நூல் அறிமுகம் –நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்.

   முனைவர்  ஜொஸப்பின் பாபா

 ( புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )

மாயவாத சித்திரிப்பில்  எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்.

 

                                –

இலங்கையைச் சேர்ந்த  கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள்  தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில்   சென்னக்கு  அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில்  ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான்  பண்ணையில் ஒரு மிருகம் .

தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இதன் முன்னுரையில் நடேசன் எழுதியிருக்கும் குறிப்புகளிலிருந்தே இந்த செய்தியையும் அறிய முடிகிறது.

அந்தப் பண்ணையில் மேற்பார்வையாளராக  அவர் வேலைக்கு வந்து சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையைச்  சேர்ந்தவர் என்பதால்  அங்கு  அதே  மருத்துவராக  வேலை செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.  

நடேசன்  இதற்கு முன்னரும்  நாவல்கள், சிறுகதைகள் எழுதியவர்.  இந்த எழுத்தாளாருக்கு முன்பு ,  தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு மருத்துவர்,  அங்கு வேலை பார்த்து வந்ததும் கற்பகம் என்ற பெண்ணின் தற்கொலைக்கு காரணமாகியதனால் அவர் அந்த  வேலையை விட்டு விரட்டப்பட்டதையும் அறிகிறார்.

புதிய டாக்டராக வரும்  இந்தக் கதைசொல்லியின்   மனம் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பிக்கிறது. பிற்பாடு அங்கு வேலை செய்யும் மேஸ்திரி, ராமசாமி, ராணி, அன்பரசி, கிருஷ்ணன் போன்ற கதா பாத்திரங்கள் வழியாக பண்ணையில் நடக்கும் சம்பவங்களை படிப்படியாகத் தெரிந்து வருகிறார்.

 இத்துடன் பண்ணையில் தற்கொலை செய்து கொண்ட மூக்குத்தி அணிந்த வெங்காய நிற சேலைக்காரி கற்பகம் மருத்துவரிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிப்பதுடன் கதை சுவாரசியமாக நகர்கிறது. கனவா நனவா என்ற பேய்க் கதையுடன் வாசகர்களும் டாக்டருடன் திகிலுடன் பண்ணையில் பயணிக்கிறோம். 

பண்ணையை  தளமாகக் கொண்டு   எழுதப்பட்டுள்ளதால்  மிருகங்களைப்   பற்றிய உயிர் அறிவியல், தமிழகத்தில் நிலவும் ஜாதி கலந்த வாழ்க்கை முறை பற்றியெல்லாம் சித்திரிக்கும் ஆசிரியர் , ஜாதி மாறி திருமணம் செய்த சொந்த மகளின்  கணவரையே கொலை செய்த கார்மேகம் போன்றவர்களையும்  கதாபாத்திரங்களாக உலவ விட்டுள்ளார். பொதுவாக ஆண் பிள்ளைகள் துஷ்பிரோயகம் ஆவதை கவனித்துக் கொள்ளாத தமிழக சமூக சூழலில்,  குறிப்பாக பண்ணையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின்  கதையை,   கதையின் போக்கில் ஒரு முக்கிய புள்ளியாக கொண்டு வந்துள்ளது இந்நாவலின்  சிறப்பாகும்.

பெண்கள் குடும்பச்  சூழலாலும், மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்படுவது, மனைவிக்கு குழந்தை இல்லை என்றால்  கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இவைகளையும் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

கிராமத்து மக்கள் என்றாலே வெகுளியானவர்கள், நல்லவர்கள் என்று பலரும் எழுதி வரும் தமிழ் இலக்கிய சூழலில், கிராமத்து மக்கள் மனதில் குடிகொள்ளும் வன்மம், குறுக்குச் சிந்தனைகள்,  தவறை அறிந்தும் துணிவாக செய்யும் முரட்டுத்தனம் போன்ற இயல்புகளையும்  கதையில் கொண்டு வந்துள்ளார் நடேசன். 

ஒரு கட்டத்தில் கருப்பையாதான்  அந்த கற்பகத்தின்  மரணத்திற்கு  காரணம் என்று தெரியவந்ததும்,  இத்தனை கொடியவனுடன் பண்ணையில் வேலை செய்யப் பிடிக்காது  அந்த வேலையை விட முடிவு செய்கிறார். 

கல்வி கற்றோர் என்றாலும் அகதிகளாக ஒரு நாட்டில் வாழும் போது என்னென்ன சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.  பண்ணை முதலாளிகளின் மனப்பான்மை, மருத்துவர் வாசிக்கும் கார்ல் மார்க்ஸ் புத்தகத்தை ஒளித்து வைக்கும் கருப்பையாவின் வன்மம் என இயல்பாகவே  கதையைச்  சொல்லி உள்ளார். 

கிராமத்தில் மக்களுக்கு ஒரு தோழராக  இருந்து தன் பணியை  திறம்படச்  செய்வது, பண்ணை மக்களை அன்பாக வேலை வாங்குவது, பண்ணை ஆட்களுடன் சினிமாவிற்கு செல்வது, எளிய மனிதர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வீடு வரை செல்வது  என டாக்டர் கதாபாத்திரம்  இந்நாவலில் மனித நேயத்தின் உச்சம் தொடுகிறது. 

கணவன் கொல்லப்பட,  கணவன் கொடுத்த ஆடு வளர்ப்புமாக வாழும்  கமலம் மேல் டாக்டருக்கு அளவு கடந்து பரிவு இருந்தும் கமலத்தை ஒற்றை கட்டையாகவே  கதையில் விட்டு சென்றது கொஞ்சம் பிற்போக்குத் தனம் என்று தோன்றியது.

பேயாக உலாவும்  கற்பகம் மற்றும் டாக்டரின்  உரையாடல்கள் கதையை சுவாரசியமாக நகர்த்திச் சென்றுள்ளது. கருப்பையா பின் பக்கம் குத்துப் பட்டு கிணற்றில் விழுந்து இறந்த முடிவு தவறு –  தண்டனை என்ற காலா காலத்து கதையோடு ஒத்துப் போகிறது. 

Magic realism தன்மைகொண்ட  நாவலாகவும் அமைந்துள்ளது.

சுருக்கமாக கதையாளரின் கதை சொல்லும் பாங்கு கதையை வாசித்து முடிக்கும் வரையில்  வாசகனை விறுவிறுப்பாக வைத்திருந்தது என்றால் மிகை அல்ல. 

இந்நாவலை நடேசன், தனது பிரியத்திற்குரிய மறைந்த இலங்கை இடதுசாரித் தோழர் வி. பொன்னம்பலம் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.

—–0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: