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலைஞர் மு.கருணாநிதியின் முன்னுரையுடன் வெளியான கவிதைத் தொகுப்பு ஈழத்தின் விடுதலைப் போராட்ட கவிதைகளாக மலர்ந்திருந்தன. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாகச் செயற்பட்டு வந்துள்ளார்.

அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த பெண்மணியாவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவரான அடேல் பாலசிங்கம் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றியும் தனது கணவர் பாலசிங்கத்தின் அரசியல் வரலாறு குறித்தும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டவர். லண்டனில் வாழ்ந்து பின்னர் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்து தமிழ் சமூகம் குறித்த சிந்தனை கொண்டவராவார். ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்'(women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் தரும் சிறந்த நூலாகும். ‘சுதந்திர வேட்கை’ (The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட நூலாகும். இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன.

திருமதி றீற்றா பற்றிமாகரன் எழுத்தாளராகவும், ஆசிரியையாகவும், நூலாசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் றீற்றா பற்றிமாகரன் 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டவர். இளங்கலைமாணிB.A)பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை (BSC, PC Dip (social policy), PG Dip (Housing) பட்டங்களை ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். 1. புதியமுறையில் தமிழ் எழுதுதல் (1992), ‘சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள்’ கதைகள் ஒலிநாடா (1996), ‘பம்பி சிறுவர் வாசிப்பு நூல்’ (1996), ‘தமிழ் செய்முறைப் பயிற்சி’ (1998), ‘தமிழ் பயிற்சி நூல்’ (1999), ‘இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம்'(2005), ‘இலக்கணத் தொகுப்பு’ (2008), ‘சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும்’ (2011) போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர்.

வைத்தியை சீதாதேவி மகாதேவா இவர் தனது 65 ஆவது வயதில் இளைப்பாறிய பின்பே, தன் கணவரின் ஊக்கத்துடன் எழுதத் தொடங்கி ஆங்கிலத்திலும், தமிழிலும் அறுபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியவர். துணைவருடன் இணைந்து நடாத்திய பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் (ELAB) திறமைமிக்க, விரும்பப்பட்ட ஒரு முன்னணிநிலை எழுத்தாளராக மலர்ந்து மறைந்தார். ‘வைத்தியை
சீதாதேவி மகாதேவாவின்80 Years’என்னும் நூலை அவர் பிறந்ததினப் பரிசாக வெளியிட்டு ஆறே மாதங்களில் மாரடைப்புச் சிகிச்சையில் இறந்தார். வாழ்க்கை, வைத்தியம், பெண்ணுரிமை, விஞ்ஞானம், குடும்ப வாழ்க்கை வைத்தியம், பெண்ணுரிமை, விஞ்ஞானம், வைத்திய அபிவிருத்தி, குழந்தை வளர்ப்புப் போன்ற தனக்கு நன்கு பரிச்சயமான சில விடயங்களைப் பற்றியே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதிப் புகழுடன் மறைந்தார்.

புனிதம் பேரின்பராஜா இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புனிதா பேரின்பராஜா இலங்கையில் ஆசிரியராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட புனிதா பேரின்பராஜா லண்டன் ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு, ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும், செயலாளராகவும் செயலாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் கொண்ட புனிதா பேரின்பராஜா ஐந்து நூல்களை எழுதி வெளியட்டவர். ‘Indian Music: Songs and Dance for schools’ (with CD), ‘Musical Instruments of the Indian sub continent’, ‘Heritage studies – positive images of Asian in Britian’, ‘Journeys of a lifetime’, ‘Tamil through songs’.

மீனாள் நித்தியானந்தன் மருத்துவத்தாதியாக அனுபவம் கொண்ட இவர் ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவர் லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’, ‘இனி ஒரு போதும்’ ஆகிய நூல்களையும், மலையாள எழுத்தாளர் கமலாதாஸின் ‘என் கதை’, ராஜேஸ்வரியின் மருத்துவத்துறை நூல்களையும்;; விமர்சனம் செய்தபோது இவரின் விமர்சனப் பார்வை அனைவராலும் பாராட்டப்பட்டது..

தமிழ் உதயா ஈழத்தின் மல்லாவியில் பிறந்தவர். ‘பின்நோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்’, ‘உப்புச் சாடிக்குள் உறையும் துயரக்கடல்’, ‘ஆதிக்கிழவனின் காதல்’, ‘அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்’, ‘கூடடையும் ஆளண்டாப் பறவைகள்’, ‘போதி மரங்களில் இரத்தப் பூக்கள்’, (ஈழப்போரின் குரலற்றவரின்சாட்சியங்கள்), ‘அகாலத்தின் நித்தியக் கடல்’, ‘ஆண்நிற வெயில்’, ‘எனக்குப் பறவை நிழல’;, ‘பாஷோவின் அறையில்’, மொழிபெயர்ப்பு ((Bleeding of the Voiceless of the Eezham) போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்.

உதயகுமாரி பரமலிங்கம், அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைத்து வருகின்றார். ‘எந்தையும் யானும்’ (நிலாவினதும் அவரது தந்தை சிவம் பரமலிங்கத்தினதும் கவிதைகள்), ‘எழுத எழுத’ (சக்கர நாற்காலியில் தன் வாழ்வை நகர்த்தும் நிலாவின் சுயசரிதம்), ‘நிலாவின் இந்திய உலா’ 2003,2009 களில் இந்தியா சென்ற

நிலாவின் அனுபவங்களின் கோர்ப்பு. 2010 இல் வெளிவந்த சிறந்த பயணக்கட்டுரைக்கான தமிழியல் விருதினை 2011இல் பெற்றது, ‘உறைக்கும் உண்மைகள்’ ஐரோப்பிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல். அக்டோபர் 2010 திருநெல்வேலி, தமிழகம். ‘அம்மா வாழ்க!’ பலவிதமான ஆக்கங்களின் தொகுப்பு.
நவஜோதி ஜோகரட்னம் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ லண்டனில் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பாகும். விமர்சகர் மு. நித்தியானந்தன் ‘தீபம்’ தொலைக்காட்சியில் இதனைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்ததை நினைவிருத்த விரும்புகின்றேன். அரசு கலைக்கல்லூரி குளித்தலை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சௌ. பா. சாலாவாணிஸ்ரீ அவர்கள் ‘எனக்கு மட்டும் உதிக்கும்சூரியன்’ என்ற கவிதைத் தொகுப்பை ஆய்வு செய்துள்ளார். ‘மகரந்தச் சிதறல்’ என்ற எனது இரண்டாவது நூல் பாமுகம் பா.ரிவி லண்டன் தமிழ் வானொலியில் நான் மேற்கொண்டிருந்த நேர்காணல்களில் 33 பெண் ஆளுமைகளின் தொகுப்பாகும். இந்நூல் இலங்கையில் இரா. உதயணன் இலக்கிய விருதைப் பெற்றது.
நிர்மலா ராஜசிங்கம் அமெரிக்காவின் பொஸ்ரன் வீட்டன் கல்லூரியில் அரசியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் யாழ் பல்கலைக கழகத்தில் ஆங்கில போதனாசிரியராகவும் பின்னர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றியவராவார். யாழ்ப்பாணத்திலிந்து வெளியான Saturday Review என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். ராஜசிங்கம் Tennessee Williams எழுதிய The Glass Menagerie என்ற நாடகத்தை ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற பெயரிலும், ரஷ்ய நாடக ஆசிரியர் Aleksei Arbuzov எழுதிய Old World என்ற நாடகத்தை ‘பழைய உலகம் புதிய இருவர்’ என்ற தலைப்பிலும், Federico Garcia Lorca எழுதிய The House of Bernarda Alba என்ற நாடகத்தை ‘ஒரு பாலை வீடு’ என்ற பெயரிலும், ;> Bertolt Brecht எழுதியThe Exception and the Rule என்ற நாடகத்தை ‘யுகதர்மம்’ என்ற பெயரிலும் சிறந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்தவராவார்.
சிறந்த நடிகையாகவும் திகழ்ந்த இவர் மேற்கத்தைய இசையிலும் தேர்ச்சி மிக்கவர் ஆவார். தமிழகத்திலிருந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய ஹிட்லரும் றிச்சேட் வாக்னரும் (Hitler Richard Wagner) என்ற கட்டுரைக்கு எதிராக மேற்கத்தைய இசை குறித்து மிக விரிவாக இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை தமிழில் மேற்கத்தைய இசை குறித்து வெளிவந்த ஆழமான கட்டுரையாகும். மறைந்த சிவரமணியின் கவிதைகளை ஆங்கிலத்தில் அழகான மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான அரசியல் கட்டுரைகளை இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றார்.

பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன் கர்நாடக சங்கீதம் குறித்தும், சைவத் திருமுறைகள் குறித்தும் லண்டனில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜெயஅழகி அருணகிரிநாதன் The Tevaram Contribution to Saivism and Indian Music’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டவர்.

சந்திரா இரவீந்திரன் இலங்கையின் வடமராட்சி – பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா இரவீந்திரன் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ 1981இல் வெளியான இவரது முதற் சிறுகதையாகும். 1988இல் பருத்தித்துறை –யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெயிட்டவர்.

நிவேதா உதயராயன் இணுவில் என்னும் ஊரில் பிறந்து புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து பின்னர் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ‘வரலாற்றைத் தொலைத்த தமிழர்;’- ஆய்வு நூல், ‘நிறம் மாறும் உறவுகள்’- (சிறுகதைகள்), ‘நினைவுகளின் அலைகள்’- ‘கவிதைத் தொகுதி’, உணர்வுகள் கொன்றுவிடு – சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை எழுதி வெளியிட்டவர்.

பூங்கோதை சிறீரஞ்சன்; (கலா) லண்டனில் அரசினால் பயிற்சி பெற்ற ஓர் ஆரம்பப் பாடசாலை ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்து வருகின்றார். 1990 – 1991 காலப்பகுதியில் ‘ஈழபூமி’ பத்திரிகையில் சிறுகதைகள், கட்டுரைகள் பல எழுதியவர். ‘ஐரோப்பிய நாடுகளில் உங்கள் ஆரோக்கியம்’ என்ற நூலை 2004 இல் எழுதி வெளியிட்டவர். ‘நடு’ இணையம், வெற்றிமணி, சிலோன் மிரர் போன்றவற்றில் தொடர்ந்தும் எழுதி வருகின்றார்.

சி.மாதுமை தனது சிறுவயது முதல் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த மாதுமை தனது இருபத்தாறாம் வயதில் ‘தூரத்துக் கோடை இடிகள்’ (2005) என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.

சாரங்கா சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவர்;. 1992 ஆம் ஆண்டு ஈழநாதத்தில் ‘ஓன்றரைக்கால்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். ‘ஏன் பெண்ணென்று’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2004இல் ‘ஞானம்’ வெளியீடாக எழுதி வெளியிட்டவர்.

சரோஜினி சந்திரகோபால் பத்தி எழுத்தாளர். புதினம் பத்திரிகையில் தனது எழுத்துக்களால் புடம்போட்டவர்.
ரோகினி சிவபாலன் சமய யாத்திரைகளை மேற்கொண்டு ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ , ‘காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’, ‘கைலாச தரிசனம்’ ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டவர்.

தீபதிலகை என்ற கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள் யாழ் பல்தொழில் நுட்பக் கல்லூரியில் கணக்கியலை மேற்கொண்டவர். கவிதை, உரைநடை இரண்டிலும் தடம்பதித்து வரும் இவர் ‘மகிழம் பூவும் அறுகம்புல்லும்’ என்ற சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.

சிவகாமி மகாலிங்கம் 1947 இல் கொழும்பில் பிறந்த சிவகாமி மகாலிங்கம் தனது கணவருடன் பிரித்தானியாவுக்கு வந்து பிரித்தானியாவின் வருமான மற்றும் சுங்க திணைக்களத்தில் முழுநேர ஊழியையாகப் பணியாற்றியவர். நமது நாளாந்த சமையல் கலை திறமைகள் புலம்பெயாந்து வாழும் நமது சந்ததியினருக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கில், மேற்கு நாடுகளின் நவீன வாழ்வுக்கேற்ப இசைவு படுத்தப்பட்ட இலங்கை மற்றும் ஆசிய நாட்டு பாரம்பரிய சமையல் என்னும் ஒரு புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.Rice and Curry (Kari) என்ற தலைப்பில் 400 உணவுகள் தயாரிக்கும் முறைகளின் விபரங்கள் அதில் அடங்கியுள்ளன.
ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 1975 இல் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின்; வர்த்தகவியல் ஆசிரியராகக் கடமை புரிந்தவர். ‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்ற நூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 2012 ஆம் ஆண்டில் ‘மூச்சுப் பயிற்சி’ என்ற இறுவெட்டொன்றை வெளியிட்டுள்ளார். ‘அறநெறிக் கதைகள்’ என்ற தொகுப்பு, ‘மெய்ஞானி திருமூலர் கண்ட சுகவாழ்வு, மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
பாத்திமா மாஜிதா அண்மைக் காலமாக லண்டனில் பல்வேறு தளங்களில் எழுதிவருகின்றார். இவரது ‘தலையாட்டி பொம்மை’ என்ற சிறுகதை மட்டக்களப்பு பிரதேச வட்டார வழக்கில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாகும்.
தஷந்தி சங்கர் ‘என் விரல்களின் தவம்’ (கவிதைத் தொகுப்பு)
செல்வி நிதர்சனா ஜெகநாதன் ‘லண்டன் தமிழ் நிலையம்’ பாடசாலை மாணவியாக ‘இளம் நினைவுகள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.
மாதவி சிவலீலன் ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் – ஓர் ஆய்வு’ என்னும் நூலையும், ‘இமைப்பொழுது’ என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அனன்யா ரஜீந்திரகுமார் ‘எங்கள் கண்ணம்மாவின் கவி வரிகள்’ கவிதை நூலைவெளியிட்டவர்.

பிறேமளாதேவி ரவீந்திரன். லண்டன் சங்கீத சபையில் பங்கேற்றுப் பணியாற்றிவரும் பிறேமளா இறைய தலைமுறையினருக்கு அறிவு நோக்கமாகவும், பரீட்சை நோக்கமாகவும் ‘பரதநாட்டியம்’ குறித்த நூல்களை இரண்டு பிரிவுகளாக்கி நூல் வடிவில் தந்துள்ளார். நடனம் பற்றிய இவரது பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
ஜெயந்தி யோகராஜா ‘பரத இலக்கணம்’ , ‘நாட்டிய விலாசம்’ ஆகிய இரு நாட்டிய நுணுக்கங்கள் பற்றிய நூல்களை எழுதி வெளியிட்ட இவர் ‘நாட்டியக் கிரியா’, ‘ராஜேஸ்வர நர்த்தனம்’ ‘Journey of Dance’’ ஆகிய இரு இறுவெட்டுக்களையும்; தயாரித்து வெளியிட்டவர்.

இவ்வளவு பெருந்தொகையில் பெண் எழுத்தாளர்கள் லண்டனில் பல்வேறு துறைகளில் தங்கள் ஆக்கங்களை தொடர்ந்து படைத்து வருகிறார்கள் என்பதும், தாம் எழுதியவற்றை நூலாக வெளியிடும் பிரயாசை மிகுந்தவர்களாகக் காணப்படுவதும் பாராட்டக்கூடிய ஒன்றாகும். இந்தக் கட்டுரையில் எந்தப் பெண் எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுப் போயிருக்குமேயானால், அது என் தேடலுக்குள் வந்து சேர்ந்திருக்கவில்லை என்பதற்காக அத்தகைய விடுபடலுக்கு நான் வருந்துவேன். தமிழில் எழுதுகின்ற லண்டன் பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் கூடிப்போனால் இன்னுமொரு கால் நூற்றாண்டுக்கு நிலைத்திருக்கக்கூடும். அதன் பின்னர் இந்தப் படைப்புலகம் வளர்ந்து செல்லுமா என்பது கேள்விக்குறியாகும்.
31.10.2020

“பிரித்தானியாவில் தமிழ் பெண் எழுத்தாளர்கள்” மீது ஒரு மறுமொழி

  1. பாலேந்திரன் யோசப் Avatar
    பாலேந்திரன் யோசப்

    நல்ல பயனுள்ள வகையில் இருந்த தகவல்களுக்கு நன்றி.இருந்த போதிலும் நம்மில் பலரும் அறியாத இன்னும் வாசிக்கும் தன்மை காணாது. ஆகவே ஒரு வகையில் நம்மவர்களை பழக்கயாக வேண்டும். இந்திய பக்கங்கள் இருக்கும் ஆர்வம் எம்மவர்கள் எமது படைப்புகளை பெற ஆவன செய்தல் வேண்டும். இல்லை என்று சோல்வதை தவிர்த்து மாற்றங்கள் சிறிது அவசியம். ஆர்வம் எம்மவர்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியம். வந்த பின் எல்லாம் தானாக வரவேண்டும். பின்பு தாங்களாகவே முன்வந்து வாங்கி வாசிக்கும் பழக்கம் தானாக வரவேண்டும். வரவேண்டும். அல்லது வர வைப்போம். தமிழ் மொழி காக ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: