இலங்கை நெருக்கடியில் தமிழர்களின் நிலை என்ன?

OLYMPUS DIGITAL CAMERA

மாலன்

ஆகா என்றெழுந்தது பார் ஓர் புரட்சி, அண்மையில், இலங்கையில். அதன் விளைவாக அதிபர் தலைமறைவானார். பிரதமரும் அதிபரும் பதவிகளைத் துறந்தார்கள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த ராஜபக்க்ஷேக்களின் குடும்பம் இனி அதிகாரம் பெறுவது மெத்தக் கடினம் என்று நிலைமை ஒரு சனிக்கிழமை பிற்பகலில் மாறிவிட்டது.

அன்று அலை அலையாக மக்கள் வீதிகளில் திரண்டார்கள். ஆவேசத்துடன் தடை உத்தரவை மீறி, தடுப்புக்களை தள்ளித் தகர்த்து அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறினார்கள். அதன் பின் அதனுள்ளும் நுழைந்தார்கள். அதிபர் அலுவலகத்தையும் கைப்பற்றினார்கள். அதிபர் பதவியைத் துறக்கிற வரை அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று அறிவித்தார்கள். பிரதமர் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இது போன்ற எழுட்சிகளின் போது ஆயுதம் தாங்கிய ராணுவத்தை ஏவி மூர்க்கத்தனமாக ஒடுக்குபவர்தான் கோத்தபய ராஜபக்க்ஷே. விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மட்டுமல்ல, 2013ல் அவர் பாதுகாப்பு  அமைச்சராக இருந்த போது, கையுறை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவத்தினால் நீர் மாசுபடுகிறது என்று  ரதுபஸ்வல என்ற இடத்தில் கிளர்ந்தெழுந்த சிங்களர்களையும் ராணுவம் கொண்டு அடக்கியவர்தான் கோத்தபய.  ஆனால் அவர் இந்த முறை மாளிகையை விட்டுத் தப்பி ஓடினார். அவர் இந்த முறை ராணுவத்தை ஏவி விடாததற்கு, சில அன்னிய நாடுகளின் அழுத்தம் என்பதலிருந்து மக்களின் அறச்சீற்றத்தின் பின்னுள்ள நியாயத்தை உணர்ந்திருந்திருந்த ராணுவம் அதிபருக்கு உதவ முன் வரவில்லை என்பதுவரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எதுவாயினும் ராஜபக்ஷேக்கள் வீழ்ந்தார்கள் என்பதே வரலாறு.

விடுதலைப் புலிகளையும் இலங்கைத் தமிழர்களையும் கொன்றழித்தவர் என்பதால் ராஜபக்ஷேக்களின் வீழ்ச்சியில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அதனைச் சாதித்தவர்கள் தமிழர்கள் அல்ல. சிங்களர்கள். சனிக்கிழமை (ஜூலை 9) சம்பவம் இரண்டு செய்திகளை நமக்கு உணர்த்து கிறது. ஒன்று கொடுங்கோலர்களாக இருந்தாலும் சிங்களர்களை வீழ்த்த வேண்டுமானால் அதற்கு சிங்களவர்களின் உதவி இருந்தால்தான் சாத்தியம். இரண்டு ஆயுதம் எதற்கும் தீர்வாகாது. ஆயுதம் எடுத்தவர்கள் ஆயுதத்தால் அழியக் கூடும். ஆனால் பரப்புரைகள் மூலம் ஏற்படும் மக்கள் எழுட்சி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த எழுட்சியை பெரிய அரசியல் கட்சிகள் ஏதும் முன்னெடுக்கவில்லை. முன்னிலை சோஷலிச கட்சி, சோஷலிச இளைஞர் யூனியன், போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்களும், மாணவர் அமைப்புக்களும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த இயக்கங்கள் சிறிய கட்சிகள். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், போக்குவரத்து முடக்கம் என நாளுக்கு நாள் அன்றாட வாழ்க்கையின் அல்லல்கள் அதிகரித்துக் கொண்டே போனதால், ஏப்ரல் 9ஆம் தேதியன்று தொடங்கிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வலுத்துக் கொண்டே வந்தது. மத அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், வக்கீல்கள் சங்கங்கள், மகளிர் அமைப்புகள் எனப் பலரும் போராட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அரசியல் கட்சிகளும் இணைந்து கொண்டன. சனிக்கிழமை அன்று வீதிகளில் திரண்டவர்கள் தீவிர இடதுசாரி இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. அவற்றில் பெரும்பான்மையினர் கட்சிசாராத பொதுமக்கள்.

அவர்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து விட்டது. ஆனால் பிரசினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. குழப்பம் இப்போது சிக்கலாகத் தீவிரமடைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை என்று எவரும் இல்லை என்பதுதான். இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுத்தன என்றாலும் இது முழுக்க முழுக்க அவர்கள் மட்டுமே பங்கெடுத்த போராட்டமல்ல. 

அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே இப்போது தலைமை இல்லை.  அதிபர், பிரதமர் இருவரும் பதவி விலகி விட்டார்கள். அதனால் அரசின் சார்பாக முடிவெடுக்க ஆட்கள் இல்லை. எதிர்க்கட்சிகள் இணைந்து ஓர் அரசை அமைக்க முயல்கின்றன. ஆனால் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொண்ட கட்சி கோத்தபயவின் கட்சி. அதன் ஆதரவில்லாமல் நாடாளுமன்றத்தில் எதுவும் செய்ய இயலாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் கட்சியில் அவர் ஒருவர்தான் நாடாளுமன்ற உறுப்பினர். இடைக்கால அரசு ஒன்றை அமைத்துவிட்டு சிறிது காலம் சென்று தேர்தல் நடத்தலாம் என்ற கருத்து அரசியல் கட்சிகளிடையே உள்ளது.

ஆனால் இடைக்கால அரசில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதில் முரண்பாடுகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள்தான் இடம் பெற வேண்டும் என்று நாட்டின் முக்கிய கட்சிகள் சொல்லி வருகின்றன. ஆனால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இடதுசாரிகள் அமைப்புக்கள் இது “பேர அரசியல்”  அதை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுமே மோசக்காரர்கள் என்பது அவர்கள் நிலை.

போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பிரதிநிதிகளையும் இடைக்கால அரசில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அதிபரும் இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவருமாமைதிரிபால ஸ்ரீ சேன சொல்கிறார். “அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதுதான். ஆனால் யதார்த்தங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதிபர், பிரதமர், நாடாளுமன்றம் மூன்றும் முடிவெடுக்கும் வலிமையை இழந்து விட்டன என்பதுதான் யதார்த்தம்” என்கிறார்.

அரசியல் பிரசினைகளுக்கு சில நாட்களில் ஏதோ ஒரு வகையில் தீர்வு காணப்படலாம். ஆனால் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல.இன்றைய நிலவரப்படி இலங்கையின் கடன் 7 பில்லியன் (700 கோடி) அமெரிக்க டாலர்கள். இதில் இந்தாண்டு திருப்பிக் கொடுத்திருக்க வேண்டிய கடன் 1 பில்லியன் டாலரைக் கொடுக்க முடியவில்லை. நாடு திவாலாகிவிட்டதாக சில நாள்கள் முன் பிரதமராக இருந்த போது ரனில் அறிவித்தார். திருப்பிக் கொடுக்க வேண்டியது போக அடுத்த ஆறுமாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய முப்பது லட்சம் அமெரிக்க டாலர்கள் வேண்டும். ஏற்கனவே பல நாடுகளிடம் கடன் வாங்கி விட்ட இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தைத்தான் (IMF) நம்பியிருக்கிறது. அது விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் அரசின் கீழ் உள்ள நாடுகளில்  முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் தயங்குவார்கள்.

இந்த நெருக்கடியில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன?

இலங்கை இவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டதற்கான காரணங்கள் குறித்து அங்கு பரவலாக விவாதம் நடக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் ஒரு முக்கியக் காரணம் என்று பலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. இந்தக் காரணத்தைச் சுட்டி தமிழர்கள் இனிமேலாவது இனப் பகையைவிட்டு இணக்கமாக இருங்கள். எங்களுக்கு சுய ஆட்சி உரிமையத் தாருங்கள் எனப் பேசி வருகிறார்கள். அதே நேரம் இதே காரணத்தைச் சொல்லி “இவர்களால்தான் எல்லாம் இப்படி ஆயிற்று” என்று சிங்கள அரசியல்வாதிகள் பகை உணர்வை அதிகரிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்கள மக்களிடம் இந்தப் பகை உணர்வு பரவலாக இருந்து வந்திருக்கிறது. முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் தமிழர்கள் தோல்வி அடைந்த போது அதை அவர்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடினார்கள். அந்தப் போரை முன்னின்று நடத்திய கோத்தபய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அதுவரை இலங்கையில் எந்த அதிபரும் பெற்றிராத அளவு அவருக்கு 69 லட்சம் வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். அதன் பின் அவரது சகோதரரும், உள்நாட்டுப் போரின் போது ஜனாதிபதியாக இருந்தவருமான  மகிந்தாவின் கட்சி  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடம் பெறும் வண்ணம் வாக்களித்தார்கள்.

இப்போது அதிகாரத்தை இழந்துள்ள நிலையில், மீண்டும் அரசியல் ரீதியாக வலிமை பெற அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி தமிழருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டலாம். இப்போது போராட்டத்தை முன்னெடுத்தவர்களிடையேயும் தமிழர் எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் உண்டு. போரின் போது தளபதியாக இருந்த, ‘பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு சூத்திரதாரியாக இருந்ததாக’ மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்ட சரத் பொன்சேகாவும் ஜூலை 9ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பொருளாதாரப் பிரசினைகளிலிருந்து மீள முடியாமல் போகும் போது மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இனப் பிரசினைகளை கிளறிவிட இலங்கை அரசியல்வாதிகள் முயலக்கூடும். அங்குள்ள தமிழர்கள் அதற்கு பலியாகாமல் கவனமாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

சுய நலம் கொண்ட அரசியல் தலைமைகளும், வாரிசு அரசியலும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் அமைப்பும் ஒரு நாட்டை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதை இலங்கை காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாடங்கள் நமக்கும்தான்.           

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: