
நடேசன்
“குஞ்சரம் ஊர்ந்தோர் நாவல் “சமீபத்தில் ஆஸ்திரேலியா தமிழ் கலை இலக்கிய சங்கத்தினரால், சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டது .
அவரது நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது ‘திசையறியாப் பயணங்கள்’ .
மிகவும் சிறிய நாவல். இலங்கையின் போர்க்காலத்தின் தொடக்கத்தை விவரிக்கிறது. நாவல் விறுவிறுப்பாகக் கையில் எடுத்தால், வைக்க முடியாத வேகத்தில் பயணிக்கிறது.
மன்னார் கிராமமொன்றின் நடக்கும் கதை; இயக்கத்திற்கு இராணுவத்தினருக்கு இடையில் சிக்கித் தவிக்கும் மக்களது கதைகளில் எவரும் புனிதரில்லை . பாத்திரப் படைப்பு மிகவும் காத்திரமானது. காமம் மற்றும் உயிர் வாழ்வதற்குத் தப்பி வாழும் உணர்வே மனிதர்களது அடிப்படையானவை . அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, இலட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறுபதுகளில் வந்த சோசலிச யதார்த்த நாவல்கள் உண்மையில் ஒரு கற்பனைவாத நாவல்கள் என்று நமது விமர்சகர்கள் இன்னமும் ஒத்துக்கொள்ளவில்லை என்னும்போது போர்க் காலத்தில் வந்த தமிழ்த் தேசிய உணர்வைத் துடைத்து மெருகேற்றும் நாவல்கள் கற்பனையானவை என்பதை நமது விமர்சகர்கள் எப்பொழுது ஒத்துக்கொள்வார்கள் என்பது விடை தெரியாத கேள்வி .
உயிர் வாழ்வதற்காக தப்பியோடும் மனிதர்களது கதையே யதார்த்தமானது. அதுவே காலம் காலமாக நடக்கிறது. அந்த விடயத்தை இலக்கியத்தில் சொல்வது மிகவும் முக்கியமானது. தப்பியோடியபின் மீண்டும் தப்பியோடிய இடத்தை ஏக்கத்துடன் பார்க்கிறோம் என்பது பொய்யான கதையை நாம் தமிழ் இலக்கியப் பரப்பில் அழகாக அலங்காரம் செய்து வருகிறோம். முக்கியமாகத் தமிழ்நாட்டில், வாசகர்கள் மத்தியில் பொய்யான முனகலுக்கு மரியாதை உள்ளது.
45 வயதான பெண்ணே கதாநாயகி- அவள் கணவனை இழக்கிறாள் ஆனால் அவள் வாழ்வதற்காகவும், தனது மகளை வாழவைப்பதற்காகவும், பத்து வயது குறைந்த ஒருவனைத் துணிந்து சமூகத்தின் முன்பு, தனது இணையாக்கிறாள். அதைப் பார்த்து மகள், தாயை வெறுத்து வீட்டை விட்டு ஓடுகிறாள். ஆனால் தாய் , வாழ்வில் சலித்துவிடவில்லை மீண்டும் அந்தத்தாய் தான் தொடர்ந்து வாழ்வதற்காக அந்த ஆணுடன் இணைந்து கண்காணாத இடத்திற்குச் செல்லுவதற்குத் தயாராகி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறாள்.அவர்களது ஓட்டமே இந்த நாவல். உன்னதமான லட்சியங்கள் எதுவும் வாழ்வின் போராட்டத்திற்கு ஈடாகாது
மிகவும் சாதாரணமானவர்கள் வாழ்வில் பசியும் காமமும் முக்கியமானவை . அத்துடன் மற்றவர்களுக்கும் உதவுவதும் , மானமென சுயபெருமை இடையிடையே வரும்போது மற்றவை மறப்பது இயல்பானவை.
சிறிய நாவலென்றபோதிலும் மனத்தில் நிற்கும் பாத்திர படைப்புகள், பாத்திரத்தின் செயல்கள் , அதற்கான காரணங்கள் நாவலுக்கான உள்ளடக்கத்தைக் கொடுக்கிறது.
எளிமையான யதார்த்த நடையுடன் இந்த நாவல் எவரையும் கவரும்.
இலங்கையில் பூபாலசிங்கம் கடையில் கிடைக்கிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்